Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

'வொய் திஸ் கொல வெறிடி’ பாடல் பிரபலமான விதம், சமூக ஊடகங்களின் வலிமையை மீண்டும் ஒரு முறை உணரவைத்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதும் நாளில் மேற்கண்ட வரிகளை டிவிட்டரில் தேடுவதற்காகக் கொடுத்தால், நிமிடம் ஒன்றுக்கு 40 ட்வீட்டுகள் பாடலைப் பற்றியே வந்த வண்ணம் இருக்கின்றன. பெங்களூரு ஐஐஎம்ல் கல்லூரி விரிவுரை ஹாலில் கோரஸாகப் பாடும் வீடியோவில் இருந்து, நடன ஸ்டுடியோ ஒன்றில் ஜப்பானியப் பெண்கள் நளினமாக இந்தப் பாட்டுக்கு ஆடும் வீடியோ எனக் கலவையாகப் பயனீட்டாளர்களின் செயல்பாடுகள் இந்தப் பாடலின் பிரபலத்தை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தபடி இருக்கின்றன. அலுவலகத்தில் எனக்கு அசிஸ்டென்ட்டாக இருக்கும் மார்க்கரிட்டாவிடம் கொல வெறி பாடல் வீடியோவைக் காட்டினேன். இந்திய மொழிகள், இசைபற்றிய பரிச்சயம் எதுவும் இல்லாத மார்க்கரிட்டா 'ராகே பரப்பிசை வடிவில் அட்டகாசம்!' என்றதுடன் என் நட்பு வட்டத்தில் இதைப் பகிர வேண்டும் என்றார்.

 ஃபேஸ்புக்கில் என்னிடம் ' 'கொல வெறி’ பாட்டு குறைந்த காலத்தில் இவ்வளவு ஹிட் அடித்தாற்போல் இன்டர்நெட்டில் வேறெதுவும் ஹிட் அடித்திருக்கிறதா?' என்று கேட்ட மொகமத் ராஸ்விக்குப் பதில், 'எனக்குத் தெரிந்து இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் பிரபலமானது இதுதான்!''

இந்தப் பாடலின் உரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனத்தின் சமூக ஊடகத் திட்டம் மிகப் பெரிய வெற்றி. இதைப் பின்பற்றி பல முயற்சிகளுக்கு சமூக ஊடகம் பயன் படுத்தப்படும். நமக்குக் கொண்டாட்டம்தான்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

சென்ற வாரத்தில் ஃபேஸ்புக்கின் அலைபேசித் திட்டம்பற்றி இந்த வாரத்தில் விரிவாகப் பேசலாம் என்றிருந்தேன். அதற்குப் போகும் முன், இரண்டு முக்கிய ஃபேஸ்புக் நிகழ்வுகளைப் பார்த்துவிடலாம்.

'பிரைவஸி சம்பந்தமான கொள்கைகளில் நீங்கள் சொதப்பிவிட்டீர்கள்; பல இடங்களில் லேசான சட்ட மீறலும் நடந்ததாகத் தெரிகிறது!’ என்றபடி ஃபேஸ்புக்கைக் கண்டித்த எஃப்டிசி (Federal Trade Commission) நிறுவனத்திடம் 'கோர்ட்டுக்குஎல்லாம் போக வேண்டாம். அபராதம் செலுத்திவிடுகிறோம். பிரைவஸி கொள்கைகளைப் பயனீட்டாளர்கள் கண்ணோட்டத்துடன் முன்னேற்றிவிடுகிறோம்!' என்றபடி செட்டில் செய்துகொண்டு இருக்கிறது ஃபேஸ்புக்.

இதுவரை தனிநபர்கள் மட்டுமே முதலீட்டாளர்களாக இருந்து வந்த ஃபேஸ்புக், அடுத்த வருடத்தில் பங்குச்சந்தையில் நுழைய வேண்டிய முஸ்தீபுகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டது. 100 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் 10 பில்லியன் டாலர்களுக்குச் சமமான பங்குகளை விற்கப்போவதாகத் தெரிகிறது. திட்டமிட்டபடி இது நடந்தால், மார்க் ஸக்கர்பெர்க் கூகுளின் நிறுவனர்களைவிட பணக்காரராக பங்குச்சந்தை வெளியீட்டு நாளன்றே ஆகிவிடுவார்!

அலைபேசிக்கு வருவோம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னிருக்கும் சவால், அலைபேசித் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதற் கும் மேல், இதில் எப்படித் தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவலாம் என்பது!

ஆப்பிளுக்கு ஐ-போன் சொந்தம். அதை இயக்கும் ஐஓஎஸ் (iOS) இயங்கு மென்பொருளும் அவர்களுடையதே! கூகுளிடம் அலைபேசிகளை இயக்கும் ஆண்ட்ராயிட் மட்டுமே இதுவரை இருந்தது. மோட்டரோலாவை வளைத்துப் போட்டுக்கொண்டதன் மூலம் இப்போது கூகுளிடம் அலைபேசி வன் மென்பொருட்கள் சொந்தம். இணையப் பெருவெளியில் இது வரை சொல்லிக்கொள்ளும் அளவில் சோபிக்காத மைக்ரோசாஃப்ட்டிடம்கூட அலைபேசித் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், சமூக ஊடக ஏரியாவில் முடிசூடா மன்னனாக இருக்கும் ஃபேஸ்புக்கிடம் அலைபேசி இல்லை. இதை நிவர்த்திசெய்யும் வகையில், ஃபேஸ்புக்குக்கே சொந்தமான அலைபேசியை வெளியிடலாம் என்ற செய்தியைக் கசியவிட்டது ஃபேஸ்புக் நிறுவனம். அதிகாரபூர்வமாகச் சொல்லாமல், இப்படிச் செய்திகளைக் கசியவிடுவது டெக் நிறுவனங்கள் பொதுவாகச் செய்வதுதான். இந்தச் செய்திக்குப் பயனீட்டாளர்களிடமும் சந்தையிலும் என்ன விதமான பின்னூட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதுதான் இதன் நோக்கம்!

பயனீட்டாளர்களின் எண்ணிக்கை பிரமாண்ட அளவில் இருப்பதால், ஃபேஸ்புக்கின் அலைபேசிக்கு மிகப் பெரிய பயனீட்டு மாறுதல்களைக் கொண்டுவரும் வலிமை இருக்கிறது. உதாரணத்துக்கு, தொலைபேசி எண் என்பதற்கு மாற்றாக ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை அவர்களால் கொண்டுவர முடியும். ஒருவரை

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அலைபேசியில் அழைத்துப் பேச அவரது தொலைபேசி எண் தேவை இல்லை. மாறாக, அவரது ஃபேஸ்புக் உரலி பெயர் தெரிந்திருந்தால் போதும். ஆனால், ஃபேஸ்புக் தனக்கே உரிய அலைபேசியை இப்போதைக்குக் கொண்டுவராது என்று தோன்றுகிறது.  

முக்கியக் காரணம்: தனக்கே சொந்தமான அலைபேசியைக் கொண்டுவருவதன் மூலம், அலைபேசி சாதனத் தயாரிப்பாளர் களுடனும் சேவை நிறுவனங்களுடனும் நேரடிப் போட்டியிட வேண்டியிருக்கும். இவர்களுடன் பங்காளராக இணைந்து ஃபேஸ்புக்கை மிக நெருக்கமாக அவர் களது தொழில்நுட்பங்களில் இணைத்து விடுவதுதான் ஃபேஸ்புக்குக்கு அதிக பலன் அளிக்கும்!

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஃபேஸ்புக் அலைபேசி வெளியிட்டால் வாங்குவீர்களா... மாட்டீர்களா? உங்களது கருத்துக்களை ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் (www.facebook.com/anandavikatan) எழுதுங்களேன்!

LOG OFF