Published:Updated:

அரசுப் பள்ளிகளில் KG வகுப்புகள்... ஆர்வமாக முன்வந்த ஜி.வி.பிரகாஷ்!

அரசுப் பள்ளிகளில் KG வகுப்புகள்... ஆர்வமாக முன்வந்த ஜி.வி.பிரகாஷ்!
அரசுப் பள்ளிகளில் KG வகுப்புகள்... ஆர்வமாக முன்வந்த ஜி.வி.பிரகாஷ்!

அரசுப் பள்ளிகளில் KG வகுப்புகள்... ஆர்வமாக முன்வந்த ஜி.வி.பிரகாஷ்!

"தமிழ்நாட்டில் அரசுத் தொடக்கப் பள்ளிகள் பல மூடப்படுவதைத் தடுக்காவிட்டால், அடுத்த ஐந்து வருடத்தில் ஏழைகளுக்கு இலவசக் கல்வியே இல்லாமல் போய்விடும்" என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருந்த உணர்வுபூர்வமான வீடியோ, செம வைரல். பள்ளி ஆசிரியர்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்யப்பட்டு, பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. அந்த வீடியோவில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருவதைத் தடுக்க, கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், சென்னையின் ஒரு பள்ளியில் தொடங்கப்போகும் வகுப்புக்கான ஆசிரியர் சம்பளத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆலோசனை வழங்கியதாக, லாவண்யா அழகேசன் மற்றும் குணசேகரன் ஆகியோருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவர்களில் குணசேகரனிடம் இந்தத் திட்டம் குறித்துப் பேசினேன்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

"டெல்லியில் ஐ.டி பணியில் இருக்கிறேன். சமூகத்தில் நல்ல மாற்றங்கள் நடக்க என்னால் முடிந்த விஷயங்களைச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, உடனிருந்து உதவிகள் செய்தேன். அப்போது, பலரின் நட்பு கிடைத்தது. அப்படித்தான் `பசங்க' இயக்குநர் பாண்டிராஜ் சாரின் நட்பும் கிடைத்தது. அவர்தான், ஜி.வி.பிரகாஷிடம் என்னை அறிமுகப்படுத்தினார். `நல்ல விஷயம், திட்டம் இருந்தால் சொல்லுங்க, நான் செய்யறேன்' என்றார். அது சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை; சமூகத்தின் மீதான அக்கறையில் சொன்னது எனத் தெரிந்தது. இது தொடர்பாக, நண்பர் லாவண்யாவிடம் பேசினேன்.

அமெரிக்காவில், தனியார் நிறுவனம் ஒன்றில் லாவண்யா பணியாற்றுகிறார். அங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால், உடனடியாகக் களத்தில் இறங்கி உதவுபவர். குறிப்பாக, வெளிநாடுகளில் இறந்துபோன தமிழர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவது கஷ்டமான விஷயம். அதற்கான உதவிகளைச் செய்துவருவார். அவர்தான் ஜி.வி.பிரகாஷ் செய்ய விரும்பும் உதவியை அரசுப் பள்ளிகளுக்குப் பயன்படுத்த கேட்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார். தமிழ்நாட்டில் மூடப்படும் நிலையில் உள்ள தொடக்கப் பள்ளிகள் குறித்து, நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தவற்றைப் பகிர்ந்துகொண்டார். மிகக்குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க, கே.ஜி வகுப்புகள் தொடங்குவது தீர்வுகளில் ஒன்றாக இருக்கும் என வலியுறுத்தினார்.

நாங்கள் பேசியவற்றை ஜி.வி.பிரகாஷிடம் சொன்னேன். சென்னையின் ஒரு பள்ளியில் அதை அமைப்பதற்கு ஆர்வமாக இருப்பவர் பற்றிய தகவல்களையும் தெரிவித்தேன். இதைக் கேட்டதும் அடுத்த நாளே அந்தப் பள்ளிக்குச் சென்று, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ஜி.வி.பிரகாஷ். கே.ஜி வகுப்பை நடத்தும் ஆசிரியருக்கான ஒரு வருடத்துக்கான சம்பளத்தை வழங்குவதாகவும் கூறியிருந்தார். மாணவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோவும், அவரின் வீடியோவும் நாங்கள் நினைத்ததைவிட வேகமாகப் பரவியுள்ளன. அதனால், பலரும் இந்தத் திட்டத்தில் உதவ முன்வந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க, மாணவர்கள் சேர்க்கை குறைவான தொடக்கப் பள்ளிகளைக் கண்டறிந்து, கே.ஜி வகுப்புகளை ஆரம்பிக்கத் திட்டமிடுகிறோம். ஆர்வமாக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளிலேயே இது சாத்தியம். அப்போதுதான் இதன் சரியான பலனைக் கவனிக்க முடியும். சில அரசுப் பள்ளிகளில் நாங்கள் செய்த உதவிகளை சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற அனுபவத்திலிருந்து இதைக் கற்றுக்கொண்டோம். அதற்கான ஆசிரியர்களைத் தேடித் தேடிச் சேகரிக்கிறோம். `இதைச் செயல்படுத்தும்போதெல்லாம் அந்தப் பள்ளிகளுக்கு நானே வருகிறேன். அதன்மூலம் பலரும் முன்வரக்கூடும்' என்றும் ஜி.வி.பிரகாஷ் சொல்லியிருக்கிறார். அவரின் ஆர்வமும் உற்சாகமான வார்த்தைகளும் எங்கள் பணிகளின் வேகத்தை முடுக்கிவிட்டுள்ளன" என உற்சாகத்துடன் சொன்னார் குணசேகரன்.

இதற்கு முன்பு, ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து விருதுநகர் அருகே தைலாபுரம் அரசுப் பள்ளியில் கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக, திருச்சி, லால்குடி, பூவாளூர் அரசுப் பள்ளியிலும் கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறதாம்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக, சமூக ஆர்வலர் கிருபாகரன் ஸ்ரீநிவாஸிடம் பேசியபோது...

``எல்லோருக்குமே தாய்மொழிக் கல்வி ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்கு அடிப்படையைச் சொல்லிக்கொடுக்கும்போது அது தாய்மொழில சொல்லிக்கொடுத்தா நிச்சயம் மனசுல பதியும். ஆனா, அரசுப் பள்ளிகள்ல LKG, UKG-லாம் இல்லை. ஒன்றாம் வகுப்புல இருந்துதான் ஆரம்பிக்குது. அங்கன்வாடிகள் இருந்தாலும், அங்க எழுத்துப் பயிற்சி இருக்காது. எந்த விஷயமும் புரிஞ்சு படிச்சா நிச்சயம் மறக்காது. அது கண்டிப்பா தாய்மொழிக் கல்வி மூலம்தான் முடியும். இந்த அடிப்படையை அரசுப் பள்ளிகள்ல சொல்லிக்கொடுத்தா, அடுத்த தலைமுறைக்கு நல்ல அடித்தளமா இருக்கும்.

இப்போ, பலபேர் தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்குறாங்க. போதுமான மாணவர்கள் இல்லாததால, சுமார் 800 அரசுப் பள்ளிகள் ரேஷன் கடைகளாகவும், மற்ற அரசு சம்பந்தமான அலுவலகமாவும் மாறியிருக்கு. இப்படியே போச்சுன்னா, அஞ்சு வருஷத்துல ஏழ்மைநிலையில இருக்கிறவங்களுக்குச் சுத்தமா கல்வி இல்லாமப்போயிடும். இது ஆரோக்கியமானதில்லை. அரசுப் பள்ளிகள்ல LKG, UKG ஆரம்பிச்சா, நிறைய பேரு வந்து சேருவாங்கனு நம்பிக்கை இருக்கு. எத்தனையோ பேர் அரசுப் பள்ளிகள்ல படிச்சுட்டு, ரொம்ப நல்ல நிலைமையில இருக்காங்க. அரசுப் பள்ளிகளால தரமான கல்வியைக் கொடுக்க முடியும்கிற நம்பிக்கையை இது விதைக்கும்."

``தமிழ்நாட்டில் அரசுக் கல்வி நிலவரம் தற்போது எப்படி இருக்கிறது?"

``கொஞ்ச நாள் முன்னாடி, விழுப்புரம் பக்கம் போயிருந்தேன். அப்போ அங்க இருக்கிற சில மாணவர்களிடம் பேசினேன். அடிப்படைக் கணக்குக்கூட தெரியாம இருந்தாங்க. ஆங்கிலம் தெரியலை. இதுக்குலாம் யாரை குறை சொல்றது? நாங்க எதிர்பார்க்கிறதெல்லாம் அடிப்படையான ABCD தெரிஞ்சுக்கிட்டாகூட போதும். அதுவே, சரியா பசங்களுக்குப் புரியலைன்னா நம்ம சிஸ்டம்லதான் தப்பு இருக்கு."

இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், ஆடு மேய்க்கிறவரோட 22 வயசுப் பையன் UPSC க்ளியர் செஞ்சு, இப்போ நல்ல நிலையில இருக்காரு. அவரோட அடிப்படைக் கல்வி தமிழ்மொழிதான். இதுபோல நிறைய திறமைசாலிகள் இருக்காங்க. ஆனா, அவங்களை சரியான பாதையில கொண்டுபோகதான் ஆள் இல்லை. ஆசிரியர்கள் அவங்களோட பொறுப்பு என்னன்னு புரிஞ்சி வேலைசெய்யணும். அவங்கதான் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியா இருக்கணும். ஆனா, அவங்களுக்கே பொறுப்பில்லைன்னா என்ன செய்ய முடியும்? இவங்களை கண்காணிக்கிற அரசும் பெருசா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இந்த நிலைமை தொடர்ந்தா தமிழ்வழிக் கல்வி நிச்சயம் அழிஞ்சுடும்."

``இதில் ஜி.வி.பிரகாஷ் இணைப்பு எப்படி?"

'`அறப்போர் அரசுசாரா இயக்கத்துல நானும் உறுப்பினர். அரசுப் பள்ளிகள்ல KG வகுப்புகள் கொண்டுவரணும்னு எங்களை ஊக்கப்படுத்தியது குணசேகரன், புண்ணியமூர்த்தி அண்ணாதான். இந்தத் தகவல் அமெரிக்காவாழ் தமிழர் லாவண்யா வரைக்கும் போச்சு. அவங்கதான் ஜி.வி.பிரகாஷ் சாரை காண்டாக்ட் பண்ணாங்க. இப்போ, சென்னை புழுதிவாக்கத்துல இருக்கிற அரசுப் பள்ளியில, KG வகுப்பு ஆசிரியருக்கு ஒரு வருடச் சம்பளத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார். இதுபோல ஒவ்வொரு ஊர்ல இருக்கிற தொடக்கப் பள்ளிக்கு ஆதரவா இளைஞர்கள், வெளிநாடுகள்ல வாழுற இந்தியர்கள் செயல்பட்டா, நிச்சயம் நல்ல மாற்றம் உருவாகும். உங்க ஊர்ல இருக்கிற அரசுப் பள்ளியைப் போய்ப் பாருங்க. அங்க இருக்கிற குறைகளைத் தீர்க்க என்ன பண்ணலாம்னு யோசிங்க. எல்லார்கிட்டயும் பகிருங்க. வருங்கால தலைமுறைகளோட அடிப்படைக் கல்வி வலிமையானதா மாத்தணும்" என்கிறார் கிருபாகரன்.

அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுக்கும் செயல்களைக் கரம் கோத்து வரவேற்போம்! 

அடுத்த கட்டுரைக்கு