Published:Updated:

`சாரிடான்', `க்ளூகோநாம் பிஜி', `டாக்சிம் ஏஇசட்' ... 327 மாத்திரைகளின் தடைக்கு என்ன காரணம்!

`சாரிடான்', `க்ளூகோநாம் பிஜி', `டாக்சிம் ஏஇசட்' ... 327 மாத்திரைகளின் தடைக்கு என்ன காரணம்!
`சாரிடான்', `க்ளூகோநாம் பிஜி', `டாக்சிம் ஏஇசட்' ... 327 மாத்திரைகளின் தடைக்கு என்ன காரணம்!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்படும் மாத்திரைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

`லைவலியா... இல்லை ஜலதோஷமா... எதுவாக இருந்தாலும் மெடிக்கலுக்குப் போய் ஒரு மாத்திரை வாங்கிப் போட்டா எல்லாம் பறந்து போயிடும். இதுக்கெல்லாம்போய் டாக்டரை பாக்கணுமா?...' இப்படித் தனக்குத் தானே சுய மருத்துவம் செய்துகொள்பவர்கள் நம்மில் ஏராளம். தலைவலி மட்டுமல்ல... உடலில் எந்தப் பகுதியில் வலி எடுத்தாலும் `பெயின் கில்லர்' மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் வழக்கம்தான் பெரும்பாலானோரிடம் இருக்கிறது.  

வலி என்றில்லை... காய்ச்சல், இருமல், சளி என எத்தகைய பாதிப்புகள் வந்தாலும் `செல்ஃப் மெடிகேஷன்'தான் நம் மக்களின் `பெஸ்ட் சாய்ஸ்'. ஆனால் இனிமேல் நம் இஷ்டத்துக்கு மாத்திரை, மருந்துகளை வாங்கிச் சாப்பிட முடியாது. மருந்துக் கடைகளில் சென்று நீங்கள் கேட்டாலும் கிடைக்காது. ஆம்... அன்றாடம் நாம் பயன்படுத்தி வந்த 327 மருந்துகளுக்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாத்திரை, மருந்துகளை உற்பத்தி செய்வதோ விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். 

2016 - ம் ஆண்டு, புழக்கத்தில் இருந்த 349 மருந்துப் பொருள்கள் உட்கொள்ளத் தகுதியற்றவை எனக் கூறி தடை விதித்தது மத்திய அரசு. இதையடுத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உடனடியாக நீதிமன்றம் சென்றன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபற்றி ஆய்வு செய்யுமாறு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான `டிடிஏபி'-க்கு (DTAB) உத்தரவிட்டனர். அவர்களது ஆய்வின் முடிவில் `பிக்ஸ்டு - டோஸ் காம்பினேஷன்' (fixed-dose combination- FDC) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்படும் மாத்திரைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி 327 மருந்துகள் பயன்படுத்தத் தகுதியற்றவை எனக் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சாரிடான் (sariton), `க்ளூகோநாம் பிஜி' (Gluconorm PG), `டாக்சிம் ஏஇசட்'  (Taxim AZ) போன்ற  புகழ்பெற்ற மருந்துகள் அடக்கம். அதேநேரத்தில் ஆரம்பத்தில் தடை செய்யப்பட்ட டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையிலிருந்து தப்பித்துள்ளன.

`` இந்த மருந்துகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட வேண்டிய மருந்துகள்தாம். அப்படியில்லாவிட்டாலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவற்றை விற்க அனுமதித்திருக்கலாம். மருத்துவ ஆய்வுகள் எதுவும் இல்லாமல் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்களாகவே அவர்கள் விரும்பிய காம்பினேஷன்களில் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். அதன் காரணமாக ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஆபத்தான காம்பினேஷன்கள் என 327 மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க, பயனளிக்கக்கூடிய ஒரு அறிவிப்புதான் '' என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்.  

மருந்துகளில் காம்பினேஷன். அப்படியானால், ஒரே மருந்தில் இரண்டு மூன்று  காம்பினேஷன்ஸ் இருப்பது ஆபத்தானதா, என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. இதுபற்றி மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். 

`` ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை ஒரே மருந்தாகத் தயாரிக்கும்போது அதன் திறன் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இங்கே தயாரிக்கப்படும் பல காம்பினேஷன்ஸ் அப்படி இல்லை. மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. ஒரே மருந்தில் காயம் ஆறுவதற்கும், வலியைப் போக்கவும் அதனால் உண்டாகும் எரிச்சலைத் தடுக்கவும் என அனைத்து காம்பினேஷன்களும் இருக்கும்போது, இவையனைத்தும் ஒன்று சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். இங்கே புழக்கத்தில் இருக்கும் பல மருந்துகள் அப்படி ஆய்வு செய்யப்பட்டவை அல்ல. பல நேரங்களில் கூட்டு மருந்து சிகிச்சை  அளிக்கப்படுகிறது. ஆனால், அதுகுறித்து மக்களுக்குத் தெரிவிப்பது கிடையாது. சிலநேரம் கூட்டு மருந்துகளில் தங்களுக்கு இல்லாத பிரச்னைகளுக்கும் சேர்த்து மருந்து வாங்குவதால் மக்களுக்குத் தேவையற்ற பண விரயம் ஏற்படுகிறது. அதனால் கூட்டு மருந்துகளால் என்ன பாதுகாப்பு, அவற்றின் திறன் என்ன என்பதுகுறித்து கேள்விகள் எழுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நோய்க்கு இந்த முறையில்தான் சிகிச்சை அளிக்கவேண்டும் (Standard medical treatment) என்கிற நடைமுறை உள்ளது. ஆனால், நம் நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. ஆகவே, இந்த மருந்துகளுக்குத் தடை விதித்தால் மட்டும் போதாது. இன்னும் இதற்கான முறையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்'' என்கிறார் புகழேந்தி.

`2016 -ம் ஆண்டு 349  மருந்துகள்  தடை செய்யப்பட்டபோது மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றன. அப்படியானால் அரசின் தற்போதைய அறிவிப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு நெருக்கடி தருமா?' என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயசீலனிடம் கேட்டோம். 

`` 2016-ம் ஆண்டிலேயே இதுபற்றிய அறிவிப்புகள் வந்துவிட்டதால், அந்தக் குறிப்பிட்ட காம்பினேஷன்களில் மருந்துகள் தயாரிப்பதை மருந்து நிறுவனங்கள் ஏற்கெனவே நிறுத்தியிருப்பார்கள். ஆனால், தடை இல்லாத காம்பினேஷன்களில் மருந்துகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்திருப்பார்கள். அதனால் மருந்து நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. மக்களுக்குத் தேவையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருக்காது`` என்கிறார் நம்பிக்கையுடன். 

அடுத்த கட்டுரைக்கு