Published:Updated:

''என் ஊரின் மண் வாசனை!''

''என் ஊரின் மண் வாசனை!''

''என் ஊரின் மண் வாசனை!''

''என் ஊரின் மண் வாசனை!''

Published:Updated:
''என் ஊரின் மண் வாசனை!''

'உளவுத்துறை’, 'பூந்தோட்டக் காவல்காரன்’, 'சரோஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர் 'அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா, தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''என் ஊரின் மண் வாசனை!''
##~##

''கொங்கு மண்ணில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஊர் கோபிசெட்டிபாளையம். நான் பிறந்தது கவுந்தப்பாடிதான். ஆனா, நான் வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் கோபிசெட்டிபாளையம். அன்னதான பூமினு கோபிசெட்டிபாளையத்தைச் சொல்லலாம். முப்போகம் விளையும் முத்தான ஊர். கடல்கள் சூழ நடுவே தீவு இருப்பதுபோல, வயல்வெளிகள் சூழ இருக்கும் பசுமைத் தீவுதான் என் ஊர்.

என் ஊருக்குனு ஒரு வாசனை இருக்குங்க. பஸ்ஸுல ஊருக்குப் போகும்போது நாலு கி.மீ. முன்னாடியே அந்த வாசனையை உணர முடியும். வயல், சேறு, நெற்பயிர், மீன் குஞ்சு, நண்டு, நத்தைனு பசுமையும் கவுச்சியும் கலந்துகட்டி அடிக்கிற அந்த வாசனையை உலகத்தில் எங்கே போனாலும் அனுபவிக்க முடியாது.

90-களில் காவிரி டெல்டா பகுதி, தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடந்தது. ஆனா, கோபிசெட்டிபாளையம் மட்டும் செழிப்பா இருந்தது. இங்க இருந்துதான் தமிழ்நாட்டுக்கே நெல் உற்பத்தி செஞ்சாங்க. அப்ப 'உழவர் மகன்’ படம் தயாரிச்சேன். 'தமிழ்நாடே வறண்டுகிடக்கும்போது, இவ்வளவு பசுமையான லொகேஷனை எங்க படம் பிடிச்சீங்க?’னு அந்தப் படத்துக்கு ஆனந்த விகடன்ல விமர்சனம் வந்திருந்தது.

மண் மாதிரியே ஈர மனசு கொண்டவங்க இங்கே இருக்கிற மக்கள். திக்குத் தெரியாமல் யார் போனாலும் உட்காரவெச்சு, உபசரிச்சு சாப்பாடு போட்டு, வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவாங்க. மற்ற ஊர்களில் படப்பிடிப்பு நடத்த ரொம்பச் சிரமமா இருக்கும். மக்களால் இடையூறு வரும். ஆனா, இங்கே படப்பிடிப்பு அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டு இருக்கும். மக்கள் அவங்கவங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க.

''என் ஊரின் மண் வாசனை!''

பல வருஷங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் ஸ்டுடியோ நடத்தினேன். கல்யாண ஆர்டர், கட்சி பொதுக்கூட்ட ஆர்டர்னு படங்கள் எடுப்பேன். படப்பிடிப்புக்காக நிறைய நட்சத்திரங்கள் இங்க வருவாங்க. அவங்களையும் போட்டோ பிடிச்சுக் கொடுப்பேன். இப்படித்தான் திரை பிரபலங்கள் எனக்கு அறிமுகம் ஆனாங்க.

இங்க இருந்த ஸ்ரீவள்ளி தியேட்டரை, காலத்துக்கும் மறக்க முடியாது. டிக்கெட் விலை அப்ப அதிகபட்சம் 2.50 ரூபாய்தான். பெரும்பாலும் பழைய படங்கள்தான் போடுவாங்க. ஒரு படம் 10 நாள்தான் ஓடும். 'வசந்த மாளிகை’, 'முள்ளும் மலரும்’ படங்களை எல்லாம் அந்தப் 10 நாட்கள்ல 20 தடவை பார்த்துடுவேன். இப்படித்தான் என்னோட சினிமா ஆசை துளிர்விட்டது. அந்தக் காலகட்டத்தில் என்னை மாதிரி இளைஞர்கள் எல்லாம் நடிகராக... இயக்குநராக ஆகணும்னு ஆசைப்பட்டப்ப,  நான் படத் தயாரிப்பாளர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஏன்னா, ஸ்டுடியோ தொழில் நடத்துனதால் எனக்குத் தொழில் ஆர்வம்தான் அதிகம் இருந்துச்சு. அப்படி நான் எடுத்த முதல் படம், 'சொல்வதெல்லாம் உண்மை’.

''என் ஊரின் மண் வாசனை!''

ஊரில் இருந்தப்ப ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எங்களுக்குத் திருவிழாதான். நண்பர்கள் 20 பேர் சேர்ந்து குண்டேரிப்பள்ளம் அணைக்குப் போவோம். நாங்களே தூண்டில் போட்டு மீன் பிடிச்சு, பொரிச்சு சாப்பிடுவோம். இன்னொரு ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி அணைக்குப் போவோம். இது கொங்கு மண்டலத்தின் குற்றாலம். பவானியாறு இங்க அருவியாய்க் கொட்டும். இங்க ஒரு குளியலைப் போட்டுட்டு அப்படியே கிளம்பி பவானிசாகர் அணைக்குப் போயிடுவோம். அங்க ஆட்டம், பாட்டம் தூள் கிளப்பும்.

''என் ஊரின் மண் வாசனை!''

தை மாசத்தில் பாரியூரில் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் விழா நடக்கும். சுமார் 50 கிராமத்தைச் சேர்ந்தவங்க இந்த விழாவுக்காக ஒண்ணுகூடுவாங்க. விழா நடக்கிற ஒரு வார காலம் கச்சேரி, மானாட்டம், மயிலாட்டம், கரகாட்டம்னு ஊரே கொண்டாட்டத்துக்கு மாறிடும்.

தொழிலுக்காக நான் சென்னையில் இருந்தாலும் உண்மையில் கோபிசெட்டிபாளையத்தில் வசிக்கத்தான் ஆசைப்படுகிறேன்!''

  • இதுவரை 18 படங்களைத் தயாரித்து இருக்கும் சிவா, தற்போது இயக்குநர் வசந்தபாலனின் ‘அரவான்’ படத்தைத் தயாரித்து வருகிறார்!
  •  
  • யுவன்சங்கர் ராஜாவை தன்னுடைய ‘அரவிந்தன்’ படம் மூலம் இசை அமைப்பாளர் ஆக அறிமுகப்படுத்தியது இவர்தான்!

சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன்