Published:Updated:

உறவுகளுக்காக ஒருநாள்… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காஞ்சிபுரம் ஒன்று கூடல் விழா! 

உறவுகளுக்காக ஒருநாள்… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காஞ்சிபுரம் ஒன்று கூடல் விழா! 
உறவுகளுக்காக ஒருநாள்… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காஞ்சிபுரம் ஒன்று கூடல் விழா! 

வாழ்க்கைமுறை, நெருங்கிய உறவுகளை அதிவேகமாகச் சிதைத்துவிடுகிறது. தொழில்ரீதியாக ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதால் தந்தை ஓர் இடம் மகன் ஓர் இடம் என வாழவேண்டியிருக்கிறது. இதனால் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறையே சிதைந்துபோய், உறவுகள் என்பதே ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில்கூட எல்லோரையும் ஒருசேரப் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது.

மறைந்த தர்மலிங்கம் என்பவரின் வாரிசுகள், பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். தங்கள் பரம்பரையினரை ஒன்றுசேர்க்கும்விதமாக இவர்கள் அனைவரும் சேர்ந்து `ஒன்றுகூடல் விழா’வை காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தினார்கள். 

காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலிருந்தே தங்கள் குடும்ப உறவினர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். ஒருவரையொருவர் கட்டித்தழுவி நலம் விசாரித்துக்கொண்டார்கள். இந்த விழா வெறும் ஒன்றுகூடலாக மட்டுமே இருக்கக் கூடாது என்பதற்காக, பெயர் பதிவுசெய்தல், சிற்றுண்டி, குத்துவிளக்கு ஏற்றுதல், இறைவணக்கம், வரவேற்புரை, விழாவின் நோக்கம், அனுபவப் பகிர்வு எனப் பல தொடர் நிகழ்வுகள் அன்று அவர்களை ஆச்சர்யப்படுத்தின. 

இந்த விழாவை ஏற்பாடு செய்த புரிசை நடராஜன், ``எங்க தாத்தா தர்மலிங்கம் என்பவரின் முதல் மனைவிக்கு ஆறு பெண்கள். முதல் மனைவி இறந்தபோது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் ஒன்பது வாரிசுகள் இருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கிறார்கள். முதல் தாரத்துக்குப் பிறந்த கடைசிப் பெண்ணுக்கு 87 வயதாகிறது. தற்போதைய பரபரப்பான சூழலில், உறவுமுறைகள் எல்லாம் இளைய தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன என்ற வருத்தம் எனக்குள் இருந்தது. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என நினைத்து எங்கள் குடும்பங்களைக் கணக்குப்போட்டுப்பார்த்தோம். மொத்தம் உள்ள 28 குடும்பங்களில் 230 பேர் இருக்கிறார்கள் என்பதே அப்போதுதான் தெரிந்தது. எல்லோரையும் ஒருநாள் ஒன்றிணைத்து விழா எடுக்க முயன்றோம். 

மொத்தம் உள்ள 230 பேரில், 175 பேர் விழாவுக்கு வந்திருந்தார்கள். ஒரு சிலரால் அன்று வர இயலவில்லை. விழாவின்போது எங்கள் குடும்பத்தில் தற்போது உயிருடன் இல்லாதவர்களின் படங்களை வைத்து, திறப்பு விழா செய்தோம். பிறகு, அந்த 9 குடும்பங்கள் பற்றி அறிமுகம் செய்து, அவர்களின் பிள்ளைகள் யார் என்பது குறித்தும், தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாகப் பேசினோம்.

9 குடும்பங்கள் பற்றி ஒரு சார்ட் போட்டு `விழா மலர்' ஒன்றையும் வெளியிட்டோம். அதில் எல்லோருடைய தொடர்பு எண்கள், முகவரி ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறோம். எல்லோருக்கும் ஒரு நினைவுப் பரிசு வழங்கினோம். அனுபவப் பகிர்வு என ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசினார்கள். பெரியவர்கள், தங்களது அனுபவங்களையும் வளர்ந்த விதங்களையும் குடும்பத்தினருக்கு எடுத்துச் சொன்னார்கள்.

குழந்தைகளுக்காக யோகா, ஓவியப் போட்டி, கலை நிகழ்ச்சி ஆகியவை நடத்தினோம். இந்த விழா, இத்துடன் நின்றுவிடக் கூடாது. வருடம்தோறும் நடக்க வேண்டும் என்பதற்காக, அனைத்துக் குடும்பங்களிலிருந்தும் 13 பேரை ஒரு குழுவாக நியமித்திருக்கிறோம். அவர்கள் இந்த விழாவை அடுத்தடுத்து கொண்டுசெல்வார்கள். மே 1-ம் தேதி உலகம் முழுவதும் விடுமுறை என்பதால், அடுத்த வருடமும் இந்த விழா நடத்தவுள்ளோம்” என்கிறார். 

அடுத்து பேசிய அருள்பிரகாசம், ``மூன்று மாதத்துக்கு முன்பே இந்த விழா குறித்து திட்டமிட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தனித்தனியாகப் பேசினோம். சிலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களிடமும் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசினோம். நிகழ்ச்சி நடந்த அன்று குழந்தைகள் சில நிமிடத்தில் அடுத்த குழந்தைகளோடு சேர்ந்து பழகி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருசிலர் தானாகவே முன்வந்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். எங்க குடும்பங்களில் இருக்கும் பெண்களின் திறமைகள், எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு இருந்தன. பால்ய வயது சம்பவங்கள் எல்லாம், மற்றவர்கள் பேசப் பேச நினைவுக்கு வந்தன” என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய அருணா, ``எங்க அம்மாவோட கசின் சிஸ்டர் அன்றைக்குத்தான் எனக்கு அறிமுகம் ஆனாங்க. இதுக்கு முன்னாடி அவங்க யார்னு எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிஞ்ச மறுநாளே என் பிறந்த நாளை தெரிஞ்சுக்கிட்டு வாழ்த்து தெரிவிச்சாங்க. வாட்ஸ் அப் குழு மூலமா நாங்கள் எங்க உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம். பழைய உறவுளோடு புதிய பிணைப்பு ஆனந்தமாக இருக்கிறது” என்கிறார். 

உறவுகளுக்குள் புதிய பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது `ஒன்றுகூடல் விழா'!