Published:Updated:

21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்!

மற்ற திமிங்கில இனங்களைப் போலவே இந்த இனமும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. மனித நடவடிக்கைகள், கடற்சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.

21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்!
21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்!

ம்மைக் கவர்வதற்கு திமிங்கிலச் சுறாக்கள் (Whale sharks) தனியாக எதுவும் செய்யவேண்டியதில்லை. 21 டன் எடையுள்ள 40 அடிவரை வளரக்கூடிய உலகின் மிகப்பெரிய அந்த மீனை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அதன் அழகுக்கு அதுமட்டுமே நிகர். கடலடி நட்சத்திரத்தைப்போன்று மினுக்கும் முதுகுப்புறத்தைக் காட்டி சுற்றிக்கொண்டிருக்கும். அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது வானைப்போல கடலிலும் ஒரு நட்சத்திரக் கூட்டம் உருவாகிவிட்ட மாயைத்தான் ஏற்படுத்தும். அதற்குத் தகுந்தவாறுதான் மரோகிண்டானா (Marokintana) என்று மடகாஸ்கர் மொழியிலும் அவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், நட்சத்திரங்கள் என்று பொருள். அந்தப் பொலிவுதான், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்கு பலரையும் தூண்டியது. ஒளிப்பட அடையாளங்களைக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கும் முதுகிலிருக்கும் நட்சத்திர அமைப்புகளே துணைபுரிந்தன.

அழிவின் விளிம்பிலிருக்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஆய்வுசெய்த குழுவொன்று, மடகாஸ்கர் கடற்பகுதியில் ஓர் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரின் தென்மேற்கில் அமைந்திருக்கும் நோஸி பி தீவு (Island of Nosy Be), நூற்றுக்கணக்கான இளம் திமிங்கிலச் சுறாக்களின் வாழ்விடமாக இருக்கிறது. அந்தப் பகுதியைச் சூழலியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்கள்.

'அந்த இடத்தில்,  அவை இவ்வளவு இருக்குமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை' என்கிறார் ஆய்வறிக்கையின் முதன்மை ஆராய்ச்சியாளரான ஸ்டெல்லா டையமண்ட் (Stella Diamant). மடகாஸ்கர் திமிங்கிலச் சுறாக்கள் பாதுகாப்புத் திட்டத்தையும் இவர் தற்போது முன்னெடுத்துள்ளார்.

மற்ற திமிங்கில இனங்களைப் போலவே இந்த இனமும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. மனித நடவடிக்கைகள், கடற் சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன. படகுகளில் மோதுவது, விற்பனைக்குப் பிடிப்பது, ஆழ்கடலில் ஆக்சிஜன் குறைபாடு போன்றவை திமிங்கிலச் சுறாக்களின் இறப்புக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திமிங்கிலங்கள் திணறி அழிந்துகொண்டிருக்கும் நிலையில், இவை உயிர்த்திருப்பது உண்மையில் ஆச்சர்யமான விஷயம்தான். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், இந்த உயிரினத்தை சிவப்புப் பட்டியலில் குறிப்பிடும் அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்துள்ளன. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் இவற்றின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் 63 சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆனால், இந்தப் பகுதியில் இவை ஆரோக்கியமான எண்ணிக்கையில் இருக்கின்றன.

2015 முதல் 2017-ம் ஆண்டின் இறுதி வரையிலும் நடத்திய ஆய்வு முடிவுகளை ஆராய்ந்த டையமண்டின் ஆராய்ச்சிக் குழு, தற்போது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் 2016-ம் ஆண்டில் மட்டும் 85 திமிங்கிலச் சுறாக்களைக் கண்காணித்துள்ளனர்.  மொத்தம் 240 சுறாக்களை அவர்கள் கண்காணித்துள்ளார்கள். இந்த வகைக் கடலினம் வாழும் ஆப்பிரிக்கக் கடல் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் கிடைத்ததைவிட இது அதிகம். இந்த 240 மீன்களுமே தனித்தனியாகக் கவனிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க யானையின் எடையில் மூன்று மடங்கு அதிக எடைகொண்டவை. ஒரு பள்ளிப் பேருந்து அளவுக்குப் பெரியதாக இருந்தாலும்கூட (பள்ளிப் பேருந்து குறைந்தது 36 அடி நீளமுடையது, ஓர் இளம் திமிங்கிலச் சுறா, 33 அடிவரை நீளமுள்ளது) இவை சீக்கிரத்தில் நம் கண்ணில் சிக்கிவிடாது. மிகவும் எச்சரிக்கையாக யாரிடமும் சிக்காமல் நழுவிவிடும். இத்தகைய மீன் இனத்தைச் சேர்ந்த 240 மீன்கள் மனிதர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்துள்ளது என்றால், அங்கு அதில்லாமல் மேலும் அதிகமான திமிங்கிலச் சுறாக்கள் இருக்க வேண்டும். அங்கு இன்னும் பல நூறுகளில் அவை இருக்கலாமென்று நம்பப்படுகிறது.

ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்கள் பார்த்த அனைத்துமே இளம் பருவத்தைச் சேர்ந்தது. அதிலும், அதிகமான ஆண் திமிங்கிலச் சுறாக்களே காணப்பட்டன. மொத்த மீன்களில் பெண்பாலின் எண்ணிக்கை 18 சதவிகிதம் மட்டுமே காணப்பட்டது. இதைப்போல, ஆண் மீன்களைவிட அதிகமான எண்ணிக்கையில் பெண் மீன்கள் வாழும் இடங்களைக் கண்டுபிடித்தால், இந்த வித்தியாசத்தால் ஏற்படும் சிக்கலைச் சரிசெய்துவிடலாம். அதற்கான தேடலில்தான் தற்போது டையமண்ட் ஈடுபட்டுள்ளார்.

நோஸி பி தீவில் இந்தச் சுறாக்கள் எப்போதும் இருப்பதில்லை. இனப்பெருக்கத்துக்கு அவை வேறு இடத்துக்குச் சென்றுவிடுகின்றன. இடம்பெயர்ந்து செல்லும்போது கண்காணிக்க முயன்றபோது, ஆய்வுக்குழு தோற்றுவிட்டது. அவை இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளைக் கண்டுபிடித்துவிட்டால், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதன் மூலமாக இந்த மீன் இனத்தின் வருங்காலச் சந்ததிகளைப் பாதுகாக்க முடியலாம். அந்தத் தேடுதலிலும் ஈடுபட்டுள்ளார்கள். இங்குள்ள நீரில், பிளாங்டன் என்ற நுண்ணுயிரிகள் அதிகம் வாழ்வதும் இவை இங்கு அதிகமாக வாழ்வதற்குக் காரணமாக இருக்கலாம். அகலமான வாயையும் அதிகமான பற்களையும் கொண்ட இவற்றின் உணவுப் பழக்கத்தில் ஆச்சர்யப்படும் வகையில் சிற்றுயிர்களே முக்கியமானது. பெய்ட் மீன் (Bait fish) என்று சொல்லப்படும் மீன் வகைகளை இவை அதிகம் உண்ணுகின்றன (சிறு மீன் வகை). இவை, மிகப் பொறுமையாக நீந்தக்கூடியவைதாம். இருந்தாலும், அதன் அபரிமித வளர்ச்சிக்கும் அந்த உடலை இயக்குவதற்கும் அதீத உணவு தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தைக் கொடுக்கும் பிளாங்டன்கள் இந்தத் தீவில் அதிகம் கிடைப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

துனின்னி (Thuninni) என்ற மீனவப் பழங்குடிகளின் அடையாளமாகப் பெயரிடப்பட்ட மீன்வகை, டூனா(Tuna). இவை வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க, திமிங்கிலச் சுறாக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு நீந்துகின்றன. டுனா மீன்கள் இருக்குமிடத்திலும் பல சமயங்களில் அவை காணப்பட்டுள்ளன. இந்த உறவுக்குள்ளிருக்கும் தொடர்பையும் காரணத்தையும் இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அதைப் புரிந்துகொண்டால், இந்தச் சுறாக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட டுனா மீன்கள் உதவியாக இருக்கும். இந்த மாதிரியான ஆராய்ச்சிகள் அவற்றின் சூழலியல் பங்கைப் புரியவைப்பதோடு, அவற்றைப் பாதுகாக்க அறிவியல்ரீதியிலான புரிதலோடு செயல்படவும் நமக்கு வழிவகுக்கும்.

மடகாஸ்கரில் வாழும் திமிங்கிலச் சுறாக்களைப் பற்றிய ஆய்வு இதுவே முதல்முறை. ஆனால், 2000-ம் ஆண்டு முதலே இவை அப்பகுதியின் மீனவர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்த படகு சவாரி நிறுவனங்கள் போன்றவற்றின் பார்வையில் சிக்கிவிட்டன. 2011-ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் சூழலியல் சுற்றுலா அந்த மீன்களை மையப்படுத்தியே நடந்துவருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைத் தொடுவதற்கு அனுமதியளிப்பது, அவற்றோடு நீந்துவது போன்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, சுற்றுலாத் துறையில் பெரும் வருமானம் ஈட்டியுள்ளனர். அவற்றோடு நீந்துவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தானது. அவை செல்லும் ஆழங்களுக்கு நம்மால் செல்லமுடியாது. அதுபுரியாமல் செல்லும்போது மூச்சுத் திணறலில் சிக்கி மீண்டுவர முடியாமல் இறந்துவிடுவார்கள். விவரம் தெரியாதவர்கள்தான் இதைச் செய்கிறாகள் என்றுதான் முதலில் கூறப்பட்டது. கண்காணிப்பில் சீ டைவர்களும்(Sea Divers) நீச்சல் வீரர்களுமே அந்த மீன்களின் உடலிலிருக்கும் துடுப்புகளைப் பிடித்துக்கொண்டு ஆழத்துக்குச் செல்வதைப் பொழுதுபோக்காக நினைத்துச் செய்துவருவது தெரியவந்துள்ளது. 

இந்தப் பூதாகரமான மீன்கள் மிகவும் மென்மையானவை. யாருக்கும் தீங்கிழைக்காது. அதைப் பயன்படுத்தி லாபநோக்கோடு செயல்படுகிறார்கள். கப்பல்களை அவற்றுக்கு வெகு அருகில் கொண்டுசெல்வது, சில சமயங்களில் அவற்றைத் தேடிப் போகும்போது நீருக்கடியில் நீந்தும் அவை கண்ணில் படாததால், அதன்மீதே மோதுவது என்று சுதந்திரமாக வாழவிடாமல் அவற்றுக்குப் பல சிக்கல்களை விளைவிக்கின்றனர். அதன்மீது அமர்ந்து சவாரி போகலாமென்றும் சமீப காலங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. இவையெல்லாம் திமிங்கிலச் சுறாக்களை மனத்தளவில் பாதிப்பதோடு, அவற்றின் நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. இந்த மாதிரியான பழக்கங்களை நிறுத்த வேண்டுமென்று டையமண்டின் ஆய்வுக்குழு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதோடு, அவர்களும் அங்குள்ள சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதோடு, கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அவற்றைத் தொடக் கூடாது. படகை அருகில் கொண்டுசெல்லக் கூடாது. அவற்றிடமிருந்து 25 மீட்டர் தூரத்திலேயே நின்றுதான் பார்க்க வேண்டும் என்பதுபோன்ற விதிகளை வகுத்துள்ளார்கள். நீந்தும்போதும் சுறாக்களிடமிருந்து மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டுமென்றும் வகுத்துள்ளார்கள். மனிதன் மற்ற உயிரினங்களைத் தனக்கு அடிமைகளாகவும், தனது பொழுதுபோக்குப் பொருளாகவுமே பார்ப்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. அவை நமது தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்திசெய்து, நமக்கு சேவைசெய்யப் பிறக்கவில்லை. நம்மைவிட இந்த உலகத்தில் மற்ற உயிரினங்களின் இருப்பு எத்தனை முக்கியமானதென்ற தெளிவை மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதையே இது உணர்த்துகிறது.