Published:Updated:

எதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்

எதிர்வினை - சிவப்பு  நீலம்  கறுப்பு - ராஜூமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்

எதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்

டந்த ‘விகடன் தடம்’ (அக்டோபர் 2017) இதழில், ‘தமிழர் என்ற பொதுஅடையாளமும் தலித் என்ற தனித்த அடையாளமும்’ என்ற தலைப்பில் சுகுணா திவாகர் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதில், ‘தருமபுரி பிரச்னை உச்சத்தில் இருந்த காலத்தில் வெளிவந்த படம்தான் ‘ஜோக்கர்’. பெரியார் சிலைக்குக் கீழே சாதி மறுப்புத் திருமணம் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கதை நிகழும் இடம் தருமபுரி. ஆனால், ஓர் இடத்திலும் அம்பேத்கர் படம் இருக்காது. நம் முற்போக்காளர்களின் தன்னுணர்விலேயே அம்பேத்கர் விடுபட்டிருப்பதை நாம் அவலமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை முன்னிட்டு சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன். கட்டுரையில், ‘ஜோக்கர்’ படத்தில் எந்த இடத்திலும் அம்பேத்கரின் உருவம் இடம்பெறவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அம்பேத்கர் சிலைக்குக் கீழே கதையின் நாயகன் தீக்குளிக்கும் காட்சிதான் அப்படத்தின் ரிலீஸிற்கு முதல் நாள் அன்று நாளிதழ்களில் விளம்பரமாகக் கொடுக்கப்பட்டது. திரைப்படத்தின் முக்கியப் பாத்திரமான பொன்னூஞ்சல் இருப்பிடத்தைக் காட்சிப்படுத்தும்போதும் அம்பேத்கர், காந்தி இருவரின் உருவப்படங்களும் காட்டப்படும். படத்தின் முக்கியமான கட்டத்தில் நாயகன் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தும் காட்சி, அம்பேத்கர் சிலையின் முன்புதான் நிகழும். மேலும் படத்தில் அம்பேத்கரின் புத்தகங்களும் சில இடங்களில் காட்டப்பட்டிருக்கும்.  

எதிர்வினை - சிவப்பு  நீலம்  கறுப்பு - ராஜூமுருகன்

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களுக்காகப் போராடும் மனிதர்களைப் பற்றிய இந்தப் படமே அம்பேத்கரின் கருத்தியலுக்கு வலுசேர்க்கும் சிறிய முயற்சிதான் என நினைக்கிறேன். பொதுவுடைமை இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவன் நான். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மூவரும் நான் நம்புகிற மகத்தான கருத்தியல் ஆளுமைகள். எனது ஆசான்கள். எனது எழுத்தில், பேச்சில், படைப்பில் தொடர்ந்து மக்களிடம் இவர்களைக்கொண்டு செல்வதையும், இவர்களின் கருத்தைப் படைப்பின்வழி பிரதிபலிப்பதையும் முக்கியமான கடமையாகக் கருதுகிறேன். அதேசமயம், இவர்களின் உருவப்படத்தை, புத்தகங்களைத் திரையில் காட்டுவதை வைத்து மட்டுமே ஒரு படைப்பாளியின் அரசியல் நிலைப்பாடு அணுகப்படுவதை நான் ஏற்கவில்லை.மோசமான நிலையிலிருக்கும் ஒரு சமூகத்துக்கு அவர்களை நினைவூட்ட இதுவும் ஒரு சிறிய வழி, அவ்வளவுதான். அவர்களின் பெயரையோ முகத்தையோ நினைவூட்டாமல்கூட, அவர்களின் சமூக அரசியல் மாற்றத்திற்கான கருத்தை ஒரு சினிமாவின் ஆன்மாவாகப் படைக்க முடியும். அவர்களின் உருவங்களைக் காட்டுவதால் மட்டுமே அல்ல. ஆக, இதுபோன்ற விஷயங்களைக்கொண்டு ஒரு படைப்பாளியின் அரசியல் நிலைப்பாடுகளைச் சந்தேகப்பட வேண்டியதில்லை என்பது என் புரிதல். கட்டுரையாளர் சுகுணா திவாகரும் இதைப் புரிந்துகொள்வார் என்றே நம்புகிறேன்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எதிர்வினை - சிவப்பு  நீலம்  கறுப்பு - ராஜூமுருகன்நிலம், நீர், காற்று என யாவும் இன்று வளர்ச்சி என்ற பெயரில் சூறையாடப் படுகின்றன. கல்வியும் மருத்துவமும் பெருவியாபாரமாகிவிட்ட நுகர்வுச்சூழல். சாதியும் மதமும் கொடுநோயாகப் பரவிக்கொண்டி ருக்கிறது. மொழியும் பண்பாடும் மக்களின் நம்பிக்கைகளும் பாசிசத் தாக்குதலில் சிதைக்கப்படுகின்றன. இந்தப் பல்முனைத் தாக்குதல்களிலிருந்து மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அதுவே நல்ல நோக்கங்களோடு தேசம் முழுவதும் பரவிக்கிடக்கிற தோழர்களின் முதல் கடமை. அடையாள அரசியலால் மனிதத்தைச் சிதைத்து வேட்டையாடுகிற அதிகார அரசியலை அறுத்தெறிய நாம் ஒன்றாகத் திரள வேண்டும். அதை விடுத்து இன்னோர் அடையாள அரசியலால் நம்மை நாமே பிரித்துக்கொண்டு பலவீனமாகிவிடக் கூடாது. இந்த மூன்று தலைவர்களின் சிந்தனைக்குப் பின்னால் நிற்பவர்கள் தங்களின் உள்முரண்களைக் கைவிட்டு இணைய வேண்டும். இது காலத்தின் தேவை. மார்க்ஸின் சிவப்பும் அம்பேத்கரின் நீலமும் பெரியாரின் கறுப்பும் ஒன்று சேர்வதே நிகழ்கால வரலாற்றின் பாதையைச் சரியான திசைக்குத் திருப்புவதாக இருக்கும். இதில், நம் மனித உரிமைப் போராளிகளின் கைகளும் இணைந்துகொண்டால், அது மிக வலுவான மக்கள் சக்தியாக மாறும்.

மானுட விடுதலை சாத்தியமாக, சாதிய மதவாதக் கொடூரங்களை இல்லாது ஒழிக்க, மக்களை அழுத்தும் அபத்தமான அதிகாரங்களைக் கேள்வி கேட்டு மீட்டெடுக்க  இந்த மூவரின் தத்துவங்களின் பின் நிற்பவர்கள் இணைந்து செயல்பட வேண்டியது ஒன்றே காலத்தின் அவசியத் தேவை. அதையே நானும் விரும்புகிறேன்; வேண்டுகிறேன் தோழர்களே!