Published:Updated:

எஸ்.ஜே.சூர்யா...லா காலேஜ் இன்டர்வியூ... வானதி சீனிவாசனின் டென்ஷன் தருணங்கள்! #LetsRelieveStress

எஸ்.ஜே.சூர்யா...லா காலேஜ் இன்டர்வியூ... வானதி சீனிவாசனின் டென்ஷன் தருணங்கள்! #LetsRelieveStress
எஸ்.ஜே.சூர்யா...லா காலேஜ் இன்டர்வியூ... வானதி சீனிவாசனின் டென்ஷன் தருணங்கள்! #LetsRelieveStress

வானதி சீனிவாசன்... தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர். வழக்கறிஞர். தொலைக்காட்சி விவாதங்களில் மென்மையாகவும் வலிமையாகவும் தனது கருத்தை எடுத்துவைக்கும் இவரது அணுகுமுறை பலரையும் கவர்ந்தது. 

அரசியலில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்கள்... மன அழுத்தம் மிக்க தருணங்களை எப்படிக் கடக்கிறீர்கள்? 

வானதி சீனிவாசனைச் சந்தித்து இந்தக் கேள்வியை முன்வைத்தேன். புன்னகையோடு பேசினார். 

``எனக்கு ரொம்பவும் டென்ஷன் கொடுத்த ரெண்டு சம்பவங்களை என்னால மறக்கவே முடியாது. அப்போ நான் கோவை பி.எஸ்.ஜி. காலேஜ்ல கெமிஸ்ட்ரி படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போ நான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புல மாநில துணைச்செயலாளரா இருந்தேன். அந்த நேரத்துல பாகிஸ்தான் துணையோட தீவிரவாதிங்க காஷ்மீர்ல இருந்து பண்டிட்களை  வெளியேத்திக்கிட்டிருந்தாங்க. அதனால நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பா இருந்துச்சு. 

இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு எங்க அமைப்பு சார்பா கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் பண்ணினோம். என்னையும் சில மாணவிகளையும் கைது பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. இந்த விஷயம் எங்க வீட்டுக்குத் தெரியாது. போதாக்குறைக்கு  சென்னை லா காலேஜ்ல சேர்றதுக்கு மறுநாள் எனக்கு இன்டர்வியூ. என்ன பண்றதுனு தெரியலை. `இன்டர்வியூ ஞாபகம் இல்லாம போரட்டத்துல கலந்துக்கிட்டோமே வீட்டுக்கு வேற என்ன பதில் சொல்றது'னு ரொம்பவே டென்ஷனா இருந்துச்சு. 

ஒருவழியா தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, கமிஷனர்கிட்ட போய் மறுநாள் இன்டர்வியூ இருக்கிற விஷயத்தைச் சொன்னேன். `நாளைக்கு ஒருநாள் மட்டும் எனக்கு விடுதலை கொடுங்க. மறுநாள் நானே வந்து சரண்டராயிடுறேன்'னு சொன்னேன். நல்லவேளை... அவர் என்னை ரிலீஸ் பண்ணினார். இரவே சென்னை வந்து லா காலேஜ் இன்டர்வியூவை அட்டெண்ட் பண்ணினேன்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் ரொம்பவும் மன அழுத்தத்தைச் சந்திச்சது சென்சார் போர்டு உறுப்பினரா இருந்தப்போதான். டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா `நியூ'-னு படத்தை டைரக்ட் பண்ணி இருந்தார். அதுல இடம்பெற்ற ஒரு பாடல்காட்சி ரொம்பவும் ஆபாசமா இருந்துச்சு. அதுக்கு நான் மறுப்பு தெரிவிச்சப்போ செல்போனைதூக்கி எறிஞ்சிட்டுப் போனார். அதப்பத்தி நான் போலீஸ்ல புகார் பண்ணினேன் அந்த வழக்கு இன்னமும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா அன்னிக்கு நைட் பல இடங்களிலிருந்து போன் பண்ணி ஏகப்பட்ட பிரஷர் கொடுத்தாங்க. அன்னிக்கு நான் ரொம்பவே டென்ஷனாயிட்டேன், நைட்ல என் மனசுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடந்துச்சு. `ஒரு தப்பான விஷயத்தைத் தப்புனு சொன்னதுக்கு இத்தனை பேருக்கு கோபம் வருதே'னு தோணுச்சு. பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இப்படி எவ்வளவோ டென்ஷன்கள் வரத்தான் செய்யும்.  

பணிச்சுமையும் பயணங்களும் மன அழுத்தத்தைத் அதிகரிக்கக்கூடியதா இருக்கு. அரசியல்வாதியா இருக்கிறவங்க மக்களைச் சந்திக்கவும் கட்சிப் பணிகள் செய்யவும் தொடர்ச்சியான பயணம் செய்ய வேண்டியிருக்கு. 

பிடிச்சிருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும்கூட நாம நினைச்ச வேகத்துல எல்லாத்தையும் செய்ய முடியாத நிலையும் இருக்கும். இது தவிர, நாம ஒரு நோக்கத்துல சொல்ற கருத்து வேறு ஒரு அர்த்தத்துல புரிந்துகொள்ளப்படுறப்போ நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படத்தான் செய்யும். அதனால டென்ஷனான வாழ்க்கைங்கிறது தவிர்க்க முடியாத ஒண்ணாதான் இருக்கு. 

டென்ஷனைக் குறைக்க தினமும் காலையில யோகா பண்ணுவேன். அப்படிப் பண்ண முடியலைனா காலையிலயும் சாயங்காலமும் நடைப்பயிற்சி செய்வேன். பெரும்பாலும் என் கணவரோட நடக்குறது எனக்குப் பிடிச்ச விஷயம். நடைப்பயிறசி செய்றதால உடலின் ரத்த ஓட்டம் சீராகி, உடம்பையும் மனதையும் நல்லமுறையில வெச்சிக்க முடியுது. 

பாடல்கள் கேட்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். குறிப்பா இளையராஜா எஸ்.பி.பி பாடல்களை விரும்பிக் கேட்பேன். சில சமயம் சிவாஜிசாரோட பழைய காலத்துப் பாடல்களை ரொம்பவும் விரும்பிக்கேட்பேன். பாடல்கள் கேட்கும்போதே மனசு ரொம்ப லேசாயிடும். சில நேரங்கள்ல புத்தகங்கள் படிப்பேன். ரொம்ப மனசுக்குக் கஷ்டமா இருந்தா வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போய் வருவோம். சுற்றுலா பயணங்கள் மனதை எப்பவும் இளமையாவும் மகிழ்ச்சியாவும் வச்சிக்க உதவும்..!'' என்கிறார் உற்சாகத்துடன்.