Published:Updated:

ஹிமா தாஸை பட்டை தீட்டிய ரஷ்ய `துரோணாச்சார்யா' கலீனா!

ஹிமா தாஸை பட்டை தீட்டிய ரஷ்ய `துரோணாச்சார்யா' கலீனா!
ஹிமா தாஸை பட்டை தீட்டிய ரஷ்ய `துரோணாச்சார்யா' கலீனா!

ஹிமா தாஸை பட்டை தீட்டிய ரஷ்ய `துரோணாச்சார்யா' கலீனா!

 பி.டி. உஷா காலத்துக்குப் பிறகு தடகளத்தில் பின்தங்கிக் கிடந்த இந்தியா இப்போது பின்னி எடுக்கத் தொடங்கியிருக்கிறது என்றால் கலீனா புக்காரினா என்ற ரஷ்ய பெண்ணே ! கலீனா பற்றி அறிந்துகொள்வதற்கு முன், ஜகார்த்தா தொடர் ஓட்டம்  தெரிந்துகொள்ள வேண்டும். 

ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் முன்னரே இந்திய தொடர் ஓட்டக் குழு பயிற்சியாளர் கலீனாவுக்கு சற்றுக் குழப்பம். எல்லா ஓட்டத்துக்குமே ஸ்டார்ட்டிங் முக்கியம் தொடர் ஓட்டத்துக்கோ ஸ்டார்ட்டிங் அதி முக்கியம். பயிற்சியாளர் கலீனாவுக்கு   4x400  தொடர் ஓட்டத்தில் முதல் சுற்றில் யாரை ஓட வைப்பது என்பதில் குழப்பம். பூவம்மாவா அல்லது ஹிமாவா என்று குழம்பிக் கொண்டிருந்தார்.

கடந்த ஆசியப் போட்டியிலும் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. அதுவும் ரிக்கார்ட் டைமிங்கில் (3.28.68). அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் பூவம்மா. தற்போதைய குழுவில் 28 வயது பூவம்மா மட்டுமே அனுபவம் உள்ளவர். மற்ற அனைவருமே ஒரு விதத்தில்  புதுமுகங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் ஹிமாதாஸ்தான் ஸ்டார்ட்டிங் கொடுக்க வேண்டும் என கலீனா முடிவெடுத்தார்.

பயிற்சியளார் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறவில்லை ஹிமா. எப்போதுமே கடைசி 50 மீட்டரில் புலிப் பாய்ச்சல் காட்டுவது ஹிமாவின் ஸ்டைல். முதல் சுற்றில் கடைசி 50 மீட்டரில் ஹிமா எடுத்த வேகத்தால், இந்தியாவுக்கு நல்ல லீடு கிடைத்தது. இந்த லீடை கடைசி வரை தக்கவைத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி, தொடர் ஓட்டத்தில் 5-வது முறையாக தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

கடந்த  2002- ம் ஆண்டு பூசான் ஆசியப் போட்டியில் இருந்து தற்போதுவரை மகளிர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிதான் தங்கம் வென்று வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சாதனைக்கு ஹிமாதாஸ் முக்கிய காரணம் என்றால் மிகையில்லை. ஹிமாவுக்கோ 18 வயதுதான். இளங்கன்று பயம் அறியாது என்பது போல, எந்தவிதமான பதற்றமுமின்றி அருமையான ஸ்டார்டிங் கொடுத்தார். இள வீராங்கனை என்பதால் ஹிமா ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக தெரிகிறது.  சரி... இந்த  'அஸாம் எக்ஸ்பிரஸ்' உருவானது எப்படி? 

இந்தியத் தடகள வீராங்கனைகள் பலரது வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததுதான். வறுமை முதல் உடல் வலி வரை அவர்களை படுத்தி எடுத்திருக்கும். ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு இரு கால்களிலும் தலா 6 விரல்கள் என்பதால், காலணி கூட அவரால் அணிய முடியாத நிலை. ஆசியப் போட்டியில் ஹெப்டத்லானில் தங்கம் வென்றதையடுத்து  தற்போது சென்னை ஐ.சி.எப். நிறுவனம் ஸ்வப்னாவுக்கு ஸ்பைக்ஸ் வாங்கி அளிக்க முடிவு செய்துள்ளது. நைக் நிறுவனத்திடம் இதற்காக பிரத்யேக ஸ்பைக்ஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெப்டத்லானில் 7 வகையான விளையாட்டுகள் உண்டு. இதற்கு 5 வகையான காலணிகள் தேவை. இனிமேல் ஸ்வப்னா பர்மானுக்கு தேவையான காலணிகளை சென்னை ஐ.சி.எப் நிறுவனமே அளிக்கும். 

ஸ்வப்னா போலவே ஹிமாதாஸும் மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து தடகளத்துக்கு வந்தவர்தான். ஹிமாவின் தந்தை விவசாயி. வயல்வெளிகளில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தவரை நிபான்தாஸ் என்ற பயிற்சியாளர்தான் தடகளம் பக்கம் திரும்ப வைத்தார். 16 வயதில் தடகளப் பயிற்சி எடுக்கத் தொடங்கிய ஹிமா, 18 வயதில் உலகத் தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று பிரமிக்க வைத்தார். உலகச் சாம்பியன்ஷிப் தடகளத்தில் அப்போதும் சரி, இப்போதும் சரி... சீனியரோ, ஜூனியரோ எந்த இந்திய வீரரோ... வீராங்கனையோ தங்கம் வென்றதில்லை. ஈடு இணையற்ற இந்தச் சாதனையை படைத்த ஹிமாவைப் பட்டைத் தீட்டியவர் கலீனாதான்.

இந்திய மகளிர் தொடர் ஓட்டக்குழுவுக்கு 20 ஆண்டுகளாக யூரி ஓகார்டொனிக என்பவர் பயிற்சியாளராக இருந்தார். ஓராண்டுக்கு முன்தான் கலீனா இந்திய மகளிர் தொடர் ஓட்டக்குழு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு மெக்ஸிகோ சிட்டி ஒலிம்பிக்கில் 4x400  தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றவர் இவர். ஹிமாதாஸின் உடல் வலிமையை நன்கு புரிந்துகொண்ட கலீனா, கடைசிக் கட்டத்தில் கடும் வேகமெடுப்பதின் அவசியத்தை உணரவைத்தார். உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் கூட, 4-வது டிராக்கில் ஓடிக்கொண்டிருந்த ஹிமாவைவிட ருமேனிய வீராங்கனை ஆன்ட்ரூ மிக்கோலஸ் முன்னணியில் இருந்தார். கடைசி வளைவில் இருந்து ஹிமா புலிப் பாய்ச்சல் காட்டி  தங்கத்தைக் கைப்பற்றினார். 

நிபான்தாஸ் ஹிமாவைக் கண்டுபிடித்தாலும் அவரைத் தங்கமாக ஜொலிக்க வைத்தவர் இந்த கலீனா. இந்திய தடகளச் சங்கம் கலீனா மீது அபரீதமான நம்பிக்கை வைத்துள்ளது. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ஹிமா தாஸை பதக்கம் வெல்ல வைப்பதே தற்போது கலீனாவின் லட்சியம். கலீனாவின் பயிற்சியின் கீழ்தான் 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய மகளிர் அணி தொடர் ஓட்டத்தில் 3.15.17 நேரத்தில் இலக்கை கடந்து சாதனை படைத்தது. இந்தச் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. 

ரஷ்யாவில் இருந்து கலீனா  இந்தியா புறப்படும்போது பாட்டியாலா என்கிற நகரம் மட்டுமே தெரியும். அங்கேதான் அவர் தங்கி ஹிமா தாஸ் போன்ற வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்கப் போகிறார் என்பதால் பாட்டியாலா என்ற பெயரை அறிந்து வைத்திருந்தார். இதற்கு முன் இந்தியாவுக்கு வந்ததில்லை. இந்தியாவைப் பற்றி  வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவும் இல்லை. தற்போது, ஹிமா தாஸ் உட்பட்டவர்கள் 71 வயது கலீனா மீது பாசத்தைக் கொட்டுகிறார்கள். இதனால், சொந்த நாட்டில் இருப்பதைப் போன்றே உணர்வதாக கலீனா சொல்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு