Published:Updated:

``ஓரினச் சேர்க்கையாளர் உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது!’’ - குஷ்பு

த.கதிரவன்

"இந்தத் தீர்ப்பு, யாரையும் நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இதுபோன்ற வித்தியாசமான உணர்வு உள்ளவர்கள் அவர்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான்" - குஷ்பு

``ஓரினச் சேர்க்கையாளர் உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது!’’ - குஷ்பு
``ஓரினச் சேர்க்கையாளர் உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது!’’ - குஷ்பு

'தன் பாலின ஈர்ப்பு குற்றமல்ல...' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஆதரவும் எதிர்ப்புமாக நாடு முழுக்க விவாத அனல் பறக்கிறது. தமிழக அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையானோர் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசியிருக்கும் சூழலில், மத உணர்வு கொண்டவர்கள் இத்தீர்ப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.

'தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல' என்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, 'நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்டம் தீர்மானிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றத்துக்கு வாழ்த்துகள்!

எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்!' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
'சம உரிமைக்கான பாதையில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது' என்று தீர்ப்புக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு செய்துள்ளார் நடிகை த்ரிஷா. 

நடிகை வரலட்சுமி சரத்குமார் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'இந்தியனாக இருப்பதில் இன்று நான் பெருமை கொள்கிறேன். நீங்கள் யாரை விரும்ப வேண்டுமென்று மற்றவர்கள் உங்களிடம் சொல்ல முடியாது. அது உங்களின் தனிப்பட்ட முடிவு. நீங்கள் நீங்களாகவே இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள்' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர சோனம் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோகர், ப்ரீத்தி ஜிந்தா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்தவர்களும் 'ஒரு பாலின ஈர்ப்பு குற்றமல்ல' என்ற தீர்ப்பை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

'மக்கள் நீதி மய்யம்' தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 'வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் நன்றியை எதிர்பார்ப்பதில்லை என்றாலும்கூட இத்தீர்ப்புக்காக உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

'தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல' என்ற தீர்ப்புக்கு ஆதரவாகப் பேசிவரும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்... 

''படித்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் கொடுத்துள்ள பல்வேறு தீர்ப்புகளை வரவேற்கக்கூடியவர்கள் இந்தத் தீர்ப்பை மட்டும் விமர்சிப்பது சரியான நடைமுறை அல்ல. தன்பாலின ஈர்ப்பு என்பது உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாகவே உள்ளது. முற்போக்குச் சிந்தனையுடன், நமது பார்வையைக் கொஞ்சம் விரிவாக்கிக்கொண்டால், தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகள் நமக்கும் புரியவரும். இதை விடுத்து, ஏற்கெனவே நமக்கு நாமே உருவாக்கிவைத்திருக்கும் அந்தச் சிறிய வட்டத்தைவிட்டு வெளியே வராமல், குறுகிய சிந்தனையுடன் பேசிக்கொண்டிருந்தால், நாம் முன்னேற முடியாது. 

இந்தத் தீர்ப்பு, யாரையும் நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இதுபோன்ற வித்தியாசமான உணர்வு உள்ளவர்கள் அவர்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான். மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் இந்த உலகத்தில் அவரவர் தனிப்பட்ட உரிமை சார்ந்து வாழும் தகுதி உள்ளது. அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறிக்கக்கூடிய அதிகாரம் யாருக்கும் இங்கே இல்லை. எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்களும் இனி சுயமரியாதையுடன் வாழக்கூடிய வகையில் ஓர் அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிறது என்பதை நல்லதொரு முடிவாகவேப் பார்க்கிறேன்!'' என்றார்.