Published:Updated:

'''விளையாட அனுப்பாத... படிக்க வை’ன்னவங்களுக்கு நன்றி!'' - ஆசிய கேம்ஸில் வெள்ளி வென்ற தருணின் அம்மா

'''விளையாட அனுப்பாத...  படிக்க வை’ன்னவங்களுக்கு நன்றி!'' - ஆசிய கேம்ஸில் வெள்ளி வென்ற தருணின் அம்மா
'''விளையாட அனுப்பாத... படிக்க வை’ன்னவங்களுக்கு நன்றி!'' - ஆசிய கேம்ஸில் வெள்ளி வென்ற தருணின் அம்மா

"தருணைச் சார்ந்த எல்லாருக்குமே இப்போ பெருமையாக இருக்கும். பந்தயத் தூரத்தை 49 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கடந்த முதல் இந்திய வீரர் தருண்!"

சிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தருண். திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையம் என்ற கிராமத்தில் வசிக்கிறது தருணின் குடும்பம்.

மகனின் வெற்றியால் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறார் தருணின் தாயார் பூங்கொடி, "என் மகன் நிச்சயம் ஜெயிப்பான்னு தெரியும். அவன் பட்ட அத்தனை சிரமங்களுக்கான விடை கிடைச்ச நேரம் இது. தருணுக்கு 7 வயது இருக்கும்போதே, என் கணவர் மஞ்சள் காமாலையால் இறந்துட்டார். தருணையும் மகள் சத்யாவையும் வெச்சுட்டு குடும்பத்தை நடத்த நிறைய சிரமப்பட்டேன். என் அம்மாவும் தங்கச்சியும்தான் இப்போது வரை உறுதுணையாக இருக்காங்க. சின்ன வயசிலிருந்தே தருணுக்கு விளையாட்டுகள் மேலே உயிர். ஆனால், ஒரு ஜோடி ஷூ வாங்கித் தரவே வழியில்லாம இருந்தேன். 

எத்தனை கஷ்டங்களிருந்தாலும், அவனிடம் நம்பிக்கை நிறைஞ்சு இருந்துச்சு. பல விளையாட்டுகளில் கலந்துகிட்டு பரிசுகளோடு வந்து நிற்பான். அப்புறம் ஓட்டப்பந்தம் மேலே ஈடுபாடு அதிகமாச்சு. மாநில அளவிலான போட்டிகளில் ஜெயிச்சு வந்தவனை, 'நீ இன்டெர்நேஷனல் பிளேயர்டா. விடாம பிராக்டீஸ் பண்ணு' என ஊக்கம் கொடுத்தவங்க தருணின் பயிற்சியாளர்கள். அப்புறம், நேஷனல் போட்டிகளிலும் பதக்கங்களோடு வந்தான்'' எனப் பூரிப்புடன் தொடர்கிறார் அந்தத் தாய்.

''பள்ளிக்கூடம் லீவு விட்டாலே வெளியூர் கேம்ப் கிளம்பிடுவான். நடுராத்திரியில் தனியா வீடு திரும்புவான். கொண்டுபோய் விடறதுக்கும், கூட்டிட்டு வர்றதுக்கும் அவன் அப்பா இல்லையேன்னு பல தடவை ஏங்கியிருக்கிறேன். தெரிஞ்சவங்களும், சில சொந்தக்காரர்களும், 'நீ உன் மகனை எந்நேரமும் விளையாட்டுப் பக்கமே அனுப்பறே. ஒழுங்கா படிக்கச் சொல்லு'னு அட்வைஸ் பண்ணுவாங்க. 'என் மகன் நல்லாத்தான் படிப்பான். எந்தப் பரீட்சையிலும் தோற்கறதில்லே. அவன் ஆசைக்கு என்னைக்குமே குறுக்கே இருக்க மேட்டேன்'னு   தீர்க்கமா சொல்வேன். 

2017-ல், பெங்களூரில் நடந்த போட்டியில் தேசிய அளவில் சாதனைகளை நிகழ்த்திய தருண், ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வானான். ஆனால், ஒலிம்பிக்கில் வெற்றி பெறாதது எங்களை ரொம்பவே பாதிச்சது. இப்போ, அந்த வருத்தத்தை மறக்கடிக்கிற மாதிரி நாட்டுக்குப் பெருமையைத் தேடி தந்துட்டான்'' என்கிற பூங்கொடி முகத்தில் அத்தனை ஆனந்தம்.

தருணின் பள்ளிப் பயிற்சியாளர் அழகேசன், "நான் 16 வருடமாக தடகளப் பயிற்சியாளரா இருக்கேன். தருண் ரொம்பவே திறமைசாலி. கோ - கோ போன்ற குழு விளையாட்டில் பிளேயராக இருந்தவர். தன்னுடைய விடாமுயற்சியால் அத்லெடிக் கேம்ஸின் தனி நபர் விளையாட்டுகளில் சிறப்பா செயல்பட ஆரம்பிச்சார். 2016 - ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில் 50.54 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக அரசும் மத்திய அரசும் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டியது. நிறையப் பேரிடமிருந்து ஸ்பான்ஸர் கிடைச்சது. தருணைச் சார்ந்த எல்லாருக்குமே இப்போ பெருமையாக இருக்கும். பந்தயத் தூரத்தை 49 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கடந்த முதல் இந்திய வீரர் தருண்'' என்றவர் குரலில் பெருமிதம் மிளிர்ந்தது.

தடைகளைக் கடந்து தேசத்துக்குப் பெருமை சேர்த்த தருணுக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு