Published:Updated:

ஜம் ஜம் நீர் பசியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையை நிறைவேற்றும்!

ஜம் ஜம் நீர் பசியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையை நிறைவேற்றும்!
ஜம் ஜம் நீர் பசியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையை நிறைவேற்றும்!

ஜம் ஜம் நீர் பசியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையை நிறைவேற்றும்!

ம் ஜம் தண்ணீரின் வரலாறு நபி இஸ்மாயீல் (அலை) பிறந்த காலத்திலிருந்து தொடங்குகிறது. ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி இன்று வரை சுரந்துகொண்டிருக்கும் ஊற்று அது. முதன்முதலாக அது பூமியில் பீறிட்டு வெளியாகி ஓடத் தொடங்கியபோது, இஸ்மாயீலின் தாய் ஹாஜர் (அலை) அவர்கள் ‘ஜம் ஜம்’ என்று சொல்லிக்கொண்டே அதை ஓட விடாமல் பாத்திக் கட்டித் தடுத்தார்கள். ஜம் ஜம் என்றால், 'நில் நில்' எனப் பொருள். அதுவே இதன் பெயராக ஆகிவிட்டது. 

பெருக்கெடுத்துச் சுரக்கும் அந்த ஊற்று நீரைத் தமது கைகளால் தடுத்து அணை கட்டினார் ஹாஜர். அது பின்னர் ஒரு கிணறாக மாறியது. இன்றும் அந்தக் கிணற்றிலிருந்து தொடர்ச்சியாக இயந்திரங்கள் மூலம் நீர் எடுக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அதைக் கேன்களில் எடுத்துக்கொண்டு உலகம் முழுதும் செல்கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் அதைப் புனிதமாகப் பருகி இறையருளைத் தேடுகிறார்கள். 

ஹாஜர் (அலை) அந்த ஊற்றுக்குப் பாத்தி கட்டியபோது `மக்கா' எனும் நகரமே உருவாகி இருக்கவில்லை. மரம் செடிகொடிகளோ மனிதர்களோ இல்லாத பொட்டல் வெளிப் பாலைவனம் அது. பூமியின் முதல் இறையில்லமான கஃபா ஒரு மேடு போல் அங்கிருந்தது. அதற்கு அருகில்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜரையும் கைக்குழந்தை இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி தன்னந்தனியே விட்டுச் சென்றார்கள். 

அவர் போன பிறகு கைவசம் இருந்த உணவும் தண்ணீரும் தீர்ந்துவிட்ட ஒரு சமயத்தில் குழந்தை அழுகின்றது. ஹாஜர் (அலை) தமக்கு அருகில் இருந்த ஸஃபா, மர்வா ஆகிய இரண்டு மலைக் குன்றுகள் மீதும் ஏறி இறங்கி, எங்காவது தண்ணீர் தென்படுகிறதா என்று தவிக்கிறார்கள். அந்தக் குன்றுக்கும் இந்தக் குன்றுக்குமாக ஏழு தடவை ஏறி இறங்கிவிட்டார்கள். 

குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் பசியில் துடித்தபடி கால்களை உதைத்துக்கொண்டு பாலைவன மணலில் கிடந்த அந்தத் தருணத்தில்தான் அவர்களின் கால்களுக்கு அடியிலிருந்து ஊற்றுப் பிறந்தது. இறை உதவி வந்துவிட்டது. 

ஹாஜர் (அலை) அதைக் கண்டு மகிழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியபடி அந்த ஊற்றை நோக்கி ஜம் ஜம் (நில் நில்) என்றவாறு பாத்தி கட்டினார்கள். 

`ஹாஜர் அப்போது அதைத் தடுத்து பாத்திக் கட்டாமல் விட்டிருந்தால், இந்த ஊற்று மறுமைநாள் வரை உலகம் முழுவதும் ஓடக்கூடிய ஆறாக ஆகியிருக்கும்’ என்று  ஒரு நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. (ஸஹீஹுல் புகாரீ) 

இந்தத் தண்ணீரின் சிறப்புகளை நபிமொழிகளில் அதிகம் காண முடிகிறது. மற்ற நீரெல்லாம் தாகம் தீர்ப்பதற்கே பயன்படும். ஆனால், ஜம் ஜம் பசியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனை ஏற்கப்படக் காரணமாக அமையும். 

நபிகளார் (ஸல்) கூறினார்கள்: இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது. 

(அறிவிப்பு: அபூதர் (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 6513, தயாலிஸி 459) 

மற்றோர் அறிவிப்பில், ‘பூமியில் உள்ள எல்லா நீரை விடவும் இந்த நீர் சிறந்தது’ என்றும் கூறப்பட்டுள்ளது. 

(அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி), தப்ரானீ 11167, அஸ்ஸஹீஹா 1056) 

நபித்தோழர் அபூதர் கிஃபாரீ (ரலி) கூறுகிறார்: 

நான் மாதத்தின் முப்பது நாள்களும் ஜம் ஜம் நீரைத்தான் அருந்துவேன். நான் இந்த நீரைத் தவிர வேறு உணவு எதையும் உட்கொள்ள மாட்டேன். அதனால் நான் மிகவும் குண்டாகிவிட்டேன். என் வயிற்றில் சதை வைத்துவிட்டது. அதனால் என் வயிற்றில் பசியே உணராமலிருந்தேன்). (ஸஹீஹ் முஸ்லிம் 6513) 

இதைப் பருகும்போது செய்யப்படும் பிரார்த்தனை ஏற்கப்படும் என்பதைப் பின்வரும் நபி மொழி உணர்த்துகிறது. 

அதாவது, நீங்கள் அதனை நிவாரணத்துக்காகப் பருகினால் நிவாரணத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அதனை அல்லாஹ்விடமிருந்து பாதுகாவல் தேடுவதற்காகப் பருகினால், அல்லாஹ்விடமிருந்து பாதுகாவல் பெறுவீர்கள். நீங்கள் அதைத் தாகத்துக்காகப் பருகினால் தாகம் தீர்க்கப்படுவீர்கள். 

(அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்தத்ரக் ஹாகிம் 473/1, லயீஃபு இப்னுமாஜா 4972) 

நபியவர்கள் தோல் பைகளில் ஜம் ஜம் நீரை எடுத்துச்சென்று, அதை நோயாளிகளுக்கு அருந்தக் கொடுப்பவர்களாக, அந்த நோயாளிகள் மீது ஊற்றுபவர்களாக இருந்தார்கள். 

(அறிவிப்பு: உர்வா இப்னுல் சுபைர் (ரலி), பைஹகீ 9768, அஸ்ஸஹீஹா 883) 

இவ்வாறே அன்னை ஆயிஷாவும் இந்த நீரை எடுத்துச் செல்பவராக இருந்தார். அவரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நபியவர்களும் இவ்வாறே எடுத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்’ என்று கூறினார். (ஜாமிவுத் திர்மிதீ 963) 
நபியவர்கள் இந்த நீரை மிகவும் விரும்புவார்கள். மதீனாவில் இருந்தபோது இந்த நீரைக் கேட்டு மக்காவுக்கு ஆள் அனுப்புவது அவர்களின் வழக்கம். 

சுஹைல் இப்னு அம்ருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள், ‘எனது இந்தக் கடிதம் உமக்கு இரவில் கிடைத்துவிட்டால், நீ பகல்பொழுதை அடைவதற்குள் ஜம் ஜம் நீரை அனுப்பிவிட வேண்டும். கடிதம் பகலில் கிடைத்தால், மாலைப்பொழுதை அடைவதற்குள்  நீரை அனுப்பிவிட வேண்டும். தாமதம் செய்துவிடாதே’ என்று குறிப்பிடுகிறார்.

சுஹைல் இரண்டு தண்ணீர்ப் பைகள் நிறைய நீரை நிரப்பி அவற்றை ஓர் ஒட்டகத்தில் வைத்து அனுப்பி வைத்தார். (பைஹகீ 202/5) 
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இந்த நீர் நோய்களுக்கு நிவாரணமாகக் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நீரை எந்த நோக்கத்துக்காக ஒருவர் குடிப்பாரோ அந்த நோக்கம் அவருக்கு நிறைவேறும். 

இந்த நீரின் சிறப்பு அதன் இடத்தோடு தொடர்புடையதல்ல. அதன் நீருக்கே உரியதாகும். இதனால்தான் நல்லோர்கள் ஹஜ்ஜிலிருந்து திரும்பும்போது நபியவர்களைப் பின்பற்றி  இந்த நீரைத் தங்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். 

இந்த விஷயங்களுக்கு மட்டுமின்றி நோய்களுக்குக் குறிப்பான மருந்தாகவும் இந்த நீர் புகட்டப்படுகிறது. உதாரணமாக, நபியவர்கள் காய்ச்சலுக்கு மருந்தாக நீரைப் புகட்டியிருக்கிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘காய்ச்சல் நரகத்தின் மூச்சுக் காற்றாகும். எனவே, அதனைத் தண்ணீராலோ ஜம் ஜம் நீராலோ குளிர்ச்சியாக்குங்கள்’. 

(அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி), ஸஹீஹுல் புகாரீ 3261) 

ஜம் ஜம் நீரை அவர்மீது தெளிக்க வேண்டும், அல்லது அவரது ஆடையில் தெளித்துச் சிகிச்சை செய்ய வேண்டும். 

அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி.) அவர்களிடம் காய்ச்சல் கண்ட பெண்மணி யாரேனும் கொண்டுவரப்பட்டால், அவருக்காகப் பிரார்த்தனை செய்வார். தண்ணீரை எடுத்து அப்பெண்ணின் ஆடையிலும் உடலிலும் ஊற்றுவார். அவர் கூறுவார், ‘நபியவர்கள் தண்ணீர் மூலம் காய்ச்சலைக் குளிர்ச்சியடையச் செய்யுமாறு எங்களை ஏவினார்கள்’ 

(ஸஹீஹுல் புகாரீ 5724, ஸஹீஹ் முஸ்லிம் 2211) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இதன் மகத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு