Published:Updated:

"பசியோட படிக்கிறதுதான் ஆகப்பெரிய கொடுமை!’’- இளமாறன்

கொடுங்கையூர் பள்ளியில், காலை உணவு வழங்கலைக் கொடுக்க அனுமதித்த தலைமையாசிரியருக்கு நன்றி தெரிவித்த அவர், ``காலை உணவு வேண்டும் மாணவர்களுக்கான பட்டியலை அரசு தயாரிக்க வேண்டும்” என்கிறார்.

"பசியோட படிக்கிறதுதான் ஆகப்பெரிய கொடுமை!’’- இளமாறன்
"பசியோட படிக்கிறதுதான் ஆகப்பெரிய கொடுமை!’’- இளமாறன்

"கிட்டத்தட்ட 10 வருஷமாவே, `மாநகராட்சிப் பள்ளிகளில் பொருளாதாரரீதியா கஷ்டப்படுற குழந்தைகளோட காலை உணவுக்காக, கொஞ்சம் தொகை ஒதுக்கணும். அவங்களுக்கு காலை உணவு கிடைக்கிறதுக்கான வழியை அரசு செய்துகொடுக்கணும்'னு இளமாறன் சார் பேசிட்டுதான் இருக்காங்க. அதுக்கான மனுக்கள்கூட கொடுத்திருக்கார். கடைசி ரெண்டு மாசமா எங்க கொடுங்கையூர் அரசுப் பள்ளியில தன்னோட செலவிலேயே அதைத் தொடங்கியிருக்கார். இப்பவே எங்களால நல்ல மாற்றங்களைப் பார்க்க முடியுது” என்றார் கொடுங்கையூர் பள்ளியில் படிக்கும் அந்தப் பத்தாம் வகுப்பு மாணவி.

`பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட வேண்டும்' என்ற இளமாறனின் நீண்டநாள் கோரிக்கைகுறித்து பள்ளியைச் சுற்றியுள்ள பலரும் பேசுகிறார்கள். ``எல்லாத்தையும் இலவசமாத் தரணும்னு கேட்கிறது நோக்கமில்லைங்க. அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தாலதான் நான் எஸ்.எஸ்.எல்.சி-யாவது படிச்சேன். காலையில வீட்டுவேலைகளுக்கும், கட்டட வேலைகளுக்கும் போறவங்களுடைய பிள்ளைங்களும் இங்க படிக்கிறாங்க. அவங்களுக்கு காலை சாப்பாடெல்லாம் கனவுதான். இளமாறன் ரொம்ப நாளா அதுக்கான மனு கொடுத்துட்டு இருக்காரு. எல்லாப் பள்ளிகளில் இருந்தும் இப்படியான கோரிக்கைகள் எழுந்தா, வறுமையில இருக்கிறவங்க பயனடைவாங்க. பட்டியல் ஒண்ணு எடுத்து, அந்தக் குழந்தைகளுக்கு மட்டுமாவது கவர்மென்ட் ஏதாவது பண்ணணும்” என்கிறார் முன்பு பேசிய மாணவியின் தந்தை, மெக்கானிக் ராஜசேகர். 

கடந்த ஐந்து வருடமாக 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுவருகிறது வடசென்னையின் கொடுங்கையூர் அரசு உயர்நிலைப் பள்ளி. உள்கட்டுமானத்திலும், தனியார் பள்ளிகள் போட்டிபோடும் வகையிலான வசதிகளுடனும் பள்ளியை இயக்குபவர்கள், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள். காலை உணவுத் திட்டத்தை வலியுறுத்திவரும் கொடுங்கையூர் பள்ளி ஆசிரியரும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான இளமாறனிடம் பேசியபோது,

"வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளைப் பார்க்க, அவ்வளவு கஷ்டமா இருக்கும். கூலி வேலைசெய்யும் பெற்றோர்களுக்கும், தனிப்பெற்றோருக்கும் அவர்களது அன்றாட பாட்டுக்காக வேலைக்குப் போகவேண்டிய சூழல். இந்தக் குழந்தைகள் எதுவும் சாப்பிடாம பள்ளிக்கு வருவாங்க. பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டுகிற 13 முதல் 15 வயதிலான காலகட்டம், அவங்க பசியை அனுபவிக்கிறதெல்லாம் கொடுமை. பசியோடவே படிக்கிறதுதான் பெரிய கொடுமை. பசியினால மயக்கம், வயிற்றுப் பிரச்னையால பாதிக்கப்படுற குழந்தைகளை நான் பார்த்திருக்கேன்” என்றார் அவர். 

மனுக்களால் பெரிய நன்மை எதுவும் இன்னும் விளையாததால், தானே இதற்காகச் செலவழித்து மாணவர்களுக்கான காலை உணவை ஏற்பாடு செய்திருக்கிறார் இளமாறன். 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான, காலை உணவு கிடைக்காமல் இருக்கும் 120 மாணவர்களின் பட்டியலைத் தயாரித்திருக்கிறார் அவர். அம்மா உணவகத்திலிருந்து இட்லியையும் பொங்கலையும் வரவழைத்து, பள்ளியிலேயே மாணவர்களுக்குக் கிடைக்கச்செய்யும் இளமாறன், ஒவ்வொரு மாதமும் இதற்காகச் செலவழிக்கும் தொகை 5,000 ரூபாய். 

"மாணவர்களின் எதிர்காலத்தையும் உடல்நலத்தையும் கணக்கில்கொண்டால் நான் செய்வது மிகச்சிறிய விஷயம்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மூன்று மாதமாக காலை உணவை ஏற்பாடு செய்துவருகிறேன். இதற்கே நல்லவிதமான மாற்றங்களை என்னால் பார்க்க முடிகிறது” என்ற இளமாறன், தனிநபர்களால் இந்தப் பெரிய வேலையைச் செய்துவிட முடியாது என்றும் தெரிவித்தார். கொடுங்கையூர் பள்ளியில், காலை உணவு வழங்கலை அனுமதித்த தலைமையாசிரியருக்கு நன்றி தெரிவித்த அவர், "காலை உணவு வேண்டும் மாணவர்களுக்கான பட்டியலை அரசு தயாரிக்க வேண்டும். மாணவர்களின் பசியறிவது அரசின் கடமை'' என்கிறார் இளமாறன்.

எழுத்தறிவுக்கும் ஆசானுக்கு வாழ்த்துகள்.