Published:Updated:

இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 வருஷம் வாழ முடியுமாம்... விலை எவ்வளவு தெரியுமா?

மனிதர்களுக்குச் சாகாவரம் மட்டும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை தெரிந்துகொண்டார்கள். எனவே அவர்களின் இலக்கை மாற்றிக்கொண்டார்கள். இறப்பைத் தடுக்கத்தானே முடியாது, தள்ளிப்போட முடியும் அல்லவா?

இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 வருஷம் வாழ முடியுமாம்... விலை எவ்வளவு தெரியுமா?
இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 வருஷம் வாழ முடியுமாம்... விலை எவ்வளவு தெரியுமா?

னிதனுக்கு ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்ற ஆசை பல காலமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களின் முயற்சிகள் உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் கடவுள் அந்தச் சக்தியை அளிப்பார் என்று நம்பினார்கள். சிலரோ இயற்கையான பொருள்களைக் கொண்டே ஆயுளை அதிகரிக்க முடியும் என நம்பினார்கள். இந்த ஆராய்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. பலமுறை தோல்வி அடைந்தாலும் இந்த முயற்சி கைவிடப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மனிதனின் ஆயுளை நீட்டிக்க முடியுமா?

உண்மையில் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்ற ஆசைக்கு முன்பாக இறப்பே இல்லாத நிலையை அடைய வேண்டும் என்பதுதான் மனிதனின் இலக்காக இருந்தது. ஆனால் காலம் அவர்களுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது. மனிதர்களுக்குச் சாகாவரம் மட்டும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை தெரிந்துகொண்டார்கள். எனவே அவர்களின் இலக்கை மாற்றிக்கொண்டார்கள். இறப்பைத் தடுக்கத்தானே முடியாது, தள்ளிப்போட முடியும் அல்லவா? அடுத்த கட்டமாக அதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கின. அதுவும் கடந்த நூற்றாண்டில் தொழில்நுட்பங்கள் மேம்பட்ட பிறகு இந்த ஆராய்ச்சிகள் இன்னும் வேகமெடுக்கத்தது. ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதனுக்கு எதன் காரணமாக முதுமை ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். தற்பொழுது அதற்கான காரணத்தை ஓரளவிற்குச் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது குறித்து பிரபல இணையதளங்களில் வெளிவந்த செய்தி...

குறைந்த செலவில் முதுமையைத் தாமதப்படுத்தும் தொழில்நுட்பம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் சின்க்ளேர் (David Sinclair) என்பவரும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து முதுமையைத் தாமதப்படுத்தும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலமாக மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இவர்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை பேராசிரியரான டேவிட் சின்க்ளேர் பல வருடங்களாக முதுமையைத் தள்ளிப்போடும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இவர்கள் கண்டறிந்திருக்கும் தொழில்நுட்பம் NAD என்ற மூலக்கூற்றைச் சார்ந்து இயங்குகிறது. நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோட்டைட் (nicotinamide adenine dinucleotide) எனப்படும் இந்த மூலக்கூறு அனைத்து உயிரணுக்களிலும் பொதுவாக காணப்படுவது. உயிரணுக்களின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் செயல்பாடு சரியாகப் பராமரிக்கவும் இது தேவைப்படுகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வதிலும் NAD முக்கிய பங்கு வகிக்கிறது. இது பார்கின்ஸன் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் மூலமாக உயிரணுக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க முடியும். எனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்களைக் கூட செயல்பட வைக்க முடியும் என்கிறார்கள் இவர்கள்.

வைட்டமின் பி மூலக்கூறுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மாத்திரைகளையும் இந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கியிருக்கிறார்கள். இது போன்று புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் போது அவை முதலில் விலங்குகளில் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அப்படி இந்த மாத்திரையை எலிகளிடம் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மேலும் இதனால் எலிகளுக்கு வேறு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மருந்தை வரும் 2020-ம் ஆண்டில் முதல் மனிதர்களில் பரிசோதனை செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முதுமையின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை ஓரளவிற்குச் சரி செய்ய முடியும் என்றும், அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே இந்த மருந்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான செலவு என்பது ஒரு நாளைக்கு ஒருவர் காபி குடிக்கும் அளவே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்பொழுது NAD தொடர்பான மருந்துகள் வெளியில் கிடைக்கின்றன. ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் முழுமையாக நிரூபிக்கப்படும் வரையில் அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் டேவிட் சின்க்ளேர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமான ஒன்றா?

எலிகளுக்குப் பரவாயில்லை மனிதர்களில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவிற்குச் சாத்தியப்படும், பக்கவிளைவுகள் எதுவும் இருக்குமா என்று கேள்வி கேட்பவர்களுக்கு அவரையும், அவர் குடும்பத்தினரையும் பதிலாகக் காட்டுகிறார் டேவிட் சின்க்ளேர். அவர்கள் அனைவருமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தி பார்த்திருக்கிறார்கள். 1969-ம் ஆண்டில் பிறந்த டேவிட் சின்க்ளேரின் வயது தற்பொழுது 49. இன்னும் ஒரு வருடத்தில் அரை சதத்தை எட்டி விடுவார். ஆனால் அவரைப் பார்த்தால் அவ்வளவு வயதானவர் போலத் தெரியவில்லை. 79 வயதான அவரது தந்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளத் துவங்கினார். அவர் தற்பொழுது சாகச விளையாட்டுகளில் ஈடுபடுகிறார் என்றும் கூறுகிறார். 40 வயதைக் கடந்து விட்ட அவரது மனைவியின் சகோதரி மெனோபாஸ் கட்டத்தை எட்டிய பிறகும் கூட இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டதால் தற்பொழுது கருவுறும் தன்மையைப் பெற்றிருப்பதாக கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் டேவிட் சின்க்ளேர்.

ஒரு வேளை டேவிட் சின்க்ளேர் கூறியபடி ஐந்தே வருடங்களில் இதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடும். ஆனால் இதை மக்கள் பயன்படுத்தத் துவங்கும் போது அது சமூகத்தில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுதே கணிக்க முடியாது. இயற்கையின் கட்டமைப்பை மாற்ற முயல்வதால் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் கூட சில தீமைகளும் இருக்கத்தான் செய்யும்.