Published:Updated:

``இறையச்சம், பரிசுத்தம், போதுமென்ற மனத்தைக் கோருகின்றேன்’’ - நபிகளார் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்!

``இறையச்சம், பரிசுத்தம், போதுமென்ற மனத்தைக் கோருகின்றேன்’’ - நபிகளார் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்!
``இறையச்சம், பரிசுத்தம், போதுமென்ற மனத்தைக் கோருகின்றேன்’’ - நபிகளார் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்!

``இறையச்சம், பரிசுத்தம், போதுமென்ற மனத்தைக் கோருகின்றேன்’’ - நபிகளார் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்!

ஸ்லாம், ஏக இறைவனிடம் நாம் எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டுமென நமக்கு வழிகாட்டுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) `பிரார்த்தனை வழிபாட்டின் சாரம் ஆகும்' (நூல்: திர்மிதீ) என்று கூறுகின்றார். 

ஏக இறைவனிடம் மட்டும் பிரார்த்தியுங்கள்! 

* அவனை அழைப்பதுதான் சரியானதாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக்கக்கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தண்ணீரை நோக்கி, தன் இரு கைகளை நீட்டி, `தண்ணீரே, என் வாயினுள் வந்துவிடு!' என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக்கூடியதாக இல்லை. - (திருக்குர் ஆன் 13:14) 

இடையாளின்றி இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள்! 

* நபியே! என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் என்பதைத் தெரிவித்துவிடுங்கள். எனவே, அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக்கொள்ளட்டும். என் மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும். - (திருக்குர் ஆன் 2:186) 

இறைவனிடம் முழு நம்பிக்கைகொண்டு பிரார்த்தியுங்கள்! 

* நம்முடைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என முழு உறுதியுடன் உளப்பூர்வமாகப் பிரார்த்தியுங்கள். அலட்சியமாகவும் அக்கறையின்றியும் வெளிப்படும் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை. - (நூல்: திர்மிதீ) 

அழுத்தம் கொடுத்து மன்றாடுங்கள்!

* உங்களில் எவரும் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது `இறைவனே! உனக்கு விருப்பமிருந்தால் என்னை மன்னிப்பாயாக' என்று கூற வேண்டாம். அதற்கு மாறாக (இறைவனிடம்) வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து மன்றாடுங்கள். உங்களுடைய ஆசைகளையும் ஆர்வங்களையும் மகத்தானவையாக வைத்திருங்கள். ஏனெனில், இறைவன் எதைக் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது அவனுக்குச் சுமை ஆகாது. - (நூல்: முஸ்லிம் 5201) 

மிக்கப் பணிவுடனும் நடுங்கிய உள்ளத்துடனும் பிரார்த்தனை புரியுங்கள்! 

* நபியே! காலையிலும் மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! உம் மனதுக்குள் பணிவுடனும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும் பிரார்த்தியுங்கள். தூய்மையாக வாழ்வோரின் பிரார்த்தனைகள் மட்டுமே ஏற்கப்படும்.

குர் ஆன் கூறும் சில பிரார்த்தனைகள்!

*அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (தொடங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகுக்கும் ரப் அதிபதி ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெரும் கருணையாளனாகவும் தனிப்பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 

இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத, நெறிதவறிப் போகாதவர்களின் வழி. 

இதுவே திருக்குர்ஆனின் முதல் அத்தியாமாகும்.  - (திருக்குர்ஆன் 1:1-7) 

நபிகளார் கற்றுத் தந்த பிரார்த்தனைகள்!

* இறைவா! நான் உன்னிடம் நேர்வழி, இறையச்சம், பரிசுத்தத் தன்மை, போதுமென்ற மனம் ஆகியவற்றைக் கோருகின்றேன்! 

* இறைவா! உன்னை நினைவுகூரவும் உனக்கு நன்றி செலுத்தவும் சிறந்தமுறையில் உன்னை வழிபடவும் எனக்கு உதவி புரிவாயாக! 

* இறைவா! வெண்ணிற ஆடை அழுக்கைவிட்டு (முற்றிலுமாக) தூய்மையாக இருப்பதுபோல் என்னுடைய இதயத்தைப் பாவக்கறையிலிருந்தும் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! கிழக்கையும் மேற்கையும் (ஒன்றைவிட்டு ஒன்றை) நீ தூரமாக்கியது போன்று என்னைவிட்டு என் பாவங்களைத் தூரப்படுத்துவாயாக! 

(நூல்: முஅஜம் கபீர்) 

* இறைவா! என்னைத் திடமான பொறுமைசாலியாக ஆக்குவாயாக! மேலும் உனக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துபவனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக! மேலும், என்னை நானே எளியவனாக மதிப்பீடு செய்யும் மனப்பக்குவத்தைத் தந்தருள்வாயாக! மக்களுடைய பார்வையில் கண்ணியமானவனாய் நான் திகழ அருள் செய்வாயாக! 

* இறைவா! ஒழுக்கக் கேடுகள், தீய எண்ணங்கள், மன இச்சைகள் ஆகியவற்றிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இறைவா! சண்டைச் சச்சரவு, நயவஞ்சகம் ஒழுங்கீனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்! 

அடுத்த கட்டுரைக்கு