Published:Updated:

எர்டிகா, லாஜி, மராஸோ பீ கேர்ஃபுல்... வருகிறது மிட்சுபிஷி #Xpander!

ஜப்பானிய 'Omotenashi' கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் கேபின், வெளித்தோற்றத்துடன் ஒப்பிடும்போது சிம்பிளாகவே இருக்கிறது;

எர்டிகா, லாஜி, மராஸோ பீ கேர்ஃபுல்... வருகிறது மிட்சுபிஷி #Xpander!
எர்டிகா, லாஜி, மராஸோ பீ கேர்ஃபுல்... வருகிறது மிட்சுபிஷி #Xpander!

இந்தியா... உலகளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்று. காரணம், நம் ஊர் குடும்பங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது என்றால், ஹேட்ச்பேக் (Mirage) மற்றும் செடான் (மிட்சுபிஷி லான்சர்) போன்ற 5 சீட்டர் வாகனங்கள் அவர்களுக்குப் போதுமானதாக இருக்காது. இதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டவைதான் யுட்டிலிட்டி வாகனங்கள். இதனாலேயே மல்ட்டி பர்ப்பஸ் வெஹிக்கிள் (MPV) வகை கார்கள், இந்தியாவில் விரும்பப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்த செக்மென்ட்டில் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா கோலோச்சிக் கொண்டிருந்தாலும், அது அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் இல்லாதது நெருடல்.

அவர்களுக்கான மாற்றாக மாருதி சுஸூகி எர்டிகா திகழ்ந்து வருகிறது. தற்போது தீபாவளி நெருக்கத்தில் இது புதிய அவதாரத்தில் களமிறங்க இருக்கிறது. நல்ல தயாரிப்பாக இருப்பினும், ரெனோ லாஜி விற்பனையில் பின்தங்கியது ஏனோ? தற்போது திடீரெனப் பார்த்தால், பஜேரோ - மான்டெரோ - அவுட்லேண்டர் என ஸ்போர்ட் யுட்டிலிட்டி வாகனங்களுக்குப் பெயர்பெற்ற ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம், தனது Xpander எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவில் மிட்சுபிஷியின் செகண்ட் இன்னிங்ஸ்!

ஆசிய சந்தைகளில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் மிட்சுபிஷி, ஏனோ இந்தியாவில் நீண்ட நாள்களாக கார்களைத் தயாரித்துக் கொண்டிருந்தும், விற்பனையில் பெரிய ஏற்றத்தைப் பெறவில்லை. லான்சர் செடானால் கார் ஆர்வலர்களின் மத்தியில் புகழ்பெற்ற இந்த நிறுவனம், ஏனோ புதிய மாடல்களை அடுத்தடுத்து களமிறக்காததே இதற்கான மூலகாரணி. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கடந்த மாதத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. இதில் பங்கேற்று பேசிய மிட்சுபிஷி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான உத்தம் போஸ், 'நாங்கள் அவுட்லேண்டருக்கு அடுத்தபடியாக, இரு புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். ஒன்று Eclipse க்ராஸ் எஸ்யூவி என்றால், மற்றொன்று Xpander எம்பிவி; இதே வரிசையில் முன்னே சொன்ன கார்கள், 2020-ம் ஆண்டில் டயர் பதிக்கும்' என்றார்.

Xpander எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

 சர்வதேச சந்தைகளில் கடந்த ஆண்டில் நடுவே வெளிவந்த Xpander எம்பிவி, டிசைனில் எகிறியடிக்கிறது. அகலமான கிரில், கட்டுமஸ்தான வீல் ஆர்ச், எஸ்யூவிகளுக்குச் சமமான 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், தடிமனான பாடி லைன், Floating பாணி D-பில்லர், பெரிய LED பனி விளக்குகள், பல இடங்களில் க்ரோம் வேலைப்பாடு என Xpander, பார்ப்பதற்கு கான்செப்ட் கார் போல செம ஸ்டைலாக இருக்கிறது. ஷார்ப்பான LED ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ், டைமண்ட் கட் அலாய் வீல்கள் செம ரகம். அளவில் புதிய எர்டிகாவைப் போல இருந்தாலும் (அகலம்-உயரம்), நீளம் மற்றும் வீல்பேஸில் இந்த எம்பிவி முன்னிலை பெற்றுவிடுகிறது. இருந்தாலும் இது மராஸோவைவிடச் சிறியதுதான்.

ஜப்பானிய 'Omotenashi' கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் கேபின், வெளித்தோற்றத்துடன் ஒப்பிடும்போது சிம்பிளாகவே இருக்கிறது; ஆனால், சிங்கிள் டோன் (கறுப்பு-சில்வர்) மற்றும் டூயல் டோன் (கறுப்பு-பிரவுன்-பீஜ்) கலர் ஆப்ஷன்கள் இருப்பது ஆறுதல். 6.2 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கீ-லெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள், லெதர் சீட்ஸ், ரிவர்ஸ் கேமரா, Slide வசதியுடன் கூடிய கடைசி வரிசை இருக்கை, இண்டிகேட்டருடன் கூடிய எலெக்ட்ரிக் மிரர்கள் எனப் போதுமான வசதிகள் உள்ளன. பயணிகள் பாதுகாப்பிற்கு 2 காற்றுப்பைகள், ABS, EBD, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஆக்டிவ் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் Xpander-ல் இருப்பது, 105bhp பவர் மற்றும் 14.1kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் MIVEC பெட்ரோல் இன்ஜின்; 5 ஸ்பீடு மேனுவல்/4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இந்த எம்பிவி, FWD அமைப்பைக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு வருவதால், கூடுதலாக BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ற டீசல் இன்ஜினையும் பின்னாளில் எதிர்பார்க்கலாம். 'கோதாவுக்கு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வருவோம்' என்ற நம்பிக்கை, மிட்சுபிஷியிடம் இருக்கிறது; அதே முனைப்புடன் நிறுவனத்தின் டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கையும் முன்னேற்றுவது நலம்.