Published:Updated:

போராட்டத்தின் கதை!

போராட்டத்தின் கதை!

போராட்டத்தின் கதை!

போராட்டத்தின் கதை!

Published:Updated:

ரு காலத்தில் 'தீவிரவாதி’ என்று அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டவர் கடலூரைச் சேர்ந்த 'தடா’ நல்லரசன். இப்போது இவர் 'கவிஞர்’ நல்லரசன்! தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழர் தேசிய இயக்கம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு என்று பல இயக்கங்களில் செயல்பட்டாலும் சாதி ஒழிப்பையும் தமிழர்களின் விடுதலையையுமே தன் அடித்தளமாகக்கொண்டு செயலாற்றிவருகிறார் நல்லரசன்.  

போராட்டத்தின் கதை!
##~##

''கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகில் அமைந்து இருக்கும் கிராமமான பாலசுந்தரபுரம்தான் அரியலூர் மாவட்டத்தின் கடைசிக் கிராமம். அங்குதான் நான் பிறந்தேன். ஆதிக்கச் சாதிக் கொடுமைகளும் நிலப்பிரபுத்துவ திமிரும் அடித்தட்டு மக்களின் மீது ஒடுக்குமுறையை ஏவும் வழக்கமான இந்திய விவசாயக் கிராமம்தான் அதுவும். காலம் காலமாக விவசாயக் கூலிகளாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட அவர்கள், எதிர்த்துக் குரல் எழுப்பவும் திராணியற்றவர்களாக இருந்தார்கள். சவுக்கடியும் சாணிப்பாலும் இன்னபிற தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அதற்கு எதிராகப் போராடி கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி கண்டதையும் வரலாற்றின் பதிவாகப் படித்து இருப்பீர்கள். ஆனால், செங்கொடியின் வெற்றி நிழலுக்கு அப்பாலும் இன்னும் பண்ணை ஆதிக்க முறை இருக்கத்தான் செய்கிறது!

விவசாயக் கூலிகள் பண்ணை முதலாளிகளை எதிர்த்துப் பேசிவிட்டால், மறுநாள் அவர்கள் வேலை பறிபோவதுடன்  மரத்தில் கட்டிவைத்து அடிக்கவும் செய்வார்கள். 5 நிமிடம் தாமதமாகப் பெண்கள் வயல் வேலைக்கு வந்தால், தூரத்தில் இருந்து ஒரு கல்லை எடுத்து சேற்றில் எறிவார்கள். சேறு பட்டு சேலை அழுக்காகி அவமானம் கூடும்.

போராட்டத்தின் கதை!

அப்பாவுடன் பள்ளிக்குச் செல்லும்போது என் வயதே இருக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுவன், என் அப்பாவைப் பெயர் சொல்லி அழைக்கும்போது துடித்துப்போவேன். தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை. அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தால் நாங்கள் தரையில் அமர்ந்துதான் தேநீர் அருந்தவேண்டும்.

இது ஏதோ தெருவிலே மட்டும் இருக்கிற ஏற்றத்தாழ்வு என்று நினைத்துவிடாதீர்கள். 'தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று கற்பிக்கும் பள்ளியிலும் இதே தீண்டாமைதான்.

குடத்தில் இருக்கும் தண்ணீரில் அனைவரும் குடிக்கும்போது, எனக்கு மட்டும் கையில்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். 'இதை எல்லாம் மாற்றவே முடியாதா, இதற்கு எல்லாம் என்னதான் தீர்வு?’ என்று எனக்கு நானே கேள்விகேட்டுக்கொள்வேன். இந்தச் சாதியக் கொடுமைகள் பொறுக்கமாட்டாமல் குடும்பத்தோடு கடலூருக்குக் குடிபெயர்ந்தோம். அப்போதுதான் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து எங்கள் பள்ளியின் மாணவர் தலைவன் ஆனேன். ஜெயங்கொண்டத்தின் அருகில் இருந்த மகிமைபுரம் என்ற ஊரில், ஒரு மாணவியை அந்தப் பள்ளி தாளாளரின் மகன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அதற்கு எதிராக மாணவர்களையும் மக்களையும் ஒன்றுதிரட்டிப் போராடினேன். அதுதான் என் முதல் போராட்டக் களம்.

போராட்டத்தின் கதை!

இந்தச் சமயத்தில்தான் 'தமிழ்நாடு விடுதலைப் படை’யின் தொடர்பு கிடைத்தது. சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தமிழ்நாடு விடுதலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தில் 1989-ல் பகுதிநேர ஊழியன் ஆனேன். எனது வேலை, இயக்கம் சார்ந்த சுவரொட்டிகளை ஒட்டுவது, இயக்கப் போராளிகளைப் பாதுகாத்து உணவு கொடுப்பது போன்றவைதான். இதற்கு இடையில் 12-ம் வகுப்பை முடித்தவுடன் விவசாய ஆசிரியர் படிப்பையும் முடித்தேன். 'வேலையா...  மக்கள் விடுதலையா?’ என்ற கேள்வியில் 'மக்கள் விடுதலை’யைத் தேர்ந்தெடுத்தேன். 1991-ல் இயக்கத்தின் முழுநேர ஊழியர் ஆனேன். 1994-ல் அமைப்பு தடைசெய்யப்பட்டதால், தடா சட்டத்தில் கைதாகி, பிறகு 2000-ல் விடுதலை ஆனேன்.

சிறையில் இருந்து விடுதலை ஆனதும், பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தில் இணைந்தேன். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அந்த இயக்கமும் தடை செய்யப்பட்டது. இப்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஈழ ஆதரவுப் போராட்டங்கள், மனித உரிமைப் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களில் என்னை நானே ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் 10 ஆண்டு காலங்களைச் சிறையிலேயே கழித்திருக்கிறேன். பொதுவாகக் கவிதை எழுதுவதற்கு நல்ல சூழலும் நல்ல மனநிலையும் வேண்டும் என்பார்கள். ஆனால், தூக்கம் வராத கவலை சூழ்ந்த இரவுகளில் இருந்தும் கொசுக்கடிகளில் இருந்தும்தான் என் கவிதைகள் தோன்றின. இதுவரை நூல்களாகக் கவிதை வெளியிட்ட நான், இப்போது நாட்டுப்புறப் பாடல் வடிவத்தில் கவிதைகள் எழுதி 'தை மாசம்’ என்ற பெயரில் குறுந்தகடாக வெளியிட்டு இருக்கிறேன். கலையும் இலக்கியமும் மக்களுக்கே என்று என் களங்களும் போராட்டங்களும் தொடரும்!'' என்கிறார் நல்லரசன் ஒரு போராளிக்கே உரிய உறுதியுடன். 

  • 'விதை நெல்’, 'வாக்குமூலங்கள்’, 'திசைகள்’, 'தழும்புகள்’, 'முகங்கள்’, 'நிறம் மாறாத நினைவுகள்’ என்ற ஆறு கவிதை நூல்களை எழுதி இருக்கிறார், தடா நல்லரசன்! 
     
  • பொதுவாக ஒரு கவிதையின் கடைசிச் சொல், அடுத்த கவிதையின் முதல் சொல்லாக வருமாறு பாடுவதுதான் அந்தாதி. கடவுள் சார்ந்த பாடுபொருளைப் பாடுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த இந்த அந்தாதி வடிவத்தை, ஹைகூ கவிதையில் பயன்படுத்தி 'தழும்புகள்’ என்ற நூலை எழுதியிருக்கிறார் நல்லரசன்!

- ஜெ.முருகன்