Published:Updated:

`மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ - ஜி நாகராஜன் பிறந்த தினப் பகிர்வு

`மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ - ஜி நாகராஜன் பிறந்த தினப் பகிர்வு
`மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ - ஜி நாகராஜன் பிறந்த தினப் பகிர்வு

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, எந்தவித ஒப்பனையுமின்றி சொற்களின் வழியே விஸ்தரித்த கலைஞன் ஜி.நாகராஜன். எதைப் பேசுவதற்கு பொதுச் சமூகம் தயங்குகிறதோ, யாரைப் பற்றிப் பேசினால் பலரும் முகம் சுளித்துச் செல்வார்களோ, அந்த மக்களின் மகிழ்ச்சியை, துயரத்தை, ஏமாற்றத்தைப் பதிவுசெய்தவர். இதைப் பற்றி ஜி.நாகராஜன் தனது நூல் ஒன்றின் அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

`நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால், முழுமையும்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.'

`குறத்தி முடுக்கு', `நாளை மற்றுமொரு நாளே' என்ற இரண்டு நாவல்களும் சிறுகதைகள் பலவும் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும் சமூகத்தில் உதிரிகளாக வாழ்பவர்களைப் பற்றிய பதிவாகவே இருந்துள்ளன.

அவரது `நாளை மற்றுமொரு நாளே' நாவலில், முந்தைய நாள் போதையின் தொடர்ச்சியாக எழும் கந்தனின் அன்றைய ஒரு நாளைப் பற்றியதாக கதை விரியும். கந்தன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் வழியே நம்மில் பலருக்கும் பரிச்சயம் இல்லாத வாழ்வு நம் மனதில் விரியும். அன்றைய தினத்தில் அவர் சந்திக்கும் மனிதர்களின் வழியே பல கதைகளைச் சொல்லியிருப்பார் ஜி.நாகராஜன்.

கந்தன் அன்றைய தினம் சந்திக்கும் முத்துசாமி, நண்பனின் மனைவி ராக்காயி, அந்தோணி என உரையாடும் ஒவ்வொரு கணத்திலும் நிகழும் உரையாடல்கள் இந்தச் சமூகத்தின் நிகழும் இருண்மையான வெளிச்ச வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. தேவி லாட்ஜ் உருவான கதை விவரிக்கப்டுகிறது. கந்தன், சாராயக்கடையில் வம்பிழுக்கிறான்; பெரிய மனிதர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்கிறான்; பெண்களைக் கைமாற்றிவிடும் தொழில் செய்கிறான். அவன் சந்திக்கும் அந்தோணி, ஏமாற்றும் கலையில் வல்லவனாக இருக்கிறான். இந்த  உலகில் சூழ்ச்சிதான் வெல்லக்கூடியது எனப் பாடமெடுக்கிறான். (இந்தக் கதாபாத்திரத்தின் சாயல்தான் `சதுரங்கவேட்டை' திரைப்படத்தில் வரும் `காந்தி பாபு' கதாபாத்திரம்.) சாராயக்கடைக்கு வெளியே உள்ள சால்னாக்கடை சிறுவன், பணம் வாங்கிய பிறகே பொருளைக் கொடுக்கிறான். குடித்துவிட்டு வருபவர்களிடம் பணம் வாங்க முடியாது என்கிற முன்ஜாக்கிரதை. 

தன் குழந்தை பலூனை வைத்து விளையாடும்போது, அதை சிகரெட்டால் சுட்டு உடைக்கிறான் கந்தன். குழந்தை பலூன் கேட்டு அழுகிறது. அவன் அன்று வீடு திரும்பும்போது அவனது குழந்தை கடுமையான காய்ச்சலால் இறந்துபோகிறாள். இப்படியாக, கந்தனின் ஒரு நாள் வாழ்வை பல கதாபாத்திரங்களோடு இணைத்துச் சொல்கிறார் ஜி.நாகராஜன்.

இந்த நாவலைப் பற்றி ஜி.நாகராஜன் அறிமுகவுரையில் இவ்வாறு கூறுகிறார். `இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திருக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில், அவனுக்கும் நம்மில் பலருக்கும்போலவே `நாளை மற்றுமொரு நாளே!'.

ஜி.நாகராஜன், தான் சொல்லவரும் கதைகளின் நியாயத்தைக் கற்பிப்பதோ, தவறு எனச் சுட்டிக்காட்டுவதோ அன்றி, அந்த உலகை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறார். அவர் அதன் நியாய, தர்மங்களை நம் மனதைக்கொண்டு குறுக்கு விசாரணை செய்யவிட்டுவிடுகிறார்.

அவரது `குறத்தி முடுக்கு' நாவலில் வரும் பெண்கள், அங்கு தங்கி வசிப்பவர்கள். அங்கு இருளில் சென்று திரும்பும் மனிதர்கள் தங்களின் இன்னொரு முகத்தை மாட்டிக்கொள்கிறார்கள். குடிகாரர்கள், விலை மாந்தர்கள், குற்றம் புரிபவர்கள் என அவர் பிம்பப்படுத்தும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இதே உலகில் வாழ்பவர்கள்தாம். ஆனால், வேறோர் உலகில் சஞ்சரிப்பவர்கள். 

முறுக்கு மீசை, ராணுவ வீரனைப் போன்ற திடகாத்திரமான உடல் எனக் கம்பீரமான தோற்றம்கொண்டவர் ஜி.நாகராஜன். காரைக்குடியிலும் மதுரையிலும் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஆங்கிலத்தில் செறிவான புலமை பெற்றிருந்தார். படைப்பின் உலகில் பித்துடன் அலைந்து திரியும் மனநிலைகொண்டவராகவே வாழ்ந்துவந்தார். வாழ்வின் திக்கற்ற சூழலில் ஜி.நாகராஜனின் இறுதி நாளில் அவரிடம் எஞ்சியிருந்தவை, சார்மினார் சிகரெட் பாக்கெட் ஒன்று, ஒரு தீப்பெட்டி, சிறு கஞ்சாப் பொட்டலம். அவரது மரணத்துக்கு முன், எழுத்தாளர் சி.மோகனும் சிவராமகிருஷ்ணனும் அவரை மருத்துவமனையில் சந்தித்தனர். அவர்களிடம் இறுதியாக ஜி.நாகராஜன் ஷெல்லியின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார். அந்தக் கவிதை, 

`வாழ்வின் முட்கள் மீது நானே விழுந்தேன்!
குருதிக் கொட்டிக்கொண்டிருக்கிறேன்.'

ஜி.நாகராஜன் தனது நூலில் மனிதர்களைப் பற்றிப் பொதுவான ஒன்றைக் கூறிப்பிட்டிருந்தார்... அது `மனிதன், மகத்தான சல்லிப்பயல்'!