Published:Updated:

போட்டியைச் சமாளிக்க கூடுதல் வசதிகளுடன் வரும் கார்கள்!

இவற்றின் விலை உயர்வில் பெரும்பங்கு, புதிய இன்சூரன்ஸ் (IRDAI) விதிகளே வகிக்கின்றன!

போட்டியைச் சமாளிக்க கூடுதல் வசதிகளுடன் வரும் கார்கள்!
போட்டியைச் சமாளிக்க கூடுதல் வசதிகளுடன் வரும் கார்கள்!

ரு நிறுவனம், ஒரு புதிய காரை அறிமுகப்படுத்துகிறது என வைத்துக்கொள்வோம். அது என்ன செக்மென்ட்டில் வருகிறது என்பதைப் பொறுத்து, அதன் போட்டியாளர்கள் உடனடியாக ரியாக்ட் செய்வார்கள். அது ஃபேஸ்லிஃப்ட், விலைக் குறைப்பு/தள்ளுபடி, கூடுதல் சிறப்பம்சங்கள் என ஏதாவது ஒரு வழிமுறையாக இருப்பது வாடிக்கை. இங்கே நீங்கள் பார்க்கப்போகும் கார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தவிர, இவற்றின் விலை உயர்வில் பெரும்பங்கு, புதிய இன்ஷூரன்ஸ் (IRDAI) விதிகளே வகிக்கின்றன. இங்கே இருக்கும் விலைகள் அனைத்தும், சென்னை எக்ஸ்-ஷோரூம் என்பதை நினைவில்கொள்ளவும்.

டொயோட்டா இனோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர்

14.65 - 23.06 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் இனோவா க்ரிஸ்டா & இனோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் ஆகிய மாடல்களின் அனைத்து வேரியன்ட்களிலும், சில வசதிகளைக் கூடுதலாக அளித்துள்ளது டொயோட்டா. Emergency Brake Signal, பின்பக்கப் பனி விளக்குகள், முன்பக்க LED பனி விளக்குகள், Glass Break மற்றும் Ultrasonic Sensor உடனான Anti-Theft Alarm ஆகியவைதான் அவை. இந்த ப்ரீமியம் எம்பிவி-யின் ஆரம்ப வேரியன்ட்டான GX, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க விதத்தில் வசதிகள் இல்லை என்ற கருத்து பரவலாக நிலவிவந்த நிலையில், அதற்கான தீர்வை டொயோட்டா கண்டறிந்துள்ளது. அதன்படி டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆடியோ கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், Puddle Lamps உடனான எலெக்ட்ரிக் Folding மிரர்கள், Speed & Impact Sensitive Door Lock/Unlock வசதி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவே 27.27- 32.97 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கக்கூடிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி-யின் அனைத்து வேரியன்ட்களிலும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை Passenger Side Powered Seat, Glass Break மற்றும் Ultrasonic Sensor உடனான Anti-Theft Alarm, Emergency Brake Signal, பின்பக்கப் பனிவிளக்குகள், உள்பக்க Electrochromatic ரியர் வியூ மிரர் (IRVM) ஆகும். ஒருவேளை மராஸோ/புதிய எர்டிகா மற்றும் எண்டேவர்/MU-X பேஸ்லிஃப்ட் ஆகியவற்றைச் சமாளிப்பதற்கு ஏதுவாக, இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறதா டொயோட்டா?

ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் எக்ஸென்ட்

ஹேட்ச்பேக் & காம்பேக்ட் செடான் பிரிவில் கோலோச்சும் ஸ்விஃப்ட் - டிசையர் & அமேஸின் அனைத்து வேரியன்ட்களிலும், 2 காற்றுப்பைகள் - ABS ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேஸ்லிஃப்ட் பெற்ற எக்ஸென்ட் காரில், 2 காற்றுப்பைகள் மட்டுமே இருந்த நிலையில், ABS & EBD ஆகியவற்றை தற்போது அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக ஆக்கியிருக்கிறது ஹூண்டாய். இது கிராண்ட் i10 காருக்கும் பொருந்தும் என்பது பெரிய ப்ளஸ்.

மேலும் எக்ஸென்ட்டின் E+ வேரியன்ட்டை நீக்கியுள்ள அதே நேரத்தில், கிராண்ட் i10 காரின் Magna & Sportz வேரியன்ட்களில் கூடுதல் வசதிகளை வழங்கியுள்ளது ஹூண்டாய். அதன்படி Magna-வில் ரூஃப் ரெயில் & கதவுகளில் Side Impact Beams என்றால், Sportz-ல் LED DRL & பின்பக்க ஸ்பாய்லர் சேர்க்கப்பட்டுள்ளன. 4.74 - 7.56 லட்சம் ரூபாய்க்கு கிராண்ட் i10 காரும், 5.63 - 8.66 லட்சம் ரூபாய்க்கு எக்ஸென்ட் காரும் கிடைக்கின்றன. இரண்டிலும் ஆஃபர்கள் உள்ளன.

மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் விரைவில் வரவிருக்கும் நிஸான் கிக்ஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் எஸ்-க்ராஸ் காரில், சில வசதிகளைக் கூடுதலாகச் சேர்த்திருக்கிறது மாருதி சுஸூகி. அதன்படி பின்பக்க பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், Passenger சீட் பெல்ட் Reminder ஆகியவை அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டு ஆகியுள்ளன. மேலும், அதிகமாக விற்பனையாகும் Delta வேரியன்ட்டில் முன்பைவிட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், பின்பக்க Wash/Wiper, இண்டிகேட்டர்களுடன்கூடிய Auto Folding ரியர் வியூ மிரர்கள் ஆகியவைதான் அது. 8.85 - 11.45 லட்சம் ரூபாயில் கிடைக்கும் இந்த காரில், சியாஸ் பேஸ்லிஃப்ட்டில் இருக்கும் புதிய 1.5 லிட்டர் SHVS பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.