Published:Updated:

``பக்கத்துல வரத் தயங்கினவங்க, இப்ப அம்மா அம்மானு கூப்பிடுறாங்க!" - முதியோர் இல்லம் நடத்தும் திருநங்கை தேவி

"என்னைப் புறக்கணிச்ச ஊர்மக்களே இன்னைக்கு `அம்மா அம்மா' என வாய் நிறைய கூப்பிடறாங்க."

``பக்கத்துல வரத் தயங்கினவங்க, இப்ப அம்மா அம்மானு கூப்பிடுறாங்க!" - முதியோர் இல்லம் நடத்தும் திருநங்கை தேவி
``பக்கத்துல வரத் தயங்கினவங்க, இப்ப அம்மா அம்மானு கூப்பிடுறாங்க!" - முதியோர் இல்லம் நடத்தும் திருநங்கை தேவி

`நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்றார் அப்துல் கலாம். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே ஒரு குக்கிராமத்தில் வாழும் தேவி, அத்தகைய சரித்திரமாகத் தன்னை முன்னெடுத்துச் செல்கிறார். 

பொதுவாக, திருநங்கைகள் என்றாலே தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கு, உரிமைகளுக்குப் போராடும் நிலைதான் இங்கு. இந்தச் சூழ்நிலையில், `தாய்மடி அறக்கட்டளை' என்ற அமைப்பைத் தொடங்கி, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களைப் பராமரித்துவருகிறார். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் `அமுத சுரபி' என்ற திட்டம் மூலம், அரிசி வழங்கிவருகிறார். ஏரி, குளம், குட்டைகளைச் சீராக்குகிறார். தெருவோரப் பிச்சைக்காரர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகள்  செய்துவருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகப் பல உதவிகளை முன்னெடுக்கிறார்.

அவரைப் பார்க்கச் சென்றபோது, கேரள வெள்ள நிவாரண நிதி அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். ``எல்லாத் திருநங்கைகள்போல என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையும் கள்ளிச்செடியில் சிக்கிய காகிதப் பட்டமாகத்தான் துயரங்கள் சூழ்ந்திருந்தது'' எனப் பேச ஆரம்பித்தார்.

``என் அப்பா பேரு, கோவிந்தன். அம்மா பேரு, முத்துப்பிள்ளை. எனக்கு ஓர் அக்கா. சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அரண்மனைக்காடு கிராமம் சொந்த ஊரு. எனக்கு அப்பா வெச்ச பேரு குமார். நான் 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே இறந்துட்டார். அம்மாதான் எங்களை வளர்த்து ஆளாக்கினாங்க.

நான் வீட்டின் ஆண் மகன். எனக்கு அதிகப் பொறுப்பும் கடமையும் இருக்கு என்று ஒரு மனசு சொல்லிட்டிருந்த காலகட்டத்தில், `இல்லே நீயும் அம்மா, அக்கா மாதிரி ஒரு பெண் என இன்னொரு மனம் துரத்தும். இந்த மனச் சண்டைக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தேன். அப்புறம், நான் ஒரு பெண்தான் என்ற முடிவுக்கு முழுமையா வந்தேன்.

ஆனால், சமூகத்துக்கு பயந்து ஆண் உடையில், பெண் நளினத்தோடு மேல்நிலை பள்ளிக்குப் போனேன். சக மாணவர்களின் கேலிக்கு அளவே இருக்காது. ப்ளஸ் டூ முடிச்சதும் வீட்டில் சொல்லாமல் பூலாம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை சுமதி உதவியோடு கடப்பாவுக்குப் போனேன். 16 வயசில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துட்டு, பெயரையும் தேவி என மாத்திக்கிட்டேன்.  

நாலு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த என்னைப் பார்த்து அம்மா ஒப்பாரி வெச்சாங்க. `என் புடவையைக் கட்டத்தானே ஆசைபட்டே. இந்தா இந்தப் புடவையைக் கட்டிக்கோ. ஆனால், உன் மேலே இருக்கிறது என் புடவை. அதை நீ மனசுல வெச்சுக்கிட்டு எந்தச் சூழ்நிலையிலும் தப்பாகப் போகமாட்டேன்னு சத்தியம் செய்'னு சொன்னாங்க.

அப்படிச் சத்தியம் செஞ்சதும் கட்டிப்பிடிச்சு ஏத்துக்கிட்டாங்க. ஆனால், வீட்டுக்கு வெளியே ஒரே கூச்சல். ஊர்க்காரங்க ஒண்ணுகூடி, நிற்கிறாங்க. `அவனை வீட்டைவிட்டு துரத்து. அவன் இங்கிருந்தால் ஊருல இருக்கும் ஆம்பள பசங்க கெட்டுப்போயிருவாங்க'னு கத்தினாங்க. அப்போ என் அம்மா, `இந்த ஊரைவிட என் பிள்ளை எனக்கு முக்கியம். அவன் எந்த ஒரு தப்புதண்டாவுக்கும் போகமாட்டான்'னு சொன்னாங்க'' என்கிற தேவியின் குரல் நெகிழ்கிறது.

அப்புறம் வீட்டுக்குள்ளேயே மூணு வருஷம் முடங்கிக் கிடந்தேன். டெய்லரிங் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, பல இடங்களுக்குப் போனேன். ஆனால், யாரும் கற்றுக்கொடுக்க முன்வரலை. அப்போ, தாழையூரில் உள்ள சிங்காரவேல் என்ற அண்ணன் கற்றுக்கொடுக்க சம்மதிச்சார். அப்புறம், எங்க ஊரிலே சொந்தமாக தையல் கடை வெச்சேன். ஆரம்பத்தில் துணி தைக்கவே வரமாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அவங்க நம்பிக்கையையும் நட்பையும் பெற்றேன்.

இந்தச் சூழ்நிலையில் என்னோடு படிச்ச கமலா என்ற திருநங்கை, மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அரசின் தாய் திட்டத்தில் களப்பணியாளர் தேவைப்படுது வர்றியானு கேட்டாங்க. அந்தத் திட்டத்தில் களப்பணியாளராக இரண்டு ஆண்டுகள் இருந்தேன். தாய் திட்டத்திலிருந்து திருநங்கைகளுக்கு மட்டுமான `தாய் விழுது' என்ற புதிய அமைப்பை தொடங்கினாங்க. சேலம், தருமபுரி, நாமக்கல் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் அடங்கிய `தாய் விழுது' அமைப்பின் முதல் தலைவியாக என்னை நியமிச்சாங்க.

\

நான் தலைவியானதும், திருநங்கைகளின் நடை, உடை, பாவனைகளில் ஆபாசம் இருக்கக் கூடாது, பாலியல் தொழில் செய்யக் கூடாது, கடை ஏறக் கூடாது, திருநங்கைகளுக்கான தொழிற்பயிற்சி மையம் வேண்டும் எனச் சில அதிரடியான தீர்மானங்கள் கொண்டுவந்தேன். தெருவோரப் பிச்சைக்காரர்களுக்கு உணவு வழங்குதல், மனநோயாளிகளுக்கு முடிதிருத்தம் செய்தல் எனத்  திருநங்கைகளை சமுதாயத் தொண்டு செய்யறவங்களாக மாற்றினேன். இதனால், சில திருநங்கைகளின் எதிர்ப்புகளுக்கும் ஆளானேன். அதேநேரம், கருணை உள்ளவர்களின் தொடர்புகள் நிறைய கிடைச்சது'' என்கிறவர் சற்றே அமைதியாகிறார்.

``ஆனால், ஒரு வருஷத்துக்கு மேலே அந்த அமைப்பின் தலைவியாக நீடிக்க முடியலை. சில திருநங்கைகளின் கடும் எதிர்ப்பால், அமைப்பைவிட்டு வெளியே வந்துட்டேன். ஊரைத் தாண்டி வெளியில் போகக் கூடாது என முடிவெடுத்தேன். தையல் தொழில் செய்தும், எங்க காட்டில் கிடைச்ச வருமானத்தையும் வெச்சும், `அமுத சுரபி' என்ற பெயரில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி கொடுக்க ஆரம்பிச்சேன். ஏரி தூர் வாருதல், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவறது எனச் செய்ய ஆரம்பிச்சேன்.

என்னுடைய ஒழுக்கத்தையும் தொண்டுள்ளத்தையும் பார்த்த ஊர் இளைஞர்கள், என்னோடு தோள் கொடுக்க முன்வந்தாங்க. நாங்கள் செய்யும் களப்பணிகளைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் உதவ ஆரம்பிச்சாங்க. 2014-ம் ஆண்டு, `தாய்மடி அறக்கட்டளை' தொடங்கினோம். இப்போ, எங்கள் முதியோர் இல்லத்தில் 25 பேர் இருக்காங்க. அவர்களை அன்போடு கவனிச்சுக்கிறோம். மாதந்தோறும் பெளர்ணமி அன்று `அமுத சுரபி' மூலம் 200 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிவருகிறோம்.

என்னைப் புறக்கணிச்ச ஊர்மக்களே இன்னைக்கு `அம்மா அம்மா' என வாய் நிறைய கூப்பிடறாங்க. ஆரம்ப காலத்தில் எனக்கும் காதல் வந்துச்சு. கூடவே பயமும் இருந்ததால், அந்தக் காதல் மனசிலேயே கருகிவிட்டது. இப்போ, காதல், திருமணத்தில் விருப்பமில்லை. ஏழைக் குழந்தைகளின் கல்வி, பசியைத் தீர்க்கிறதே பெரும் கடமையாச் செய்துட்டிருக்கேன்'' என்றார்.