சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

ஆரோக்கியம் காக்கும் ஆடல் கலை!

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

ஆரோக்கியம் காக்கும் ஆடல் கலை!

''அஞ்ஞானத்தை விலக்கி உண்மை நிலையை உணர வைக்கும் ஆன்மிக தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் பரதக்கலை. 'பாவம், ராகம், தாளம்’ எனும் மூன்றையும் உள்ளடக்கிய ஒரு அற்புதக் கல்வி முறை. இந்த வகையில், தேசத்தின் பெயரும், அர்த்தமும் ஒருசேரக் கொண்ட கலைப்பெருமை நம் நாட்டுக்கு மட்டுமே உண்டு!'' - வார்த்தைகளிலேயே அபிநயம் பிடித்து அட்சர சுத்தமாய் பேசுகிறார் நாட்டிய ஆச்சார்யா 'பத்மபூஷண்’ தனஞ்செயன்!

##~##
'பரத கலாஞ்சலி’ என்ற நாட்டிய அமைப்பின் மூலம் பரதக் கலையின் பெருமைகளை உலகம் முழுவதும் பறைசாற்றி வருபவர் தனஞ்செயன். நாட்டியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாவில் சரளமாக நர்த்தனமாடுகிறது சம்ஸ்கிருதம். கலைக்கூடத்தில் நாட்டியம் பயிலும் மாணவர்களுக்கு 'ஜதி’ சொல்லிக் கொண்டிருந்தவர் நம்முடன் பேசியதில் இருந்து....

''மனிதர்களுக்குள் எந்தத் துவேஷமும் இருக்கக்கூடாது என்ற கருத்தியலை ஓங்கிச் சொல்லும் விதமாகத்தான் 'உலகமே நம் குடும்பம்’ என்கிறது உபநிஷதம்! மனித வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதனை ஆன்மிகத்தோடு கலந்தே செய்து வைத்தனர் நம் முன்னோர்கள். சங்கராச்சார்யர், புத்தர், ரிஷிகள்.... போன்ற மகான்களோ, 'எதிரிகள் என்று யாரையும் நினைக்காதே. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கிறது. எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கிறபோதுதான் நாடு செழிக்கும்; நன்மை பயக்கும்’ என்ற கொள்கையை உரக்கச் சொன்னார்கள்.

நோய்த்தொற்றைத் தடுக்கக்கூடிய கிருமிநாசினியான மஞ்சளும் சுண்ணாம்பும் உடலுக்கு மிகவும் தேவையானவை. ஆனால், 'மஞ்சள் ஒரு கிருமிநாசினி’ என்று வெளிப்படையாக எடுத்துச் சொன்னால்கூட பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சொற்பம்தான். அதனால்தான் மஞ்சளை தெய்வ வழிபாட்டுடன் இணைத்து 'பிரசாத’மாக பயன்படுத்தச் செய்தார்கள்.

ஆரோக்கியம் காக்கும் ஆடல் கலை!

சர்க்கரையைக் குறைக்க, கொழுப்பைக் கரைக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க..... என மனித ஆட்கொல்லி நோய்கள் அனைத்துக்கும் 'நடைப் பயிற்சி’ நல்ல மருந்தாக இருக்கிறது. வருகிற நோயாளிகளிடமும் மருத்துவர்கள் இதைத்தான் சொல்லிவருகிறார்கள். ஆனாலும் யாரும் கேட்பது இல்லை. மருத்துவமனைகளும் மருந்துக் கடைகளும் எப்போதும்போல் நிரம்பி வழிகின்றன. இதனை அறிந்துதான் நம் முன்னோர்கள் 'கோயிலுக்குப் போய் பிரதட்சணம் செய்’ என்ற வழிமுறையை வகுத்தனர். பிரதட்சணம் என்பதும் நடைப்பயிற்சிதானே! தூய எண்ணத்துடன், கடவுளை வலம் வரும் இதுபோன்ற உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, கிடைக்கும் பலன் இரட்டிப்பாகிறது. சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதும் நாடி, நரம்புகளுக்குப் புத்துணர்வு ஊட்டக்கூடிய ஒருவகையான யோக நிலைதான். இதேபோல், காலையில் எழுந்து அரிசி மாவில் கோலம் இடுவது சின்னஞ்சிறு ஜீவராசிகளுக்கான ஜீவாதாரம் மட்டும் அல்ல. குனிந்த நிலையில் உட்கார்ந்து கோலம் இடுவதும்கூட உடல் ஆரோக்கியத்துக்கான அடிப்படை உடற்பயிற்சிதான்!

ஆரோக்கியம் காக்கும் ஆடல் கலை!

வேதங்கள் நான்கு என்று சொல்கிறோம். ஆனால், ஐந்தாவதாக ஒரு வேதமும் உண்டு. அதுதான் 'பஞ்சம வேதம்!’ வேதங்களில் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு எழுதப்பட்ட பஞ்சம வேதம்தான் 'நாட்டிய சாஸ்திர’மாகப் போற்றப்படுகிறது. வாழ்க்கையில் மனிதனுக்குத் தேவைப்படும் ஞானம், தத்துவம் எல்லாமே பரதத்தில் இருக்கிறது. ஒரே சமயத்தில் ஐம்புலன்களையும் அடக்கி தியான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்லக்கூடிய சக்தி பரதக் கலைக்கு மட்டுமே உண்டு!

தாளம், அபிநயம், சங்கீதம், முத்திரை, உடல் அசைவு என அனைத்தையும் ஆழ்ந்து உள்வாங்கி,  அடுத்த நொடியில் செயல்படுத்துவதற்கு முதலில் மனது ஒருநிலைப்படவேண்டும். இதுதான் தெய்விக நிலை! எனவேதான், நாட்டியக் கலைக்கு 'பக்தி மார்க்கம்’ என்றொரு பெயரும் உண்டு! நிருத்தம், நிருத்தியம், அடவுகளால் புராணக் கதைகளையும், பக்தியை யும் பரப்புகிறோம். மனதும் உடம்பும் ஆரோக்கியமாக இருந்தால்தான் பரதம் கற்க முடியும்; பக்தியை வளர்க்கவும் முடியும்!

பரதத்தில் 'நிருத்தம்’ என்பது உடலால் செய்யக்கூடிய பல கரணங்களை உள்ளடக்கிய உடற்பயிற்சி. பத்து மண்டலங்களைக் கொண்ட அடவுகள் யோகா அடிப்படையிலானவை. 'நிருத்தியம்’ என்பது மனதின் ஆழத்தில் இருந்து பாவங்களை வெளிக் கொணர்ந்து முகம் வழியாகவும், முத்திரைகளாகவும் வெளிப்படுத்தி புரியவைப்பது. உடல் ஆரோக்கியத்தையும் ஆன்மிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தக்கலை, ரிஷிகள் வகுத்து வைத்த பாடம். அதனால்தான் நாட்டியக் கலையை 'பஞ்சம வேதம்’ என்கிறோம்.

ஆரோக்கியம் காக்கும் ஆடல் கலை!

வெறும் உடல் அசைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மேலை நாட்டு நடனங்களில் உடற் பயிற்சி மட்டுமே மேலோங்கி இருக்கும். ஆனால், சரீரம், மானசீகம், ஆன்மிகம்.... மூன்றையும் உள்ளடக்கிய நம் பாரம்பரிய நாட்டியக் கலையை சரிவரச் செய்தால் மனிதனுக்கு நோய் நொடி என்பதே இல்லை! எந்தக் கெட்ட எண்ணங்களும் வராது. அதனால் தான் 'கொலை தவிர்க்க... கலை வளர்க்க’ என்ற சொற்றொடரைச் சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். மனித மனத்தைச் செம்மைப்படுத்தக்கூடிய கலைகள் செழுமையாக இருந்தாலே, அங்கே கெட்ட எண்ணங்களும், கெடுதல்களும் இராது என்பது இதன் அர்த்தம்.

இறை வழிபாட்டின்போது கை விரல்களால் செய்யப்படும் முத்திரைகளால் உடலில் நாடி நரம்புகளுக்கு ஏற்படும் புத்துணர்வுகளைப் பற்றி இன்றைய மருத்துவ உலகம் வியந்து பார்க்கிறது. ஆனால், விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே பஞ்ச பூதங்களையும் மனித உடலையும் உள்ளார்ந்து ஒப்பிட்டு அறிந்து வைத்திருந்தனர் ரிஷிகள். 'அனபத்மம்’, 'கடகாமுகம்’ என்று பரதத்தில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு முத்திரையிலும் ஆரோக்கியம் ஒளிந்துகிடக்கிறது.

அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கும் ஆண்டவனே தாண்டவக் கோலத்தில்தானே காட்சி தருகிறான்! அந்த நடராஜ நர்த்தனத்தின் அர்த்தம்தான் என்ன?'' என்று கேள்வியை எழுப்பிய தனஞ்செயன், ''அசைவுகள் இன்றி வாழ்க்கையே இல்லை என்பதுதான்!'' - பளீரென பதில் சொல்லிச் சிரிக்கிறார்.

- த.கதிரவன்