Published:Updated:

கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை!

கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை!

கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை!
கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை!

''கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை... வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் ஆக, இதுவே தகுதி!'' - புன்னகை ததும்பப் பேசுகிறார் திப்பேஸ்வாமி. புகைப் படக் கலை, தமிழ், கன்னடதிரைப் பட ஒளிப்பதிவு, 25 வருட பத்திரிகைப் பணி என மீடியாவில் அழுத்தமான முத்திரை பதித்து இருப்பவர். காட்டு விலங்குகளின் வாழ்க்கையை கேமராவுக்குள் சிறை பிடிப்பதில் இவருக்கு, அதீத ஆர்வம். கடந்த வாரம் சென்னை லலித்கலா அகாடமியில் தனது புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்திருந்தவரிடம் பேசியதில் இருந்து...

கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை!
##~##

''பி.எஸ்சி. நேச்சுரல் சயின்ஸ் படிக்கிறப்ப தாவரங்களைச் சேகரிக்க காடு, மலைனு சுத்தித் திரிவோம். அப்ப பொழுதுபோக்கா க்ளிக் பண்ண ஆரம்பிச்சது... பிறகு ஒளிப்பதிவு, பத்திரிகைப் பணினு வாழ்க்கையே கேமராவுக்குள் அடங்கிடுச்சு. செட், லைட்டிங்னு எதுவும் இல்லாம இஷ்டத்துக்குச் சுத்தித் திரி யும் காட்டு விலங்குகளைப் படம் பிடிக்கிறது, சவால் நிறைந்த சுவாரஸ்யம்!

உருவத்தைப் போலவே காண்டாமிருகம் முரட்டுத்தனமானது. அஸ்ஸாம் காட்டில் கும்பலா அலைஞ்சுக்கிட்டு இருந்த காண்டாமிருகங்களைப் படம் பிடிச்சிக்கிட்டு இருந்தப்ப... திடீர்னு ஒரு குரூப் எங்க ஜீப்பைத் துரத்த ஆரம்பிச்சுடுச்சு. துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு, அதுங்ககிட்ட இருந்து தப்பிச்சோம்.

இனப் பெருக்கக் காலத்தில் சரியான துணை கிடைக்காத ஆண் யானைகளின் கண்களில் மசகு நீர் சுரக்கும். அப்பத்தான் அதுங்களுக்கு மதம் பிடிச்சு தனியா அலையும். அப்ப எதிரில் யார் வந்தாலும் துவம்சம்தான். 'அப்படி ஒரு யானையைப் படம் பிடிச்சுத் தரணும்’னு ஒரு அசைன்மென்ட் வந்துச்சு.  கார்பெட் தேசிய பூங்காவில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு மத யானையைக் கண்டுபிடிச்சிட்டேன். வெறும் 30 அடி தூரத்தில், வெறித்த கண்களோடு உக்கிரமா நின்னுகிட்டு இருந்த ஆண் யானையை மனசுக்குள்ள உதறலோடு படம் எடுத்துட்டு இருந்தேன்.

கொஞ்சம் தைரியம், நிறைய பொறுமை!

உள்ளுணர்வு உறுத்த திரும்பியதா என்னன்னு தெரியலை... என்னைப் பார்த்ததும் வேகமாப் பிளிறிட்டே ஓடிவந்து ஜீப்பை முட்டித் தள்ளிருச்சு. நான் நிலைதடுமாறி கேமராவோடு ஜீப்புக்குள்ளயே விழுந்துட்டேன். அன்னிக்கு நான் உயிர் தப்பிச்சது என் ஜீப் டிரைவரின் சாமர்த்தியம்!'' - இன்னமும்  பயம் விலகாத குரலில் பேசும் திப்பேஸ்வாமியின் கலெக்ஷனில் பறவைகள் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன. கேட்டால், ''அழகு மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளில் இந்தியப் பறவைகளை அடிச்சுக்க முடியாது!'' என்று சிரிக்கிறார் இந்த இயற்கையின் காதலர்.

- த.கதிரவன்

அடுத்த கட்டுரைக்கு