Published:Updated:

"'அம்மா' என்று மாணவர்கள் அழைப்பதே பெரிய சந்தோஷம்!' நெகிழும் ஆசிரியர்கள் #TeachersDay

அன்பும் அக்கறையும் கண்டிப்பும் கலந்த ஆசிரியர்களே மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்குகிறார்கள். அத்தகையவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்வோம்.

"'அம்மா' என்று மாணவர்கள் அழைப்பதே பெரிய சந்தோஷம்!' நெகிழும் ஆசிரியர்கள் #TeachersDay
"'அம்மா' என்று மாணவர்கள் அழைப்பதே பெரிய சந்தோஷம்!' நெகிழும் ஆசிரியர்கள் #TeachersDay

குழந்தைகள், தம் குடும்பத்தினரைத் தவிர்த்து வேறொருவருடன் அதிக நேரம் செலவிடுகிறது என்றால், அது ஆசிரியர்களே. இந்த உலகத்துடன் தொடர்புகொள்ள மொழியையும் நன்னடத்தையையும் கற்றுத்தரும் பெரும் பணியைச் செய்பவர்கள் ஆசிரியர்கள். அன்பும் அக்கறையும் கண்டிப்பும் கலந்த ஆசிரியர்களே மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்குகிறார்கள். அத்தகையவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்வோம். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களில் சிலரிடம், தங்கள் கல்விப் பணியின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைக் கேட்டோம். 

திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியை, ரூபி.

எளிய வழியில் கணிதங்களைக் கற்க புதிய வழிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், அவற்றை வீடியோ எடுத்து, யூ-டியூபில் பதிவேற்றியும் வருகிறார்.

"மாணவர்கள் கல்வி கற்பதை விரும்பிச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் இலக்கு. அதற்காக, என்னால் முடிந்தளவு அவர்கள் ரசிக்கும் விதமாகவும் பாடச் செயல்பாடுகளில் சுவாரஸ்யமாக ஈடுபடும் விதமாகவும் நடத்திவருகிறேன். மேடம், மிஸ், டீச்சர் என்றெல்லாம் மாணவர்கள் என்னை அழைக்கமாட்டார்கள். `ரூபி அம்மா' என்றே அழைப்பார்கள். அதில் நெருக்கமும் அன்பும் இருப்பதை உணர்கிறேன். `அம்மா' என அழைப்பதில் கொஞ்சமும் பொய் இருக்காது. சொந்த அம்மாவிடம் காட்டும் பாசத்தை என்னிடமும் காட்டும்போது கண்ணீரே வந்துவிடும். அடிப்படைக் கல்வியே தெரியாமல் 9-ம் வகுப்புக்கு வந்துவிட்ட ஒரு மாணவிக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து பாடம் நடத்தினேன். ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாதவள், இப்போது வீட்டுப் பாடங்களைக் கேட்டு எழுதி வாங்கிச்செல்கிறாள். இந்த மாற்றத்தைத் தவிர வேறு சந்தோஷம் கிடைக்குமா என்ன?"

ஊத்துக்குளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியை, விஜயலட்சுமி.

மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து மேம்படுத்தி வருகிறார். 

"சென்ற ஆண்டு நடந்த சம்பவம் இது. ஒரு மாணவியின் தந்தை அரசுத் துறையில் பணியாற்றிவருகிறார். தினமும் மது அருந்தும் பழக்கம்கொண்டவர். அதனால், குடும்பத்தில் ஏராளமான இழப்புகள். இந்த மாணவி முன்பு தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். கட்டணம் கட்ட முடியாத சூழலால், எங்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். நன்றாகப் படிக்கும் அவள் முகம் எப்போதும் சோகமாகவே இருக்கும். அதுகுறித்து அவளிடம் நான் விசாரித்தபோதுதான், தந்தையின் குடிப்பழக்கம் பற்றிச் சொன்னாள். இதற்குத் தீர்வாக, `தந்தையிடம் குடிப்பதை விட்டுவிடுமாறு இந்த மாதம் முழுக்கக் கூறிக்கொண்டே இரு' என்றேன். அவளும் அப்படியே செய்தாள். எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்த மாதம், `உன் அப்பாவுடன் ஒரு வார்த்தையும் பேசாதே. ஏதேனும் கூறினால் என்னைப் பார்க்கச் சொல்' என்றேன். அவளும் அப்பாவிடம் பேசாமல் இருந்தாள். மகள் கூறிய அறிவுரைகளைவிட, அவளின் மௌனம் அப்பாவைக் கரைத்துவிட்டது. அந்த மாதத்தின் இறுதியில் பள்ளிக்கு வந்தவர், `இனி குடிக்கவே மாட்டேன்' எனச் சத்தியம் செய்தார். ஒரு வருடமாகப் பின்பற்றுகிறார். எங்கள் பள்ளியின் புரவலராகவும் சேர்ந்திருக்கிறார். அந்த மகிழ்ச்சி இந்த நிமிடம் வரை இருக்கிறது." 

கோயம்புத்தூர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் பிராங்ளின்.

இவர் செல்லும் பள்ளிகளில், மாணவர்களின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்கும் முயற்சிகளைத் தொய்வின்றி செய்கிறார்.

"பில்லூர் அணை அருகே உள்ள பரளியில் உள்ள ஓர் ஆசிரியர் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது, நான்காம் வகுப்பில் மரகதம் எனும் பழங்குடியினச் சிறுமி படித்தாள். கணிப்பொறியைப் பற்றிய பாடம் நடத்தும்போது, `கணிப்பொறியை யார் யாரெல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். ஒருவரும் கையைத் தூக்கவில்லை. மரகதமோ, `நான் பார்க்கவே விரும்பவில்லை, அது ரொம்ப பயங்கரமானது; மோசமானது' என அச்சத்துடன் சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே, `கணிப்பொறியை இங்கே கொண்டுவந்தால் நீ என்ன செய்வாய்?' என்றேன். அதற்கு, `நான் ஓடிவிடுவேன்' என்றாள். இது நடந்து ஒரு வாரம் கழித்து, ஒரு நண்பரின் உதவியில் ஒரு கணிப்பொறியை வாங்கி, வகுப்பறைக்கு எடுத்துச் சென்றேன். மாணவர்கள் வருவதற்குள் ஒரு துணியால் மூடிவிட்டேன். வகுப்புத் தொடங்கியதும், `இன்றைக்கு உங்களைச் சந்திக்க ஒரு புதிய நபர் வந்திருக்கிறார்' என்றவாறே கணிப்பொறியைக் காட்டினேன். அதன் அருகில் வரவே அச்சப்பட்ட மரகதம் கொஞ்சம் கொஞ்சமாக இயக்கவும் கற்றாள். இந்த மாற்றம் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்."

கரூர் மாவட்டம், பரமத்தி அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், செல்வக்கண்ணன்.

பள்ளியின் கட்டமைப்பு வசதியை உயர்த்தி, மாணவர்களின் வருகையை அதிகரிக்கச் செய்தவர். இந்தப் பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றது. 

"சென்ற மாதம் காரில் வெளியூர் சென்றுகொண்டிருந்தேன். நகரத்தில் வழி தெரியாமல் குழம்பினேன். ஓர் இளைஞர் காரை நோக்கி வந்து, `என்ன விஷயம் சார்?' எனக் கேட்டார். நான் சொன்ன இடத்துக்குச் செல்லும் வழியைக் காட்டினார். பிறகு, `என்னைத் தெரியவில்லையா சார்?" என்றவாறே எங்கள் பள்ளியில் படித்ததை நினைவூட்டினார். கேட்டரிங் முடித்து வேலையில் இருப்பதாகவும் 20,000 சம்பளம் என்றும் மகிழ்ச்சியோடு சொன்னார். நான் நடத்திய `மாரல் கிளாஸ்' பற்றிச் சொன்னதுதான் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. ஏனென்றால், நீதிபோதனை வகுப்புகள் இல்லாத நிலையில், நான் பாடங்களை நடத்தத் தொடங்கும் முன்பு சில விஷயங்கள் பற்றிப் பேசுவேன். அவையெல்லாம் இப்போதும் நினைவில் இருப்பதாகச் சொன்னது மகிழ்ச்சியைத் தந்தது. நாம் சொல்லும் அறிவுரைகள், மாணவர்களின் வாழ்க்கையில் என்றேனும் உதவியாக இருக்கும் என்ற என் நம்பிக்கையை அந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியது."

சென்னை, செயின்ட். கேப்ரியல் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை, பிரியசகி என்கிற ஆனி பிளாரன்ஸ்.

கற்பித்தல் முறைகள் மற்றும் கற்கும் விதம் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். 

"தனியார் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது, ஹரிஹரன் என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ரொம்பவும் சுமாராகப் படித்ததால், அவனைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவெடுத்தது. நான் விவாதித்துத் தடுத்தேன். பிறகு, அவனுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சிபெற வைத்தேன். இது நடந்து 18 ஆண்டுகள் கழித்து, ஹரிஹரன் என்னைத் தேடிவந்தான். `நீங்கள் மட்டும் எனக்காகப் பேசியிருக்காவிட்டால், டிராப் அவுட் ஆகியிருப்பேன். இன்றைக்கு நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருப்பதற்கு நீங்களே காரணம்' எனக் கைகளைப் பற்றிக்கொண்டு கூறினான். `மெள்ள கற்கும் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் பழக்கமும் உங்களால்தான் வந்தது மேடம்' என்றபோது ஆசிரியராகப் பூரித்துப்போனேன். 

ஒரத்தூர், சிதம்பரானார் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் கி. பால சண்முகம்.

இவர் மாணவர்களுக்குக் கதை சொல்லல், பாரம்பர்ய விளையாட்டுகள், தன்னம்பிக்கை வளர்த்தல் உள்ளிட்ட விஷயங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டவர். 

"என்னுடைய ஆசிரியர் பணி என்பது பூடானில் தொடங்கியது. ஐந்து வருடங்கள் அங்கு பணிபுரிந்தேன். ஒரு கட்டத்தில் பணியிலிருந்து விலக முடிவெடுத்தேன். அது மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அங்கேயே இருக்குமாறு அன்போடு வற்புறுத்தினார்கள். நான் இந்தியாவுக்கு வர வேண்டும் எனும் சூழ்நிலையால் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். இறுதிநாள் விடைகொடுக்கும்போது பலரும் அழுதனர். பள்ளியிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தபோது, ஒரு பையன் குறுக்குச் சாலை வழியாக ஓடி வந்து, என் கையில் ஒரு பேப்பரைத் திணித்துவிட்டு ஓடிவிட்டான். அதில், `i love you sir' என்று எழுதியிருந்தான். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஆண்டுகள் அந்த பேப்பரைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்"