Published:Updated:

"மீண்டும் ஹைட்ரோகார்பன்... கைகோக்கும் வேதாந்தா!” - நாம் போகும் பாதை சரியா?

"மீண்டும் ஹைட்ரோகார்பன்... கைகோக்கும் வேதாந்தா!” - நாம் போகும் பாதை சரியா?
"மீண்டும் ஹைட்ரோகார்பன்... கைகோக்கும் வேதாந்தா!” - நாம் போகும் பாதை சரியா?

வேதாந்தா நிறுவனம் மட்டுமல்ல, உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவுக்குள் வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய வளங்களைச் சுரண்டுவதில்தான் குறியாக இருக்கின்றன.

`ஹைட்ரோகார்பன்' என்கிற ஒரு வார்த்தை கடந்த வருடம் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெற வைத்தது. இதைக் கண்டு சிறிதுகாலம் அமைதிகாத்த மத்திய அரசு மீண்டும் அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க இடங்களை மீண்டும் ஒதுக்கியுள்ளது. முன்னர் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒதுக்கப்பட்ட இடங்களுக்கே பெரும் போராட்டம் நடந்த சூழலில், இப்போது வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்திருப்பது மேலும் தமிழக மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

இந்தியா முழுவதும் சுமார் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றுள்ளது.

இதற்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கியதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.செயராமன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இத்திட்டத்தினைப் பற்றிப் பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம்.

"ஹைட்ரோகார்பன் திட்டம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு எங்கேயுமே சொல்லவில்லை. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும், ஹைட்ரோகார்பன் எடுக்கும் இடங்களைக் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு குறிப்பிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பனை எடுக்க மத்திய அரசு ஏலத்தை அறிவிக்கும். ஏலம் எடுக்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கும். தமிழகத்தில் முன்னர் ஏலம் எடுத்த நிறுவனமான ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம் கூட மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றுதானே அமைதி காக்கிறதே தவிர, திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கவில்லை. சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையை மத்தியிலும் மாநிலத்திலும் பெறும் செயல் நடந்துகொண்டுதானிருக்கிறது. இப்போது அனுமதி வாங்கியிருக்கும் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி ஆகியவற்றுடன் சேர்த்து ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனமும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் செயலில் இறங்கும். இதை வேதாந்தா நிறுவனம் மட்டுமல்ல, உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவுக்குள் வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய வளங்களைச் சுரண்டுவதில்தான் குறியாக இருக்கின்றன. அந்நிறுவனங்களுக்கு ஏற்ற மாதிரிதான் நாட்டின் திட்டங்களும் சட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்குக் கொண்டுவரப்படும் புதிய சுற்றுச்சூழல் திட்டங்கள் எல்லாமே அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு எதிரானவைதாம். வேதாந்தா என்பது இங்கே பிரச்னை இல்லை... எதற்காக இத்திட்டம் என்பதுதான் இப்போதைய கேள்வி.

உலக நாடுகள் பெரும்பாலும் மாற்று எரிசக்தியைத் தேட ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றன. நாமும் மாற்று எரிசக்தியைத் தேடினால் மட்டுமே காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். நிறுவனம் முக்கியமல்ல, ஒட்டுமொத்தமாக இத்தொழில்நுட்பத்தை வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஹைட்ரோகார்பன் எடுக்கும்போது என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், சுற்றுச்சூழல் நிச்சயமாக மாசடையும். மக்களுக்கும் அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தத்தான் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், பூமியின் இயற்கை வளங்களை அழிக்காமல், ஹைட்ரோகார்பனை எடுக்க முடியாது. மேலும், அந்த அடிப்படையே தவறானது. அதனால் மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக மரபுசாரா எரிசக்தியைக் கொண்டு வரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். 

இந்தியா பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, பசுமை இல்ல வாயுக்கள் வெளிப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், இதுவரை அதற்கான எந்தத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகப் பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். அம்மாநாட்டில் கலந்துகொண்ட சீனா மாதிரியான நாடுகள்கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டைக் குறைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் முழுமையான வடிவம் இல்லை. சாகர்மாலா, மேக் இன் இந்தியா, பாரத்மாலா போன்ற திட்டங்கள் எல்லாமே பழைய உற்பத்தி தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழியில்தான் மத்திய அரசு பயணிக்க வேண்டும். இதன் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் மட்டுமல்ல... பல கார்ப்பரேட் நிறுவனங்கள் சேர்ந்துதான் இதைச் செய்துகொண்டிருக்கின்றன. அடிப்படை பிரச்னை திட்டம் மட்டும்தான். திட்டம் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதற்கான வழிகளைத்தான் மத்திய அரசு வழிகாட்ட வேண்டும். இப்போது சென்றுகொண்டிருக்கும் பாதை அழிவைத்தான் தருமே தவிர, எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைக்காது" என்றார்.

இது தொடர்பாக மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.செயராமன், ``மத்திய அரசு, ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனம் தமிழக மக்களை அழிக்காமல் ஓயாது. ஓ.என்.ஜி.சி மீத்தேன், ஷெல்கேஸ் எடுக்கும் திட்டம் கிடையாது என்று மக்களிடம் சொல்லி வந்தது. இது அப்பட்டமான பொய். அபாயகரமான நீரியல் விரிசல் முறையை காவிரிப்படுகையில் யாருக்கும் தெரியாமல் பரிசோதனை செய்து முடித்துவிட்டார்கள். மக்கள்தாம் விழித்துக்கொள்ள வேண்டும். காவிரிப்படுகை என்பது நமது உணவுக் கோப்பை. இது உடைக்கப்பட்டால் நாம் நிச்சயமாக இங்கிருந்து வெளியேற வேண்டியதுதான். எண்ணெய் நிறுவனங்கள் பண ஆசை காட்டுகின்றன" என்று சொல்லியிருக்கிறார். 

"திறந்த ஏக்கர் உரிமக் கொள்கை (Open Acreage Licensing Policy) எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கிய அரசுக்கு நன்றி. நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மிகவும் கடுமையாக உழைப்போம்" என வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பேட்டியளித்திருக்கிறார்.

இந்த முறையாவது அரசு வெளிப்படைத்தன்மையோடும் மக்களின் கருத்துகளைக் கேட்டும் செயல்பட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு