Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

சுழியன் செத்துக் கருமாதி முடியுமுன்ன இன்னொரு கருமாயம் நடந்துபோச்சு ஊருக்குள்ள. விவசாய நிலத்த வித்துட்டு, வீடு வாசல் விட்டுட்டுக் குடும் பத்தோட பட்டணம் போறாரு கோவிந்த நாயக்கரு. வீட்டு வாசல்ல கூடியிருச்சு ஒரு பெருங்கூட்டம்.

 கட்டில், பீரோவுலயிருந்து அண்டா, அருவாமணை வரைக்கும் ஒண்ணொண்ணா ஓடி விழுகுது லாரிக்குள்ள.

''நல்லது கெட்டதுக்கு நாலு பேருக்கு ஒதவி செஞ்ச மனுசன் ஊரவிட்டுப் போறாரப்பா. பரம்பரையாப் பொழச்ச குடும்பம் இன்னைக்கு அட்டணம்பட்டி விட்டுப் பட்டணம் போகுதுன்னா,

நெஞ்சுல நெருப்பு விழுகுதா இல்லையா? அவர் சம்சாரம் சங்கிலியம்மா மகாலச்சுமி. தவிச்ச வாயிக்குத் தண்ணி தார மகராசி. இனிமே அவுக நெனச்சா நம்மளப் பாக் கலாம்; நாம நெனச்சா அவுகளப் பாக்க முடியுமா?''

பாதி எழவு வீடாகிப்போச்சு கோவிந்த நாயக்கரு வீடு.

மூன்றாம் உலகப் போர்

''பூமிதானப்பா மனுசனுக்கு ஒரு புடிப்பு. நிலத்த வித்திருக்கப்படாது நாயக்கரு. அவரு நெலமய நெனச்சுப் பாத்தா, வேற வழியும் தெரியல. ஒத்த மகன் அமெரிக்காவுல

வெள்ளைக்காரியக் கல்யாணம் பண்ணிக்கிட் டான். சொத்தும் வேணாம்; தொந்தரவும் வேணாம்னு ஒதுங்கிட்டான். ஒத்த மக மெட்ராசுல வேலை பாக்குது பேங்குல. மருமகன் பாவம் ஊர் ஊரா அலையிற உத்தியோகமாம். பிள்ளைய வச்சுப் பெரும் பாடு படுதாம். ஒத்தையில நான் இருக்கேன்; அத்துவானக் காட்டுல நீங்க இருக்கீக. விவசாயம் நல்லால்ல. விவசாயம் பண்ணவும் ஆளில்ல. காலம் போன கடைசியில உங்க ளுக்கு நான் துணை; எனக்கு நீங்க துணை. வந்துருங்க வந்துருங்கன்னு உசுர எடுத்துட்டா. போகுதுக பாவம் பொழப்ப அத்துக்கிட்டு.''

எல்லார் கண்ணுலயும் கண்ணீர் தேங்குது; இன்னும் சிந்தல.

''ஊரவிட்டுப் போறேன்னதும் உசுரு போயிருச்சு நாயக்கரே'' - கருத்தமாயி ஓடி வந்து திண்ணையில உக்காந்திருந்தவர ஆதரவா அணைச்சு நெஞ்சுல சாய்க்கவும் வாய்க்குள்ள வச்சிருந்த துண்டைத் துப்பிட்டுப் பொலபொலன்னு அழுக ஆரம்பிச்சிட் டாரு நாயக்கரு.

''வேற வழியில்ல கருத்தமாயி. கண்ண வித்துட்டுப் போற மாதிரி இருக்கப்பா மண்ண வித்துட்டுப் போறது. திருமலை நாயக்கர் காலத்துல வந்து கையில கலப்பை புடிச்ச குடும்பம் எங்க குடும்பம். என்னோட அத்துப்போகுதப்பா அட்டணம்பட்டி ஒறவு.''

''எப்படி அத்துப்போகும்? அண்ணன் தம்பிகளா நாங்கல்லாம் இங்க உசுரக் கையில புடிச்சு ஒக்காந்திருக்கமா இல்லையா?''

''நல்ல சொல்லுச் சொன்னப்பா. நான் முந்திக்கிட்டா, எனக்கு நீ வந்து மண்ணுத் தள்ளு. நீ முந்திக்கிட்டா, உனக்கு மண்ணுத் தள்ள நான் இருக்கேன்.''

''நெலத்த விக்காம இருந்தா, இப்பிடி நெஞ்சு காஞ்சு போயிருக்க மாட்டீக நாயக்கரே!''

''வித்திருக்க மாட்டேன். உன் மகன்முத்து மணிதான் ஒத்தக்கால்ல நின்னு மில்லுக் காரன்கிட்டச் சொல்லிப் புஞ்சைக்கு நஞ்சை விலை வாங்கிக் கொடுத்தான்.''

புரோக்கரு வேல வேற பாக்குறானா போக்கிரிப் பொறுக்கிப் பய? சுருக்குன்னுச்சு கருத்தமாயிக்கு.

வாடாமல்லி நிறத்துல பளிச்சுன்னு ஒரு பட்டுச் சேலை கட்டி நெறஞ்ச நெத்தியில ஒரு பெரும் பொட்டும் மூச்சுவிடாத மல்லிகை மொட்டுல கட்டுன அஞ்சாறு சரமும் வச்சு சங்கிலியம்மா வெளிய வரவும் சனமே அழுகுது.

''நீங்க போயிட்டா எங்களுக்கு வேற பொழப்பு இருக்கா?'' வயசுக்கு வராத காலத்துலயிருந்து அங்க வேலைபாத்த சீனியக்காவும் தோட்டம் தொரவு பாத்த பளிங்கனும் மடார்னு அந்தம்மா கால்ல விழுந்து அழுகுறாக. கண்ணு கலங்குது அந்தம்மாவுக்கும்; காமிக்கல.

மூன்றாம் உலகப் போர்

பழைய சீல நாலு கொடுத்தா சீனியக்காவுக்கு. 'வச்சுப் பொழச்சுக்க’ன்னு கயித்தோட புடிச்சுப் பசுவும் கன்டுக் குட்டியும் கொடுத்தா பளிங்கனுக்கு.

ஒத்தை வீட்டு மூளிக்கு ஒரு கொடம். சாத்தாகோயில்பட்டிக்காரிக்கு அஞ்சாறு பஞ்சாரம். கருத்தமாயி கையில ஒரு பித்தளக் குத்துவிளக்கு.

''பழசைக் கொடுக்கிறமேன்னு நெனைக்காதீக; மனசைக் கொடுக்குறோம்''- திட்டுத்திட்டாக் கொட்டுது தேங்குன கண்ணீரு.

நிமிந்து ஒக்காந்தாரு கோவிந்த நாயக்கரு; ஏத்த எறக்கமாத் தோள்ல கிடந்த துண்டை இழுத்துச் சரிசெஞ்சாரு.

''அய்யா... எல்லாரையும் கும்புடறேன். வாய் வீணாப் பேசியிருப்பேன். வட்டிவாசி வாங்கி இருப்பேன். கூலி குறைச்சிருப்பேன்; கோயிலுக் குக் கொடை கொடுக்க மறுத்திருப்பேன். எல்லாரும் என்ன மன்னிச்சிருங்கய்யா. பரம்பரையா எங்க படப்படி இருக்குது; கால காலத்துக்கு அதக் களமா அனுபவிச்சுக்குங்க; ஊருக்கே எழுதிவச்சிருக்கேன். வாயார நல்ல வார்த்தை சொல்லி என்ன வழியனுப்பி வைங்கய்யா.''

பேச்சு வரல யாருக்கும்.

கடைசியா வடிச்ச சோத்தைக் கைக்கவளமாப் புடிச்சு ஒரு வாழையிலை விரிச்சுக் காக்காய்க்குப் படைக்கக் கொல்லைப் பக்கம் போறா சங்கிலியம்மா.

''போயிட்டு வாங்க நாயக்கரே. அப்பப்ப வாங்க...''

''ஆமா! வீட்டையும் நெலத்தயும் வித்துட்டுப் போற ஆளுக்கு ஊரு எங்க இருக்கு? ஆளு எங்க இருக்கு?''

''நியாயமான பேச்சு. அப்படிப் பாத்தா ஏழெட்டுப் பேருக்கு ஊரு இல்லேன்னு போகப் போகுது நம்ம ஊருல...''

''அது யாரப்பா அது?''

''பரமனாண்டி, கெடாவீரன், ஒத்தவீட்டு மூளி - மூணு பேரு நெலத்தயும் மில்லுக்காரனுக் குக் கெரயம் பேசி முன்பணம் வாங்கிக் குடுத்துட்டான் முத்துமணி.''

''ஏப்பா பரமனாண்டி நெசமா?''

''நிலத்த நான் விக்க நெனைக்கலப்பா. அதுதான் என்னிய விக்கப் பாக்குது. ஏழு ஏக்கர் வாழை போட்டனப்பா. வாழவைக்கும் வாழைன்னு நம்புனேன். 'வலுத்தவன் வாழை போடு; எளைச்சவன் எள்ளுப் போடு’ன்னு சொலவம் இருக்கு. நான் எளைச்சவன். தெரியாம வாழை போட்டுட்டேன். இன்னைக்கு இத்துப்போயி நிக்கிறேன். குலை தள்ளி அறுவது நாள்ல வெட்டி வித்தாகணும் வாழைத்தார.  அடுத்த வாரம் வெட்டலாம்னு நெனைக்கறப்ப, சடசடன்னு சரிஞ்சுபோச்சு வாழத்தாரு வில. வெட்டுக் கூலி, சொம கூலி, லாரி வாடகை பதினாறு ரூவா; வாழத்தாரு வில பதினஞ்சு ரூவா. ஏற்கெனவே வீட்டை ஒத்திவச்சு விவசாயம் பண்ணுனவன். வெட்டி வித்து இன்னொரு கடன்படறதா? அருவா இருக்கிற வனெல்லாம் வெட்டிட்டுப் போங்கடான்னு சொல்லிட்டு ஆடு மாடு மேயவிட்டேன். ஆடு மாடு மேய்க்க வந்த தொரட்டிக்காரனெல்லாம் தாரு அறுத்துத் தோள்ல வச்சுட்டுப் போறான். இனியும் நான் வெவசாயம் பண்றேன்னு வச்சுக்குங்க... பொன்னுச்சாமிக்கு அடுத்த குழி என் குழி.''

மூன்றாம் உலகப் போர்

பரமனாண்டி பேச்சுக்கு யாரும் மறு பேச்சுப் பேசல.

''ஏ ஒத்தை வீட்டு மூளி! நீ ஏன் நிலத்த விக்கப் பாக்குற?''

''கைம்பொண்டாட்டியா நான் எத்தன நாளைக்கு ஒத்தக் கொத்துல களைஎடுத்து அலைய முடியும்? மம்பட்டி வேலைக்கு ஆள் இருக்கா? மரம் ஏற ஆள் வாரானா? பொம்பள எனக்குத் தென்னை மரம் ஏறத் தெம்பிருக்கா? ஒத்த ரூவா அரிசி வாங்கி உலை வச்சிட்டுச் சாராயக் கடையில நிக்குது சாதிசனமெல்லாம்.

நிமிந்த ஆளுக்குக் கூலி நூத்தம்பது. உழைக்கிறவன் திங்கட்டும் பாவம். ஆனா உழைக்க வாரானா? போன மாசம் சுத்துக்கால் வெட்டப் பணம் குடுத்துட்டு வந்தேன் பதினஞ்சாளுக்கு. விடியப் போயிட்டேன் தோட்டத்துக்கு; வெயிலேறியும் ஆள் வரல. என்னா எவ்வடமின்னு மந்தைக்கு ஓடிப்போயிப் பாத்தா - பொக்கப்பாண்டி வந்து அட்டணம்பட்டியையே ஏத்திக்கிட்டிருக்கான் அரை லாரியில. மதுரைக்கு மந்திரி வாராராம்; கூட்டம் கொறையுதாம். ஆளுக்கொரு பிரியாணிப் பொட்டலமாம்; கையில வேற எரநூறாம். எவன் வருவான் வேலைக்கு? இழுத்துப் பறிச்சு விவசாயம் பாத்தது என்னோட சரி. அடுத்த தலைமுறைக்கு ஆள் இல்லய்யா மண்ணைக் கிண்ட.''

கூட்டத்தச் சூறாவளியாச் சுத்தி வருது, அவ பேசி முடிக்க ஒரு பெருமூச்சு.

''என்னிய யாரும் கேக்க மாட்டீகளா ஏன் விக்கப்போறேன்னு? நானே சொல்றேன். உச்சி மல தீப்புடிச்சா ஊருக்கா தெரியாமப் போயிரும்? கழுதைக்குக்கூடத் தெரியுமே நான் கரும்பு நட்ட கதை.''

கெடாவீரன் பேசறதக் கண்ணைச் சிமிட்டாமக் காதைத் தீட்டிக் கேட்டு நிக்குது கூட்டம்.

''எல்லாருக்கும் இனிக்குது; விவசாயம் பண்ணிப் பாத்தவனுக்கு மட்டும் கரும்பு கசக்குதப்பா. விதைக்கரணையே ஒரு ஏக்கருக்கு ஏழாயிரத்த முழுங்கிடுது. அப்பறம் உழவடிக்க, வரப்பு வெட்ட, நடவு நட, பாத்தி போட, ஆட்டுக் கெடை நிறுத்த, உரம் போட இந்தா இந்தான்னு இழுத்து முப்பதாயிரத்துக்குப் போயி நிக்கிது. என்னதான் கரும்பு வெல்லமா விளைஞ்சு செல்லமாப் பொழிஞ்சாலும் ஏக்கருக்கு முப்பதாயிரம் நின்னா, மூதாக்கமாரு செஞ்ச புண்ணியம். கரும்புல மட்டும் மொதக் கரும்பு மில்லுக்காரனுக்கு; ரெண்டாம் கரும்புதான் நட்டவனுக்கு. அந்தக் கணக்கப் போட்டுத்தானய்யா அள்ளி எறிஞ்சேன் காசை. ஆறே மாசத்துல செந்தாழ நோயி அடிச்சி, கணுப் புழுவு விழுந்துபோயிருச்சு. மயில் தோகை மாதிரி வந்த கரும்பு குக்குநோவு வந்த கோழியா ஒக்காந்திருச்சு. இது அஞ்சாவது கடனய்யா. இதுக்கு மேல தாங்க நெஞ்சுல வலுவு இல்ல. விக்கிறதத் தவிர வேற வழியில்ல. முத்துமணி கெட்டிக்காரப் பய. மில்லுக்காரன் கிட்ட நல்ல விலை பேசியிருக்கான். விவகாரம் புடிச்ச பயலா இருந்தாலும் வெவரமான ஆளப்பா முத்துமணி!''

நிலத்த விக்கிறதுன்னு முடிவுபண்ணி முன்பணம் வாங்குன ஆளுகளெல்லாம் அவுகவுக நியாயம் பேசி முடிச்சிட்டாக.

ரெண்டு மூணு கேள்வி எழும்புது கூடி நின்ன கூட்டத்துக்கு.

இனிமே சிறு விவசாயி இருப்பானா நாட்டுல? சின்ன மீனுகள வாழவிடுமா திமிர்கொண்டு திரியிற திமிங்கிலங்க? விவசாயி அல்லாதவக கையில விவசாயம் போயிருமா?

கோவிந்த நாயக்கரு பின்னாலயே போகுது ஒரு பெருங்கூட்டம் ரோட்டு வரைக்கும் வழியனுப்ப.

ஊரைப் பிரிஞ்சு போற வலி இருக்கே... அது சம்பவம் பாக்கிற ஆளுகளுக்குத் தெரியாது; சம்பந்தப்பட்ட ஆளுகளுக்குத்தான் தெரியும். குலுங்கி லேசா அழுதாரு கோவிந்த நாயக்கரு. மந்தைய வெறிச்சு வெறிச்சுப் பாக்குறாரு. கெணத்துமேடு, மாட்டுத் தொழுவு, களத்துமேட்டு ஆடு, கன்னுக்குட்டிய நக்குற மாடு, நுங்கு எடுத்த பனையில வண்டி செஞ்சு உருட்டி ஓடற பய, சுருட்டுன பாவாடையில பண்டம் சிந்தக் கூடாதுன்னு தொடைக்கு மேல திரட்டித் தெரியக்காட்டி நடந்து போற சின்னப் பொண்ணுக, பொந்து விழுந்து சந்து விழுந்தாலும் புடிச்சபுடி மாறாத புளிய மரம் - எல்லாம் அவரப் பாத்து ''போறீகளே கோவிந்த நாயக்கரே... வருவீகளா?''ன்னு வருத்தமாக் கேக்கிற மாதிரி சாடைமாடையாத் தெரியுது அவருக்கு.

முன்னால போகுது காரு;

பின்னாலயே போகுது ஊரு.

திடீர்னு காரைவிட்டு இறங்கி ரோட்டோரமா நின்னு தலைக்கு மேல கையத் தூக்கித் தூரத்துல தெரிஞ்ச முத்தாலம்மன் கோயில் கோபுரத்துக்கு மூணு சுத்துச் சுத்தி ஒரு கும்புடு போட்டா சங்கிலியம்மா.

யாருக்கும் தெரியாம என்னமோ ஒண்ணு எல்லார் நெஞ்சையும் அழுத்துது. கடந்து போயிருச்சு காரு. தூரத்துக்குள்ள கரைஞ்சு காணாமப்போயிருச்சு சங்கிலியம்மா கட்டி இருந்த சிவீர்ங்கற சேல நெறமும்.

''உசுருவிட்டுப் போறதுதான் சாவா?

ஊருவிட்டுப் போறதும் சாவுதானய்யா.''

கசகசன்னு பேசிக்கிட்டே கலைஞ்சு திரும்புது கூட்டம்.

சாதிசனமெல்லாம் ரோட்ட விட்டுத் திரும்பி ஊர் எல்லைக்குள்ள நுழையுமுன்ன தலைதெறிக்க ஓடி வர்றான் எண்டப்புளியான் பேரன்.

''அய்யா... ரெட்டாலமரத்துக்குக் கீழே பொண்டாட்டிய எத்தி எத்தி இடுப்ப ஒடிக் கிறானய்யா சொள்ளையன். நீங்க போயி விலக்கலேன்னா கொன்டேபுடுவானய்யா. அய்யா... அய்யா... வேகமாப்போங்கய்யா...''

அப்படியே திரும்புது அட்டணம்பட்டி சமூகம்.

''திருப்பூருக்கில்லய்யா பொழைக்கப் போனான் சொள்ளையன். இப்பத் திரும்பிட்டானா?''

''வீடு வாச வித்துக் கொண்டுபோன காச அங்க ஒரு சீட்டுக் கம்பெனியில கொடுத்து ஏமாந்துட்டானாமில்ல...''

''பொம்பளப் புள்ளைகள்ல ஒரு புள்ள வேலைக்குப் போன இடத்துல காங்கேயங்காரன்கூட ஓடிப் போய்ட்டாளாம்.

இன்னொருத்தி நாண்டுக்கிட்டுச் செத்துப் போனதா அரசுபுரசலாக் காத்துல வந்து காதுல விழுந்துச்சு.''

''கோழிக்கறி போட்டு, இட்டிலி வித்து ஒண்ணும் உருப்படியாகல. போன இடத்துல பொழைக்க வழி இல்லாம, 'போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட’ங்கற மாதிரி திரும்பி வந்துட்டான் போலயிருக்கு.''

பொண்டாட்டியக் குடுமியோட தூக்கி ஆலமரத்து ஆணியில அறையப் போறப்ப ஓடிப்போயி அவன் கையப் புடிச்சுட்டாரு கருத்தமாயி.

''ஏலே சொள்ளையா! உனக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கா? இடுப்புல சத்து இல்லாதவள இந்த மிதி மிதிக்கிற...''

ஆளுக தடுக்கவும் வெறி நாய் மாதிரி குலைக்க ஆரம்பிச்சுட்டான் சொள்ளையன்.

''இவளக் கொன்டு குலைய அத்தாத்தான் என் ஆத்திரம் அடங்கும். புள்ள செத்துப்போச்சு; பொழப்பு அத்துப்போச்சு. இனிமே திருப்பூர்ல பொழைக்க முடியாதுடி. சொந்த மண்ணுலபோய்ச் சாவோம்டின்னா வாராளா? ஊருக்குள்ள வர மாட்டேன்னு ஆலமரத்த உடும்பாப் புடிச்சு நிக்கிறாளே. விடுங்கய்யா இவள மந்தையில வெட்டி

மஞ்சளாறு அணையில வீசிட்டு வந்துர்றேன்.''

மிரண்டுபோன பிள்ளைக ரெண்டும் ஆத்தா மேல விழுந்து அழுது புரளுதுக.

சீல கட்டுன கருவாடு மாதிரி நொந்து நூலாப்போன பொம்பள, பிள்ளைக ரெண்டையும் தனக்குப் பாதுகாப்பா நெஞ்சுல கட்டிக்கிட்டுக் கருத்தமாயி காலைப் புடிச்சுக் கதறி அழுகுறா:

''இந்த ஊருல எப்பிடிப் பொழப்பேன் மாமா? ஆறு பேராப் போயி நாலு பேராத் திரும்பி வந்திருக்கமே... சாதிசனத்து

மூஞ்சியில நான் எப்பிடி முழிப்பேன்? பொழைக்க விதியிருக்கா? உழுக மாடு இல்ல; ஒண்ட வீடில்ல; கிண்ட நிலமில்ல. நான் இங்கேயே சாகிறேன். என்ன அட்டணம்பட்டிச் சுடுகாட்டுல அடக்கம் பண்ணிரு மாமா.''

நெஞ்சு ரெண்டா வகுந்துபோச்சு கருத்தமாயிக்கு. கண்ணு ரெண்டும் பொங்கி நிறை தண்ணி நிக்குது.

குனிஞ்சாரு.

நீண்ட நெடுங்கையில ஒரு பிள்ளயத் தூக்கித் தோள்ல வச்சாரு; இன்னொரு பிள்ளய இடுப்புல வச்சாரு.

''யம்மா ரோசாமணி! எந்திரிம்மா! நெலம்தான இல்ல. என் நெலத்துல நீயும் பாடுபடு; கஞ்சி குடி. குடியிருக்க வீடுதான இல்ல; அங்கேயே ஒரு குடுசு கட்டித் தாரேன் - இரு. சாகிற வழி ஒண்ணுதான் தாயி; பொழைக்கிற வழி நூறு இருக்கு. எந்திரி தாயி எந்திரி!''

வெள்ளாட்டுக்குப் பின்னாலயே குட்டிக போற மாதிரி, கருத்தமாயிக்குப் பின்னாலயே நடந்துபோகுதுக அந்த நாலு உசுரும்.

ஊரே வேடிக்கை பாத்து வேர்த்து நிக்குது.

கெடாவீரன் கேக்குறாரு -

''ஏப்பா பரமனாண்டி... நீயும் நானும் நெழல் கொடுக்க முடிஞ்சதா சாகப்போறவளுக்கு? கருத்தமாயி குடுக்கிறாரு. ஏன்? நீயும் நானும் நெலத்த விக்கப்போறோம்; கருத்தமாயி விக்கல. நெலம் உள்ளவன்தானப்பா தானும் கஞ்சி குடிப்பான்; ஊருக்கும் கஞ்சி ஊத்துவான்.''

நிசந்தான..?

புதைச்சாலும் நெலம் வேணும்...

விதைச்சாலும் நெலம் வேணும் மனுசப் பொறப்புக்கு.

- மூளும்