பெரிய காடு. அந்தப் பெரிய காட்டுக்குள் திரிந்துகொண்டிருக்கும் யானைகளை வேட்டையாடுவது அவ்வளவு கடினமானதில்லை. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஒரே சமயத்தில் மொத்த காட்டையும் கண்காணிக்க முடியாதல்லவா! குண்டுச் சத்தத்தை வைத்துப் பிடிக்கலாமென்று காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தால் அவர்களோ சைலன்சர் பயன்படுத்திச் சத்தமில்லாமல் சுடுகிறார்கள். இவர்கள் யானையைக் கொன்று அதன் தந்தத்தை வெட்டி எடுத்துக்கொண்டு பாதுகாப்பாகத் தப்பித்த பிறகே அதிகாரிகளுக்கு யானை இறந்திருப்பது தெரியவருகிறது. வேட்டையைத் தடுப்பதென்பது வனத்துறை அதிகாரிகளுக்குப் பல்லாண்டு காலமாகவே இருக்கும் சவால். இனி அவர்களுக்கு அந்தச் சிரமமிருக்கப் போவதில்லை. யானை, காண்டாமிருகம் போன்ற பேருயிர்களின் வேட்டையைத் தடுப்பதும் வேட்டைக் கும்பல்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதும் அவ்வளவு கடினமானதாக இருக்கப் போவதில்லை. நிவாடாவிலிருக்கும் வேண்டர்பில்ட் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வேலையைச் சுலபமாக்கியுள்ளது.
விலங்குகளின்மீது இப்போது பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ் கருவிகளை எப்போதும் தொடர்பிலேயே வைத்திருப்பதில்லை. 24 மணிநேரமும் விலங்குகளைக் கண்காணிக்கும் அளவுக்கு ஜி.பி.எஸ் கருவிகளில் சார்ஜ் இருக்காது. அதனால் அவ்வப்போது அதை ஆன்செய்து எங்கிருக்கிறது என்பதைக் கண்காணிப்பார்கள். ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் ரேடியோ சாதனங்களும் ஒரு நாளுக்கு ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாகச் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல்தான் முதல் பிரச்னை.
மொபைலின் மைக்ரோஃபோன்கள் எப்போதும் வேலை செய்து கொண்டேயிருப்பதால்தான் பயன்படுத்தாமல் வெறுமனே கிடந்தால்கூட அதிலிருக்கும் சார்ஜ் குறைகிறது. துப்பாக்கிச் சூட்டின் அதிர்வலைகளைக் கண்காணிக்க வேண்டுமெனில் 24மணிநேரமும் விழிப்போடிருந்தால்தான் முடியும். அதனால், வேட்டைத் தடுப்பு டிராக்கர்களில் அதைவிட அதிகத் திறன்வாய்ந்த மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட வேண்டும். அது சார்ஜ் குறையாமலும் இருக்கவேண்டும். அதுவும் ஒரு நாளோ ஒரு வாரமோ இல்லை. குறைந்தது ஒரு வருடமோ இரண்டு வருடங்களுக்கோ இருக்கவேண்டும். அதற்கு இவர்களின் ஆராய்ச்சி உதவியுள்ளது.
லெடெஸி (Ledeczi) தனது குழுவோடு 15 வருடங்களாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையிலிருக்கும் ஆராய்ச்சிப் பிரிவுடன் (Research wing of the US Department of Defense) ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது ஆண்டி-ஸ்னைப்பர் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி. ஸ்னைப்பர் துப்பாக்கிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் சுடப்படும் துப்பாக்கியின் வீச்சுப் பாதை, எல்லை, ஆற்றல், துப்பாக்கி வகை போன்ற அனைத்தையும் 95% துல்லியத்துடன் கண்டறியக்கூடிய ஒரு தொழில்நுட்பம். ஆனால், அதன் பேட்டரி ஒரு நாளுக்கும் குறைவாகவே தாக்குப்பிடித்தது. இந்தச் சமயத்தில்தான் அதற்குத் தீர்வாக லெடெஸிக்கு வைப்பர் (WIPER) என்ற யோசனை தோன்றியது. லேப்டாபில் ஏதாவது தரவிறக்கம் செய்துகொண்டிருப்போம். அப்போது அதன் செயல்பாடு நிற்கக்கூடாது அதேநேரம் பேட்டரியும் குறையக்கூடாது. அதற்கு நாம் ஸ்விச் ஆஃப் செய்யாமல் ஸ்லீப் மோடில் போட்டு வைப்போம். அதைத்தான் சிறிது மேம்படுத்தி வைப்பர் என்ற தொழில்நுட்பமாக உருவாக்கினார் லெடெஸி. இதன்மூலம் குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்காவது அதன் பேட்டரியில் சார்ஜ் குறையாமலிருக்கும்.
இந்த வைப்பர் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த சமயத்தில்தான் யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டையைத் தடுக்க வனத்துறை சிறப்பான தொழில்நுட்பத்தைத் தேடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இப்போதிருக்கும் ஷாட் ஸ்பாட்டர்கள் (Shot Spotters) துப்பாக்கிச் சத்தத்தைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். அவற்றை ஏதேனும் மரத்திலோ, கம்பத்திலோ பொருத்தியிருப்பார்கள். அதை வேட்டைக்காரர்கள் கண்டுபிடித்து நீக்கிவிட்டுத்தான் வேட்டையிலேயே ஈடுபடுவதால் அதனால் குறிப்பிட்ட பயன்கள் இருப்பதில்லை. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட லெடெஸி அவர் கண்டுபிடித்த வைப்பர்களை விலங்குகளின் கழுத்திலேயே கட்டிவிட முடிவெடுத்தார். அப்படியிருந்தால் எப்போதுமே டிராக்கர்கள் யானைகளுடனே இருக்கும், அது நமக்குத் துல்லியமான தகவல்களைக் கொடுக்கும். அதேசமயம், இது அனைத்து பகுதிகளிலும் வாங்குமளவிற்கு விலை குறைவாகவும் இருக்கவேண்டும். அதற்கும் தகுந்தவாறு ஏற்பாடு செய்தார் லெடெஸி.
இத்தகைய சென்சார்களை யானைகளின்மீது பொருத்தும்போது அது உறுதியானதாக இருக்கவேண்டும். ஏனெனில், யானைகள் தொழில்நுட்பத்தை மென்மையாகக் கையாளாது. அவை நீரில் நீந்தும், சேற்றில் புரளும், மரங்களில் மோதும், உடைக்கும். யானைகள் மிகக் கடினமானது. அப்படியான எந்தவிதத் தாக்குதல்களையும் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் உறுதியானதாக இருக்கவேண்டும்.
இந்த வைப்பர் (WIPER- Wireless anti-Poaching for Elephants and Rhinos) முதலில் யானைகளில்தான் சோதிக்கப்படுகிறது. காண்டாமிருகங்களின் மண்டையோடு மிகச் சிக்கலானது. இப்போதே அவற்றின் உடலில் ஜி.பி.எஸ் வசதிகளைப் பொறுத்த வழியில்லாததால் கொம்புகளில் துளையிட்டுப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்குத் தகுந்தவாறான சற்றே பெரிய டிராக்கிங் காலர்களை உருவாக்கவேண்டும். அதற்குமுன் யானைகளிடம் பரிசோதித்துப் பார்த்துவிட்டுத் தயாரித்துக் கொள்ளலாம் என்று விலங்கியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
வைப்பர்கள் துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டுகளின் அதிர்வலைகளைச் சென்சார் மூலமாக உணர்ந்து எச்சரிக்கக்கூடிய திறன்கொண்டவை. தற்போதிருக்கும் ஷாட் ஷூட்டர்களில் பல மைக்ரோஃபோன்களைக் கொண்ட தொகுப்பாக இருக்கும். ஆனால், வைப்பர்களில் ஒரேயொரு மைக்ரோஃபோன் அந்த வேலையைச் செய்யும். அது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தை நாம் தெரிந்துகொள்ள வைக்கும். அதாவது யானை வேட்டையாடப்படும் இடத்தை. வைப்பர்கள் இருக்குமிடத்திலிருந்து 50மீட்டர் சுற்றளவுவரை நடப்பதை நம்மால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், யானை வேட்டையாடப் படுவதைத் தடுக்கமுடியாது. வேட்டையாடிவிட்டுக் குற்றவாளிகள் தப்பிக்கும்முன் சுற்றிவளைத்துப் பிடிக்க உதவும். அதன்மூலம் மேற்கொண்டு வேட்டை நடக்காமல் தடுக்கலாம். இதற்காக ஜி.எஸ்.எம் என்ற பேட்டரியையும், இரிடியம் என்ற செயற்கைக்கோள் தொடர்புச் சாதனத்தையும் பயன்படுத்தியுள்ளார்கள். துப்பாக்கிச்சூடு நடந்த இரண்டு நிமிடங்களுக்குள் தெரிந்துகொண்டு செயல்பட வைப்பர்கள் வனத்துறையை எச்சரிக்கும். வேட்டைக்காரர்கள் டிராக்கிங் காலரைக் கவனிக்காதவரை அவர்கள் கொண்டுசெல்லும் யானையின் மூலமாக இருப்பிடத்தையும் ஜி.பி.எஸ் மூலமாகத் தெரிந்துகொண்டே செயல்படலாம். இதன் விலை அதிகபட்சம் 100 டாலர்களுக்குள் தான் என்பதால் இவற்றைப் பொருத்துவதில் அதிக சிரமம் இருக்கப்போவதில்லை.
இவ்வருடத்தின் கோடைக்காலத்தில் இதை சான் டியாகோ காப்பிடத்திலிருக்கும் யானைகளிடம் பரிசோதையைத் தொடங்கினார்கள். அங்கு துப்பாக்கிச் சூடுகள் இல்லைதான். இருந்தாலும் அச்சாதனம் சுற்றியிருக்கும் ஓசைகளைப் பதிவு செய்வதை வைத்து அவற்றின் திறனையும் குறைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஓசைகளைத் தரம் பிரிக்கும் ஆற்றலோடு செயல்படுவதாகப் பதிவுசெய்துள்ளது நம்பிக்கையளித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக வனத்தில் வாழும் ஒன்றிரண்டு யானைகளில் பொருத்தியுள்ளார்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு நடக்கவிருக்கும் இந்த ஆய்வு முடிவில் கிடைக்கும் தரவுகளை வைத்துக் குறைகளை நிவர்த்திசெய்து ஆப்பிரிக்காவின் அனைத்து யானைகளின்மீதும் அதைப் பொருத்துவார்கள்.
இரும்புக் கவசங்களின் மூலமாகச் சாதனத்தை மூடியுள்ளார்கள். யானைகளுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாது. அவற்றின் கடுமையான பயன்பாடுகளில் வைப்பர்கள் சேதமடையாமல் இருக்கவும், சேதமடைந்தாலும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றைத் தயாரிக்கவும் முயல்கிறார்கள்.
Photo Courtesy: Kurt Bundy
கொலை செய்வதில் மனிதர்களுக்கு நிகர் யாருமே இல்லை. அதில் பல்வேறு நுட்பங்களைச் சிந்தித்துச் சாதித்துக் கொண்டுமிருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் பாதுகாப்பு வசதியும் முன்னேற்றமடைய வேண்டியது முக்கியமல்லவா!