Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : எவிடென்ஸ் கதிர், மனித உரிமை ஆர்வலர்படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நானும் விகடனும்!

இந்த வாரம் : எவிடென்ஸ் கதிர், மனித உரிமை ஆர்வலர்படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''கடந்த 25 வருஷங்களாக விகடனின் வாசகன் நான். நிறைய வாசிப்பவன் நான். இந்த 25 வருஷங்களில் என்னுடைய வாசிப்புத் தளம் எப்படி எல்லாம் வளர்ந்திருக்கிறதோ, அப்படி எல்லாம் விகடனும் வளர்ந்திருக்கிறது. விகடனிடம் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள்... எல்லாக் காலகட்டங்களிலும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதும் சமூக நலனில் அது வெளிப்படுத்தும் அக்கறையும்.

சமூகக் கொடுமைகள் தமிழகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் அதற்கு எதிரான முதல் குரல்களில் ஒன்று... விகடன். மக்கள் எதை நினைக்கிறார்களோ அதை விகடன் எழுதும். அதனாலேயே, ஆட்சியாளர்கள் பயந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். இதை எல்லாக் காலகட்டங்களிலும் நான் கவனித்து வருகிறேன். திண்டிவனம் ரீட்டா மேரியை போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்தபோது வெகுண்டு எழுந்தது விகடன். அப்போது விகடன் எழுதிய கட்டுரையே ஆட்சியாளர்களை நடவடிக்கை எடுக்கவைத்தது.

நானும் விகடனும்!

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, பழங்குடியினரிடம் போலீஸார் அத்துமீறல்களில் ஈடுபட்டபோது, திருச்சி மாவட்டம், திண்ணியத்தில் தலித் என்ற ஒரே காரணத்தால் ஒரு மனிதனின் வாயில் ஊரே சேர்ந்துகொண்டு மலத்தைக் கரைத்து ஊற்றியபோது, தென் மாவட்டங்களில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டபோது, வெகு சமீபத்தில்கூட பரமக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டபோது... எப்போது எல்லாம் எளிய மக்கள் மீது அரசும் ஆதிக்கச் சக்திகளும் வன்முறை ஏவுகின்றனவோ, அப்போது எல்லாம் அரசை நோக்கி விகடனின் விரல்களும் நீள்வது வழக்கம்.

நிச்சயம் இது ஆட்சியாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது. ஆனால், அதை என்றுமே விகடன் பொருட்படுத்தியது இல்லை. இந்த அக்கறைதான் நானும் விகடனில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அக்கறையை என்னுள் விதைத்தது. கல்லூரி மாணவனான நான் 1990-91ல் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், தேர்வு பெறவில்லை. நீண்ட நாட்கள் அந்த வடு ஆறவே இல்லை. மாணவப் பத்திரிகையாளராக வர முடியாத சோகத்தில், 'சுவடுகள்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி, அதை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஐயாவுக்கு அனுப்பிவைத்தேன். என்னைப் பாராட்டி எழுதியதோடு, நேரில் வந்து சந்திக்கும்படி பதில் எழுதிஇருந்தார். அவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் நான் எந்தவிதத்திலும் ஒப்பீடு இல்லாதவன். ஆனாலும், என்னை வரவேற்றுப் பேசினார். அறையில் இருந்து வெளியே கொஞ்ச தூரம் வந்து என்னை வழியனுப்பினார்.

நானும் விகடனும்!

அந்த மிகப் பெரிய நாகரிகத்தை நான் இன்றும் என் அலுவல கத்தில் கடைப்பிடிக்கிறேன்.

விகடனில் பணியாற்ற முடியாவிட்டாலும் விகடனில் முகம் காட்டும் வாய்ப்பைக் காலம் எனக்குத் தராமல் இல்லை. சமூகப் பணியாளர்களை அடையாளம் காட்டுவதைத் தான் விகடன் எப்போதுமே வழக்கமாக வைத்திருக்கிறதே? 2008-ம் வருடத்தின் டாப் 10 நம்பிக்கையாளர்களில் ஒருவராக 'தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தப் போராளி’ என்று தலைப்பிட்டு என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது விகடன். எனது சமூகப் பணிகளை இன்னும் முடுக்கிவிட்ட பதிவு அது. எப்போது எல்லாம் என்னைத் தட்டிக்கொடுக்க வேண்டுமோ, அப்போது எல்லாம் விகடன் என்னைத் தட்டிக்கொடுத்து இருக்கிறது. முக்கியமான விஷயங்களில் என்னைக் கருத்து சொல்ல வைத்திருக்கிறது.

நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து இன்றும் கிராமங்களில் நிலவும் இரட்டைக் குவளை கொடுமையைப் பற்றி அறிக்கை தயாரித்தேன். அது விகடனில்தான் விலாவாரியான செய்தியாக வெளியானது. மக்களுக்கு விழிப்பு உணர்வையும் தலித் மக்களுக்குப் பெரும் ஆறுதலையும் ஏற்படுத்திய செய்திக் கட்டுரை அது.

தனிப்பட்ட முறையில் எனது ரசனையை மேம்படுத்தியது விகடன் வாசிப்புதான். எனக்கு பி.சி.ஸ்ரீராமின் தொடர் ஒன்று இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அதில் தன் சின்ன வயதுத் தவறுகள், பலவீனங்களை பி.சி. மனம் திறந்து சொல்லி இருப்பார். அதே மாதிரிதான் இயக்குநர் பாலாவும். 'இவன்தான் பாலா’ தொடரில் அவர் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்கள், தோல்விகளைக்  கொட்டி இருந்தார். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைத் தங்களது அனுபவங்களால் உணர்த்தி இருந்தார்கள் இருவரும்.  

விகடனில் எல்லாம் இருக்கும். மதுரையில் இருக்கும் ரௌடிகளைப் பற்றியும் எழுதுவார்கள்; மதுரையில் அமைதி திரும்பிவிட்டது என்று சந்தோஷத்தையும் பதிவுசெய்வார்கள். கலைஞரைக் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வரும். அடுத்த சில இதழ்களிலேயே ஜெயலலிதா நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய அவசியத்தைப் பகடி செய்திருப்பார்கள். பிரபாகரனைப் பற்றி எழுதினால், அரசாங்கத்துக்குப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி கவலையேபடாமல் 'மாவீரர் தினம்’ பற்றிய அறிவுமதி அண்ணனின் கவிதை வரும். கூடங்குளம் பிரச்னை, விலைவாசி உயர்வு என மக்கள் எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்னையை முன்னிறுத்தியும் விகடன் எதிர்ப்புக் குரல் கொடுக்கும். தீண்டாமை, வாச்சாத்திக் கொடுமைகள், உத்தப்புரம், முள்ளி வாய்க்கால் என விகடன் பதிவுசெய்யாத அவலங்களே இல்லை.  

எதுவொன்றுக்கும் அஞ்சாத நேர் நிற்கும் பார்வை விகடனுடையது. யாருக்கும் அஞ்சாத, உள்ளதை உள்ளபடி எழுதும்  பத்திரிகை விகடன்.

விகடனில் சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி 'விகடன் மேடை’! கமல், பாலா, சூர்யா, எஸ்.ராமகிருஷ்ணன், வடிவேலு, பாலசந்தர், வைகோ எனப் பல தளங்களைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களின் மனப்பாங்கை வெளிப்படுத் தும் பதில்கள், அவர்களின் வாழ்க்கை யையே பகிர்ந்துகொள்கிற

நானும் விகடனும்!

தருணங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.அவர்களின் வெற்றி - தோல்விகளில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

விகடனின் 'பொக்கிஷம்’ பகுதி மிகவும் ரசனைக்குரியது. நல்ல தொகுப்பு அது! விகடன் குழுமம் தமிழ் மக்களுக்காற்றும் பெரும் பங்களிப்பாக சுட்டி விகடன், பசுமை விகடன் பத்திரிகைகளைக் குறிப்பிட வேண்டும்.

விகடன் பழமையின் நல்ல அம்சங்களைக் கைவிடாமல் வைத்திருக்கிறது. அதே சமயம், நவீனத்தின் உச்சங்களையும் தொடுகிறது. விகடன் ஒரு முழுமையான பத்திரிகை. அது தானும் கற்றுக்கொள்கிறது. மற்றவர்களுக்கும் கற்றுத்தருகிறது!''