Published:Updated:

சரிகமபதநி டைரி 2011

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்பிரமணியன், உத்ரா

சரிகமபதநி டைரி 2011

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்பிரமணியன், உத்ரா

Published:Updated:
##~##

ருடத்துக்கு நான்கு, ஐந்து தடவை டாலர் தேசத்துக்கு டூர் சென்று வருவதும், உள்ளூரில் ஆறு, ஏழு கல்யாணக் கச்சேரிகளுக்குத் தேதி கொடுப்பதும்தான் பெரும்பாலான இசைக் கலைஞர்களின் காலட்ஷேபத்துக்கு முக்கிய ஆதாரம்.

 மிகப் பிரபலமான பாடகர் அவர். கல்யாணக் கச்சேரிக்குத் தேதி கேட்டுச் செல்பவர்களிடம், சில லகரங்களைச் சன்மானமாகச் சொல்லி ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொள்வாராம். வெள்ளையும் கறுப்புமாகத் தொகையை அப்போதே முழுவதுமாகச் செலுத்திவிட வேண்டுமாம். 'கொட்டும் மழை, பெரும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளைத் தவிர, வேறு எந்தக் காரணத்துக்காக கல்யாண வீட்டார் கச்சேரியை ரத்து செய்தாலும், வாங்கிய பணம் திருப்பித் தரப்பட மாட்டாது’ என்பது பத்திரத்தில் முக்கிய ஷரத்தாக இருக்குமாம்.

சாமியே... சரணம் ஐயப்பா!

சரிகமபதநி டைரி 2011

டிசம்பர் முதல் தேதியன்று நடந்த கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் துவக்க விழா கச்சிதமாக ஒரு மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டது ஆச்சர்யம்! நேரம் கடந்துவிடப்போகிறதே என்ற பயத்தில், 'சைட்டேஷன்’கூடப் படிக்காமல், டாக்டர் பந்துல ரமாவுக்கு 'இசைப் பேரொளி’ விருதும், டாக்டர் ஜானகி ரங்கராஜனுக்கு 'நடன மாமணி’ விருதும் அவசரகதியில் வழங்கப்பட்டது. ஆனால், வாழ்த்திப் பேச வந்திருந்த வைஜயந்திமாலாவின் உரை, சைட்டேஷன் படிப்பது மாதிரிதான் இருந்தது!

இங்கு முதல் நிகழ்ச்சி, டாக்டர் எல்.சுப்ரமணியம் - அம்பி சுப்ரமணியம் வயலின் டூயட். (அம்பி பேஷா வாஷிக்கிறான்!)

சரிகமபதநி டைரி 2011

நவராக மாலிகை வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். நவ ராகங்களையும் முதலில் கொஞ்சமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டு, பின்னர் வர்ணம் பூச ஆரம்பித்தது வித்தி யாசமாக இருந்தது.

அடுத்து, ஹம்சத்வனியில் வாதாபி கணபதிம் பஜே... தந்தையும் மகனும் ஹம்சத்வனி ஸ்வரங்களை மிக ஆக்ரோஷமாகவும் சத்தமாகவும் வாசித்தார்கள். வொய் திஸ் கொல வெறி?! அன்று மேடையில் தம்புரா மீட்டிய வெங்கராமன், பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் எல்.சுப்ரமணியம் படித்தபோது அவருக்கு பி.டி. மாஸ்டராக இருந்தவராம்!

பாரத் கலாச்சாருக்கு இது வெள்ளி விழா ஆண்டு. வழக்கமாகவே விருதுகளை வாரி வழங்கும் இவர்கள், இந்த முறை கூடுதலாக 27 கலைகளுக்கு வெள்ளி விழா சங்கீத/நிருத்ய கலா பாரதி விருது வழங்கினார்கள். இவர்கள் பாரத் கலாச்சாருடன் வளர்ந்து சர்வதேசப் புகழ் அடைந்த சாதனையாளர் களாம்! (மளிகைக் கடை லிஸ்ட் மாதிரி விருதுப் பட்டியல் ரொம்ப நீளம்!)

சென்னை சபா வட்டத்தில் அதிகம் தென்படுபவர், இளம் பாடகி கே.காயத்ரி. மற்றவர்கள் பாடுவதைக் கேட்பதில் ஆர்வம் மிக்கவர். கச்சேரி ஹாலுக்குள் பதுங்கிப் பதுங்கித் தாமதமாக நுழைந்து, ஓசைப்படுத்தாமல் நாற்காலி தேடி இவர் உட்காருவது க்யூட்டாக இருக்கும்!

பாரத் கலாச்சாருக்காகப் பாடினார் கே.காயத்ரி. பாட்டில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. முன்பு இருந்த நடுக்கமும் தயக்கமும் இப்போது குரலில் இல்லை. தன்னம்பிக்கை கூடியிருக்கிறது. சாரீரத்தில் நல்ல இனிமை.

ரீதிகௌள ஆலாபனையில் தெறித்து விழுந்த ஒரு சில ஒஸ்தியான சங்கதிகளில் காயத்ரியின் பிரகாச எதிர்காலம் பளீரிட்டது. மெயினாக பூர்வி கல்யாணி பொன்னையா பிள்ளையின் 'சாட்டிலேனி குருகுக’ கீர்த்தனை. கோடி மன்மதனில் நிரவல். சீனியர் பாடகி சுகுணா புருஷோத்தமனிடம் கற்றதையும் பெற்றதையும் பூர்வி கல்யாணியில் ஜோராக வெளிப்படுத்தினார்.

சரிகமபதநி டைரி 2011

சீஸனில் மிஸ் பண்ணாமல் கேட்க வேண்டியவர்களின் பட்டியலில் கே.காயத்ரி யின் பெயரையும் டிக் செய்துகொள்ளவும்!

''கவிஞர் வாலியிடம் இருந்து இந்த நாடக பத்மம் விருது பெற்றதை, ஜனாதிபதியிடம் இருந்து தாதாசாகேப் விருது பெற்றதற்கு இணையாகக் கருதுகிறேன்!'' என்று பிரம்ம கான சபாவில் பொங்கிப் பூரித்தார் டைரக்டர் கே.பாலசந்தர்!

விழாவில் பேசிய அத்தனை பேரும் சபாவின் தலைவர் நல்லி குப்புசாமியின் கலைச் சேவையை, அவரே நாணத்தால் நெளியும் அளவு பாராட்டித்தள்ளினர். ஒவ்வொரு பாராட்டுக்கும் தண்டால் பஸ்கி எடுப்பதுபோல் நல்லி எழுந்து... உட்கார்ந்து... நல்லி தலைவர் பொறுப்பில் இருக்கும் இன்னும் பல சபாக்களிலும் இது தொடரும். டிசம்பரில் வீட்டில் உடற்பயிற்சியே செய்ய வேண்டாம் நல்லி!

- டைரி புரளும்...