Published:Updated:

இதுதான் இமாலய சாதனை!

இதுதான் இமாலய சாதனை!

இதுதான் இமாலய சாதனை!

இதுதான் இமாலய சாதனை!

Published:Updated:
இதுதான் இமாலய சாதனை!

'இதயத்தில் துணிவு இருந்தால் இமயமும் துரும்புதான்’ என்று நிரூபித்து இருக்கிறார், கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். மற்றவர்கள் பார்த்து மலைக்கும் இமயத்தின் உச்சியில் தனி ஒருவராக ஏறி, சாதனைக்கே பெருமை சேர்த்துள்ள இவர், பார்வையற்றவர் என்பதுதான் அசரவைக்கும் ஆச்சர்யம்!

##~##
இதுதான் இமாலய சாதனை!

''எனக்குப் பார்வை மட்டும்தாங்க இல்லை. கை, கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு! எங்க வீட்டுல எங்க அம்மாவுக்கு மட்டும்தான் கண்ணுதெரியும். அப்பாவுக்கும் தம்பிக்கும் பார்வை கிடையாது. நான் ப்ளஸ் டூ படிக்கும்போது அப்பாவும் இறந்துட்டார். அப்ப இந்த அளவுக்குத் தன்னம்பிக்கை எனக்கு இல்லை. அப்பா இறந்தப்ப இடிஞ்சி போயிட்டேன். குடும்பத்தில் சரியான வருமானமும் இல்லை, படிப்பையும் கைவிட வேண்டிய சூழல். அப்பதான் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் எடுக்கும் சேஷாத்திரி வெங்கடேசனைச் சந்திச்சேன். அது என் வாழ்க்கையில் நடந்த அற்புதம். 'உனக்கென்னடா குறை? 1000-ம் வாகனங்கள் கடக்கிற ஒரு சாலையை, ஒரு எறும்பு கடக்குது. வாழ்க்கைங்கிறதும் அப்படித்தான். முட்டி மோதித்தான் ஜெயிக்கணும்...’னு துவண்டு கிடந்த எனக்கு நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி தைரியம் கொடுத்தது அவர்தான்.

இதுதான் இமாலய சாதனை!

அப்பதான் நான் புதுசா பிறந்த மாதிரி உணர்ந்தேன். நான் படிக்கிறதுக்கும் அவர் உதவி செய்தார். சாதிக்கணும்கிற வெறி பிறந்தது. அதுக்கு முன்னாடி ஒருத்தர் துணையில்லாமல் வெளியே போகமாட்டேன். அப்புறம் தனியாவே எல்லா இடத் துக்கும் போகப் பழகினேன். அப்பதான் இமய மலையில் ஏறிப்பார்க்கலாம்னு முடிவு செஞ்சேன்.

அதுக்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதுகுல 10 கிலோ பையைச் சுமந்துகிட்டு தினமும் மூணு கி.மீ. நடந்து பயிற்சி எடுத்தேன். அடுத்து, அதே சுமையோட ஒரு மாசம் மருதமலைப் படிக்கட்டில்ஏறி, இறங்கினேன். பெரியநாயக்கன்பாளையம்பக்கத்தில் பால மலை இருக்கு. அந்த மலை மேல கல்லும் முள்ளுமான பாதையில் ஒரு மாசம் ஏறி, இறங்கிப் பயிற்சி எடுத்தேன்.

'என்னாலேயும் இமய மலை ஏற முடியும்’கிற நம்பிக்கை வந்தது. கோவையில் இருக்கிற 'நேஷனல் அட்வெஞ்சர் அண்ட் லீடர்ஷிப் ஸ்கூல்’ எனக்கு உதவ முன்வந்தது. இமய மலை அடிவாரத்திலும் மலை ஏறும் வழிகளிலும் அவங்களுக்கு முகாம்கள் இருக்கு. அங்க தங்கிக்க எனக்கு அனுமதி கொடுத்தாங்க. கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி போனேன். அங்கு இருந்து பஸ் பிடிச்சு இமயமலை அடிவாரமான குலுமணாலிக்குப் போனேன்.

கடவுளை வேண்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். மலை ஏறுவதுகூட சிரமம் இல்லை. ஆனா, அடிக்கடி மாறுகிற தட்பவெப்பநிலைதான் ரொம்பப் படுத்துச்சு. வெயில் அடிச்சிக்கிட்டு இருக்கிறப்பவே, திடீர்னு மழை கொட்டும்; பனி மழை பெய்யும். பனி உருகி ரோட்டை மறிச்சு வெள்ளம் பாயும். இப்படிப் பல இடர்ப்பாடுகளை சந்திச்சேன். ராத்திரி அங்க இருந்த முகாம்களில் தங்கினேன். ஒருவழியாக எட்டு நாள் நடந்து, இமய மலை உச்சியில் இருக்கிற வியாஸ்கஹ் என்கிற இடத்தை அடைஞ்சேன். புராணக் காலத்தில் வியாச முனிவர் தவம் இருந்த இடமாம் அது. மனித நடமாட்டம் இல்லாத - அவ்வளவு எளிதாக மனிதர்கள் செல்ல முடியாத இடம் அது. சாதனை செய்றவங்க மட்டுமே அங்கே போவாங்க.

திரும்பவும் ஏறிய வழியிலேயே எட்டு நாள் நடந்து, அடிவாரம் வந்து சேர்ந்தேன். அதுக்குப் பிறகு எல்லாமே எனக்குச் சாதாரணமாகிப் போச்சுங்க. என்னால் எதையும் சாதிக்க முடியும்கிற தன்னம்பிக்கை பிறந்தது. அடுத்து என்னோட இலக்கு எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான்!'' - தன்னம்பிக்கை தெறிக்கிறது கோபாலகிருஷ்ணனின் வார்த்தைகளில்!

இதுதான் இமாலய சாதனை!
  • கோவை அரசுக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்துவரும் கோபாலகிருஷ்ணன், அக்குபஞ்சர் துறையில் பட்டம் பெற்றுள்ளார். பார்வையற்ற முதல் அக்குபஞ்சர் நிபுணர் என்று லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளவர். அரசுப் பள்ளிகளில் பகுதி நேரமாகத் தன்னம்பிக்கை தொடர்பான வகுப்புகளும் எடுக்கிறார்!

கட்டுரை, படங்கள்: வி.ராஜேஷ்