Published:Updated:

இன்டர்நெட்ன்னா எல்லாருக்கும் ஒண்ணுதான்னு சொல்வாங்க... நம்பாதீங்க! #DataLocalisation

இன்டர்நெட் வந்தபிறகு இந்த உலகமே, சுருங்கி ஒரு சிறிய கிராமமாகிவிட்டது என்றார்கள்; இந்த உலகின் எல்லைகள் எதுவும் இணையத்தைப் பாதிக்காது என்றார்கள்; இணையத்தில் எல்லோருமே சமம் என்றார்கள்; ஆனால், தற்போது இந்தக் கருத்தாக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துவருகிறது.

இன்டர்நெட்ன்னா எல்லாருக்கும் ஒண்ணுதான்னு சொல்வாங்க... நம்பாதீங்க! #DataLocalisation
இன்டர்நெட்ன்னா எல்லாருக்கும் ஒண்ணுதான்னு சொல்வாங்க... நம்பாதீங்க! #DataLocalisation

மெரிக்காவைச் சேர்ந்த கிளைடு வெய்ன் க்ரூஸ் என்ற ஆராய்ச்சியாளர் 2001-ம் ஆண்டு, இணையதளம் பற்றி கட்டுரை எழுதினார். அதில் அவர் பயன்படுத்திய பல்வேறு வார்த்தைகளில், ஒரே ஒரு வார்த்தை மட்டும் இந்த உலகத்திற்கு அதுவரை பரிச்சயம் இல்லாதது. அது ஸ்பிளின்ட்டர்நெட் (Splinternet). 2018-ல் இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களில் பலருக்குமே கூட, இன்னும் இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், இதன் பொருளை நிச்சயம் நீங்கள் உணர்ந்தவர்தான். 90-களில் www என்ற இணையம் உலகம் முழுக்க பிரபலமான போது, வருங்காலத்தில் எல்லா சேவைகளையும் இணையம் வழியாக உலகின் அந்த மூலையிலிருந்தும் பெறமுடியும் எனச் சொன்னபோது, எல்லோரும் உதிர்த்த இரண்டு வார்த்தைகள், "Global Village". இணையம் எல்லா நாடுகளையும் இணைத்துவிட்டதால், உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது; இணையத்தில் தேசம், எல்லை எதுவும் கிடையாது; பிரிவினைகள் தாண்டி எல்லோரும் இணைந்திருக்கும் விர்ச்சுவல் பிரபஞ்சம்தான் இணையம். இன்னும் இன்னும் இணையம் குறித்து இப்படி எத்தனையோ கற்பிதங்கள் உருவாயின. இவை எதுவுமே அப்போது பொய் அல்ல. உண்மைதான். ஆனால், இப்போது? முழு பொய்; மேலே நீங்கள் பார்த்த ஸ்பிளின்ட்டர்நெட் என்ற வார்த்தையின் அர்த்தமே இதுதான். உலகம் முழுவதுக்குமான ஒரே இணையம் இன்டர்நெட் என்றால், அந்தந்த நாடுகள் தங்களுக்கென விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, பிரத்யேக இணையங்களை வைத்துக்கொண்டால் அது ஸ்பிளின்ட்டர்நெட். 

முதலில் வெறும் தொழில்நுட்ப வகைப்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தை, தற்போது இணைய ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் விவாதிக்கப்படும் விஷயமாகவே மாறிவிட்டது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது அரசுகளின் புதிய கொள்கைகள். அவற்றில் சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

நம் டேட்டா நம் நாட்டில்!

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் நிதிசார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், "இந்தியாவில் பேமென்ட் சர்வீஸ்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் டேட்டாவை இந்தியாவிலேயேதான் சேமிக்க வேண்டும். வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் இதனை அமல்படுத்தவேண்டும்" எனக் கூறியிருந்தது. இதேபோல, சில மாதங்களுக்கு முன்னர் வெளியே கசிந்த இந்தியாவின் இ-காமர்ஸ் பாலிசியிலும் இதேபோல ஒரு அம்சம் இடம்பெற்றிருந்தது. அதன்படி, இந்தியாவின் மின்னணு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் டேட்டாவை இந்தியாவில் இருக்கும் சர்வர்களில் மட்டும்தான் சேமித்துவைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவானது, இந்தியாவின் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதிலும் இதேபோல, இந்தியர்களின் மிகப்பாதுகாப்பான தகவல்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டில் சேமித்துவைக்க அனுமதியில்லை எனக் கூறியிருந்தது. இந்த மூன்று கொள்கைகளும் நாம் பார்க்கும் பொதுவான விஷயம் இது. இதற்கு Data Localisation என்று பெயர். அதாவது, இந்தியர்களின் டேட்டாவை இந்தியாவில் இருக்கும் சர்வர்களில் மட்டுமே சேமித்துவைக்க வேண்டும். வெளிநாட்டில் சேமித்துவைக்க அனுமதியில்லை. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது நல்ல திட்டம் போலவே இருந்தாலும், இதில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன. 

எனவே இதனை முழுமையாக எதிர்க்கின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த கொள்கை குழப்பத்தால், இந்தியாவில் பணப்பரிமாற்ற சேவையைத் தொடங்க இருந்த ஆப்பிள் தற்போதைக்கு அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது; வாட்ஸ்அப்பின் பேமென்ட் சேவை இன்னும் முழுமையாக நிறைவடையாமல் இருக்கிறது. கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இந்திய அரசுக்கே கடிதம் எழுதிவிட்டார். இதுதவிர உபெர், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் இந்திய அரசைச் சந்தித்து வலியுறுத்தவிருக்கின்றன. ஒரே ஒரு முடிவுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏன்? இதற்கும் ஸ்பிளின்ட்டர்நெட்.டிற்கும் என்ன தொடர்பு? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னர் இந்த Data Localisation-ன் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்.

அமெரிக்கா விதைத்த விதை!

முதன்முதலில் நிறைய கணினிகளை ஒருங்கிணைத்து. ஒரு சேவையை வழங்குவதற்கோ, அல்லது ஒரு நிறுவனத்தை இயக்குவதற்கோ வழிசெய்தவை Mainframe கணினிகள். உதாரணமாக ஒரு அலுவலகத்தின் மொத்த கணினிகளையும் ஒரே சர்வரில் இணைத்து, அனைவரும் அதில் பணியாற்ற வேண்டுமென்றால் ஆரம்பகாலத்தில் இந்தக் கணினிகள்தான் ஒரே வழி. இதற்கடுத்து வந்தது கிளவுடு கம்ப்யூட்டிங் (Cloud Computing). இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணையசேவைகளுக்கும் இதுதான் ஆணிவேர். சர்வர்கள் எங்கிருந்தாலும், எவ்வளவு இருந்தாலும் அவற்றை ஒரே நெட்வொர்க்கில் இணைத்து பணியாற்றமுடியும் என்பதுதான் கிளவுடு கம்ப்யூட்டிங்கின் சிறப்பு. உதாரணம், நாம் பயன்படுத்தும் ஜிமெயில்.

நாம் இந்தியாவில் இருந்துகொண்டு ஜிமெயிலை லாகின் செய்கிறோம் எனில், நம்முடைய தகவல்கள் அனைத்தும் வெளிநாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் டேட்டா சென்ட்டரில் இருந்துதான் நம் கணினிக்கு வரும்.இதேபோல இணையத்தில் நடக்கும் எத்தனையோ சேவைகளைக் குறிப்பிடமுடியும். இந்த கிளவுடு கம்ப்யூட்டிங்கில் மாநிலம், நாடு என்ற பேதமெல்லாம் கிடையாது. எந்த நாட்டின் டேட்டாவும், வேறு எந்த நாட்டிலும் இருக்கலாம். எல்லைகளே கிடையாது. இதில் நிறைய சிறப்பம்சங்கள் இருந்தன. எந்தத் தகவல்களை வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் கையாளலாம். ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய நாட்டு நிறுவனங்களை மட்டுமே சேவைக்காக சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு நிறுவனமும், தன்னுடைய சேவையை உலகெங்கும் விரிவுபடுத்த அனைத்து நாடுகளிலும் கிளைகளையோ, சர்வர்களையோ உருவாக்க வேண்டியதில்லை. உதாரணம் வாட்ஸ்அப். உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயனாளர்கள் இருந்தாலும், அதன் சர்வர்கள் அமெரிக்காவில் மட்டும் இருந்தாலே போதும். அதனால் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியும். இப்படி டேட்டாவை உலகெங்கும் பரப்பி வைத்ததில் நிறைய சிறப்புகள் இருந்தாலும், கூடவே சிக்கல்களும் இருந்தன. அது டேட்டாவின் பாதுகாப்பு.

அதுவும் எட்வர்டு ஸ்னோடென் அமெரிக்காவால் உலகின் அனைத்து மக்களையும் எளிதாக உளவுபார்க்கமுடியும் எனச்சொன்ன போது, அனைவரின் கவனமும் திரும்பியது டேட்டா சென்டர்கள் மீதுதான். இன்று இந்தியாவில் தினந்தோறும் அதிகம் பார்க்கப்படும் 10 இணையதளங்களில், 8 இணையதளங்கள் அமெரிக்காவிற்குச் சொந்தமானவை. அப்படியெனில் அந்த 8 இணையதளங்களின் வாடிக்கையாளர்களின் டேட்டாவும் யாரிடம் இருக்கிறது? அமெரிக்காவிடம்தானே? என்னதான் கிளவுடு கம்ப்யூட்டிங் என்றாலும் டேட்டா சென்டர்கள் அமெரிக்க எல்லைக்குள் அல்லவா இருக்கின்றன? அப்படியெனில் அவர்களால் எளிதில் நம்மை உளவுபார்க்க முடியும்தானே? டேட்டாவைத் தவறாகக் கையாள முடியும்தானே? இந்தக் கேள்வி உலகெங்கும் எழுந்தது. அந்த சமயத்தில்தான் உலகம் முழுவதும் பிரைவசி தொடர்பான விழிப்புஉணர்வும் அதிகரித்தது. எனவே பிரேசில், சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா, நைஜீரியா எனப் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டிற்கென தகவல் பாதுகாப்பு சட்டங்களை வகுத்தனர். அதில், Data Localisation என்ற விஷயத்தைப் பிரதானமாக்கினர். தற்போது இந்தியாவும் அதையே பின்பற்றியுள்ளது. இதன்படி இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் டேட்டாவை வெளிநாட்டில் சேமித்தால், அதன் ஒரு நகலை இந்தியாவிலும் சேமித்துவைக்க வேண்டும். அதுவே அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் (Critical Personal Data) என்றால், உள்நாட்டில் மட்டுமே சேமித்து வைக்கவேண்டும். வெளிநாட்டில் சேமிக்க அனுமதியில்லை.

கைவிரித்த வெளிநாட்டு அரசுகள்

இந்த உளவு விஷயத்தைத் தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்தியக் குற்றவாளிகளின் தகவல்கள் ஏதேனும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தால் அவற்றை அந்நிறுவனங்களிடம் விண்ணப்பித்து மட்டுமே பெறமுடியும். உதாரணமாக ஃபேஸ்புக்கிடம் இருக்கும் ஒரு குற்றவாளியின் தகவலை சி.பி.ஐ கேட்டால், அதற்கு ஃபேஸ்புக்கிடமும், அமெரிக்க அரசிடமும் அனுமதி பெறவேண்டும். இப்படி வாங்குவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது, கால அளவு. இந்தத் தகவல்களை வழங்குவதற்கு நிறுவனங்கள் அதிகப்படியான கால அளவை எடுத்துக்கொள்கின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "தகவல்கள் அனைத்துமே அமெரிக்க சர்வர்களில் இருக்கிறது. அதை உரிய அனுமதியுடன் மட்டுமே தரமுடியும்" என்பதுதான். இதுதவிர இன்னொரு சிக்கல், சில சமயம் அரசே தகவல்களைத் தர மறுப்பு தெரிவித்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் குற்றவியல் விசாரணைக்கு பெரும் தடையாக இருக்கின்றன. குறிப்பாக சைபர் கிரைம்கள் தொடர்பான விசாரணைகள் இதனாலேயே தேங்கி நிற்கின்றன. இதற்குத் தீர்வாகவும் Data Localisation-ஐக் கருதுகிறது இந்திய அரசு. இதையே அரசின் மீது குற்றச்சாட்டாகவும் வைக்கின்றனர் பிரைவசி ஆர்வலர்கள். அதாவது, இந்தியர்களின் டேட்டாவை இந்தியாவிலேயே சேமித்துவைப்பதன்மூலம் அரசு மக்களை எளிதாகக் கண்காணிக்கும். அதுதான் பிரதான நோக்கம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இதைத் தாண்டி இன்னொரு காரணம், டேட்டா சென்டர்களை உள்நாட்டிலேயே நிறுவுவதன்மூலம் உள்நாட்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற அரசின் நம்பிக்கை. ஆனால், இதுவும் சரியல்ல.

உண்மையில் இதனால் யாருக்கு நன்மை?

யாருக்குமே இல்லை என்கின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த Data Localisation விஷயத்தை நிறைய நிறுவனங்கள் எதிர்த்தாலும், இந்தியாவில் இப்போதைக்கு இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும் ஆதரிக்கின்றன. ஒன்று பேடிஎம்; இரண்டாவது, ஜியோ. இவையிரண்டும் ஆதரிப்பதற்குக் காரணம், இந்தக் கொள்கை வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வலுவாகக் காலூன்ற சிக்கலை ஏற்படுத்தும் என்பதே. பேடிஎம் ஏற்கெனவே இந்தக் கொள்கைக்கு ரெடி. ஜியோ, இந்திய நிறுவனம் என்பதால் பிரச்னையே இல்லை. ஆனால், பிற நிறுவனங்களுக்குத்தான் சிக்கல். இங்கே இருந்துகொண்டே வெளிநாட்டில் தகவல்களை சேமித்துவைக்கும் நிறுவனங்கள் அவற்றை இந்தியாவிற்கு மாற்ற வேண்டும். கூகுள், அமேசான் போன்றவை இந்தியாவிற்கென பிரத்யேக சர்வர்களை நிறுவவேண்டும். கூடுதல் செலவு, தொழில்நுட்ப கட்டமைப்பு என நிறைய சிக்கல்கள். மேலும் Data Localisation-க்கு ஆதரவாக அரசு சொல்லும் நியாயங்களையும் நிராகரிக்கின்றன இவை. அதற்கு இவை சொல்லும் முக்கியமான காரணங்கள்.

1. டேட்டாவானது உள்நாட்டில் சேமிக்கப்படுவதால் மட்டுமே அது பாதுகாப்பானதாகக் கருதமுடியாது. அவை இணையத்துடன் இணைந்துதான் செயல்பட முடியும் என்பதால், இப்போதும் வெளிநாடுகளால் அவற்றை டிராக் செய்யமுடியும். இதற்கு ஒரே மாற்று, டேட்டாவிற்கான பாதுகாப்பை அதிகப்படுத்துவதுதான். அதற்கு Data Localisation தீர்வாகாது. மேலும், தற்போது கூகுள், அமேசான், ஃபேஸ்புக் போன்றவை தங்கள் டேட்டாவை சொந்த டேட்டா சென்ட்டர்களில் வைத்துச் சேமிக்கும்போது அதன் பாதுகாப்பு அதிகம். அதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கென பிரத்யேக சென்ட்டர்களை அமைத்தாலோ, அல்லது தேர்ட் பார்ட்டிகளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலோ அதேஅளவு பாதுகாப்பானதாக இருக்கும் எனச் சொல்லமுடியாது.

2. இப்படி திடீரென உள்நாட்டிலேயே சர்வர்களை அமைக்கவும், தகவல்களைச் சேமித்து வைப்பதற்கும் நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படும். இதை மிகச்சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் போகலாம்.

3. அரசின் மற்றொரு முக்கிய நோக்கம், குற்றவியல் விசாரணைகளின்போது குற்றவாளிகளின் டேட்டாவை எளிதில் பெறமுடியும் என்பதே. ஆனால், அதுவும் முழுமையாக நடந்துவிடாது. உதாரணமாக சிலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக் மூலம் இந்தியாவில் சைபர் கிரைமில் ஈடுபடுகிறார் என வைத்துக்கொள்வோம். இப்போது இந்திய அரசு ஃபேஸ்புக்கிடம் அந்தப் பயனாளரின் தகவல்களைக் கேட்கும். இப்போது ஃபேஸ்புக் தகவல்களை இந்தியாவிலேயே வைத்திருந்தாலும்கூட, இந்திய அரசுக்கு உடனே இந்தத் தகவல்களைத் தரவேண்டிய கட்டாயம் இல்லை. காரணம் குற்றத்தில் ஈடுபட்ட நபர் சிலி நாட்டைச் சேர்ந்தவர்; இந்தியர் அல்ல; அப்படியெனில் அதைத் தருவதற்கு சிலி நாட்டின் சட்டசிக்கல்கள் ஏதேனும் இருக்கிறதா, அமெரிக்க அரசு தன் நாட்டு நிறுவனம் ஒன்று, வெளிநாட்டு அரசிடம் டேட்டாவைத் தர சம்மதிக்குமா என நிறைய கேள்விகள் இருக்கின்றன. இப்போது இருக்கும் அமெரிக்க விதிமுறைகளின்படி, அந்நாட்டில் இயங்கும் எந்த நிறுவனமும் தகவல்களை வெளிநாட்டு அரசுகளிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது. சர்வதேச விசாரணை, புலனாய்வு போன்ற முக்கியமான காரணங்களுக்காக பிறநாடுகள் கேட்கும் பட்சத்தில், Mutual Legal Assistance Treaty (MLAT) விதிமுறைகளின்படி முறையாக அமெரிக்க அரசிடம்தான் கேட்டு விண்ணப்பிக்கவேண்டும். எனவே Data Localisation மட்டுமே புலனாய்வுக்கு முழுமையாக உதவும் எனச் சொல்லமுடியாது.

4. இந்த Data Localisation குறித்து சொல்லப்படும் மற்றொரு விஷயம் உள்நாட்டு பொருளாதாரம் வளரும் என்பது. இதற்கும் மாற்றுக்கருத்தையே முன்வைக்கின்றன சிலிக்கான் வேலி நிறுவனங்கள். இந்தக் கொள்கை மூலமாக உள்நாட்டிலேயே சர்வர்கள் அமைப்பது, அதற்கான கட்டுமானங்கள் உருவாவது என சின்ன சின்ன அளவில் வேலைவாய்ப்புகள் உருவானாலும் இவை எதுவும் நீண்டகாலப் பயனை அளிக்கும் எனக்கூற முடியாது. சுந்தர் பிச்சை கூட தன் கடிதத்தில் இதையேதான் குறிப்பிட்டிருந்தார். அதாவது, கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெருநிறுவனங்கள், ஏற்கெனவே இங்கு பணிபுரியும் நிறுவனங்கள் வேண்டுமானால் தங்கள் சர்வர்களை இங்கே அமைக்கத் தயாராக இருக்கும். ஆனால், புதிதாக இந்தியாவில் தொழில் செய்ய நினைக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இதன்மூலம் குறையும். உலகின் அனைத்து நாடுகளும் இதேபோல சட்டங்களை விதித்தால், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சின்ன சின்ன ஸ்டார்ட்அப்கள் கூட திடீரென உலகளவில் சாதித்த சாகசக்கதைகள் இனி நடக்காமலேயே போகலாம். 

5. தற்போது இந்திய அரசு விதிக்கும் சட்டங்களைப் போல, பிறநாடுகளும் சட்டங்களை விதித்தால் இங்கிருக்கும் ஸ்டார்ட்அப்களே கூடப் பாதிக்கப்படும். வெளிநாடுகளுக்கு இங்கிருந்து அவுட்சோர்சிங் செய்யும் ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும். 

இப்படி Data Localisation-க்கு எதிராகவும் நிறைய நியாயமான வாதங்கள் எழுகின்றன. மேலும், இணையத்தின் சிறப்பம்சமே Free Flow of Data-தான். அதையே இப்படி சட்டங்கள் மூலம் தடுத்தால், இணையம் ஒரே உலகம் என்பது சுருங்கி, அந்தந்த நாடுகளுக்கான ஒரு அமைப்பு என மாறிவிடும் என்ற எச்சரிக்கைகளும் எழுகின்றன. அதனால்தான் ஸ்பிளின்ட்டர்நெட் என்ற வார்த்தையின் பயன்பாடும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பிளவுபட்ட இணையம்

Data Localisation என்பது சரியா தவறா எனக் கேட்டால் இப்போதைக்கு பதில் இல்லை; அரசுகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இரண்டுமே தங்களுடைய வாதங்களை வைத்துதான் நியாய அநியாயங்களை அலசுகின்றன. எனவே காலம்தான் தராசு முள்ளை ஏதேனும் ஒரு திசையில் நகர்த்தவேண்டும். ஆனால், இந்தப் பிரச்னையைத் தாண்டி பொதுவாகவே இணையம் என்பது பிளவுபடுகிறதா எனக் கேட்டால், ஆம் என்பதுதான் பதில். இதற்கு சமீபத்திய உதாரணம் கூகுள்.

உலகின் பலநாடுகளிலும் இணையத்தில் கூகுள்தான் ராஜா; ஆனால், உலகின் அதிக மக்கள் தொகைகொண்ட சீனாவில் கூகுள் இயக்கத்தில் இல்லை. அந்நாடு விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் 2010-ம் ஆண்டோடு, அங்கிருந்து வெளியேறியது கூகுள். ஆனால், தற்போது மீண்டும் அங்கே நுழைவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அட... அப்படியெனில் இப்போது சீனா மாறிவிட்டதா என்றால், இல்லை. கூகுள் தன்னை மாற்றிக்கொண்டு விட்டது. அந்நாட்டு அரசு சொல்லும் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு அங்கே சேவைகளை வழங்க, பிரத்யேக சர்ச் இன்ஜினை உருவாக்க முயற்சி செய்துவருகிறது. இதற்கு டிராகன் ஃப்ளை எனப் பெயரும் வைத்திருக்கிறது. கூகுளின் இந்த முயற்சிக்குக் கடுமையான கண்டனங்கள், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. "எல்லோர்க்கும் இணையம் ஒன்றுதான்; இங்கே எல்லாமும் சமம்தான்; ஆனால், இதனை கூகுள் தற்போது மறந்துவிட்டது." என பல்வேறு தரப்பில் இருந்தும் கூகுளுக்கு எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன. ஒருவேளை டிராகன்ஃப்ளை சீனாவில் செயல்படத் தொடங்கினால், அதில் காட்டப்படும் சர்ச் ரிசல்ட்ஸ் அனைத்தும் சரியாக இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இது சீனாவில் மட்டுமல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றிற்கு உலகில் பல நாடுகளிலும் வெவ்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. சீனாவின் கிரேட் ஃபயர்வால் உலகமே அறிந்த ஒன்று. இப்படி ஒவ்வொருநாடும் தங்களுக்கென பிரத்யேக இணையதளங்கள், பிரத்யேக விதிமுறைகள், அதற்கேற்ற இணையச் சேவைகள் என இயங்கினால் பிறகெப்படி இணையம் என்பது எல்லோருக்கும் சமமாக இருக்கும்? இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகும் இணையம் என்பது உலகம் முழுவதும் என யாரேனும் சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 

உலகம் என வந்துவிட்டால் எப்போதாவது நாடுகள் எல்லா பிரித்துத்தானே ஆகவேண்டும்; அதுதான் தற்போது இணையத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.