Published:Updated:

கேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்!

கேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்!
கேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்!

கேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்!

கல்லூரிப் படிப்பு முடித்து கேம்பஸ் இன்டர்வியூயில் கிடைத்த வேலையையும், ஏற்கெனவே பார்த்துவந்த ஐ.டி வேலையையும் உதறிவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர் தமிழக யுவதிகள். இவர்கள், ``நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்" என்கின்றனர். இவர்கள் 27.08.2018 முதல் ஓராண்டு பயிற்சியில் களம் இறங்கியுள்ளனர்.  அவர்களிடம் பேசினோம்... 

``நான் பணம் கொடுத்து எந்தப் பயிற்சி மையத்துக்கும் சென்றதில்லை. இலவசமாகப் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சி வகுப்பில் சேர்ந்தே படித்து வெற்றி பெற்றிருக்கிறேன். இந்திய அளவில் 566-வது ரேங்க் பெற்றிருப்பதால், இந்திய வெளியுறவுப் பணி வாய்ப்பு கிடைக்கும். மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தால், அந்த மாவட்டத்தின் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். ஆனால், வெளியுறவுப் பணியில் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான பல பணிகளை கவனிக்க முடியும்" என்றார் செளமியா. 

இவரது தந்தை குமரன், தனியார் வாடகை கால் டாக்ஸி நிறுவனத்தில் டிரைவராகப்  பணியாற்றிவருகிறார். இவரிடம் பேசியபோது, ``நீண்ட போராட்டத்துக்குப் பிறகே, செளமியா குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். நானும் என் மனைவியும் தூத்துக்குடியிலிருந்து வேலை தேடி திருப்பூர் சென்று, சிறிய அளவில் மெஸ் வைத்து குடும்பத்தைக் காப்பாற்றினோம். மெஸ் ஓரளவுக்குக் குடும்பத்தை நடத்த உதவினாலும், புகையினால் மனைவிக்கு ஆஸ்துமா வர, மெஸ்ஸை தொடர்ந்து நடத்த முடியாத நிலை.

பொறியியல் படித்த செளமியாவுக்கு, ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தவர்,  தன்னுடைய கனவு ஐ.ஏ.எஸ் என வேலையை விட்டுவிட்டார். மகளின் கனவை நிறைவேற்ற வேண்டுமே எனத் திட்டமிட்டு, சென்னைக்குக் குடிபெயர்ந்து கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கினேன். சொற்ப வருமானத்தில் என் மனைவியின் மருத்துவச் செலவையும், மகளின் படிப்புச் செலவையும் சமாளித்துப் படிக்கவைத்தேன். தற்போது சாதனை படைத்திருக்கிறார் செளமியா" என்றபோது அவரது கண்களிலிருந்து வெளியேறிய நீர், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது.

இவரைப்போலவே தேசியத் தரவரிசையில் 335-வது இடம் பிடித்து சாதித்திருக்கிறார் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த செளமியா. இவரிடமும் பேசினோம். ``திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள கள்ளக்காம்பட்டி என் ஊர். எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுட்டி விகடனின் சுட்டி ஸ்டாராகத் தேர்வானேன். சுட்டி ஸ்டார்கள் சந்திப்புக் கூட்டத்தில் இறையன்பு ஐ.ஏ.எஸ், `நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்' என்ற புத்தகத்தை எனக்குப் பரிசாக வழங்கினார். இந்தப் புத்தகத்தில் `ஐ.ஏ.எஸ் ஆக, பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நம்பிக்கையும் உறுதியும் இருந்தால் போதும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

சென்னையில் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படிக்கும்போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் விண்ணப்பித்துத் தேர்வானேன். அந்தப் பயிற்சி, சமுதாயத்தின் பல விவரங்களைக் நுணுக்கமாகக் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது `கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ளவில்லை' எனக் கல்லூரியில் எழுதிக் கொடுத்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மட்டும் முழுமையாகத் தயாராகி வெற்றி பெற்றிருக்கிறேன்" என்றார் செளமியா.

கல்லூரியில் படிக்கும்போது `உயர் பணி பெறுவதே நோக்கம்' என்ற அடிப்படையில் சென்னைக்குப் படையெடுத்தனர் நான்கு தோழிகள். முழு நேர சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியில் இறங்கிய இவர்களில், முதல் முயற்சியில் இரண்டு பேர் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

ஒருவர் கார்த்திகேயினி. இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் 567-வது இடத்தையும், இந்திய வன அதிகாரி தேர்வில் அகில இந்திய அளவில் 12-வது இடத்தையும் பெற்றிருக்கிறார். 

``என் ஊர் பழநிக்குப் பக்கத்தில் வட்டமலைபுதூர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, மதுரை விவசாயக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரியின் சீனியர்கள் கொடுத்த ஊக்கத்தால் தோழிகளுடன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம் என முடிவெடுத்தோம். இரண்டாவது முயற்சியில் இரண்டு பணிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்றார். 

இவரது தோழி நிவேதாதேவி 755-வது ரேங்க் பெற்றிருக்கிறார். இவர், ``என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி. அப்பா அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மதுரை பி.எஸ்ஸி., வேளாண்மைக் கல்லூரியில் படித்தபோது எங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களான சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்-ஸும், தற்போது துணை ஆட்சியராக உள்ள ஜெயசீலனும் மாணவர்களுடன் சந்தித்துப் பேசுவார்கள். இவர்கள் பேச்சில் கிடைத்த ஊக்கத்தால் தேர்வு எழுதி, நாங்கள் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறோம்" என்கிறார். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பக்கம் உள்ள எராபினம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா, இந்திய வன அதிகாரி தேர்வில் 60-வது ரேங்க் பெற்றுள்ளனர். ``பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான்கு ஆண்டுகள் படித்து முடித்தவுடன் ஐ.டி நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் வேலைபார்த்தேன். ஆனால், ஒரே நேரத்தில் நிறுவனத்தில் வேலையும் பயிற்சியும் பெற முடியாததால் வேலையிலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முழு நேரமாகத் தயாரானேன். இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு எழுதி, மாவட்டத் தொழில் மையத்தில் உதவி பொறியாளராக வேலையும் கிடைத்தது. தொடர் முயற்சியில் இந்திய அளவில் வன அதிகாரி வேலையும் கிடைத்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்" என்றார். 

இவர்கள் அனைவரும் ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு, இந்தியாவில் பல்வேறு துறைகளில் பல்வேறு இடங்களில் உயர் அதிகாரிகளாகப் பதவியேற்று தமிழ்நாட்டுக்குப் பெருமைசேர்க்கவுள்ளனர். இந்திய முழுவதும் களம் காணும் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்! 

அடுத்த கட்டுரைக்கு