Published:Updated:

"விபத்துகளில் யானைகள் இறப்பதைத் தடுத்த `பிளான் பீ'!” - ரயில்வேயின் செம ஐடியா

"விபத்துகளில் யானைகள் இறப்பதைத் தடுத்த `பிளான் பீ'!” - ரயில்வேயின் செம ஐடியா
"விபத்துகளில் யானைகள் இறப்பதைத் தடுத்த `பிளான் பீ'!” - ரயில்வேயின் செம ஐடியா

அதிவேகமாகச் செல்லும் போது குறுக்கே யானைகள் வந்து உயிரிழப்பதை தடுக்க நினைத்த இந்திய ரயில்வே `பிளான் பீ’ என்னும் முயற்சியைக் கையில் எடுத்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் காட்டுப் பகுதிகள் வழியே ரயில்கள் அதிவேகமாகச் செல்லும் போது குறுக்கே யானைகள் வந்து விபத்தில் உயிரிழப்பது வழக்கமாகிவிட்டது. இதைத் தடுக்க நினைத்த நம் இந்திய ரயில்வே நிறுவனம் `பிளான் பீ' என்னும் இந்தப் புதிய முயற்சியைக் கடந்த ஆண்டு இறுதியில் கையில் எடுத்தது.

சமீபத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த விபத்துகள் நன்றாகவே குறைந்துள்ளதாக ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக இந்த `பிளான் பீ' திட்டத்தின் சாதனம் சென்ற ஆண்டு கவுகாத்தி ரயில் நிலையம் அருகில் இருக்கும் இடங்களில் பொருத்தப்பட்டது. இதன் அருகில்தான் காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இந்த `பிளான் பீ' சாதனம் தேனீ கூட்டத்தின் இரைச்சல் சத்தத்தை ஒற்றிய ஒரு சத்தத்தை ரயில் தண்டவாளங்கள் அருகே ஒலிபரப்பும். தேனீக்களை முழுவதுமாக வெறுக்கும் குணம் கொண்டுள்ளதால் யானைகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு ரயில் தண்டவாளங்களின் அருகே வராமல் இருக்கும். இந்தச் சத்தம் 400 மீட்டர்கள் வரை கேட்கும். இந்த முயற்சியின் மூலம் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இதைப்பற்றிய ஒரு காணொலியுடன் ட்வீட் செய்துள்ளார். இது தவிர இரவு 9 முதல் காலை 7 வரை வேகக் கட்டுப்பாடு என வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாம்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

இந்திய ரயில்வே நிறுவனத்தின் மஸ்கட் என்னும் சின்னமாக இருப்பது என்னவென்று கவனித்திருக்கிறீர்களா. ஆம், போலு என்ற ஒரு யானை, ஸ்டேஷன் மாஸ்டர் போல உடையணிந்து பச்சை விளக்கைக் காட்டி நின்று கொண்டிருக்கும். நமது ரயில் நிலையங்களில் இதைப் பார்க்க முடியும். சின்னம் இப்படி இருக்க உண்மையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு இந்தியாவில்தான் ரயில் விபத்துகளில் இத்தனை யானைகள் கொல்லப்படுகின்றன. 1987 ம் ஆண்டிலிருந்து 2010 ம் ஆண்டு வரையான காலத்தில் மட்டும் சுமார் 150 யானைகள் ரயில் விபத்துகளில் பலியாகியுள்ளன. அதே நேரத்தில் 2009 ம் ஆண்டிலிருந்து 2017 ம் ஆண்டு வரையான 8 ஆண்டுகளில் மட்டும் இந்த விபத்துகளில் பலியான யானைகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2014-2016 காலத்தில் மட்டும் சுமார் 35 யானைகள் பலியாகியுள்ளதாம். சென்ற ஆண்டுகளில் இதைப் பற்றிய விவாதங்கள் கூட நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்றுள்ளது. இருந்தும் அப்போது இந்திய ரயில்வே துறை இதைப் பெரிய பொருட்டாக எடுத்ததாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே இவற்றின் இருப்பிடங்களான காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு எண்ணிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்நிலையில் ரயில்வே துறையின் இந்த `பிளான் பீ' முயற்சி அனைவரிடையிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருந்தும் கடந்த ஏப்ரல் மாதம் ஒடிசா மாநிலத்தில் ஒரே விபத்தில் 4 யானைகள் பலியாகின. எனவே, வெறும் 2000 ரூபாய் மட்டுமே மதிப்பிலான இந்த `பிளான் பீ' சாதனம் இன்னும் பாதிப்புக்கு உள்ளாகும் முக்கிய இடங்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டால் மட்டுமே இந்த யானை பலிகளை முடிந்தஅளவு குறைக்க முடியும். ஒரு நாள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த விபத்துகளே நடக்காமல் இருக்க இன்று முதல் முயற்சி மேற்கொள்ளுதல் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு