Election bannerElection banner
Published:Updated:

``கார்பன்... ஃபஹத் பாசிலின் எதிர்காலப் பெருமை!" - மலையாள கிளாசிக் - பகுதி 24

``கார்பன்... ஃபஹத் பாசிலின் எதிர்காலப் பெருமை!" - மலையாள கிளாசிக் - பகுதி 24
``கார்பன்... ஃபஹத் பாசிலின் எதிர்காலப் பெருமை!" - மலையாள கிளாசிக் - பகுதி 24

மலையாள கிளாசிக் தொடரின் 24-வது பகுதி. `கார்பன்' படம் குறித்த விரிவான அலசல்.

நாம் வாழும் வாழ்க்கை என்ன என்பதை சால்ஜாப்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டு இறுதிவரை பார்த்தால், அது வெறும் உயிர் பிழைப்பு என்று மிஞ்சுவதைப் பார்க்கலாம். பலரும் ஓடுகிறார்கள். தாவிக் குதிக்கிறார்கள். வேறு பலரும் மற்றவர்களைச் சரித்துத் தள்ளிவிட்டு அவர்கள் முதுகின் மீது ஏறி வானுக்குப் பறக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிற கொஞ்சம் பேருக்கு இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை. குறுக்கு வழிகளைத் தேடுகிறது மனம். எப்படி உடனடியாய் பெரிய ஆளாவது. சிலர் அதிகாரத்தைக் கைப்பற்றி அரசியலில் பிழைக்கிறார்கள். சிலர் இலக்கியத்துக்கு ஒதுங்கி சமூகத்தை வசை பாடுகிறார்கள். என்னைப்போல பலர் சினிமாவில் எச்சில் பிழைப்பு பிழைத்துக் கொண்டிருப்போம். இதற்கெல்லாம்கூட தயாராகாத `கார்பன்' நாயகன் சிபியைப் போன்றவர்கள் கனவு கண்டிருந்து, பிரமைகளுக்குப் பின்னால் ஓடி, ஒரு காலம் நமக்கும் வந்துவிடும் என்று காத்திருக்கிறார்கள்.

மாணிக்கக் கல்லு, மரகதக் கல்லு, சிவப்புப் பாதரசம் என்று அவற்றுக்கு ஒரு புராதானக் கதையைச் சேர்த்துக்கொண்டு, கோடிகளில் பேசித் திரியும் கூட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நவீனக் கவிஞனைக் காட்டிலும் அவர்கள் வீட்டிலிருந்தும் நாட்டிலிருந்தும் அந்நியப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு விடியலையும் எப்படித்தான் நம்பிக்கையோடு தொடங்குகிறார்கள் என்பதையே சொல்லமுடியாது. சிபி மெள்ள மெள்ள தனக்குள் ஊழலைக் கொண்டு வந்து, தன்னைத் தானே வெறுத்துக் கொள்ளும்படியும் மாறி வருகிறான். காரணம், இவன் எத்தனாயிருக்கும்போது இவன் புழங்கும் இடங்களில் உள்ளவர்கள் எத்தனுக்கு எத்தனாக இருப்பார்கள். கடன், அவமானம், தனிமை, பயமுறுத்தும் கனவுகள். கூட இருந்த நண்பர்கள் எல்லாம் செட்டிலாகிக்கொண்டே இருக்க, அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் அமைகிறது.

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

சின்ன வேலைதான்.

எங்கோ, தூரத்தில் ஒரு காட்டில் பாழடைந்த வீடு ஒன்று ஒரு முதலாளியால் வாங்கப்பட்டிருக்கிறது. அங்கே போய் இருந்து மெதுவாய் அதை ஒரு டூரிஸ்ட் ரிசார்ட்டாக மாற்றவேண்டும். மாதச் சம்பளத்துக்குத்தான் போகிறான். ஏற்கெனவே பல தொன்மங்களுக்கும் மனசு விட்டு விடுகிற அவன், காட்டில் தலக்காணி என்கிற மலையில் இருக்கிற புதையலைப் பற்றிக் கேள்விப்படுகிறான். திப்பு சுல்தானின் படையெடுப்பு நடந்துகொண்டிருந்த காலத்தில் இப்பகுதி ராஜா திருமலை நாயக்கருடன் பேசி, அம்மலையில் 101 மூட்டை தங்கக் காசுகளை ஒளித்து வைத்ததாகப் பேச்சு. யாருமே பயப்படுகிறார்கள்.

ஆனால், அப்போது பழக்கமான சமீரா, ஸ்டாலின் மற்றும் ஒரு பழங்குடிப் பையனுடன் சிபி அந்தப் புதையலைக் கைப்பற்றப் புறப்பட்டு விடுகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் பல விஷயங்கள் நகரவே இல்லை. அவன் மீது அக்கறை கொண்ட சமீராகூட இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள். அவ்வளவு அபாயமாக இருக்கிறது காடு. 101 மூட்டைகளைச் சுமந்து சென்ற கூலிகளின் தலையை வெட்டி புதையல் ரகசியத்தைக் காப்பாற்ற திட்டம் போட்டிருக்கிறான், மன்னன். அவற்றின் ஆவிகள் யாரையும் அந்தப் புதையலை எடுக்க விடுவதில்லை. அங்கே போனவர்கள் திரும்பி வந்ததில்லை. இப்படி ஒரு கோணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஆயின், சிபி எடுத்த விஷயத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை.

பயணத்துக்குப் போகும் முன், சில பொய்களைச் சொல்லி முதலாளியிடம் பணம் வாங்கி, பொருள்கள் வாங்கிக் கிளம்புகையில் சிபி தனது தந்தையை ஜங்கஷனில் பார்த்தான். அம்மாவுக்கு மருந்து வாங்க வந்திருக்கிறார் அவர். அவரது சிரமங்கள் தெரியவர குற்றவுணர்வுடன் நான் இரண்டு நாள்களில் வந்து விடுகிறேன் என்கிறான் சிபி. வீட்டில் வந்து மிரட்டிய ஒரு தாதாவின் கடனை எல்லாம் அவரே அடைத்து முடித்தது தெரிய வருகிறது. இவனால் ஒரு மகனாய் இருக்க முடியாதது நழுவிக்கொண்டே இருந்திருக்கிறது. அந்தத் தகப்பன் நெஞ்சில் நெருப்புடன் பத்துத் தகப்பனின் பொறுப்பிலிருந்தவாறு இருந்திருக்கிறார். இவனுக்குப் பேச ஏதுமில்லை. காரில் ஏறிய கொஞ்சநேரத்தில் சமீரா இந்த ரிசார்ட் பணிக்கு வந்து எவ்வளவு நாளாயிற்று என்று கேட்கிறாள். ஒன்றரை மாதம். இதற்கு முன் என்ன வேலை செய்துகொண்டிருந்தாய் என்பது அவளது அடுத்த கேள்வி.

என்ன செய்து கொண்டிருந்தேன்?

தனது இறந்த காலம் என்கிற ஒன்றில் எதுவுமேயில்லை.

இது கடைசி. புதையலுடன்தான் திரும்புவது என்பது அவனுக்குள் உறுதியாகிவிட்டது. எல்லோரையும் மறுத்துப் புறப்படுகிற அவனை, காடு முற்றுகையிடுகிறது. தாகம், முள் குத்துகிறது. பசி கண்களின் விளக்கைப் பல முறையும் அணைக்கிறது. அவன் பிரமைகளின் சுவர்களில் முட்டிக்கொண்டு விழுகிறான். ஏற முடியாத உயரத்தில் ஒரு காட்டுப் பழத்துக்கு உள்நாக்கு காய அலைபாயும்போது, அப்பா அம்மா சகோதரி நண்பர்கள் சமீரா அத்தனை பேரும் நினைவுக்கு வருகிறார்கள்.

சமீரா ரசவாதி புத்தகத்தைப் பற்றிக் கேட்டிருந்தாள். அவன் படித்ததில்லை என்றதற்கு, அந்தக் கதையில் ஒருவன் புதையலைத் தேடி புறப்பட்டதைச் சொல்லி, புதையல் புறப்பட்ட இடத்தில்தான் இருந்தது என்பதைச் சொல்லியிருந்தாள். அவன் உறுதியுடன் கிளம்பிய நேரத்தில், தனது காதலைத் தெரிவிக்கிற ஒரு வாய்ப்பாக வேறு ஒன்றும் சொல்லியிருந்தாள். `உயிரைப் பணயம் வைத்து எந்தக் காரியத்தையும் செய்யாதே. அதற்கு ஈடாக இந்த பூமியில் எந்தப் புதையலும் இல்லை!'.

மழை பொழிகிறது.

மல்லாந்து கிடக்கிற சிபியின் நாவும் நெஞ்சும் மனமும் ஆத்மாவும் குளிர்கின்றன. அவனது தலைக்கு மேலே ஓடுகிற மழைத் தண்ணீரில் தங்கக் காசுகள் இருப்பது தெரிகிறது. தமிழ்நாட்டுப் பக்கம் மலை இறங்குகிறான். அவன் புதையலைப் பார்த்தானா, இல்லையா... பார்த்திருந்தால் அது அவனுக்குத் தேவைப்பட்டதா இல்லையா? - இது படத்தின் முடிவு.

காலத்தைக் காட்டிலும் பெரிய ரசவாதி இல்லை.

வேணு அடிப்படையில் ஓர் ஒளிப்பதிவாளர்.

மிகப்பெரிய இயக்குநர்களுடன் பணிபுரிந்தவர். அவரது திறமை எப்போதோ நிரூபிக்கப்பட்ட ஒன்று. கமலின் `குணா' அவர் செய்த படம்தான். இதற்கு முன்னால் நானேகூட எழுதிய `முன்னறியிப்பு' படத்தை இயக்கியவர். அவரது இந்த இரண்டு படங்களிலும் பூடகங்கள் உண்டு. அதற்கு வேண்டிய அடர்த்தியும் ஒரு கருமையும் உண்டு. K.U.மோகனன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏறக்குறைய படத்தின் முதல் ஹீரோ. படத்தைத் தீர்மானித்தவர் அவரே என்றுகூட சொல்லலாம். வேணு அந்தக் காரணத்தின் பின்னால் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். எடிட்டர் பீனா பால். ஒரு நீண்ட புதிர். படத்தில் இருளைக் காட்டியோ, அரூபங்களைக் காட்டியோ மலினமான உத்திகளைக் கையாளாத படத்தில் காட்சிப்படி நாம் பலமுறை திடுக்கிடுவோம். அங்கே ஒரு தடவைகூட நெருடல் வராது. அடுக்குகள் அத்தனை பிரங்ஞை கொண்டவைகளாய் இருந்தன. உண்மையில் அட்வான்ஸ் தொழில்நுட்பம் என்பது இதுதான் என்பது பல மரமண்டைகளுக்குப் புரியாது. அசல் தொழில்நுட்பம் என்பதுவுமே இதுதான்.

பாடல்கள் வேறு தினுசில் இருந்தன என்பதைப் பலரும் கவனித்திருப்போம்.

ஒன்றுகூட அட்டை டப்பா இல்லை.

விஷால் பரத்வாஜ் படத்துடன் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு பாட்டுமே ஒரு கதையின் அத்தியாயம். அதை உணர்ச்சிகரமாக இயக்குநர் கொண்டு வரும்போது, இசை அதை எடுத்தியங்குகிறது. கடைசிப் பாட்டு எந்தக் கோணத்திலிருந்து கேட்டாலும், அதில் இளையராஜா இருந்தார். அதுவும் மிகவும் நெருக்கத்தில் அந்தரங்கமாய் எனக்காகப் பாடுவதுபோலக் கேட்டது. குரல்கள் சிலிர்ப்பைக் கொண்டு வந்திருந்தன. பின்னணிக்கு வந்தவர், பிஜிப்பால். அவருமே லேசுப்பட்டவர் இல்லை. அநேகமாக நிறைய எழுதியிருக்கிறேன்.

மம்தா மோகன்தாஸ் குறிப்பிடத்தக்க ஒரு நடிகை. அவருக்கு என்று விசித்திரமான புன்னகைகள் உண்டு. `செல்லுலாயிட்' போன்ற படங்களில் சோகமே உருவாகக் காட்டுகிற முகம், அதற்காகவே படைக்கப்பட்டதா என்று நமக்குத் தோன்றி விடுவதைப் போலவே அவர் எந்தப் பாத்திரத்துக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டாலும் பொருத்தமான முகத்தை எடுத்து வைப்பவர். இதை எந்தப் பாத்திரத்திலும் சோபிப்பார் என்று கிளிஷேவாகச் சொல்லி முடித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், இது அது இல்லை. மம்தா இந்தப் படத்தில் கொண்டு வந்த விஷயங்கள் அற்புதமானவை. இத்தனை வலிமையான ஒரு பெண்ணை மிக எளிமையாய் வெளிப்படுத்தச் செய்த அந்த விசேஷத்துக்கு வேணுவையும் பாராட்ட வேண்டும்.

நெடுமுடி வேணு, திலேஷ் போத்தனுமெல்லாம் பின்னுகிறார்கள். சௌபின் சாகிர், விஜய ராகவன், அசோகன் எல்லாம் ஓரிரு காட்சிகள்தாம். ஆயின் நாம் காணாத முகம். யானைக்காரியாய் வந்த பிரவீணாகூட ஒருகணமேனும் திடுக்கிட வைத்துப் போனார். அவரது ஒரு நடை போதும். மற்றும் பலரும் நினைவில் நிற்பவர்கள் என்று கொள்ள வேண்டும்.

ஃபஹத் ஒரு காவியத்தையே சிருஷ்டி செய்து வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லவேண்டும். வழக்கமாக அவர் நடித்தவாறே வந்த கேரக்டர்களுக்கும் இதற்கும் சிறு அளவில் ஒரு நுட்பமான வேறுபாடுதான். ஆனால், அந்த இடைவெளியைத் தாண்டி குதிக்க முடியாமல் பலரும் அதளபாதாளத்தில் வீழ்ந்திருப்பார்கள். ஒரு திரைக்கதையின் ஆத்மாவை அறிந்தவன் மட்டுமே இப்படத்தின் பல காட்சிகளை நிறைவு செய்திருக்க முடியும். யானைக்கும் எனக்கும் ஒரே வயது என்று பிரவீணா சொல்லும்போது, யானையின் மீதிருந்து விலக்கி பக்கவாட்டில் ஒரு பார்வை அந்தப் பெண்மணியைத் தொட்டுத் திரும்புவது போதாது. புதையலைப் பற்றி எதற்கு சொல்லவில்லை என்று கேட்டு சமீராவின் விழிகள் துளைத்த அடுத்த கணத்தில், சமாதானம் சொல்லும்போது அந்தப் பதற்றத்தில் வெளிப்படுவது அவள் மீதிருந்த காதலாயிருக்கும். எந்த நடிகனால் இதையெல்லாம் சாதிக்க முடியும்.

என்ன சொல்வது... இப்படத்தைப் பற்றி, இதில் ஃபஹத் நடித்துத் தீர்த்தது பற்றிப் பெரிதாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எல்லாத் திசையிலும் நிறைகிற வெற்றுக் கூச்சல்களில் பல கலைஞர்களின் முகங்கள் பனிப்புகையில் மறைந்தவாறு இருக்கின்றன.

ஆனால், எதிர்காலத்தில் ஃபஹத் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி வேணு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மனிதர்கள் புதையலை தேடிச் செல்வது புதிய விஷயமா என்ன. உலகெங்கிலும் இதைப் பற்றிப் பல்வேறு தரப்புடன் ஆயிரமாயிரம் படங்கள் வந்திருக்கும். ரசவாதி உட்பட இலக்கியங்களில் அரைத்திருப்பார்கள். எனினும், வேணு முற்றிலும் வேறு நிறமுள்ள ஒரு திரைக்கதையை எழுதி, வேறு துடிப்புள்ள சினிமாவாய் ஒன்றை நிறுத்திவிட்டார். சிபி அடையும் புதையல் என்ன?

நமக்கு அவன் அப்பாவைத் தெரியும். அம்மாவைத் தெரியும். சகோதரியைத் தெரியும். நண்பர்களைத் தெரியும். சகிக்க முடியாத அவனை ஏற்றுக்கொண்டு அவனது வாழ்வுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள். தனக்குள் அவனை முழுமையாக எடுத்துக்கொண்டு விட்ட சமீரா ஒருத்தி போதுமே. அவளது காதலின் நிழலில் அவனது வாழ்க்கை முழுமையடையும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

வாழ்வின் புதையல்கள் எல்லாம் நாம் வாழும் வாழ்க்கையிலேயே இருக்கின்றன. வாழ்வு வெறும் உயிர்பிழைப்பல்ல. நாமும் அப்படிப் பிழைத்துக்கொண்டு, மற்றவர் வாழ்வையும் அப்படி இருக்க வைக்கிற நோக்கிலிருந்து விடுபடாத வரையில் நாம் வாழ்கிற இந்த வாழ்க்கையே பீதியுடன் காட்டில் அலைவதுதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு