Published:Updated:

சாஸ்தான் கோயிலும் வாவுபலி பொருள்காட்சியும்!

என் ஊர்!

சாஸ்தான் கோயிலும் வாவுபலி பொருள்காட்சியும்!

என் ஊர்!

Published:Updated:
சாஸ்தான் கோயிலும் வாவுபலி பொருள்காட்சியும்!
##~##

மிழகக் காவல் துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, தான் பிறந்து வளர்ந்த குழித்துறை குறித்து இங்கே மனம் திறக்கிறார்...

''குழித்துறை... தமிழக-கேரள எல்லையோரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஊர். ஊருக்கு மேற்கே ஐந்து

கி.மீ. போனால் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை. வடக்கே ஐந்து கி.மீ. போனால் அடர்ந்த காடு. இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்னு நீர் நிலைகள் நிறைந்த செழிப்பான பகுதி. மத்த கிராமங்களில் வெளியே தண்ணீரை பம்ப் மூலமா இறைச்சு வயலுக்குள்ள விடுவாங்க. எங்க ஊர்ல வயல்ல இருக்கிற தண்ணிய பம்ப் மூலமா இறைச்சு வெளியே விடுவாங்க. அந்த அளவுக்குச் செழிப்பா இருக்கும். குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். 1845-ல் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாதான், இந்தப் பள்ளிக்கூடத்தைத் திறந்து வெச்சாரு. அப்போ இங்கே மலையாளிகள் நிறையப் பேர் படிச்சு இருக்காங்க. அதனால அப்போ இதை 'மலையாம் பள்ளி’னு சொல்வாங்க. எங்க அப்பா படிக்கும்போது மலையாளத்தில் பாடம் நடத்தியிருக்காங்க. நான் படிக்கும்போது தமிழ் வந்துடுச்சு.

சாஸ்தான் கோயிலும் வாவுபலி பொருள்காட்சியும்!

ஊரில் பெரிய விளையாட்டு மைதானம் இல்லாதக் குறையைப் போக்கினது தாமிரபரணி ஆறுதான். தினமும் ஆத்துக்குக் குளிக்கப் போயிடுவேன். எங்க வீட்டுல சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. ஒருநாள் பொருள் வாங்கக் கொடுத்த பணத்துல 'தொடுவட்டி’ங்கிற ஊருக்குப் போய் சினிமா பார்த்தேன். படம் முடிஞ்சு வீட்டுக்குப் போனா, கதவு திறந்தே இருந்துச்சு. நான் நுழைஞ்சதும் படக்னு சாத்துன கதவையும் வாங்கின அடியையும் எப்பவும் மறக்க முடியாது. சினிமா பார்க்கிறதை அதோட மறந்துட்டேன். அதன் பலனா ப்ளஸ் டூ-வில் பள்ளிக்கூடத்திலேயே முதலிடம் வாங்கினேன். அந்தக் காலத்தில் எங்க ஊரில் களரி, அடிமுறை, வர்மம்னு தற்காப்புக் கலைகள் கத்துக்கிட்டவங்க நிறையப் பேர் இருந்தாங்க. வீட்டுக்குத் தெரியாமல் ராத்திரியில் ஒளிஞ்சு ஒளிஞ்சு 'கொச்சத்தி  வாத்தியார்’கிட்ட களரி படிச்சேன்.

வெடி வழிபாடுதான் சாஸ்தான் கோயிலோட ஸ்பெஷல். இந்தக் கோயிலில் பங்குனி உத்திரம் ரொம்ப விசேஷம். அன்னிக்குக் கேரளா திருவிழா மாதிரி கதகளி நடக்கும். அதே மாதிரி ஊர்ல வருஷா வருஷம் ஆடி மாசம் நடக்கும் வாவுபலி பொருள்காட்சி ரொம்பவும் விசேஷம்.  

தமிழ் நாட்டில் விவசாயத்துக்குன்னே ஒரு திருவிழா நடக்குதுன்னா அது எங்க ஊரில் மட்டும்தான். இந்த விழாவுக்கு ஆடி அமாவாசை அன்னிக்கு ஆத்தங்கரையில் இறந்துபோன முன்னோர்களின் நினைவாக செடி நடுவாங்க. உலகத்துக்கே சுற்றுச் சூழல் குறித்த விழிப்பு உணர்வு எங்க ஊரில் இருந்து ஆரம்பிச்சதா நாங்க பெருமையாச் சொல்லுவோம்.

ரமேஷ் பாபு, சாந்த குமார், ஆனந்தலால், மரியதாஸ், சந்திரபாபு இவங்கதான் என் சின்ன வயது நண்பர்கள். ரமேஷ் பாபு என்னை விட அதிகமா உயரம் தாண்டுவான். சாந்தகுமார் கபடியில் கில்லி. மரியதாஸ் பிரமாதமா சண்டை போடுவான். சந்திரபாபு நிறைய வெயிட் தூக்குவான். அவங்க ஒவ்வொருத்தரும் என்னை மாதிரி பெரிய பதவியில் வந்திருக்க வேண்டியவங்க. ஆனா, உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காம நின்னுட்டாங்க. அதனால்தான் திறமையான இளைஞர்களைப் பார்க்கிறபோது, 'நல்லா படிங்க’னு  சொல்வேன். என்னைப் படிக்கவெச்ச குழித்துறைக்கு நன்றி!''   

  • எங்காவது மலையைப் பார்த்துவிட்டால் உடனே அதன் மேல் ஏறத் தொடங்கிவிடுவார் சைலேந்திர பாபு. 'அதன் மறுபக்கம் என்ன இருக்கிறது’ என்று தெரிந்துகொண்டால்தான் இவருக்கு நிம்மதி!
  •  
  • உணவு விஷயத்தில் சார் செம ஸ்ட்ரிக்ட். காய்கறிகளும், பழங்களும் மட்டுமேதான் தினசரி இரவு உணவு!
     
  • வெளியூர்ப் பயணம் என்றால் சுய முன்னேற்றப் புத்தகம் ஒன்றைக் கையோடு எடுத்துச் செல்வது இவருடைய வழக்கம்!

-என்.சுவாமிநாதன் 
படங்கள்: ரா.ராம்குமார்