Published:Updated:

பூப் பூவாய் கவிதை!

பூப் பூவாய் கவிதை!

##~##

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள 'பொன் முடித்திருத்தகம்’, ஏரியாவில் ரொம்பவே பிரபலம். 50 வருடங்களுக் கும் மேலாக இந்தக் கடையை நடத்திவரும் காவனூர் வேலன், கடையில் செறிவான நூலகம் ஒன்றைப் பராமரித்து வருவது தான் சிறப்பு!

''நாங்க சித்த மருத்துவக் குடும்பம். சித்த மருத்துவம் நலிவடைஞ்சதால வட ஆற்காடு காவனூரில் இருந்து பிழைக்க சென்னைக்கு வந்தோம். இங்கே முடிதிருத்தும் தொழிலைக் கத்துக்கிட்டு, மாச வாடகை 27 ரூபாய்க்கு இந்தக் கடையை ஆரம்பிச்சேன். இன்னிக்கு இந்தக் கடைக்கு 4,000 ரூபாய் வாடகை. தலைவர்கள் பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம்னு எதையும் விடமாட்டேன். அப்படித்தான் தமிழ் மீது ஆர்வம் வந்துச்சு. கவிதையும் எழுதுவேன்.

பூப் பூவாய் கவிதை!

நான் எழுதின கவிதைகளை முல்லை மாலை, செவ்வல்லி, செம்பரத்தை, பூவரசு என்ற பெயர்களில் புத்தகமாகத் தொகுத்து இருக்கேன். எல்லாப் புத்தகமும் பூ பெயரா இருக்குனு பார்க்கிறீங்களா? முதல் தொகுப்புக்கு 'முல்லை மாலை’னு பேரு வெச்சேன். ஆனால், நான் மதிக்கும் வெற்றியழகன் அய்யா, 'உலகத்துல பல விதமான பூக்கள் இருந்தாலும் அது எல்லாத்தையும் நீர் பூ, செடிப்பூ, கொடிப்பூ, மரப்பூனு நாலு விதமாப் பிரிக்கலாம். உன்னோட காவியம் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விதமான பூ பேரை வை’னு சொன்னார். இப்படி கவிதை, கட்டுரை, நாடகம்னு இதுவரை 11 நூல்கள் வெளியிட்டு இருக்கேன். இங்கே வர்ற வாடிக்கையாளர்கள் தங்களோட பிள்ளைகளை மேற்கொண்டு என்ன படிக்கவைக்கலாம்னு யோசனை கேட்பாங்க. அதுக்காகவே ஏகப்பட்ட வழிகாட்டிப் புத்தகங்கள் வாங்கிவெச்சிருக்கேன். ஆனா, நான் படிச்சது என்னவோ வெறும் அஞ்சாங் கிளாஸ்தான். கஸ்டமருங்க எந்தப் புத்தகம் கேட்டாலும் இருந்தா எடுத்துக் கொடுப்பேன். இல்லைனா, யார்கிட்டயாவது இரவலாவது வாங்கித் தந்துடுவேன். 73 வயதைத் தாண்டியாச்சு. வர்ற வாடிக்கையாளர் எல்லாரையும் வாசகர் ஆக்கணும். அதுதான் என் ஆசை!'' கனவோடு முடிக்கிறார் வேலன்.

- அ.முகமது சுலைமான்
படம்: அ.ரஞ்சித்

அடுத்த கட்டுரைக்கு