Published:Updated:

தற்கொலைக்குக் காரணம் தனிநபரா, சமூகமா? - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள்! #WSPD2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தற்கொலைக்குக் காரணம் தனிநபரா, சமூகமா? - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள்! #WSPD2018
தற்கொலைக்குக் காரணம் தனிநபரா, சமூகமா? - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள்! #WSPD2018

“தற்கொலைத் தடுப்பில் தீர்வை நோக்கிய பயணம் என்று பார்த்தால், தற்கொலை முடிவு ஒரு கோழைத்தனமான செயல் என்று தனி நபரைக் குற்றப்படுத்துவது அறியாமையின் வெளிப்பாடாகும். பாதிக்கப்பட்டவரின் தனிநபர்சார்ந்த சிக்கலாக மட்டுமே இதை அணுகுவது சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லகமயம் ஆகிவிட்ட வாழ்க்கை நெருக்கடியில், தற்கொலையால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவது கவலைகொள்ளவைக்கிறது. 

உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; அதாவது சராசரியாக ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலையால் இறந்துபோகிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) புள்ளிவிவரம்.  

உலகளாவிய மரணங்களில் 1.4 சதவிகிதம் தற்கொலைச் சாவுகளாக உள்ளன; 2016-ம் ஆண்டின் கணக்குப்படி, உயிரிழப்புகளுக்கான காரணங்களில் 18 வது இடத்தைத் தற்கொலை பிடித்துள்ளது. அதிக வருவாய் உள்ள நாடுகளை ஒப்பிட, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்தான் அதிக அளவு (79 சதவிகிதம்) தற்கொலைகள் நிகழ்கின்றன. 

2013 மே மாதம் ஜெனீவாவில் 194 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற 66 வது உலக சுகாதாரப் பேரவையில், தற்கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. 2020-க்குள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் அளவு குறைப்பது என்று அதில் தீர்மானிக்கப்பட்டது. 

தற்கொலைத் தடுப்பு ஓவியம் - மரு.ரிஸ்வானா, முதுநிலை மனநல மருத்துவ மாணவி, அ.ம.கா., சென்னை 

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் நாளன்று உலக தற்கொலைத் தடுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தற்கொலைத் தடுப்பு நாளில், ‘அனைவரும் இணைந்து தற்கொலையைத் தடுப்போம்’ எனும் மையப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் பாதிக்கப்பட்டவர், மருத்துவர்கள், அரசுத் தரப்பினர், உளநல சமூகப் பணியாளர்கள், குடும்பத்தினர், உற்றார், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை 2000-மாவது ஆண்டில் இருந்ததைவிட, 2015-ல் 23 சதவிகிதம் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. 2000-மாவது ஆண்டில் 1,08,593 ஆக இருந்த தற்கொலை எண்ணிக்கை, 2015-ல் 1,33,623 ஆக அதிகரித்தது என்கிறது தேசிய சுகாதார அறிக்கை 2018. 

2015-ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் 12.7 சதவிகிதம் (16,970) பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதற்கடுத்து தமிழ்நாட்டில் 11.8 சதவிகிதம் (15,777) பேர், மேற்குவங்கத்தில் 10.9 சதவிகிதம் (14,602) பேர், கர்நாடகத்தில் 8.1 சதவிகிதம் (10,783) பேர், மத்தியப்பிரதேசத்தில் 7.7 சதவிகிதம் (10,293) பேர் எனத் தற்கொலைப் பட்டியல் தொடர்கிறது. தற்கொலைக்கான காரணங்கள் குறித்து மனநல மருத்துவத் துறையில் உலக அளவில் ஆய்வுபூர்வமாகத் தீவிர விவாதம் நடந்துவருகிறது. வறுமை, வேலையின்மை, காதல் தோல்வி, நலக்குறைவு, குடும்பப் பிரச்னை ஆகியவை உட்பட 21 காரணங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

மனநல வல்லுநர் எமில் டர்க்கிம்மின் வரையறைப்படி, சமூகத்துக்காக அதீத பற்றோடு தற்கொலைசெய்துகொள்வது (Altruistic suicide), காதல் தோல்வி போன்ற தனிப்பட்ட பிரச்னைகளால் தற்கொலை செய்துகொள்வது (Egoistic suicide), சமூகப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வது (Anomic suicide) என முக்கியமாகப் பிரிக்கிறார்கள். 

இதில், பெரும்பாலான தற்கொலைகள், சமூகத்திலிருந்து தனிமைப்படுவதால் நிகழ்கின்றன எனக் கணிசமானவர்களும், `இல்லையில்லை, சமூகப் பிரச்னைகளால் அவற்றைச் சமாளிக்கமுடியாததால் நடக்கிறது’ எனச் சமூக மனநல வல்லுநர்களும் கருத்துகளை முன்வைக்கிறார்கள். இதில் இரண்டாம் தரப்பினரின் குரல் அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெற்றுவருகிறது. 

தற்கொலை செய்துகொள்வோரில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர். 2000-மாவது ஆண்டில் தற்கொலையான ஆண்களின் எண்ணிக்கை 66,032 ஆக இருந்தது; அதுவே 2015-ல் 91,528 ஆக அதிகரித்தது. ஆனாலும் தற்கொலை முயற்சியைப் பொறுத்தவரை பெண்களே அதிக அளவில் இருக்கின்றனர் என்பது மருத்துவமனை தரப்புகளின் தகவல். 

``பெண்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட காரணங்களைவிட, சமூக-பண்பாட்டு-மதரீதியான காரணங்களே அதிக அளவில் தற்கொலையைத் தூண்டுகின்றன. மனநோய், குழந்தையின்மை ஆகியவற்றுடன், முன்கூட்டியே திருமணம் ஆவது, முன்கூட்டியே தாய் ஆவது, பொருளாதாரத்துக்காகக் கணவரை, குடும்பத்தைச் சார்ந்திருப்பது, பணப்பிரச்னை, படித்தும் வேலைக்குப் போக முடியாமல் இருக்கிறோமே எனும் ஆற்றாமை, அதனால் வரும் தாழ்வு மனப்பான்மை, ஆண்களைப்போல பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிகள் மறுக்கப்படுவது, உடல்ரீதியாக- பேச்சின்மூலமாக- உணர்வுரீதியாக- பாலியலாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, குடும்ப வன்முறை, சிறுவயதில் பாலினத் துன்புறுத்தலுக்கு ஆளானது, வரதட்சணை, ஆண்பிள்ளை பிறக்காமை, மதரீதியான தடைகள், வறுமை, பசி, சமத்துவமின்மை ஆகிய காரணங்களும் பெண்களின் தற்கொலையைத் தூண்டுகின்றன” என்கிறார் அரசு மனநல மருத்துவர் அபிராமி. 

மேலும், ``குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படுவோரில் 64 சதவிகிதம் பேருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிப்பு நிறுத்தப்பட்டு, வேலைக்குப் போகாமல் முடங்கும் பெண்களுக்கு சமூகத்துடனான உறவாடல் குறைந்து, சமூகக் கல்வி குறைந்துபோகிறது. சமூக அணுகலுக்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுவதால், சமாளித்து நிற்கக்கூடிய மனப்பான்மை வலுவாக இல்லாமல் போய்விடுகிறது. திருமணமான பெண்களின் தற்கொலைகளுக்குப் பின்னால் கணவர்களின் போதை முக்கியமான அம்சமாக இருக்கிறது. பலருக்கு வெறும் குடி மட்டும்கூட பிரச்னையாக இருப்பதில்லை. போதைக்காக நகையை விற்பது, பொது இடங்களில் விழுந்துகிடப்பது, குழந்தைகளைப் பாடாய்படுத்துவது போன்ற குடிசார் பிரச்னைகளும் முன்னிற்கின்றன. கணிசமான காதல் கணவர்கள், திருமணத்துக்குப் பின்னர் புதிதாகக் குடிப்பதும் பிரச்னையாக இருக்கிறது. பெண்களின் தற்கொலைகளைத் தடுப்பதில் கல்வி (Education), பொருளாதாரம் (Economics), அதிகாரமளிப்பு (Empowerment), சமூக சமத்துவம் (Equality) ஆகியவை பெரிய அளவில் பயனளிப்பதாக இருக்கும்” என்றும் கூறுகிறார், மனநல மருத்துவர் அபிராமி. 

உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இளைய வயதினரின் தற்கொலை மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. குறிப்பாக, பள்ளிக் காலத்திலேயே மாணவர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்வது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகிவிட்டது. நீட் அனிதா போன்ற சமூகக் காரணங்களுக்கான தற்கொலைகளை இதில் சேர்க்க முடியாது எனும் மனநல வல்லுநர்கள், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் இதில் முக்கிய காரணியாக இருக்கிறது என்கிறார்கள். 

அரசுக் கல்லூரி மனநலத்துறைப் பேராசிரியரான மரு.குருமூர்த்தியிடம் இது குறித்துக் கேட்டதற்கு,

“இந்தியாவில் தாராளமயக் கொள்கை வந்தபிறகு, விற்று வணிகமாக்க வேண்டிய சரக்காகக் கல்வி மாறிவிட்டது. கல்வியில் அரசு தனது பொறுப்பைக் கைகழுவி 30 ஆண்டுகளாகத் தனியாரின் கைகளுக்கு மாற்றிவிட்டுவிட்டது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில் சமூகத்தின் வளங்களை அனுபவிப்பதற்கு கல்வியானது முக்கியத் தேவையாக இருப்பதால், தனியார் துறையானது கல்வியை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பார்க்கிறது. பொதுக் கல்விக்கான நிதி குறைப்பு, அரசுப் பள்ளிகளை மூடுதல், மாணவர்களை ஆறாம் நிலையிலேயே பிரித்து படிநிலைப்படுத்துதல், பள்ளி அளவில் வெவ்வேறு பாடத்திட்டங்கள், தொழிற்கல்விக்கு தேசிய நுழைவுத்தேர்வு போன்ற பல நடைமுறைகள் மூலமாக, தனியார் துறையின் விருப்பம் நிறைவேறிவருகிறது. இதனால், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் கடுமையான உடல் மற்றும் மன நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். இன்னொரு பக்கம், மாணவர்களை தனிநபர்மைய (Individualism) சிந்தனையில் நம்பிக்கை கொள்ளுமாறு சமூகம் தயார்செய்கிறது. ’உன்னால் முடியும் , நீ மட்டுமே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறாய்’ என்பதன் மூலமாக, சமூக, பொருளாதாரக் காரணிகள் தோதாக மறைக்கப்படுகின்றன.

தன் முயற்சியையும் மீறி தோல்விகள் ஏற்படக்கூடும் என்கிற பார்வையும் புறவயமான (objective) புரிந்துகொள்ளலும் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர். புறச்சூழலுக்கு முரணாக அதீதமான இலக்குகளுடன் (high aspiration) வளரும் மாணவர்கள், குறிப்பாக கீழ் மற்றும் மத்திய நடுத்தட்டுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள், இந்தக் குறிப்பிட்ட காரணிகளால் தற்கொலையைத் தீர்வாகக் கருதுகின்றனர். மாணவர் தற்கொலைகளைத் தடுப்பதில் தனிநபரைவிட அரசுக்கே பொறுப்பு தேவை. தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, போட்டி மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் அமைப்பாவதும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும், புறவயமாகப் பிரச்னைகளை அணுகி, அதற்குரிய தீர்வை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம்" என்கிறார் மனநல மருத்துவர் குருமூர்த்தி. 

தற்கொலைகள் குறித்து அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்படும் ஒரே நிறுவனமான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, வறுமை, வேலையின்மை ஆகிய காரணிகள் ஏறத்தாழ 2 சதவிகிதம் அளவுக்கே பதிவாகியுள்ளது. 2000 - 2015 காலகட்டத்தில் குடும்பப் பிரச்னைகள் 21.2 சதவிகிதம் - 27.6 சதவிகிதம் எனவும் பிற காரணங்கள் 14.3 சதவிகிதம் - 26.2 சதவிகிதம் ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் தொடர்புடைய பல உண்மையான விவரங்கள் ஆவணப்படுத்தப்படுவது இல்லை என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். 

வடசென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவரும் மக்களுக்கான மனநலக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான மருத்துவர் ஸ்ரீராம், குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருக்கும் தொழிலாளர் வட்டாரத்தின் சிக்கல்களை அலசுகிறார். 

“இந்த வட்டாரத்தில் பெரும்பாலானவர்கள் வாழ்நிலையில் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் அடித்தட்டுப் பிரிவினரே! பொதுவாக, ஏதாவது ஒரு சிறு பிரச்னையைக் காரணமாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அவர்களின் வாழ்க்கைச் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் போன்றவையே அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கும். நீண்ட வேலை நேரம், அதனால் தனக்கு அல்லது குடும்பத்துக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியாத நிலை, குடியிருக்கும் இடம், சூழல், வேலையின் தன்மை, வேலையின் அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் (எ.கா. கண் எரிச்சல், அது தொடர்வதால் ஏற்படும் கண்புரை) மற்றும் மன அழுத்தத்துக்குக்கூட சரிவரக் கவனம் கொடுக்க முடியவில்லையே என்பது, உடல்நலமின்மை, அதற்காக விடுப்பு எடுப்பதால் குறையும் ஊதியம், சில சமயம் தொடர்ந்து விடுப்பு எடுப்பதால் வேலையில் நிரந்தரமற்ற தன்மை, மருத்துவச் செலவு ஆகியவை, வேலைக்குச் சென்றுவருவதற்கான தூரம், அவ்வளவு நேரம் பயணம் செய்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், காலவிரயம், போக்குவரத்துச் செலவு போன்றவை, அன்றாடச் செலவுக்கே போதாத ஊதியத்தை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலத்துக்கான சேமிப்பு, தினசரி வீட்டுச் செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றைச் சமாளிக்க தினசரி உண்டாகும் சிரமங்கள் ஆகியவை எல்லாம், நான் சந்தித்துவரும் தற்கொலை முயற்சிகளுக்குக் காரணங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நவீன தாராளமயமாக்கல் கொள்கையானது சக மனிதர்களை தனக்குப் போட்டியாகவும் ஆபத்தாகும் பார்க்கும் எண்ணத்தை உண்டாக்கி இருக்கும்நிலையில், சாய்வதற்குத் தோளும் இல்லாத நிலை, நிரந்தரமில்லாத வேலையையும் செய்துகொண்டு, உழைப்புக்கு குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணவீக்கத்துடன் நாளும் போட்டிப்போடுவதால் ஏற்படும் உடல் மற்றும் மன அழுத்தமும்; வாழ்வின் அர்த்தம் புரியாமல், அவர்களுக்கான உரிமை என்னவென்று தெரியாமல், எப்போதும் யாரோ ஒருவருடைய வளர்ச்சிக்காக, சொகுசுக்காக, தன் வாழ்க்கையை வீணடித்து உழைத்துக்கொண்டிருக்கும் ஏமாற்றமும்; எப்போதும் இவர்களை ஓர் அவசர நிலையிலேயே வைத்துக்கொண்டிருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், அரசின் கொள்கை மாற்றங்களால், கொள்கை முடிவுகளால் திடீரென்று ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க விழி பிதுங்கிவிடுகின்றது. இப்படி பதற்றநிலையிலேயே ஓடிக்கொண்டிருக்கும் மனிதன், இத்தனை அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் மனிதன், சில சமயம் சிறு பிரச்னைகளால் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடுகிறான்.

இயற்கையாக ஏற்படும் அழுத்தங்களை தாங்கிக்கொள்ளும் திறனை மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்துள்ளது. ஆனால், செயற்கையாக ஏற்படும் அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் திறன் உடையவனாக இருப்பவர்கள் மட்டுமே இங்கு வாழத் தகுதி உள்ளவர்கள் எனப் புதிய பொருளாதாரக் கொள்கை சொல்கிறது. சமூக பொருளாதாரக் காரணிகளை ஒதுக்கிவைத்து, தற்கொலை முயற்சிக்கு  தனிமனிதனை மட்டுமே காரணம் காட்டி, அவனுக்கு மட்டுமே வைத்தியம் பார்க்கவைப்பது விந்தையானது” என விவரிக்கிறார் மரு.ஸ்ரீராம். 

`சரி, இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு..?’ பதில் சொல்கிறார், மாவட்ட மனநலத் திட்டத்தின் அதிகாரி, மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். 

“தற்கொலைத் தடுப்பில் தீர்வை நோக்கிய பயணம் என்று பார்த்தால், தற்கொலை முடிவு ஒரு கோழைத்தனமான செயல் என்று தனி நபரைக் குற்றப்படுத்துவது அறியாமையின் வெளிப்பாடாகும். பாதிக்கப்பட்டவரின் தனிநபர்சார்ந்த சிக்கலாக மட்டுமே இதை அணுகுவது சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். தற்கொலையைத் தனி நபர் பிரச்னையாகவும், அதிலிருந்து மீள்வது தனி நபரின் பொறுப்பு; ஆகவே மீள்வது, தனி நபரின் சக்திக்கு உட்பட்டதுதான் என்றும், புறக்காரணிகள் எவ்வகையிலும் காரணமல்ல என்றும் நிறுவ முயல்வதும் அறிவியல் அல்ல. பெருகிவரும் தற்கொலைகள் ஒரு வகையில், சகமனிதன் மீதான அக்கறையின்மையின் வெளிப்பாடே! சக மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை உற்று கவனிப்பதும், (தீர்வுக்கான) தீர்வை நோக்கி கூட்டாகப் பயணிப்பதும் அவசியம். அரசின் கொள்கை முடிவுகள் தனி மனிதனின் மனநலத்தையும் உடல் நலத்தையும் தீர்மானிக்கிறது என்பது உணரப்பட்ட உண்மை.

இந்நிலையில், கல்வி, சுகாதாரம், சமூக நலம், நிதி, நீதி, தொழில், விவசாயம், வியாபாரம் எனப் பல துறைகளில் செயல்படுத்தக்கூடிய (வாய்ப்புள்ள) `அனைவரையும் உள்ளடக்கிய’ (inclusive) ’மக்கள்நலத் திட்டங்களால்’ மட்டுமே தற்கொலைகளைக் குறைக்க முடியும் எனும் புரிதலோடு தற்கொலைத் தடுப்பை அணுக வேண்டும். "வாழ்க்கை வெறும்  சூனியமாக / வெறுமையாகத் தோன்றுகிறதா? குற்ற உணர்வுகொள்ள வேண்டாம், தோழா!”, உன் நிலைக்கு, நீ மட்டுமே பொறுப்பு என்ற மாயையிலிருந்து வெளியேறு”, ``உழைப்பதும், கனவு காண்பதும் உன் கடமையெனில், அதை நனவாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு எனும் கருத்தில் மையல்கொள்", ``சமூகம் உன்னைப் பாதுகாப்பதும்; சமூகத்தை நீ மேம்படுத்துவதும்தான் சமச்சீரான (balanced life) வாழ்க்கையின் அடிப்படை. எனவே, உனக்காக, நம் சமூகம் போராடும் என்ற  நம்பிக்கை கொள்; வெறுமை அகலும்" என்று தனி மனிதனுக்கு உணர்த்துவதே ஆகச் சிறந்த  தற்கொலைத் தடுப்பு மருந்தாகும். அரசின் மாவட்ட மனநல திட்டத்தின் மூலம் மாவட்டந்தோறும் மனநல ஆலோசனை  மையம் செயல்படுகிறது. மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...” எனத் தீர்வுகளின் வழிகளைக் காட்டுகிறார், மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். 

அனைவரும் இணைந்து தற்கொலைகளைத் தடுப்போம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு