Published:Updated:

"2000 ரூபாய், 290 உதிரிபாகங்கள், ஒரு நல்ல செயற்கைக் கால்!” - விவசாயி மகனின் சாதனை

"2000 ரூபாய், 290 உதிரிபாகங்கள், ஒரு நல்ல செயற்கைக் கால்!” - விவசாயி மகனின் சாதனை
"2000 ரூபாய், 290 உதிரிபாகங்கள், ஒரு நல்ல செயற்கைக் கால்!” - விவசாயி மகனின் சாதனை

டக்க முடியவில்லையே என இனி யாரும் கவலைப்பட தேவையில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயில் மாற்றுக் கால்கள் கண்டறிந்து சாதித்துள்ளார் ஒரு விவசாயியின் மகன். திண்டிவனம் வட்டத்தில் கூட்டேரிபட்டை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனசேகரன் அவர்களின் மகன் முத்து தற்போது மயிலம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 290 உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்து வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், விபத்தில் கால்களை இழந்தோர் பயன்படுத்தும் வகையில் நவீன செயற்கை இயந்திரக்கால்களை 2000 ரூபாயில் உருவாக்கியுள்ளார். முத்துவைச் சந்தித்துப் பேசினோம்.  

"என் தந்தை விவசாயி. அவர் சுட்டெரிக்கும் வெயிலில் என்னை மரத்தடியில் அமர்த்திவிட்டுக் கஷ்டப்படுவதை சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் நானும் என்னுடைய 8 வயதில் வேலையைத் தேடிச்சென்றேன். வீடுவீடாக சென்று பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை காலையிலும், மாலையிலும் வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட்டுகளை விநியோகித்து வருகிறேன். அதை முடித்த பின்புதான் பள்ளிகளுக்குச் செல்வேன். நான் வீடுகளுக்கு வண்ணம் தீட்டுவது, வெல்டிங் செய்வது போன்ற வேலைகளையும் அவ்வப்போது செய்து வருகிறேன்.

இந்தக் கருவியைச் செய்வதற்கான சிந்தனை நான் பள்ளியில் பயிலும் போது வந்தது. எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். அவனும் நானும் ஒன்றாகப் படித்து வந்தோம். நாங்கள் பத்தாம் வகுப்பு படித்தபோது இரயில் விபத்தில் என் நண்பனின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன. அவர் ஏழ்மையான குடும்பத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களால் மாற்றுக் கால்களைப் பொருத்துவதற்கு பணம் இல்லாமல் போனது. பின் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து அவருக்குச் செயற்கை மாற்றுக் கால்களை பொருத்தினார்கள்.அந்தக் கால் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. இருப்பினும் அந்தக் காலை கொண்டு அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். ஏனெனில், மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது ஓர் அளவுக்கு நிலையாக நடப்பதற்கு. இந்தக் காட்சிகளும் நினைவுகளும் என் மனதில் நிலைகொண்டுவிட்டன. நானும் பொறியியல் படிப்பில் இயந்திரவியல் துறையினைத் தேர்ந்தெடுத்தேன். தற்போது 4-ம் ஆண்டு படித்து வருகிறேன்.

நான் 3-ம் ஆண்டு படிக்கும் போதுதான் இயந்திரவியல் சார்ந்த பாடங்கள் புரியத் தொடங்கியன. அதைக் கொண்டு ஏழ்மையில் வாழும் மாற்றுத் திறனாளிகளுக்காகவும், முதுமையால் நடக்கமுடியாமல் இருக்கும் மக்களுக்காகவும், முக்கியமாக விபத்தில் கால்களை இழந்தவர்களுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டுமென யோசித்தேன். இந்தக் செயற்கை நவீனக் கால்களை 290 உதரிப் பாகங்களை ஒன்றிணைத்து உருவாக்கி உள்ளேன். இதில் பலவகையான சுருள் வளையங்களைப் பயன்படுத்தியுள்ளேன் (variety of springs). இந்தக் கால்களில் உள்ள சுருள்களின் விசையை (spring tension) மாற்றி அமைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் மேற்கண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் முக்கியச் சிறப்புச் சுருள்கள் தகுந்தவாறு பொருத்தமாகப் பொருத்தப்பட்டுள்ளதால் கால்களின் தசையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்றவாறு அந்தச் சுருள்கள் ஆற்றலை நடப்பதற்கு ஏற்றவாறு மாற்றித்தருகிறது. மேலும், முதியவர்கள் தங்களின் தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலுவின்மையை ஈடுகட்டி அவர்கள் தன் இளம் வயதில் நடந்தது போலவே நடக்க உதவும். மூட்டுவலி இருப்பவர்கள் இந்தச் செயற்கை நவீனக் கால்களைப் பயன்படுத்துவதின் மூலம் மூட்டுவலி குறைவதுடன், சில நாள்களிலே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். அதுமட்டுமன்றி, இந்தச் செயற்கைக் கால்களை வெவ்வேறு எடை கொண்டவர்களும் பயன்படுத்தலாம்.” என்று சொல்லி முடிக்கும்போதே அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.

அவர் பெற்றோரைப் பற்றிக் கேட்டேன்.

"12 ம் வகுப்பில் என்னுடைய மதிப்பெண்ணோ குறைவுதான். என்னுடைய (cut off) மதிப்பெண் 120 தான். இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். மதிப்பெண் குறைவு என்பதால் இடம் கிடைக்கவில்லை. பின் மயிலம் பொறியியல் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தது. என் பெற்றோர்களிடம் ஒருவித கலக்கத்தோடுதான் பொறியியல் படிப்பினைப் படிக்கப் போவதாகக் கூறினேன். ஏனெனில், அவர்களால் என்னைப் படிக்கவைக்க முடியாது எனும் சிந்தனை என்னுள்ளே தோன்றியதால். ஆனால், அவர்களிடமிருந்து அந்தப் பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கவில்லை. 'உன் மனதுக்கு என்ன படிக்கவேண்டும் எனத் தோன்றுகிறதோ அதைப் படி, வேறு எதையும் சிந்திக்காதே, அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்' எனத் தந்தை கூறினார். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களைக் கஷ்டப்பட வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.”

நல்ல கனவு நனவாவது சத்தியம்.