Published:Updated:

`இனி நிறைய அதிகாரிகள் வருவார்கள்' - நம்பிக்கை விதைக்கும் தமிழக இளம் ஐ.ஏ.எஸ்-கள்!

``இன்றைக்கு, கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. எதற்காகப் பணியை விரும்புகிறார்கள் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு களம் இறங்கினால், எந்தவிதமான செலவும் இல்லாமல் எளிதில் வெற்றிபெறலாம் என்பதற்கு நானே உதாரணம்" என்கிறார் மதுபாலன்.

`இனி நிறைய அதிகாரிகள் வருவார்கள்' - நம்பிக்கை விதைக்கும் தமிழக இளம் ஐ.ஏ.எஸ்-கள்!
`இனி நிறைய அதிகாரிகள் வருவார்கள்' - நம்பிக்கை விதைக்கும் தமிழக இளம் ஐ.ஏ.எஸ்-கள்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்திலிருந்து 50 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள்,  ஓராண்டுக்காலப் பயிற்சிக்காக வட இந்தியாவுக்குப் பயணப்படவிருக்கிறார்கள். பயிற்சிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவர்கள், ``தமிழகத்திலிருந்து நிறைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாவார்கள். நாங்கள் அவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்" என்று உற்சாகத்துடன் பேசினார்கள்.

தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 29-வது இடத்தையும் பிடித்துள்ள தர்மபுரியைச் சேர்ந்த கீர்த்திவாசன், ``திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் சிவில் இன்ஜினீயரிங் படிக்கும்போது நடந்த சிறு நிகழ்வே என்னை ஐ.ஏ.எஸ்-யாக மாற்றியது" என்கிறார். 

``எங்கள் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரின் வருகைக்காக ஹெலிபேடு அமைக்கும் பணியில் சிவில் இன்ஜினீயரிங் மாணவர்கள் ஈடுபட்டோம். அந்தச் சமயத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்களின் பணி, மதிப்பு போன்றவற்றை நேரில் தெரிந்துகொள்ள முடிந்தது. இதுவே நானும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவுடன் ஒரு வருடகாலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயின்று முதல் தேர்விலேயே வெற்றி பெற்றிருக்கிறேன்" என்றார். 

தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 71-வது இடத்தையும் பிடித்துள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்த மதுபாலன், ``இன்ஜினீயரிங் படிக்கும்போது நான்காவது ஆண்டிலிருந்தே சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். கோச்சிங் க்ளாஸுக்கு எனத் தனியே போனதில்லை. தேர்வுக்கு ஆலோசனை வழங்குபவர்களிடம் தேர்வுக்கான உத்திகளைக் கேட்டும், விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து 23-வயதிலேயே வெற்றி பெற்றிருக்கிறேன்" என்றார். 

``இன்றைக்கு, கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. எதற்காகப் பணியை விரும்புகிறார்கள் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு களம் இறங்கினால், எந்தவிதமான செலவும் இல்லாமல் எளிதில் வெற்றிபெறலாம் என்பதற்கு நானே உதாரணம்" என்கிறார் மதுபாலன்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேராவூரணியைச் சார்ந்த சிவகுரு பிரபாகரன், சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் 3-வது ரேங்கையும், அகில இந்திய அளவில் 101-வது ரேங்கையும் பெற்றிருக்கிறார். 

``2004-ம் ஆண்டில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் செயல்பாடு என் கவனத்தை ஈர்க்க, ஐ.ஏ.எஸ் கனவு விதையானது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பொறியியல் கலந்தாய்வில் இடம் கிடைத்தாலும் சேர முடியாத நிலை. வீட்டில் உள்ள விதைநெல்லை விற்று 5,000 ரூபாய் தேற்றிக்கொண்டு சென்னை வந்தேன். தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க, போதுமான பணம் கிடைக்காமல் பெரியம்மா ஊரான புதுக்கோட்டைக்குக் கிளம்பி இரண்டு ஆண்டு விவசாயக் கூலியாகவும், இரண்டு ஆண்டு மரம் அறுக்கும் வேலையும் பார்த்தேன். 2008-ம் ஆண்டு வீட்டுக்கே தெரியாமல் விண்ணப்பித்து, பொறியியல் கலந்தாய்வில் வேலூரியில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். 

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தம்பி எனக் குடும்பம் சிறியதுதான். மர மில்லில் கிடைக்கும் காசை, அப்பா குடிப்பதில் விட்டுவிடுவார். அம்மா தென்னங்கீற்றுக் குச்சிகளை எடுத்து விற்று நான் படிக்கும்போது மாதாமாதம் 500 ரூபாய் பணம் அனுப்பிவைப்பார். நான் வேலூரில் ரீசார்ஜ் செய்துகொடுத்து 500 ரூபாய் சம்பாதிப்பேன். இது இரண்டும் விடுதிக் கட்டணத்துக்குப் போதுமானதாக இருந்தது. மூன்றாவது வருடத்தில் கேட் தேர்வுக்குத் தயாரானேன். 

பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்திய நண்பர், நான் படிப்பதற்கான புத்தகத்தையும் கொடுத்தார். சனி, ஞாயிற்றுக்கிழமையில் பயிற்சிக்காக சென்னை வந்துவிடுவேன். தகுந்த பொருளாதாரம் இல்லாததாலும், சென்னையில் யாருமே தெரியாத காரணத்தாலும் பல நாள் பரங்கிமலை ரயில்நிலையம் பிளாட்ஃபார்மில் தங்கிப் படித்திருக்கிறேன். நான் பட்ட கஷ்டங்களுக்குப் பலனாக சென்னை ஐ.ஐ.டி-யிலேயே இடம் கிடைத்தது. இது என்னுடைய முதல் வெற்றி. ஐஐடி-யில் முதல் வருடத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஐ.ஐ.டி-யில் படிக்கும்போது இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வுக்குப் பயிற்சி பெற ஆரம்பித்தேன். 2014-ம் ஆண்டு ஐ.இ.எஸ் தேர்வில் தேர்ச்சியானது எனது இரண்டாவது வெற்றி. 2015-ம் ஆண்டில் ரயில்வே வேலையில் சேர்ந்து எனது சிறு வயதுக் கனவுக்கு வடிவம் கொடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். 2018-ம் ஆண்டில் சிவில் சர்வீஸில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். இது எனது மூன்றாவது வெற்றி. தமிழக அளவிலேயே பணி செய்ய வாய்ப்புக் கிடைக்கும். இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு மருந்தாக, நிறைவான சந்தோஷத்தில் உள்ளேன். இனி தமிழகத்திலிருந்து நிறைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாக வேண்டும். அவர்களுக்கெல்லாம் நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்" என்றார். 

வாழ்த்துகள் சகோதரர்களே!