Published:Updated:

சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!

சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!

சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!

சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!

Published:Updated:
சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!
##~##

இடம்: மதுரை அருகே குராயூர்...

 முக்கியப் பாத்திரங்கள்: கிருஷ்ணமூர்த்தி ஐயர், தங்கையா, வலி முகமது...

காலம்: இரண்டு மாதங்களுக்கு முன்...

பொழுது புரண்டு சரியும் சாயந்தர நேரம்...

மதுரைக்குத் தெற்கே சுமார் 37 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிறிய கிராமம் குராயூர். வலிமுகமதுவும் தங்கையாவும் சாவகாசமாக நடந்து மேற்கே ஐயனார் கோயிலை ஒட்டிய சென்னம்பட்டி ஆற்றுக்குக் குளிக்கப் போனார்கள். அவர்களுக்கே தெரியாது, இன்னும் சற்று நேரத்தில் தாங்கள் கொண்டுவரப்போகும் தகவலில் ஊரே அல்லோலகல்லோலப்படப் போகும் சங்கதி.

தங்கையாவுக்கு வலிமுகமது சித்தப்பா முறை. ஏன், ஈசாக்கும் ஜோசப்பும்கூடத் தாத்தா முறைதான். எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றுதான். வானம் பார்த்த பூமியை மட்டும் நம்பி இருக்கும் குடும்பமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு இவர்கள் கூட்டம்கூட்டமாக கிறிஸ்துவத்தைத் தழுவினர். பாதிப் பேர் 'என்ன இருந்தாலும் குலதெய்வம் கோபித் துக்கொள்ளும்’ என்று சொல்லி, மதம் மாற வில்லை. சில வருடங்களுக்கு முன்பு பலர் இஸ்லாத்தை ஏற்றார்கள். ஊருக்குப் புதிதாகப் பள்ளிவாசலும் வந்தது. இப்போதும் பலர் மதம் மாறாமல் இருக்கின்றனர். மதம் மாறியவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர். என்ன இருந்தாலும் பந்தபாசங்களும் உறவுமுறைகளும் விட்டுப்போகுமா என்ன?

சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!

குளித்து முடித்து வலிமுகமது ஈரத் துண்டை உலர்த்தியபடி ஒரு புளிய மரத்தடியில் விலகி நின்றுகொண்டார். சாட்டைக்கம்பைச் சொடுக்கி நிற்கும் ஐயனார் சிலைப் பீடத்தை தங்கையா மட்டும் சுற்றி வந்து, பெருமாள் கோயில் வாசலுக்குச் சற்றுத் தள்ளி நின்று கும்பிட்டார். ''டேய், கிட்ட வாடா''- சிரித்துக்கொண்டே கூப்பிட்ட வலிமுகமது, ''இது ஒஞ்சாமிதானே... அப்புறம் ஏண்டா வெளியே நின்னு கும்பிடுறே... உள்ளே போயி குலதெய்வத்தைத் தொட்டுக் கும்பிட வேண்டியதுதானேடா!'' என்றார்.

''பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து ஒருத்தரும் உள்ளே போகல... இன்னிக்குன்னு புதுசா போயி என்னத்தைப் பார்க்கப்போறோம்னுதான்... உள்ளேவெச்சு எவனாச்சும் ஒருத்தன் 'எப்பிடிடா புதுசா வரப்போச்சு’னு கேட்டுப்புட்டான்னு வெச்சுக்க... நம்மால பொறுக்க முடியாதப்பா. நாலா சாதியும் தாயா புள்ளையா இருக்க ஊருக்குள்ள வெவகாரம் வந்துருமே. சரியோ, தப்போ... அவங்கவங்க கோயில் கொளம்னு தனித்தனியா ஆகிப்போச்சு. அது பாட்டுக்கு ஒரு பக்கம் நிக்கட்டும். எல்லாத்துக்கும் காணி விளஞ்சாத்தானப்பா கஞ்சி!'' என்றான் தங்கையா.

''அது சரி... என்னைக் கேட்டா, நாம எல்லோரும் பூட்டிவெச்சுக் கும்பிடுற சாமிகளைவிடவும் நம்ம ஊரை மறக்காம அப்பப்ப ஒரு சாமி வந்து போய்க்கிட்டு இருக்கே, அதுதான் நெசமான சாமி... எல்லோருமா சேந்து அதைத்தான் கும்பிடணும். மத்ததெல்லாம் அப்புறம்தான்...'' என்றார் வலிமுகமது.

''யாரைச் சொல்றீங்க சித்தப்பா?''

''வேற யாரு... நம்ம கிருஷ்ணமூர்த்தி ஐயரைத்தான். நம்ம ஊரு அக்ரஹாரமே பாழடஞ்சுபோச்சு. படிப்பு, பதவினு நெலபுலத்தை வித்துட்டு டவுன்கள்ல போயிக் குடியேறியும் ஊரை மறக்காம இந்த 72 வயசுலயும் ஊர்ப் பிரச்னை எதுன்னாலும் கிளம்பி வந்து நின்னு, தீத்துக் குடுக்கறாரு. சாதி வித்தியாசம் பார்த்தது இல்லை. அவரு புள்ளகுட்டிக படிச்சுப் பெரிய பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இவருக்கு மட்டும் இன்னும் இந்த ஊர்க் கிறுக்கு போகலை பார்த்தியா?''

''ஆமா சித்தப்பா'' என்றபடி இருவரும் மெயின் ரோட்டில் ஈரத் துண்டை உலர்த்தியபடி வரும்போதே, எதிரில் வந்த கல் உடைக்கும் பாலுத் தேவர் படபடப்புடன் வழிமறித்தார்.

''என்ன ஏதுன்னு தெரியலை... ஒரு ப்ளசர் காரு விடிஞ்சதுல இருந்து இதே எடத்துல நிக்குது. காலையில ரெண்டு பேரு உள்ளே உட்கார்ந்திருந்தாங்க. ரெண்டு பேரு மட்டும் இறங்கி, மம்பட்டி, கடப்பாரையோட காட்டுக்குள்ள போனதைப் பார்த்தேன். காடுகரை வாங்க வந்த ஆளுகனு நெனச்சேன். இன்னும் கிளம்பாம அதே இடத்துல நிக்குது. ஒரு சீருல்லாமத் தெரியுதே...'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

''ஆமா! நாம குளிக்கப்போறப்பவும் இதே காரு நின்னுச்சு... போற வழியில என்ன ஏதுனு கேட்டுட்டுப் போவோம்...'' என்றபடி காரை நோக்கி நடந்தனர். பொழுது லேசாக மங்கத் தொடங்கியிருந்தது.

சிலிர்ப்பூட்டும் கிராமம் ரெண்டாம் பிரவேசம்!

காரை நெருங்கியபோது, ஒரு ஆள் மட்டும் ரேடியேட்டரைச் சரிசெய்துகொண்டு இருந்தார். காரின் பின்புறக் கதவுக் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. நெருங்கிப் போனார்கள். ''என்னங்க... அசலூரா?'' என்றார் வலிமுகமது.

''ஆமாங்க... மேலூரு. ரேடியேட்டர் பாயில் ஆகுதுங்க''- முகம் கொடுக்காமல் சொன்னார். காருக்கு முன் நின்ற நபர்.

அதற்குள் சாத்தியிருந்த பின் கதவைத் திறந்துகொண்டு ஒரு ஆள் வேகமாக இறங்கி, ''அதான் சொல்றம்ல, ரேடியேட்டர் சூடாயிடுச்சுனு. நீங்க போங்க... நாங்க பார்த்துக்கறோம்'' என்றபடி முன்னால் வந்தார்.

அதற்குள் மேலும் இரண்டு பேர் சற்றுத் தள்ளி இருந்த சீமைக்கருவைப் புதருக்கு உள்ளிருந்து வெளிப்பட்டனர். ஒருத்தர் கையில் கடப்பாரை இருந்தது. இன்னொருவர் கையில் தண்ணீர் கேன் இருந்தது. வந்தவர்கள் வேகமாக, ''என்ன... என்ன?'' என்றபடி காரை நெருங்கினர். வலிமுகமது சுதாரித்துப் பின்வாங்கினார். எல்லோரும் வலிமுகமதுவை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தபோது, கூட வந்த தங்கையா காருக்குப் பின்னால் நடந்து சுற்றி வந்து, ஆள் இறங்கியதில் திறந்துகிடந்த பின் கதவை மேலும் லேசாகத் திறந்து உள்ளே உற்றுப் பார்த்தார். முகமெல்லாம் குப்பென்று வியர்த்தது. காரின் பின் ஸீட்டில் சுமார் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்றை வெள்ளைத் துணியில் சுற்றிக் கிடத்தியிருப்பதுபோலத் தெரிந்தது. அதன் ஒரு புறத்தில் மட்டும் சுற்றிய துணி விலகி, பிஞ்சுப் பாதங்கள்போல் பிதுங்கித் தெரிந்தன. அதற்குள் ஒருவர் தங்கையாவைக் கவனித்து, வேகமாக வந்து திறந்துகிடந்த கார் கதவை அவசரமாக அறைந்து சாத்தினார்.

''நீங்க போங்க... நாங்க பார்த்துக்க றோம்...'' என்று கொஞ்ச தூரம் வரை இருவரையும் தள்ளிக்கொண்டுவந்து விட்டுவிட்டுத் திரும்பினர்.

சற்று தூரம் நடந்ததும் தங்கையா நா குழறச் சொன்னார்... ''காருக்குள்ள ஒரு கொழந்தை பொணம் கெடக்கு சித்தப்பா...''

''நெசமாவாடா?''

''எங்கண்ணால பார்த்தேன்!''

''பொணத்தைக் கொண்டுவந்து நம்ம ஊருக் குள்ள போட்டுட்டுப் போகப் பாக்கறான்களோ? போலீஸ் கேஸ் அது இதுன்னு ஊரே நிம்மதி இல்லாமப் போகுமேடா... இதை விடக் கூடாது. வேகமா நட...''

இருவரும் ஊருக்குள் வந்து விஷயத்தைச் சொன்னார்கள். வீட்டுக்கு ஒரு ஆள் கம்புடன் மந்தைக்குத் திரண்டு வரச்சொல்லி ஊர்சாட்டப்பட்டது. உடனே, கிராமமே பரபரப்பானது! ''கார் அதே இடத்தில்தான் நிக்கும்... சீக்கிரமாப் போவோம். பொணத்தைப் போட்டுட்டு ஓடிடப்போறாங்க... சீக்கிரம் கிளம்புங்க...'' என்று தேவமார் தெருவில் இருந்து வந்த இளைஞர்கள் சிலர் படபடத்தனர்.

அப்போது தூரத்தில் அந்த காரின் ஹெட்லைட் வெளிச்சம் ஊரை நோக்கி ஊர்ந்து வந்தது. உடனே, என்ன செய்வது என்று நிதானிப்பதற்குள், இரண்டு பேர் மட்டும் காரை நிறுத்தச் சொல்லிக் கைகாட்டினர். விபரீதத்தை உணர்ந்த கார், மறித்தவர்களை ஏற்றப்போவதுபோல் பாய்ந்து வந்து, சடக்கென்று விலகி வேகம் பிடித்தது. கூட்டம் ''ஊய்...'' என்று கூச்சல் போட்டபடி கைகளில் கிடைத்ததை எடுத்து வீசியது. ஹாரனை அலறவிட்டபடி கார் நிற்காமல் விரைந்தது. காரைப் பின்தொடர்ந்து எல்லோரும் ஓடி வந்துகொண்டு இருந்தனர். ஒரு பர்லாங் தூரத்துக்கு அப்பால் ரோடு 'ட’ வடிவில் வலது பக்கம் திரும்பியது. அவசரத்தில் திருப்பம் இருப்பது தெரியாமல் கார் நேராகச் சென்று, வந்த வேகத்தில் சகதிக்குள் இறங்கி நகர முடியாமல் நின்றது. ஆவேசத்துடன் தொடர்ந்து வந்த கூட்டம் காரை நெருங்குவதற்குள், உள்ளே இருந்த வர்கள் இறங்கி, இருட்டுக்குள் வடக்கே வயலுக்குள் ஆளுக்கொரு திசையில் ஓடினர். ஒருவர் மட்டும் தடுமாறி விழுந்தார். அந்த இடத்திலேயே பிடிபட்டார்.

''பொணத்தை எங்கடா கொண்டுவந்து போட வந்தீங்க?'' என்று ஆளாளுக்கு அவர் சொல்வதைக் காதில் வாங்காமல் அடித்தனர். வாயில் ரத்தம் வழிந்தது. சிலர் ''இவன் செத்துப்போனால் கேஸாகிப் போகும். போலீஸுக்கு போன் போடுங்க!'' என்றனர்.

அரிக்கேன் விளக்குகள் வந்ததும், சில பெரிய மனிதர்கள் மட்டும் கதவை அச்சத்துடன் திறந்தனர். பின் ஸீட்டில் வெள்ளைத் துணி சுற்றிக்கிடந்த பொட்டலத்தில் இருந்து சின்னப் பாதம் மட்டும் வெளியே பிதுங்கித் தெரிந்தது. ஒருவர் மட்டும் உள்ளே போய் 'உயிர் இருக்கிறதா?’ என்று தொட்டுப் பார்த்தவர், ஆச்சர்யத்துடன் கூவினார்... ''டேய்... குழந்தை இல்லடா... ஏதோ சாமி சிலை.'' வெளியே தூக்க முடியாமல் 'தம்’ பிடித்து மெள்ள ஏந்தி இறக்கினர். இரண்டரை அடி உயரத்தில் கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதும் வேலைப்பாடான பழைய சிலை! ஒன்றரை அடி உயரத்தில் இருந்த இன்னொரு பெண் தெய்வத்தின் சிலையையும் காருக்குள் இருந்து எடுத்தனர். ''எங்கிருந்தோ சிலையைக் கடத்திட்டுப் போறானுகப்பா. இது துடியான தெய்வம் போலிருக்கு. நம்ம ஊர்ல வந்து சிக்கிட்டானுக'' - எல்லோரும் சிலையைத் தடவித் தடவிப் பார்த்தார்கள். பிடிபட்டவர் அடி தாளாமல் அரை மயக்கத்தில் இருந்தார். ஊரே கூடி சாமி சிலைகளை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, தகவல் கிடைத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் வந்து நின்றது. பிடிபட்டவரை முதலில் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிலைகளைப் பார்த்ததுமே விலை மதிக்க முடியாத பழைய காலத்துச் சிலைகள் என்பது போலீஸாருக்குப் புரிந்தது. என்ன நடந்தது என விசாரித்தனர். பின்னர் ''சரி... சிலைகளை ஜீப்ல தூக்கிவைங்க. ஸ்டேஷனுக்குப் போவோம். விடிஞ்சதும் மத்ததைப் பார்த்துக்கலாம்'' என்றார் இன்ஸ்பெக்டர்.

''ஐயா, தப்பா நெனைக்காதீங்க. அதைத் தொடாதீங்க'' என்றார் ஒருவர். போலீஸார் திகைத்தனர்.

''எங்க ஐயரு வராம நாங்க சிலையைத் தர முடியாதுங்க'' என்றார் ஒருவர் கறாரான குரலில்.

''என்னய்யா விளையாடுறீங்களா? இங்க எந்த ஐயருய்யா இருக்கிறது?'' - இன்ஸ்பெக்டர் கோபித்தார். ''இங்க இல்லீங்க... மதுரை திருநகர்ல இருக்கார். கிருஷ்ணமூர்த்தி ஐயர். அவர் வந்து குடுங்கனு சொல்லாம சிலைகளை நகர்த்தவிட மாட்டோம்யா. அவரு வந்து சொல்லாம நீங்களா வலுக்கட்டாயமா எடுத்துட்டுப்போக நினைச்சா, இதையிட்டு எத்தனை உயிர் பலி வந்தாலும் விட மாட் டோம்!'' என்றனர் சிலர்.

''ஓஹோ... உங்க ஊர்ல ஒரு கொலை விழுந்துகெடந்தாலும் ஐயரு வந்த பின்னாலதான் தூக்குவீங்களாக்கும்? யாருய்யா அந்த ஐயரு?'' என்றார் இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன்.

''இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைல சப்-எடிட்டரா இருந்து ரிடையர்டு ஆனவர். எங்க நல்லது கெட்டதுகளுக்கு முன்னால வந்து நிக்கிறவர்!'' என்றார் கூட்டத்துக்குள் இருந்த இளைஞர் ஒருவர். இன்ஸ்பெக்டர் நிதானமானார். ஐயரைக் கூட்டி வர மதுரைக்கு ஆட்கள் பறந்தனர். நள்ளிரவில் ஒரு வேனில் வெளிச்சம் தெரிந்தது. சிலைகளைச் சுற்றி நின்ற சுமார் 3,000 பேர் உற்சாகத்தில் கூச்சல் போட்டனர். வேன் வந்து நின்றதும் அவ்வளவு பேரும் ஒரே நேரத்தில் கை தட்டி ஐயரை வரவேற்றனர். ஸ்தம்பித்துப்போனார் கிருஷ்ணமூர்த்தி ஐயர். கையோடு ஒரு வீடியோகிராஃபரையும் கூட்டி வந்திருந்தார் அவர். கூட்டம் உற்சாகத்தில் ஆரவாரித்தது. ஐயர் கையமர்த்தியதும் நிசப்தமானது. போலீஸார் ஒதுங்கி நின்றனர். கூட்டம் விலகி வழிவிட... நிதானமாகச் சிலை அருகே சென்று விளக்கு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தார். ஐயரின் முகத்தில் பிரகாசம் படர்ந்தது. பரவசம் மிளிர்ந்தது. கூட்டத்தை ஏறிட்டார்.

''இது ஏதோ சிலை இல்லை. நம்ம தெய்வம்தானப்பா!'' என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

''என்ன சாமி சொல்றீங்க?'' - திரண்டு நின்ற கூட்டம் புரியாமல் விழித்தது.

''நம்ம ஊர் பெருமாள் கோயில்ல ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி களவுபோச்சே கிருஷ்ணன், பாமா ருக்மணி சிலைகள். அது ரெண்டும்தான் இது. நம்ம சாமிதான்!'' என்றார்.

கூட்டம் ஸ்தம்பித்தது. ''உங்கள்ல யாருக்கும் தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை. கோயிலுக்கு உள்ளே விட்டிருந்தாத்தானே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்'' - அர்த்தமாகச் சிரித்தார். பிடிபட்ட நபரை விசாரித்தார்.

''இந்தச் சிலையை நாங்க திருடலை சாமி'' என்று ஐயரின் காலில் விழுந்தார்.

''பின் எப்படி இது உங்க கைக்கு வந்துச்சு?''

''இதைத் திருடினவன் வேறொரு கேஸுல சிக்கி ஜெயில்ல இருக்கான். நாங்களும் அப்ப ஜெயில்ல இருந்தோம். நாங்க ரிலீஸ் ஆனப்ப இந்தச் சிலையைப் புதைச்சுவெச்சிருந்த எடத்த 'மேப்’ போட்டுக் குடுத்தான். இதைத் தேடிக் கொண்டுபோனா எங்களுக்கும் பங்கு கிடைக்கும்னு வந்து, ஒரு வாரமா அவன் குடுத்த மேப்பை வெச்சுக்கிட்டே தேடினோங்க. ரெண்டு சிலைதான் கெடச்சுச்சு. இன்னும் ஒண்ணைத் தேடிக்கிட்டு இருக்கோம். அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு. என்னைக் காப்பாத்துங்க. இனி அடிச்சா செத்தேபோவேன் சாமி!'' என்று அழுதார். ஐயர் உணர்ச்சிவசப்பட்டுக் கூட்டத்தை ஏறிட்டார். கணீரென்ற குரலில் பேசினார். ''பார்த்தீங்களா, வேடிக்கையை. உங்க ஊர் தெய்வத்தை நீங்க பார்த்ததே இல்லை. யாரும் உங்களைப் பார்க்கவிடலை. நீங்க வந்து பாக்க முடியாத இடம் எனக்கெதுக்குனு தெய்வம் நினைச்சதோ என்னவோ தெரியலை... இந்தத் திருடர்கள் துணையோடு சாமியே உங்களைத் தேடி உங்க இடத்துக்கே வந்திருக்குன்னுதான் நான் நினைக்கிறேன்!'' என்றார். கூட்டம் ஆரவாரித்துக் கை தட்டியது.

''ஒரு மேடைவெச்சு லைட்டைப் போடுங்க. இந்த இடத்துலயே இன்னிக்கு கோயில் இருக்கட்டும்!'' என்றார். குடும்பமார்களும்

தேவமார்களும் இன்னும் சகலரும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்து ஆசை தீரத் தங்களது சாமியைத் தொட்டுக் கும்பிட்டு, தடவிப் பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி ஐயரின் உதடுகள் லேசாக நடுங்கித் துடித்தன. ஆனந்தத்தில் விழிகளில் நீர் கோத்திருந்தது.

சற்று நேரம் மௌனமாக நின்ற அவர், பாழடைந்துகிடந்த அக்ரஹாரத்துப் பக்கம் போனார். இருட்டுக்குள் பெரும் கூட்டம் லாந்தர் விளக்குகளுடன் அவரைப் பின்தொடர்ந்து போனது. பெருமாள் கோயிலின் நடை ஏறியதும் திரும்பிப் பார்த்தார் ஐயர். தொடர்ந்து வந்தவர்கள் ஏனோ சற்றுத் தயங்கி நின்றனர். ''அட... வாங்கய்யா'' என்றார் ஐயர். எல்லோரும் திமுதிமுவென்று கோயிலுக்குள் நுழைந்தனர். இதே கோயிலில் வைத்தியநாதய்யரும் இதே கிருஷ்ணமூர்த்தி ஐயரின் அண்ணன் சீமாச்சு ஐயரும் தலைமை தாங்கி, சுதந்திரத்துக்கு மறு வருடம் நடத்திய ஆலயப் பிரவேசம் போலவே இதுவும் இருந்தது.

சுமார் 44 வருடங்களுக்குப் பிறகு, இது உணர்ச்சிகரமான ரெண்டாம் பிரவேசம்!

- சௌபா
படங்கள்: கே.ராஜசேகரன்