Published:Updated:

இது தாய் வீடு!

இது தாய் வீடு!

'சேவை’ என்ற சொல்லுக்கு அடையாளமாக விளங்குகிறது சேலம் அய்யந்திருமாளிகையில் இயங்கும் 'நேசக்கரங்கள்’ அமைப்பு.

இது தாய் வீடு!
##~##

இல்லத்தின் செயலாளர் உமாராணி செல்வராஜ், ''1993-ம் ஆண்டு மனிதநேயம் மிக்க சிலரால் உருவானது இந்த இல்லம். 'ஆதரவு அற்றவர்களுக்குக் கை கொடுக்க நாங்கள் இருக்கிறோம்’ என்பதைக் குறிப்பிடவே 'நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லம்’ என்று பெயர் சூட்டினோம். பெற்றோரை இழந்த மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் தாய் வீடு இது. இங்கே இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னாலும் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது'' என்று அவர் சொல்லும்போதே ஒரு பெண் குழந்தை ஓடிவந்து அவரது மடியில் அமர்கிறது.

''இவ பேரு சரளா. ஒரு ராத்திரி நேரத்தில் மழைனுகூட பார்க்காம இவளைப் பெத்தவங்க தெருவில் எறிஞ்சிட்டுப் போயிட்டாங்க. இப்ப இவ மெட்ரிக் பள்ளியில் நாலாவது படிக்கிறா'' என்றவர் விஜயலட்சுமி, சங்கவி என்று இரு குழந்தைகளையும் அறிமுகப்படுத்தினார்.

இது தாய் வீடு!

''இவங்களைப் பெத்தவங்க மும்பையில் பேப்பர் பொறுக்கும் தொழில் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ரயில் தண்டவாளத்தில் பேப்பர் பொறுக்கும்போது, ரயில்ல அடிபட்டு செத்துட்டாங்க. அங்கே இங்கே அல்லாடி ஒருவழியா சில நல்ல மனுஷங்க இவங்களை இங்கே கொண்டு வந்துவிட்டாங்க. இங்கே படிச்ச பலபேர், தமிழகம் மட்டுமில்லாம வெளி மாநிலங்கள்லேயும் வேலை பார்த்து தன்னம்பிக்கையோட வாழப் பழகி இருக்காங்க.

இங்கே இருக்கிறவங்களுக்கு ஏற்ற வயது வந்ததும், திருமணம் செய்துவைத்து, தாய் வீட்டு சீர்வரிசைகளோடு அனுப்பிவைக்கிறோம். திருமண நாள், பிறந்த நாள், விடுமுறை நாட்கள்ல அவங்க குடும்பத்தோட வந்து தங்கிட்டுப் போறப்ப கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. அதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?'' என்கிறார் தாய்மைக்கே உரிய மகிழ்ச்சியோடு!  

  • 'சேலம் நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லத்’தின் செயலாளர் உமாராணி செல்வராஜுக்கு, துர்கா ஸ்டாலின் நெருங்கிய தோழி. துர்கா சேலம் வந்தால், இவர் வீட்டுக்கு வந்து அரசியல் தாண்டி சமையல், பிசினஸ் எனப் பேசிவிட்டுப்போவார்.

- வீ.கே.ரமேஷ்
படம்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு