Published:Updated:

ஹெச்.ராஜாவா, தமிழிசையா - பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் யார்?! #Satire #VikatanFun

பா.ஜ.க-விலும் இரண்டு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். யார் அவர்கள், அவர்களின் கறுப்புச் சரித்திரத்தை... ஸாரி, காவி சரித்திரத்தை கொஞ்சம் திருப்பிப் பார்ப்போமா...

ஹெச்.ராஜாவா, தமிழிசையா - பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் யார்?! #Satire #VikatanFun
ஹெச்.ராஜாவா, தமிழிசையா - பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் யார்?! #Satire #VikatanFun

ஷார்ட் டெர்ம் மெமரி லாஸையும் போதி தர்மரையும் சொல்லித்தந்த இணைய முனைவர் முருகதாஸ்தான், ஸ்லீப்பர்செல்கள் பற்றியும் நமக்கு போதித்தவர். நம்முடனே இருந்துகொண்டு நமக்கே ஆப்பு வைப்பார்கள். அவர்கள்தான் `ஸ்லீப்பர்செல்கள்' என இட்லி சைஸில் சிம்பிளான விளக்கமும் கொடுத்திருப்பார். அவரின் விளக்கத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, `துப்பாக்கி'யில் ஜெகதீஷ் சுட்டுக்காட்டியதைவிட அதிகமான ஸ்லீப்பர்செல்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டினார் டி.டி.வி.தினகரன். இதே இடத்தில் நம்மால் பா.ஜ.க-வையும் பொருத்திப்பார்க்க முடிகிறது. ஆம், பா.ஜ.க-விலும் இரண்டு ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள். யார் அவர்கள், அவர்களின் கறுப்புச் சரித்திரத்தை... ஸாரி, காவிச் சரித்திரத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்போமா...

ஹெச்.ராஜா:

தமிழகத்தில் எந்தப் பிரச்னை நடந்தாலும், இவரைத்தான் முதலில் அனுப்பி அடிவாங்கவைத்து பிரச்னையின் வீரியத்தைத் தெரிந்துகொள்வார்கள். `இதுதான் இவரது வேலை' என்றுதான் இவ்வளவு நாள் நினைத்திருந்தோம். அதுதான் இல்லை, எரியும் பிரச்னையில் எக்ஸ்ட்ரா ஏழு லிட்டர் பெட்ரோல் ஊத்துவதுதான் இவரது வேலை. ஊரே கழுவி ஊற்றிக்கொண்டிருந்தாலும் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் சோப்பை நீட்டுவார். `தமிழகத்தை, காவி மயமாக்குவோம்!' என ஸ்விகி பாய்ஸை நம்பி வாக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. ஆனால், அதற்கு முன்பே, `சாரண-சாரணியர் இயக்கத்தை, காவி மயமாக்குவேன்' எனக் கிளம்பியவர் ஹெச்.ராஜா. கடைசியில் காவியாகாமல் 52 வாக்குகளோடு காலியானதுதான் நடந்தேறியது. இதைவிட ஒரு தேசியக் கட்சியைக் காயப்படுத்த முடியுமா. சொல்லுங்க... சொல்லுங்க..!

`மெர்சல்' விவகாரத்திலும் `படத்தை இணையத்தில் பார்த்தேன்' என வாய்விட்டு, திருட்டு விசிடி பிரிவு அதிரடி ஆணையர் விஷாலிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். `பெரியார் சிலை' ட்விட்டுக்குத் தமிழகமே ஒன்றுகூடி சட்டையை மடிக்க ஆரம்பித்ததும், `வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரௌடிதான்' என கெத்துக்காட்டியவர் அப்பாவி அட்மின்மேல் பழியைப் போட்டு அப்ஸ்காண்ட் ஆனார். இப்படிச் சேற்றிலும் சோற்றிலும் மாறிமாறி அடிவாங்கும் ஹெச்.ராஜா, சமீபத்தில் `சிறுநீர்ப்பாசனம்' என மொழிபெயர்த்ததற்குச் சொந்த கட்சியினராலேயே பெயர்த்தெடுக்கப்பட்டார்.

இதெல்லாம்விட, ஜெயக்குமாரிடம் `சைபர் சைக்கோ' எனப் பெயர் வாங்கியிருக்கிறார் ஹெச்.ராஜா. இதைவிட சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இதன்மூலம், எல்லோரிடமும் குட்டுவாங்கி தாமரையை மொட்டுவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார் ஹெச்.ராஜா என்பது நிரூபணமாகிறது.

தமிழிசை சௌந்தரராஜன்:

பா.ஜ.க மானத்தை விமானத்தில் ஏற்றியதுதான் சமீபத்திய சம்பவம். ``அறிவு இருக்கிறதாலதான் `பாசிச பா.ஜ.க'ன்னு கத்துறா'' என்ற ஒற்றை வரி போதும், தமிழிசையும் ஒரு ஸ்லீப்பர்செல்தான் என்பதை உணர்த்த. அதை அப்படியே விட்டிருந்தால், இப்படி தேசிய அளவில், உலக மொழிகளில் எல்லாம் திட்டுவாங்கியிருக்க தேவையில்லை. அதேபோல், `தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' எனும் சொற்களை என்று உதிர்த்தாரோ அன்றிலிருந்து மலராமலேயே உதிர்ந்துகொண்டிருக்கிறது தாமரை. பா.ஜ.க என நினைக்கும்போது தமிழிசை, தொண்டர்களுக்கு கேக் பிசைந்து ஊட்டியதும் கண் முன்னால் வந்துபோகுமா இல்லையா... அய்யகோ, ஹெச்.ராஜாவுக்கு ஒரு சிறுநீர்ப்பாசனம் போன்று, தமிழிசைக்கும் ஒன்று இருக்கிறது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை உயரம் தாண்டுதலில் 1,800 மீட்டர் வரை உயரம் தாண்டியதாகக் கூறி வாழ்த்துத் தெரிவித்துப் பதறவைத்தார்.

பல நாள்களுக்கு முன்பு வங்கிகளில் க்யூவில் காத்திருப்போருக்கு `மோர்' கொடுத்து குறைகளைக் கேட்டறியச் சென்றவரிடம், `மோர் புளிப்பாக உள்ளது. குண்டு மாங்காய்க்குப் பதிலாக மூக்குமாங்காய் போட்டிருக்கலாம்' எனக் குறை கூறி வேதனைப்படுத்தியிருக்கிறார். இதன்மூலம், தமிழிசையும் பா.ஜ.க-வின் வண்டவாளத்தைத் தண்டவாளத்திலும், விமானநிலையத்திலும் இன்னபிற இடங்களிலும் ஏற்றுகிறார் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

ஹெச்.ராஜாவும் தமிழிசையும் பா.ஜ.க-வின் ஸ்லீப்பர்செல்களே எனக் கூறி, எனது கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். எஸ்.வி.சேகர் பற்றிய ஆய்வும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விரைவில் முடிவு வெளியாகும். நன்றி, நமக்கம்!