Published:Updated:

சீனாவை முந்திய தமிழகம்... உலகம் போற்றும் ஒரு விஷயம் நமக்குத் தெரியாமல் போகலாமா?

சீனாவை முந்திய தமிழகம்... உலகம் போற்றும் ஒரு விஷயம் நமக்குத் தெரியாமல் போகலாமா?
News
சீனாவை முந்திய தமிழகம்... உலகம் போற்றும் ஒரு விஷயம் நமக்குத் தெரியாமல் போகலாமா?

சீனாவை முந்திய தமிழகம்... உலகம் போற்றும் ஒரு விஷயம் நமக்குத் தெரியாமல் போகலாமா?

மரபுசாரா எரிசக்தி ... உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் அதிக கவனம் செலுத்தும் ஒரு விஷயம். இதில் நடக்கும் சின்ன அசைவு கூட உலகின் எதிர்காலத்தையே மாற்றும் என்பதால் இந்தக் கவனம். இதில், உலக அளவில் இந்தியா முக்கியமான காரியத்தைச் சத்தமின்றி செய்திருக்கிறது. அதற்குத் தமிழகம் மிக முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் வெயில் இப்படி வாட்டுகிறதே என ஒவ்வொரு வருடமும் அங்கலாய்ப்பது வாடிக்கை ஆகிவிட்டது . தொழிற்புரட்சி ஏற்பட்ட காலம் முதலாய், பல்வேறு பொருள்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய வாயுக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக்  கொண்டேயிருக்கிறோம். இதனாலேயே, வெயிலின் தாக்கம் அதிகரித்து பூமி வெப்பமடைகிறது. இதைத்தான் பூமி வெப்பமாதல் எனவும் பசுமைக் குடில் விளைவு எனவும் குறிப்பிடுகிறார்கள். இந்த விளைவினால் உலகில் கால நிலை மாற்றங்கள் அதிகரித்து பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாகப் பனிக்கட்டி உருகுதல் மூலம் கடற்கரை மட்டத்தோடு குடியிருக்கும் பல்வேறு நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இதற்கு இந்தியத் தீபகற்பமோ தமிழகமோ விதிவிலக்கல்ல. 

இந்த ஆபத்தை உணர்ந்து, உலகில் உள்ள 195 நாடுகள் இணைந்து வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என உறுதிப் பூண்டு 2016 ம் ஆண்டு பாரிஸ் நகரில் கையெழுத்து இட்டனர். அதன் ஒரு முக்கிய முயற்சியாக மின்சார உற்பத்தியைக் காற்றை மாசுபடுத்தும், மரபு சார்ந்த கரி உற்பத்தியைச் சார்ந்து இருக்காமல் மரபு சாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி அனைவரும் மெதுவாக நகர்கிறார்கள். காற்றாலை, சூரிய ஒளி, நீர்த்தேக்கங்கள் மூலம் பெறும் மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் என வகைப்படுத்தலாம்.   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தி என்பது பல ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வந்தாலும் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அது முக்கியத்துவம் பெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உணவு, உடை, வீடு என்கிற அடிப்படைத் தேவைகளின் வரிசையில் மின்சாரம் இடம் பிடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, அனைத்து நாடுகளும் இந்த முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டாக வேண்டியிருக்கிறது. ஐஸ்லாந்து, டென்மார்க், சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகள் 100% மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தகுந்த எரிசக்தியில் இருந்தே எடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் நீர் மின் திட்டங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (33%), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படுகிறது .  

இருப்பினும் உலக அளவில் இந்தத் துறையில் உள்ளவர்களை இந்த வருடம் இந்தியா திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் IRENA (International Renewable Energy Agency) என்கிற சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை. 2017- ம் ஆண்டில், குறைவான செலவில் புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில், முதல் இடத்துக்கு இந்தியா முன்னேறியது என்கிறது அந்த அறிக்கை. இதில் சிறப்பு அம்சம் என்னவெனில் சீனாவை விடக் குறைவான செலவில் மின்சாரம் உற்பத்தி செய்வதில், இந்தியாவும் ஜெர்மனியும் மேலோங்கி உள்ளது. உலகில் தயார் செய்யப்படும் பெரும்பாலான சூரிய மின் தகடுகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல். இருப்பினும் சீனாவைப் பின் தள்ளி இங்கே இந்தியா எப்படி வந்தது என்பதுதான் இந்தத் துறை வல்லுநர்களை இந்தியாவை ஆச்சர்யமாகப் பாக்க வைத்திருக்கிறது. இந்தியாவில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களிலிருந்து, திட்ட இயக்குநர்கள் வரை இதற்காக உழைத்த தொழிலாளர்களின் முயற்சியால்தான் இது நடந்தது எனக் கூறுவதே சரி.

இந்தியாவின் இந்த வளர்ச்சியை உற்று நோக்கிய இன்னொரு சர்வதேச நிறுவனம் IEEFA என்கிற சர்வதேச ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம். அவர்கள் இந்தியாவில், தமிழ்நாடு இந்தச் சாதனைக்கு ஒரு சிறந்த முன் மாதிரியாக இருப்பதைக் கண்டு பிடித்தது. பின்னர், இந்த அமைப்பு தமிழ்நாட்டை உற்று நோக்கியது. தமிழ்நாடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில், கோலோச்சி வந்துள்ளதைக் கவனித்தது. இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் உற்பத்தி ஆகும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு (18.5%) தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகத்தின் மின் கட்டமைப்பையும் ஆற்றலையும் மேலும் ஆய்வு செய்து சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் 

1. வளர்ச்சிப் பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொண்டு, மின்சாரத்தின் செலவைக் குறைத்து புதுப்பிக்கத்தக்கச் சக்தியை நோக்கி நகர்வதற்கு இந்தியாவில் உள்ள தமிழகம் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
2. தமிழகத்தின் தற்போதைய நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வெறும் 62% திறனுடன் இயங்குகின்றன. இது 75-85% என்கிற முழுத் திறனை விட மிகக் குறைந்தது ஆகும். வரும் ஆண்டுகளில், இந்தத் திறன் 45% நோக்கிக் குறைய வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக செலவுகள் அதிகரித்து மின்சார விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறது.   
3. காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம் முன்னோடியாக இருந்தாலும், இங்கே உள்ள ஆலைகள் 20 வருடங்களுக்கும் மேலானவை. இதில் உள்ள தொழில்நுட்பம் பழையன. இவற்றை மேம்படுத்துதல் மூலம் காற்றாலை உற்பத்தியை இரட்டிப்பு செய்ய வாய்ப்பு உள்ளது.
4. தெளிவான, தீர்க்கமான முறையில், புதுப்பிக்கத்தக்கச் சக்தியை நோக்கிப் பயணித்தால், 2026/27- ம் ஆண்டுக்குள், தமிழகத்தின் 56% மின்சக்தியை காற்றை மாசுபடுத்தாத வளங்கள் மூலம் பெற முடியும் என்கிறது அவர்களின் ஆய்வு முடிவு.
5. கிட்டத்தட்ட  20 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழக மின்சார வாரியம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில், லாபத்தை நோக்கி நகர்ந்து விடும் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள். ஒரு வேளை, மீண்டும் நிலக்கரி சார்ந்த மின் திட்டங்களைச் செயல்படுத்தினால், அது நிதிச் சுமையை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை செய்கிறது அந்த ஆய்வு.  

தமிழகத்தைப் பொறுத்தவரையில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை சூழலியல் சார்ந்த விழிப்புஉணர்வும் அதைச் சார்ந்த போராட்டங்களும் அதிகம் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் மக்களின் ஆதரவோடு நிறைவேற்றுவது கடினம் என்பதைத் தாண்டி, நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் மற்றும் அணு மின் நிலையங்கள் தமிழகத்துக்குத் தேவைதானா என்கிற நியாயமான கேள்விகள் அனைத்துத் திசைகளிலிருந்தும் கேட்கின்றன. அதுவும், புதுப்பிக்கத்தகுந்த மின்சக்தியில் இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழும் தமிழகத்துக்கு அதிகமான செலவு செய்து மக்களையும் சிரமத்துக்கு உள்ளாக்கி  காற்றையும் மாசு படுத்தி வரும் திட்டங்கள் தேவையா என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திட்ட வல்லுநர்களும் சிந்திக்க வேண்டும் .

நெடுவாசல் தொடங்கி கதிராமங்கலம் வரை  ஹைட்ரோகார்பனை நோக்கி பெரு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அதற்கு மக்களிடம் வந்த எதிர்ப்பு நாம் அறிந்ததே. மேலும், அந்தப் பெரு நிறுவனங்கள் குறிவைப்பது காவேரிப் படுகையைத்தான். காலம் காலமாக கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு உணவை அளிக்கும் ஆற்றுப் படுகையை ஹைட்ரோகார்பனுக்காகப் பலி கொடுப்பது என்பது தற்கொலைக்குச் சமமாகும். அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில், ஹைட்ரோகார்பனுக்காக ஒரு விவசாயப் பூமியைப் பெயர்த்து எடுப்பது என்பது உலக வரைபடத்தில் இது வரை எங்கு நடந்துள்ளது எனத் தெரியவில்லை .
  

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2015 ம் ஆண்டு சட்டப்பேரவையில், அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டாயமாகச் சூரிய மின் தகடுகள் மூலம் மின்சார உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற நல்லத் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால், அது இன்று வரை சட்டமாக மாறாமல் உள்ளது. இதைத் தமிழக அரசு உடனடியாக சட்டம் ஆக்க வேண்டும்.  

தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்கச் சக்தியை நோக்கிய பயணத்தை மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள இதை விடச் சிறப்பான சந்தர்ப்பம் அமையாது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தைத் தமிழகம் அறிமுகப்படுத்திய விதம் போல ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் ஏற்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்சார்பு மின்சாரத்தை வீட்டிலேயே கிடைக்க வழிசெய்யும்போது நிலக்கரிக்கான தேவையோ, ஹைட்ரோகார்பனுக்கான தேவையோ மீத்தேனுக்கான தேவையோ இருக்கப்போவதில்லை. இதை நோக்கிய பயணத்தை அரசு முன் எடுத்தால் அது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நீடித்த பயனைக் கொடுக்கும்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் செலவு என்பது ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய்க்கும் கீழே வந்து விட்டது. சமீபத்தில், கர்நாடகா தமிழகத்தை விட ஒரு படி மேலே சென்று செலவை இன்னும் குறைத்து ஆரோக்கியமான போட்டியைக் கொடுத்துள்ளது. ஆந்திராவும் ராஜஸ்தானும் கூட இந்தப் போட்டியில் உள்ளது .  

ஹைட்ரோகார்பன் மூலம் எடுக்கப்பெறும் மின்சாரம் என்பது இந்த 3 ரூபாயைவிட அதிகத் தொகையாக இருக்கும் பட்சத்தில், வர்த்தக ரீதியாக அது சாத்தியமில்லாத திட்டமாக மாறும். அப்பொழுது பெரு நிறுவனங்களின் பார்வை காவேரிப் படுகையை விட்டு அகலும் . நமக்கு நம் காவேரி பூமி நெல் விளையும் பூமியாகவே தொடரும் .  

இதை அரசு மட்டுமே செயல்படுத்த முடியாது. மக்களும் இணைந்தால்தான் இது சாத்தியப்படும். தமிழக அரசு, மேற்சொன்ன விஷயங்களைச் செயல்படுத்துகின்ற அதே வேளையில், தமிழக அரசின் தற்போதைய சூரிய மின்சக்தி சார்ந்த திட்டங்கள் மக்களைச்  சென்று அடையவும் மக்கள் அனைவரும் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கைகோக்க வேண்டும். 

தீர்வை நோக்கிய பயணத்தில், நாம் அனைவரும் பங்கு எடுக்கவில்லை என்றால் நம் பயணமே பிரச்னை ஆகிவிடும். உலகம் நம்மை உற்று நோக்குகிறது. தூய்மையான மின்சாரத்தை நோக்கிய நம்முடைய இலக்கு எட்டி விடும் தூரம்தான் .