Published:Updated:

எழுத்தாளர், சொற்பொழிவாளர்... மறைந்த சமணத் துறவி முனி தருண் சாகர் மஹாராஜின் கதை!

எழுத்தாளர், சொற்பொழிவாளர்...  மறைந்த சமணத் துறவி முனி தருண் சாகர் மஹாராஜின் கதை!
எழுத்தாளர், சொற்பொழிவாளர்... மறைந்த சமணத் துறவி முனி தருண் சாகர் மஹாராஜின் கதை!

சமணத் துறவி முனி தருண் சாகர் மஹாராஜ்... பெண்களின் வழிபாட்டுரிமைக்குக் குரல் கொடுத்த மகான்!

"பெண் குழந்தை இல்லாதவர்கள் அரசியலில் நுழையத் தடை விதிக்க வேண்டும். யார் அதிகப் பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். துறவிகள், பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மட்டுமே பிச்சை பெற்று மற்ற வீடுகளைப் புறக்கணிக்க வேண்டும். சமூகத்தில் இருப்பவர்களும் பெண்ணுக்கு வரன் பார்க்கும்போதுகூட அந்த வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் மட்டுமே திருமண உறவுகளை மேற்கொள்ள வேண்டும். நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள சமநிலையற்ற தன்மையைப் பார்க்கும் போது நாம் 14-ம் நூற்றாண்டில் வாழ்வதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது" 

ஹரியானா சட்டசபையில் நிர்வாணக் கோலத்தில் நின்றபடி சமணத் துறவி முனி தருண் சாகர் மஹாராஜ் பேசிய வார்த்தைகள் இவை.

ஆன்மிகவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் தருண் சாகர். பொதுவாக, துறவறம் மேற்கொண்ட சமணத் துறவிகள் பொது வாழ்விலிருந்து விலகியே வாழ்வார்கள். ஆனால், தருண் சாகர் சமூகம் குறித்து நிறைய பேசினார். சமணர்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் விரும்பும் வண்ணம் வாழ்ந்த இந்த மகான் செப்டம்பர் 1-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்குப் பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள்.

அகிம்சை, வாய்மை, கல்லாமை, துறவு, அவாவறுத்தல் என்று மகாவீரர் போதித்த அறங்களைப் பின்பற்றி, 24 தீர்த்தங்கரர்களை வழிபடுகிறவர்கள் சமணர்கள். கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டது சமண மதம். `இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும், அதைத் துறந்து தனது உடலைக் கடுமையாக வருத்தித் துறவு வாழ்க்கை மேற்கொண்டால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும்' என்பதே சமணக் கோட்பாடு. ஆண்களைப் போல, பெண்கள் துறவு மேற்கொண்டாலும் அவ்வளவு எளிதாக வீடுபேறு அடைய முடியாது. ஆனால், முனி தருண் சாகர் மஹாராஜ், பெண்கள் துறவு மேற்கொள்வதிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் அளித்தார். ஹரியானா சட்டசபையில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இவர் நிகழ்த்திய `கட்வெ பிரவாசன்' (கசப்புப் பேச்சு) எனும் சொற்பொழிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

1967-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள குஹாஞ்சி என்ற கிராமத்தில் பிறந்தார் தருண் சாகர். அவரது இயற்பெயர் பவன் குமார் ஜெயின். தனது 13-வது வயதில் `க்ஷுலாக்' (Kshullak - இளம்  துறவியாக) பொறுப்பேற்று, ஆன்மிக வாழ்வைத் தொடங்கினார். பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு 20 - ம் வயதில் `ஆச்சாரிய புஷ்படண்ட் சாகர்' எனும் சமண திகம்பரர் முன்னிலையில் 'முனி தருண் சாகர் மஹாராஜ்' எனும் நாமத்துடன் திகம்பரத் துறவியானார். 

சமண திகம்பரத் துறவிகள் என்போர், உலக வாழ்வியலிலிருந்து முற்றிலும் விடுபட்டு `உணர்ச்சிகளைத் துறந்து தன்னை வென்றவராகவே இருப்பர்'. ஆனால், முனி தருண் சாகர் மஹாராஜ் தனது மதம் மற்றும் அது போதிக்கும் கோட்பாட்டுக்கும் அப்பால் சமூகத்துக்காக வாழ்ந்திருக்கிறார். அரசியலும், மதமும் சங்கமித்தால் மட்டுமே நாடு மேன்மையடையும் என்று நம்பியவர். "முதன்மை அமைச்சரிடம் மந்திரி மண்டலம் (கேபினட் அமைச்சரவை) இருக்கிறது. எங்களிடம் கமண்டலம் இருக்கிறது. இந்த இரண்டும் இணைந்தால் உலகத்தை மறு கட்டுமானம் செய்து, வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்" என்றார். இந்தியாவுக்கு எதிரான அந்நிய தேசங்களின் சதிகளையும் கண்டித்துப் பேசியிருக்கிறார். 

சமணத் துறவி கடைப்பிடிக்க நெறிமுறைகளையும் அறனையும் கடைபிடித்து முன்மாதிரியாக வாழ்ந்ததோடு நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் அவர் உயர்த்திய குரல் அனைவரையும் ஈர்த்தது. அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் அப்போது எழுந்தன.

2015-ம் ஆண்டில், ராஜஸ்தான் நீதிமன்றம் சமணத் திகம்பரத் துறவிகள் கடைப்பிடிக்கும் சல்லேகனம் (சந்தாரா) எனும் நடைமுறையைத் தடை செய்தது. `சல்லேகனம் தண்டனைக்குரிய குற்றம்' என்றும் அறிவித்தது. `சல்லேகனம்' என்பது உணவில்லாமல் பட்டினி கிடந்து உயிரிழக்கும் முறை. `வடக்கிருத்தல்' என்று இதை நம் இலக்கியங்கள் பாடுகின்றன. வடக்கு நோக்கித் தர்ப்பைப் புல்லின் மீது அமர்ந்து உணவு உட்கொள்ளாமல் தீர்த்தங்கரர்களின் மந்திரத்தைக் கூறியபடியே விரதமிருந்து உயிரை விடுவது சல்லேகனம். இதற்கு நீதிமன்றம் தடை விதிக்க, ``சுதந்திர இந்தியாவின் அடிமைத்தனமான முடிவு" என்று எதிர்த்தார் தருண் சாகர். பிறகு நீதிமன்றம் `சல்லேகன'த்துக்கு விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டது. 2013-ம் ஆண்டு `கட்வே பிரவாசன்' எனும் நூலை 8 தொகுதிகளாக எழுதி முடித்தார். அதில் சமூகம் மற்றும் ஆன்மிகம் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார். 

துறவறத்தைக் கடைப்பிடித்தாலும் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் நலனிலும் அக்கறையுடன் வாழ்ந்த முனி தருண் சாகர் மஹாராஜின் மனம் மகாவீரரின் பாதங்களில் சரணடைந்து இளைப்பாறட்டும்! 

பின் செல்ல