Published:Updated:

தலையில் டார்ச்சுடன் இரவில் நடக்கும் அறுவடை... காரணம் என்ன?! - மேற்குத் தொடர்ச்சி மலைக் கதைகள்

தலையில் டார்ச்சுடன் இரவில் நடக்கும் அறுவடை... காரணம் என்ன?! - மேற்குத் தொடர்ச்சி மலைக் கதைகள்
தலையில் டார்ச்சுடன் இரவில் நடக்கும் அறுவடை... காரணம் என்ன?! - மேற்குத் தொடர்ச்சி மலைக் கதைகள்

25 வருடத்திற்கு முன்பு எங்கள் நிலம் மற்றும் ஊரின்  நிலைமை இப்படி இல்லை. இப்போது இருப்பதைப் போன்ற  தேயிலை தோட்டங்களோ, விவசாய நிலங்களோ இல்லாத காலம். ஊரில் இருந்த பெரும்பாலானவர்கள்  வேலைக்கு வெளியூரையே  நம்பியிருந்தார்கள். வெளியூரில் செய்கிற வேலைக்கு “தங்கல் வேலை” எனச் சொல்லுவார்கள். அப்போது நீலகிரியில் மரம் வெட்டுவது பழக்கத்தில் இல்லை என நினைக்கிறேன். அதனால் 15 நாட்களுக்கு மேலாகக் கொடைக்கானல், கேரளா போன்ற இடங்களில்  தங்கியிருந்து மரம் வெட்டி அதைத் தூக்குவதுதான் வேலை. அப்பா, சித்தப்பா, மாமா என ஊரில் பலரும் ஏதாவது ஒரு ஊருக்கு வேலைக்குப் போவார்கள். வீட்டில் இருக்கிற அவர்களின் பிள்ளைகளை அம்மாக்கள்தான் பார்த்து கொள்வார்கள். பதினைந்து நாட்கள் கழித்து  வீட்டிற்கு ஊருக்குத் திரும்புகிற நாள் திருவிழா போல இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் அனைவருக்கும் இது தெரிந்திருக்கும்.

சில ஆண்டுகளில்  வெளியூரில் மரம் வெட்டும் வேலை இல்லையென்றானதும் தங்கல் வேலையை விட்டு விட்டு கோத்தகிரிக்கு திரும்பி வந்திருந்தார்கள். மரம் வெட்டும் தொழில் கோத்தகிரியில் தலையெடுக்க ஆரம்பித்தது. பிறகு கோத்தகிரிக்கு மரம் தூக்கும் வேலைக்குப் போனார்கள். காலை ஆறு முப்பது மணிக்கு வரும் பேருந்தில் ஊரில் இருந்து ஒரு குழுவாக வேலைக்குச்  சென்று வருவார்கள்.  எவ்வளவு பெரிய பாரமாக இருந்தாலும் நிம்மதியாக வேலை செய்ததற்கு இன்னொரு காரணம் எங்கே வேலை என்றாலும் தினமும் வீட்டிற்கு வந்து விடலாம் என்பதால்தான்.  அப்பாவும் அதே வேலைக்குத்தான் போனார். சதுர அளவில் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் மரங்களை லாரிக்கு தூக்கி வரும் காட்சிகளை இப்போது நினைத்தால் அவ்வளவு கனமாக இருக்கிறது. 

அதிகமாக வெட்டப்படுகிற  மரமாக “சைபர்” என்கிற மரம் இருந்தது. சைபர் மரத்தின் ஒவ்வொரு  கட்டைகளும் 150 இருந்து 200  கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும்.  நான்கு பேர் சேர்ந்து தூக்குவார்கள்.  பெரும்பாலும் கட்டைகளை ஒத்தையடி பாதையில்தான் தூக்கி வர வேண்டும். நான்கு பேரில் யாராவது ஒருவர் கொஞ்சம் பிசகினாலும் சிக்கல்தான். வேலை முடிந்து வீட்டுக்கு வருகிற அப்பா எப்போதாவது,  மரம் தூக்குவதால், தோள் பட்டைகளில் காயம் இருப்பதைக்  காட்டுவார். குறிப்பிட்ட இடத்தில்  தோள் கறுத்து போயிருக்கும். அதில் கை வைத்தால் வலியின் மொழியில்  “ஸ்” என்பார். அப்பாவுடைய  காயம் தெரிந்த அளவுக்கு அப்போது அவருடைய வலி தெரியாமல் போனதெல்லாம் துரதிர்ஷ்டம்.  இரவு படுக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே தலை வைத்துப் படுத்திருப்பார். திரும்பிப் படுத்தால் ஒரு பக்கமாக தோள் வலி எடுக்கும் போல.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிற  அப்பாக்களின் ஞாயிறு  விடுமுறை நாட்கள் அற்புதமானது. 300 வீடுகள் இருந்த எங்களது ஊரில் “முத்து மாரியம்மன் கிரிக்கெட் க்ளப்” என்கின்ற ஒன்றை ஆரம்பித்து விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஊராகச் சென்று கிரிக்கெட் விளையாடிவிட்டு வருவார்கள். அவர்களின் பயிற்சி களங்கள் அவ்வளவு இலகுவாய் இருக்கும். வீட்டில் இருந்து மனைவி மக்கள் என அப்பாக்களின் கிரிக்கெட் விளையாட்டை ரசித்துக் கொண்டிருப்பார்கள். குடும்பம் பார்க்கிறது என்கிற உணர்வே களத்தில் இருப்பவர்களுக்கு  ஒரு வித போதையை தரும். அவர்கள் அடிக்கிற பந்தை பொறுக்கிப் போட்டவன் என்கிற முறையில் அதை நான் உணர்ந்திருக்கிறேன்.  

இப்படியே போன நாட்களில் ஒருநாள் கோத்தகிரியில் மரம் தூக்குவது தடைப் பட்டது. ஆடிய கால், பாடிய வாய் மட்டுமல்ல தூக்கிய தோளும் சும்மா இருக்காது. மரம் தூக்குகிற  தொழில் அப்படியே விவசாய மூட்டைகளைத் தூக்குவது என மாறியது. முட்டை கோஸ், கேரட், உருளைக் கிழங்கு, பீட்ரூட்  என விவசாயப் பொருட்களின் மூட்டைகளைத் தோட்டத்திலிருந்து  சாலைக்குக் கொண்டு வர வேண்டும். சில விவசாய தோட்டங்கள் சாலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர்கள் தள்ளியெல்லாம் இருக்கும். அங்கிருந்து சாலையில் இருக்கும் லாரிக்கு கடத்திக் கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு மூட்டையும் குறைந்த பட்சம் 70 கிலோ இருக்கும். உருளைக் கிழங்குகளை  மூட்டையில் வைத்துக் கட்டுகிறவர்கள், ஒவ்வொரு மூட்டையிலும் மூட்டைத் தூக்குகிற  ஒருவரின் பெயரை எழுதுவார்கள். “அவன் 70 கிலோ கிழங்கு மூட்டையை அசால்ட்டா தூக்குவான் அவனுடைய மூட்டைல இன்னும் ரெண்டு கிழங்க எடுத்து வை” எனச் சொல்லி திணிப்பார்கள்.  “அந்த மூட்டையில் இருந்து நாலு கிழங்க  எடுத்துட்டு அந்த மூட்டையை அவருக்குத் தூக்கி விடு” என்று  சிலருக்கு கருணை காட்டுவார்கள். எவ்வளவு பெரிய மூட்டையாக இருந்தாலும்  அந்த  மூட்டையைத் தனி ஒருவராகத் தூக்கி வர வேண்டும்.  பெரும்பாலும் பள்ளத்திலிருந்து மேடான இடத்திற்கு மூட்டைகளைச் சுமந்து வந்தாக வேண்டும். தூக்கி வருகிறவர் தடுமாறுவது தெரிந்தால் குழுவில் இருக்கிற ஒருவர் உடனடியாக ஓடிவந்து தோள் கொடுப்பார். 

நினைவு தெரிந்த சில ஆண்டுகளாக அப்பா உருளைக் கிழங்கு  மூட்டைகளை எந்த அலுப்புமில்லாமல் சாலைக்கு  தூக்கி வந்து  கொண்டிருப்பார். பள்ளிக் கூடம் போகிற வழியில் எங்காவது மூட்டைத் தூக்கி கொண்டிருந்தால் அப்பா இருக்கிறாரா எனத் தேடியிருக்கிறேன். அவ்வளவு எளிதில்  தென்படமாட்டார். ஒரு நாள் அம்மாவோடு உருளைக் கிழங்கு தோட்டத்திற்குப் பக்கம் போகும் பொழுதுதான் கவனித்தேன். தோட்டத்தில் இருந்து பிடுங்கப்பட்ட கிழங்குகளை  “பொடி” “உருப்படி” “மண்டை” என   3 பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள்.  கிழங்கின் வாசம் காற்றில் கலந்திருந்த நேரம்.  அப்பா உருளைக் கிழங்கு மூட்டைகளைக் கோணி ஊசியால் தைத்து கொண்டிருந்தார். மற்றவர்கள் மூட்டைகளைத் தூக்கி கொண்டிருந்தார்கள். அப்பாவால் மூட்டையைத் தூக்க முடியவில்லையா? என்கிற கேள்வி எழும். ஆனால் யாரிடம் பதில் கேட்பது என்கிற குழப்பத்தில் அம்மாவிடம் கூட கேட்கப்படாமல் இருக்கிற கேள்வி அது. இது வரை பதில் தெரியாத கேள்விகளில்  அதுவும் ஒன்றாகவே இருக்கிறது. மூட்டை தூக்குகிற இடத்திலிருந்து மூட்டை தைக்கிற இடத்துக்கு வருவதற்கு மிகப் பெரிய மன திடம் வேண்டும். ராஜாவின் இடத்திலிருந்து சிப்பாய் என்கிற பதவிக்கு இறங்கி வருவதற்குச் சமமானது. அதற்கு முதலில் மனதளவில் தயாராக வேண்டும். யாராவது கிண்டல் செய்தால்  அவ்வப்போது கிழங்கு மூட்டையைத் தூக்கி நான் இப்போதும் கெத்தாக இருக்கிறேன் எனக் காட்டி கொள்வார். 

காலம் செய்கிற பணியைப்  போல வேறு யாருமே இங்கு அவ்வளவு கச்சிதமாக  செய்து விட முடியாது. காலம் இதுவரை எது எதையோ கரைத்திருக்கிறது. அது அப்பாவின் தோளையும் விட்டு வைக்கவில்லை. பிறகு எப்போதாவது அப்பா மூட்டைத் தூக்குகிறேன் என அடம்பிடித்தாலும் குழுவில் இருக்கிறவர்கள்  அவரை  மூட்டைத் தூக்க அனுமதித்ததில்லை. உருளைக் கிழங்கு மூட்டையோ, முட்டை கோஸ் மூட்டையோ, மூட்டைகளைத் தைக்கிற வேலையை சில காலம் செய்து கொண்டிருந்தார். கால ஓட்டத்தில் பிறகொருநாள் அப்படியே விவசாயியாக மாறினார். சொந்தமாக விவசாயம் செய்த பொழுதும் அப்பாவின் வேலை கோணியால் மூட்டைத் தைப்பதும், அந்த மூட்டையைத் தூக்கிவிடுவதும்தான்.  மூட்டைத் தைத்த அப்பாவின் இடத்திற்கு அவருக்குப் பிறகு யார் யாரோ வந்தார்கள் போனார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அப்பாக்களின் காலம் போல இல்லை, பிள்ளைகளின் காலம். அது முற்றிலும் வேறு ஒரு உருவத்திற்கு மாறி இருந்தது. 

இப்போதும் மூட்டைத் தூக்குகிற வேலை நடந்து கொண்டிருக்கிறது. முன்பு  இருந்த தூரம் இப்போது  குறைந்திருக்கிறது. இப்போது தோட்டங்களுக்கே வாகனங்கள் வந்துவிடுகின்றன.  அப்பாக்கள் தூக்கிய மூட்டைகளின் வலியைப்  பத்தில் ஐந்து பிள்ளைகள் ஏற்றுக் கொண்டார்கள். இப்போதும் அவர்கள்தான் மூட்டைகளைச்  சுமந்து கொண்டிருக்கிறார்கள்.  இப்போது இருக்கிற தலைமுறை வேறு ஒரு சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவு நகரத்தில் இருந்து கிராமங்கள் வரை ஒரு கண்மூடித்தனமான போட்டியை உருவாக்கி வைத்திருக்கிறது. யார் முதலில் காய்கறிகளை மேட்டுப்பாளையத்தில் இருக்கிற மண்டிக்கு (ஏலமிடும் இடம்) கொண்டு வருகிறார்களோ அவர்களின் பொருளை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள். அதன் பிறகு வருகிற பொருட்கள் அவ்வளவாக விலை போவதில்லை. அதனால் இப்போதெல்லாம் இரவு 11 மணிக்கே அறுவடையை ஆரம்பித்து விடுகிறார்கள். தலையில் ஒரு டார்ச் லைட்டை மாட்டிக் கொண்டு இரவு நேரங்களில் தோட்டத்திற்கு கிளம்பிப் போவார்கள். அறுவடை, சுத்தப்படுத்துவது, மூட்டைப் பிடிப்பது, அதை லாரியில் ஏற்றுவது என எல்லாமே இரவில் நடைபெறுகிற அளவிற்குக் காலம்  கொண்டு வந்திருக்கிறது. காலை சரியாக 10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலுள்ள மண்டிக்கு மூட்டைகளோடு லாரி வந்துவிடுகிறது. 

விவசாயம் இப்போது ஓட்டப்பந்தயம் ஆகியிருக்கிறது.