மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது!”

கமல்ஹாசன்
News
கமல்ஹாசன்

"இந்தச் சட்டம், லைசென்ஸ் அனைத்தும் மனிதர்களுக்குத்தானே தவிர, இயற்கைக்கு இவை எதுவும் பொருந்தாது”

“வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்றார்கள் அன்று. இன்று தமிழகத்தில், வடசென்னை தேய்கிறது; இதனால் ஒட்டுமொத்த சென்னையும் மூழ்கப்போகிறது. ஆம், அதற்கான ஒரு சோறு உதாரணம், எண்ணூர். என் ஊராக இருந்த ஊரை மண்ணூராக்கும் வேலைகள் பாதிக்கும்மேல் நடந்து முடிந்துவிட்டன. இந்த நெய்தல் நிலத்தைப் பாலை நிலமாக்கும் வேலைகளை அரசுகளே செய்கின்றன என்பதுதான் அச்சம்கொள்ள வைக்கிறது.

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நண்பர், சமூக ஆர்வலர், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, மேட்டுக்குடி மட்டுமே சொந்தம் கொண்டாடிவரும் கர்னாடக இசையைக் குப்பம்நோக்கிப் பாயவைப்பவர். அதன்வழி சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமனுடன் இணைந்து சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் ஏற்படுத்தும் வீரிய விழிப்பு உணர்வு மிக முக்கியமான ஒன்று. அதன் ஒரு பகுதியாக இவர்கள் தயாரித்து வெளியிட்ட  ‘புறம்போக்கு’ என்ற பாடல் காட்சி ஆவணப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். அதன்பிறகே எண்ணூரின் பாதிப்பை உணர்ந்தேன்.

இந்தப் பாடல் காட்சியைப் பார்ப்பதற்கு முன்புவரை ‘அங்க நிறைய ஃபேக்டரீஸ் இருக்கு’ என்ற அளவே

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எனக்கு எண்ணூர் பற்றித் தெரியும். தவிர, நான் அந்தப்பக்கம்போய்  20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்பதையும் ஒளிவுமறைவு இல்லால் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த மக்களுக்கும் மண்ணுக்கும் செய்துள்ள இடைஞ்சல்கள், சென்னையின் ஒரு பகுதியே தண்ணீரில் மூழ்குவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வேதனையுற்றுதான் கொசஸ்தலை ஆறு பற்றியும் அது அரசால் ஆக்கிரமிக்கப்படுவது பற்றியும் ட்விட்டரில் பதிந்திருந்தேன். எண்ணூரை நேரில் சென்று பார்த்து அந்த வலி உணரவேண்டும் என்ற உந்துதலால் நானும் நித்தியானந்த் ஜெயராமனும் கடந்த சனிக்கிழமை அதிகாலையிலேயே எண்ணூர் புறப்பட்டோம்.

நித்தியானந்த் ஜெயராமன்... நான் சொல்லித்தான் அவர் பெருமையடைய வேண்டும் என்பது இல்லை. ஏற்கெனவே மக்களிடம் சென்றுசேர்ந்துவிட்டவர். ஆனாலும் இவரைப்பற்றி இங்கு குறிப்பிடவேண்டியது என் கடமை. சூழலியல் செயல்பாட்டாளர்; அமெரிக்காவில் படித்தவர்; சர்வதேச ஊடகவியலாளர்களுடன் பணி செய்தவர்; சூழலியல் கூட்டங்களில் பங்கெடுக்கக் கண்டங்கள் தாண்டிப் பயணிப்பவர். 1990-களில் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி வயல்வெளிகளில் புற்றுபோல் படர்ந்த இறால் பண்ணைகள் போகப்போக மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கின. அவை பற்றிச் செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு, ‘எழுதினால் மட்டும் போதுமா’ என்ற எண்ணம் ஏற்பட்டு, மக்கள் போராட்டங்களில் கரம்கோத்துக் களச்செயல்பாட்டாளராக மாறியவர்.

நர்மதை ஆற்றுக்கான போராட்டம், கொடைக்கானலில் விஷம் பரப்பிய யூனிலீவர் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், போபால் போராட்டம் என்று எல்லைகள் தாண்டி அலைபவர். உயர்த்தப்பட்ட கடற்கரைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பெசன்ட் நகர், ஊரூர்க் குப்பம் மக்களுடன் இணைந்து களத்தில் நின்றார். இப்போது எண்ணூர்க் கடல் படுகையைக் காக்கும் போராட்டத்தில் மீனவ மக்களுடன் இணைந்து களத்தில் நிற்கிறார். அதைப் பற்றி எழுதியும் இயங்கியும் வருகிறார்.

இனி, எண்ணூர்ப் பயணத்துக்கு வருகிறேன். ஆழ்வார்பேட்டையிலிருந்து கிளம்பி வடசென்னையை நோக்கிச் சென்ற பயண இடைவெளியில் எண்ணூர் பற்றிச் சொல்லத் தொடங்கினார் நித்தியானந்த்.

“சென்னையின் வடக்கிலிருக்கும் பகுதி எண்ணூர். அங்கு வங்கக் கடலில் கலக்க ஆர்ப்பரித்து வருகின்றன கொசஸ்தலை ஆறும், ஆரணி ஆறும். இவை கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியைத்தான் ‘எண்ணூர்க் கடற்கழி’ (Ennore Creek) என்றழைக்கிறோம். இந்தச் சிற்றோடை 16 கிமீ நீளம், 6,500 ஏக்கர் பரப்பளவு எனப்  பரந்து விரிந்திருக்கிறது. நீர்ச்சூழலியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. பெரு வெள்ளங்களின்போது வெள்ள நீர், ஊருக்குள் புகாமல் தடுக்கும் அரண் இந்தக் கடற்கழி. சுனாமி போன்ற பேரலைகளின்போதும், மிக முக்கிய அரணாகச் செயல்படக் கூடியது. இவ்வளவு உயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை வழக்கம்போல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல, அனைத்துமே அரசு நிறுவனங்கள்.

காமராஜர் துறைமுகம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், வள்ளூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் ஆகிய அரசு சார் நிறுவனங்கள் இந்தப் பகுதியின் உயிர்ச்சூழலைக் கெடுக்கும்விதமாக, கடற்கழி ஆக்கிரமிப்பு தொடங்கிச் சாம்பல் உள்ளிட்ட கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பது வரை பல தீஞ்செயல்களைச் செய்துவருகின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதி மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது” என்றவர், என்முன் எண்ணூரின் வரைபடத்தை விரித்துவைத்து மேலும் விளக்கினார். 

“இந்த ஆக்கிரமிப்புக்காக மிகப்பெரிய தவற்றைச் செய்திருக்கிறது தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம் (Tamilnadu State Coastal Zone Management Authority). உங்களை, என்னை, நம்மை ஏமாற்றியிருக்கிறது இந்த ஆணையம். உயர் அலை எழும் பகுதியை ஒட்டியிருக்கும் 500மீ தூர கடற்கரை மற்றும் கடலின் அருகே இருக்கும் சிற்றோடைகள், கடற்கழிகள் ஆகியவற்றின் 100மீ தூர கரையை ‘கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலம்’ (Coastal Regulation Zone - CRZ) என்று சொல்கிறார்கள். இந்தப் பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைக்கொண்டு இதை CRZ 1, CRZ 2, CRZ 3 மற்றும் CRZ 4 என நான்காக வகைப்படுத்துகின்றனர். இதில் நம் எண்ணூர் CRZ 1-ன் கீழ் வருகிறது. அதாவது, மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து மீனவமக்களுடன் இணைந்து போராடி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஜேசு ரத்தினம் எனும் சூழலியலாளர் மூன்று வருட தொடர் போராட்டத்துக்குப் பிறகு,
2009-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எண்ணூர்ப் பகுதியின் CRZ - 1 வரைபடத்தைக் கேட்டு வாங்கினார். அது 1996-ல் வடிவமைக்கப்பட்டு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம்.

இந்த நிலையில் அதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அதே எண்ணூர் வரைபடத்தை இந்த வருடம் (2017) நான் கேட்டு வாங்கினேன். அதைப் பார்த்ததும் எங்களுக்குப் பேரதிர்ச்சி. அதில் 16 கிமீ நீளமுள்ள ‘எண்ணூர்க் கடற்கழி’யைக் காணவில்லை. கடற்கழி இல்லாத இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்துதான் காமராஜர் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதியளிக்கிறது, தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம்.

ஏற்கெனவே, அனுமதியே இல்லாமல் 1090 ஏக்கர் பரப்பளவை காமராஜர் துறைமுகம் ஆக்கிரமித்துள்ளது. இப்போது மீண்டும் ஆயிரம் ஏக்கர் விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. இவர்கள் ஆக்கிரமித்திருப்பது முழுக்கவே 6,500 ஏக்கர் பரப்பளவிலிருந்த எண்ணூர்க் கடற்கழிப் பகுதியைத்தான். ஒரு மிக நீளமான ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் கழிவுகளைக் கொட்டி, பூர்வகுடிகளை வேறுபகுதிக்கு விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி, ஒரே இடத்தின் வரைபடம்... 2009-ல் கடற்கழி இருக்கிறது, 2017-ல் இல்லை. இது எப்படிச் சாத்தியமானது?! இந்தக் கேள்விக்குத்  தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம் ஒரு பதில் அளித்தது. அதாவது, `1997-ல் எண்ணூர்ப் பகுதியில் ஹைட்ரோகிராபர் (HydroGrapher) எனச் சொல்லப்படும் நீர்ப்பரப்பு வரையாளரைக் கொண்டு, இடத்தை அளந்து புது வரைபடம் வரையப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அங்கீகாரமும் பெறப்பட்டது’ என்றது.

`எதன் அடிப்படையில் இந்த வரைபடம் மாற்றியமைக்கப்பட்டது, எந்த ஹைட்ரோகிராபர் இதை ஆராய்ச்சி செய்தார் போன்ற விவரங்கள் வேண்டும்’ என்று தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மத்திய அரசு எந்த ஹைட்ரோகிராபரையும் அனுப்பவில்லை, புதிய வரைபடம் எதையும் அங்கீகரிக்கவில்லை’ என்று பதில் அளித்தனர். அப்படியென்றால், 1997-ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வரைபடம் முற்றிலும் பொய் என்பது உறுதியானது” என்கிறார். 

கார் வடசென்னையை நெருங்கிவிட்டது என்பதை கார்க் கண்ணாடிக் கதவைத் தாண்டி நாசியைத் தொட்ட மண்ணின் மனம் உணர்த்தியது. வாய்க்கால்போல் சுருங்கிய கொசஸ்தலை ஆறு, அவற்றில் சாம்பல் போர்த்திய மேடுகள், அவற்றை லாரிகளில் அள்ளிக்கொண்டிருக்கும் பொக்லைன் எந்திரங்கள், அனல்மின் நிலையங்கள் கக்கும் நிலக்கரிச் சாம்பல் கழிவுகளை எடுத்துச்சென்று ஓரிடத்தில் குவிக்கக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர்க் குழாய்கள் என அந்த நெய்தல், ஒரு பரந்துவிரிந்த பாலையாகக் காட்சியளித்தது. கொசஸ்தலை ஆற்றை அதன் கரையில் நின்று பார்க்கையில், நாம் கூவத்தைக் குப்பை கொட்டும் சாக்கடையாக்கியதுபோல், கொசஸ்தலையைச் சாம்பல் மேடாக்கி விட்டார்கள் என்பதை உணர முடிந்தது.

கமல்ஹாசன், நித்தியானந்த் ஜெயராமன்
கமல்ஹாசன், நித்தியானந்த் ஜெயராமன்

‘ஆற்றிலிருந்து கடலுக்கும் கடலிலிருந்து ஆற்றுக்கும் ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை நீர் மாறிமாறிப் பாயும் அந்த முகத்துவாரப் பகுதி, அந்தத் தொழிற்சாலை மாசுகளால் அதன் இயல்பை இழந்து வெகுநாளாகிவிட்டது’ என்கிறார் நித்தியானந்த்.

கொசஸ்தலை என்பது ஆந்திரத்துக்கும் சென்னைக்கும் பழவேற்காடு வழியாகப் பண்டமாற்றம் செய்யப் பாலமாக இருந்த நதி. அங்கிருந்து அரிசியும் இங்கிருந்து உப்பும் எனப் பண்டங்களையும் பண்பாடுகளையும் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்ட நதி. அது இன்று தூர்ந்துபோய் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கும் சிறுசிறு குட்டைகளாகவும், கன்னி வாய்க்கால் போல ஓடிவருவதையும் காணச் சகிக்கவில்லை. இது மீன் வளம் மிக்க நதி. பல அடி ஆழம் இருந்த இந்த நதி இன்று சாம்பல் கழிவுகளால் முழங்கால் அளவுக்குத் தூர்ந்து போய்விட்டது. அதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை அதிக குதிரைத்திறன்கொண்ட இன்ஜின்வைத்துத் தள்ளிக்கொண்டும் படகுகளை நடு ஆற்றுக்குக் கைகளில் தூக்கிக்கொண்டும் போய்க்கொண்டி ருக்கிறார்கள்.

காரில் கடக்கையில் கழிவு நீர்க் குழாய்களிலிருந்து சாம்பல் கழிவுகள் கசிந்து ஆற்றில் கொட்டுவதையும் பார்க்க முடிந்தது. அந்தக் கழிவுநீர்க் குழாய்களைப் பின்தொடர்ந்தால் அதிலிருந்து கொட்டப்படும் சாம்பலைச் சேகரிக்கும் செப்பாக்கம் என்ற இடத்தில்போய் நின்றது. அதை தூரமாக இருந்து பார்க்கும்போது பரந்துவிரிந்து கிடக்கும் அலைகளற்ற அமைதியான ஏரி போலத் தோற்றமளித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை படர்ந்துகிடக்கும் இந்தச் சாம்பல் கழிவுகளை எப்படி, எப்போது அகற்றப்போகிறார்கள் என்ற மலைப்பு என்னுள் ஏற்பட்டது. மேலும், இப்படிச் சேகரித்து வைத்திருக்கும் சாம்பல் கழிவுகளும் மீண்டும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுக் கொசஸ்தலையில் கலக்கிறது.

அந்தச் சாம்பல் மேட்டுக்கிடையில் பாதி மூழ்கிய ஒரு கட்டடம். அதைக்காட்டிய அந்த ஊர்ப் பெரியவர், ‘அதுதான் சார் சால்ட் கொட்டாய். அன்று இங்கிருந்த உப்பளங்களில் இருந்து உப்புகளை அந்தக் கட்டடத்தில்தான் சேகரித்து வைத்து எடுத்துச்செல்வோம்’ என்றார். உப்பளங்களும் வயலும் வாழ்வுமாக இருந்தவர்கள் இன்று அரசுகளாலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. அந்தச் சாம்பல் மேட்டிலிருந்து கீழே இறங்கிவந்தால், இடம்பெயர்ந்தவர்கள்போகச் செப்பாக்கத்தில் மீதி இருந்த மக்கள் சூழ்ந்துகொண்டனர். அவர்களில் பலரின் முகங்களில் கவலையும் கண்ணீரும்.

‘லேசா மழை பெஞ்சாலே தண்ணி சூழ்ந்துக்குது. ராத்திரி, பகல்னு எப்பவும் கொசு... உப்பைக் கரைச்சுவிட்டமாதிரி வர்ற தண்ணி அவ்வளவு கரிப்பு. இங்க பாருங்க, கைகாலெல்லாம் உப்புப்பூத்துக் கிடக்கு’ என்று கைகால்களைக் காட்டுகின்றனர். ஒரு மூதாட்டி சொன்னதுதான் கண்ணீர் வரவைத்தது. ‘முன்ன எங்களைச் சுத்தியும் உப்பளங்களா இருக்கும். ஆனா, குடிக்கக் கிடைக்கிற தண்ணி உப்பா இருக்காது. ஆனா,  இன்னைக்கு அந்த உப்பளங்கள் இல்லை. ஆனாலும் குடிக்கிற தண்ணியில, சாப்பிடுற சாப்பாட்டுல எல்லாமே உப்பும் சாம்பலும்தான் கலந்திருக்கு’ என்கிறார். உடலையும் மனதையும் நசுக்கும் இந்தச் சூழலால் முக்கால்வாசி மக்கள் சொந்த இடங்களைக் காலிசெய்துவிட்டு அவர்களாகவே வெளியேறி விட்டனர். இருக்கும் குறைந்த குடும்பங்களையும் அவர்களாகவே வெளியேறவைக்கும் வேலைகளை அரசுகளே செய்துவருகின்றன.

“நன்னீரும், கடல் நீரும் கலக்கும் இதுபோன்ற முகத்துவாரப்பகுதி, பல்லுயிர்ச்சூழலுக்கு மிகமிக முக்கியத்துவமான நிலம். வெள்ளத்தின்போது, ஆற்று நீர் கடலோடு சென்று கலப்பதிலும், கடல் அலைகள் வரும்போது அவற்றை உள்வாங்கிக்கொள்வதிலும் முகத்துவாரப்பகுதி முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு கடல் நீர் மற்றும் ஆறு ஆகிய இரண்டும் சந்தித்துக்கொள்வதால், நீரின் உப்புத்தன்மை குறைந்து ஒரு புதிய சூழலியல் மண்டலம் உருவாகும். இதனால், பல உயிரினங்கள் இந்தப் பகுதியில் இனப்பெருக்கம் செய்ய வரும். ஆனால், இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால் பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து மனிதர்கள்வரை அனைவருக்குமே பாதிப்புகள் ஏற்படுகின்றன” என்கிற நித்தியானந்த் ஜெயராமன், எண்ணூரில் கட்டப்பட்டிருக்கும் ‘பெருஞ்சுவர்’ பற்றியும் சொல்கிறார்.

“அத்திப்பட்டுப் புதுநகர். இது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரித் தொகுதியைச் சேர்ந்த ஊர். வட சென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டபோது, அங்கு வசித்த மக்களை வெளியேற்றி இங்கு குடியமர்த்தினர். 2015 டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது, வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளைத் தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றியது எண்ணூர் முகத்துவாரப் பகுதி. ஆனால், இப்போது அத்திப்பட்டுப் புதுநகரில், சமீபத்தில் பெய்த ஒருநாள் மழைக்கே முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதற்குக் காரணம் இந்த ஆக்கிரமிப்புகள்தான். அதில் இங்கு தேங்கியுள்ள நீர், இந்த மக்கள் சொல்லும் ‘பரவல்’ என்கிற கடற்கழியில் வடிய அத்திப்பட்டுப் புதுநகர் ரயில்நிலையம் அருகே கீழே சுரங்கத்தில் இரண்டு ஓட்டைகள் அமைத்துள்ளார்கள். அதன் வழியாக அது பரவல் (Natural Flood Plain) பகுதியை அடையும். ஆனால், தேங்கியிருக்கும் நீரின் அளவையும், அது பரவலுக்குப் பாய்வதற்கான அந்த வழியையும் பார்த்தால் இதில் எப்படி, அவ்வளவு நீர் வடியும் என்ற கேள்வி மிக யதார்த்தமாக எழும். மேலும், அந்த நீர் வழிகளிலும் அடைப்புகள். அதனால் நீர் வடிய வழியில்லாமல் இந்த மக்களின் குடியிருப்புகளில் தேங்கிவிடுகிறது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகாமலிருக்க அவை ஒரு பெருஞ்சுவரைக் கட்டியுள்ளன. அந்தப் பெருஞ்சுவரைப் பார்க்கிற எந்தச் சாமானியனுக்கும் அதிர்ச்சியாக இருக்கும். தேங்கும் நீர் பெருஞ்சுவர் கட்டியிருக்கும் அந்த நிறுவனங்களுக்குள் புகாது. ஆனால், இந்தப் பக்கம் இருக்கும் மக்களின் குடிசைகளுக்குள் புகும்” என்கிறார்.

கமல்ஹாசன் மக்களுடன்
கமல்ஹாசன் மக்களுடன்

இங்கு சிலருக்கு இன்னொரு குதர்க்கமான கேள்வி எழலாம், இவர்கள் ஏன் நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் குடியிருக்கிறார்கள்? காரணம், இவர்கள் எல்லோரும் நெய்தல் நிலத்தின் பிள்ளைகள். 1990 -களில் வடசென்னை அனல்மின் நிலையம் கட்டப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்துவந்தவர்கள். அந்த நிறுவனம் கட்டப்படுவதற்காக அரசாங்கம் இவர்களை அங்கிருந்து இந்தப் பகுதிக்கு இடம்பெயர வைத்தது. அன்று அவர்கள் உப்பளம் போட்ட, மீன் பிடித்த, படகோட்டிய இடங்களில்தான் இன்று அரசின் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நீர் வழித்தட ஆக்கிரமிப்பை சூழலுக்கு எதிரான விஷயமாக மட்டுமே பார்க்க முடியாது. இது ஒரு தலைமுறையின் வீழ்ச்சியும்கூட. உப்பளங்களும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் இல்லாததால், அவற்றை நம்பிச், அவற்றைச் சார்ந்து செய்து வந்த தொழில்களிலிருந்து விலக்கப்பட்டு, இன்று கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

துறைமுகங்கள், அனல்மின்நிலையங்கள் முக்கியம்தான். துறைமுகம் கையாளும் பொருள்கள், அனல்மின் நிலைய மின்சாரம் அனைத்தும் மக்கள் சேவைகளுக்குத்தானே? அப்படி இருக்கையில் அரசுகளே முறையான அனுமதி இன்றிக் கடற்கழிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யலாமா? எண்ணூர்க் கடற்கழியில் கலக்கப்படும் சாம்பல் கழிவுகளைச் சுத்தப்படுத்தி, இனி கொசஸ்தலை கடற்கழியில் கழிவுகள் கலக்கப்படாமல் அந்த நீர் நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

கொசஸ்தலை ஆறு, நொடிக்கு 1,25,000 கன அடி நீரை வெளியேற்றுகிறது. இது அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் ஒருங்கிணைந்த நீர் வெளியேற்றும் ஆற்றலைவிட அதிகம். 2015-ல் அடையாற்று வெள்ளத்தையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. எண்ணூரில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், சென்னையின் முக்கியப் பகுதிகள் ‘நீர்க் கல்லறையாக’ மாறும் வாய்ப்புகள் அதிகம். இன்று, இந்த நாள், இந்த நிமிடம் நாம் நலமாக இருக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. நாளை, நாளை மறுநாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த நூற்றாண்டு வாழும் நம் சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பதை மனதில் வைத்து, அரசு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

அங்கிருந்து புறப்படும்போது நித்தியானந்த் சொன்ன வார்த்தைகள் மனதில் அறைகின்றன. ‘`இந்த ‘பரவல்’ மழை இல்லாத சமயங்களில் காய்ந்து கிடக்கும். ஏரி என்பதே மழை இல்லாத சமயங்களில் தண்ணீருக்காக ஏங்கி நிற்பதுதானே. அப்போது, ‘காய்ந்துதானே கிடக்கிறது’ என்று எண்ணி ரியல் எஸ்டேட் போட்டுவிடலாம் என நினைக்கக்கூடாது. தண்ணீருக்கு நினைவு அதிகம். அது எந்த இடத்தில் இருந்ததோ அந்த இடத்துக்கு மீண்டும் திரும்பி வரும். அப்படி வரும்போது நீங்கள் அங்கு லைசென்ஸ் வாங்கி ஆக்கிரமித்திருந்தாலும் அதற்குத் தெரியாது. ஏனெனில், இந்தச் சட்டம், லைசென்ஸ் அனைத்தும் மனிதர்களுக்குத்தானே தவிர, இயற்கைக்கு இவை எதுவும் பொருந்தாது” என்றார்.

மக்களுக்காக மக்களாட்சி செய்கிறோம் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இதுபோன்ற சூழலியல் செயற்பாட்டாளர்களின் வார்த்தைகளுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள், உங்களின் அகோரப் பசிக்கு எங்களைக் காவுகொடுத்துவிடாதீர்கள்!

- உங்கள் கரையை நோக்கி!

கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன்

கேள்வி: ``நீங்கள் பல முனைகளில் பயனுள்ள தலையீடுகள் செய்வதில் மகிழ்ச்சி. சீர்திருத்தத்திலும் மாற்றங்களிலும் தமிழ்நாட்டின் பல இயக்கங்களின் சரித்திரத்தை நீங்களும் உணர்ந்தவரே.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டையும் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சமூகங்கள் ஊக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் தமிழகத்தை எதிர்பார்த்திருக்கின்றன. எனினும், சமீபகாலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன்மூலம் திராவிடப் பண்பாட்டை  பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இது பற்றிய உங்கள் கருத்து என்ன?’’


பதில்:

``என் முயற்சியும் இலக்கும் தாங்கள் அறிந்ததே. தமிழகத்தின் திராவிடப் பாரம்பர்யம் சமீப காலத்தையது அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் தொட்டுத் தொடர்வது. 1000 வருடங்களுக்கு முன்னால் திரு.ராமானுஜரின் சமூகப் புரட்சி ஓர் அடையாளம், ஒரு முக்கியத் தருணம் என்றுகூடச் சொல்லலாம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பழைய பதிப்புகளில் `திராவிட வேத சாகரம்’ என்றிருக்கும். அரசியலில் திராவிட இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்த வேளையில் அதை ஒருவேளை பதிப்பகத்தார் நீக்கினார்களோ என்னவோ. தாங்கள் குறிப்பிட்டதுபோல் பெரியாரின் இயக்கம் கேரளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே அவருக்கு ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட `வைக்கம் வீரர்’ என்ற பட்டம். அப்பெயர் கேரளத்திலும் தமிழகத்திலும் பிரபலம்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

என்றும் இன்றும் சுபிட்சத்துடன் கூடவே அசட்டுத் துணிச்சலும் வரும் என்பதற்கு அடையாளமே உலகெங்கும் ஃபாசிசத்தின்பால் சிலருக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு. உலகையே வலக்கைப் பக்கம் திரும்ப வைக்கும் அம்முயற்சி வெல்ல வாய்ப்பில்லை. அவை ஒரு தற்காலிக ஃபேஷன், சிகையலங்காரம் போல ரொம்பகாலம் நீடிக்காது என்பதே என் நம்பிக்கை. சமூகம் சமச்சீர் அடைவதில் கலக்கம்கொள்ளும் பழைய தலைமுறையினர் (அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர்), இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழைமைவாதத்தை, சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீனத் தேன் தடவித்தர, திணிக்க முயற்சி செய்கின்றனர். கலாசாரம், பண்டிகைகள், இறைவழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழைமையைப் பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடுதழுவிய ஒரு சீரழிவாகவே நான் பார்க்கிறேன்.

நான் நாத்திகன் அல்லன், பகுத்தறிய முற்படுபவன். நாத்திகன் என்ற பெயர்க்குறிப்பு ஆத்திகர்கள் செய்தது. அவர்கள் எனக்கு நாமகரணம் செய்வதை நான் விரும்பவில்லை. நாத்திகன், பகுத்தறிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வாதம் செய்பவர்கள் இவ்விரண்டு நிலைகளையும் பகுத்தறியாத ஒரு பக்கவாதக்காரர்கள். இருவேறு கருத்துகளை ஆராய்ந்து நிஜத்தை நெருங்க ஆவலுற்றிருப்பவரே பகுத்தறிவோர். அவர்களின் எண்ணிக்கை தானாகவே கூடிவிடும்.

விஞ்ஞானமும் ஞானமும், முன்னேற்றத்தின்பால் மனித குலத்திற்கே உள்ள ஈர்ப்பும், பகுத்தறிவுவாதிகளின் எண்ணிக்கையை எதிர்ப்பாளர்களையும் மீறிக் கூட்டியே தீரும். இந்த உலக நியதி தன்னிச்சையாய்ச் செயல்படக் காத்திராமல்  தமிழகத்தைப் பாதுகாக்கும் பணியில் இளைஞர் சமுதாயம் இறங்கிவிட்டது. பழையன கழியும், புதியன புகும். பழைய கலாசாரத்தில் போற்றப்பட வேண்டிய மேற்கோள்களைக் காட்டாமல் அவற்றை மறைத்தும் மறந்தும் செயல்படுகின்றனர், பழைமைவிரும்பிகள். விவசாயத்தை அழித்து நிலத்தடி வாயுக்களை வர்த்தகம் செய்ய முயற்சிசெய்வதும், புராணக் கதைகளைச் சரித்திரமாக்க முயற்சிசெய்வதும் இவர்கள் காலகாலமாகச் செய்யும் அயராத் தீய பணிகள்.

முன்பெல்லாம் அமைதியாக நடந்த பல பண்டிகைகளில் ஆர்ப்பாட்டம் அதிகமாகி, பக்தியையும் தாண்டிய வர்த்தகமாக அவை மாறிவருகின்றன. இதைத் தமிழக மக்கள் பல ஆண்டுகளாகக் கவனித்துவருகிறார்கள். ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத்தளங்களிலும் பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

முன்பெல்லாம் இத்தகைய இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். `எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நம்பிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும். மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கித் தள்ளினாலும். சுழலும் இவ்வுலகின் ஈர்ப்பு அதை முன்னோக்கித் தள்ளிவிடும். மீண்டும் தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகுதொலைவிலில்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய்க் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள்.

நன்றி பல
அன்புடன்,
கமல்ஹாசன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.