Published:Updated:

" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்?’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்

" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்?’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்
" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்?’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்

வெளிநாட்டினரே வியந்து பாராட்டும் அளவுக்கு பண்பாடும் பாரம்பர்யமும் மிக்கது நம்முடைய குடும்ப அமைப்பு. அது இப்போது கேள்விக்குறியாகிக்கொண்டு வருகிறது. அண்மையில், குன்றத்தூரில் பெற்ற தாயே இரு குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. `கூட்டுக் குடும்பங்கள் சிதைக்கப்பட்டதன் பிரதிபலன்தான் இது’ என்கிற குரல்கள் பொதுவெளியில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. நம்முடைய குடும்ப அமைப்பின் அடித்தளம் ஆட்டம் காணத்தொடங்கியிருக்கிறதா?

`இந்தியக் குடும்பங்களில் `தாய்’ என்கிற பாத்திரத்துக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. ஆனால், அத்தகைய தாயுள்ளம் கொலை செய்யுமளவுக்கு மாறுகிற மனநிலையின் பின்னணி என்ன?’ 

மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம். 

``குன்றத்தூர்ல நடந்த சம்பவத்தை நாம் மேலோட்டமா அணுக முடியாது. இதுல பல உளவியல் காரணங்கள் இருக்கு. நம்முடைய சமூகத்துல ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது பெரும்பாலும் பெற்றோர் பார்த்து வைக்கிறதுதான். அந்த மாதிரி சமயத்துல தனக்கு வரக்கூடிய கணவர் பத்தி நிறைய கனவுகளை மனசுக்குள்ள உருவாக்கி வைச்சிருப்பாங்க. இது இயல்பானது. திருமணத்துக்கு பிறகு சிலருக்குத்தான் நினைச்ச மாதிரியான வாழ்க்கை அமையும். பலருக்கு திருமணத்துக்கு முன்னாடி இருந்த நிலைமைக்கும் பின்னாடியும் நிறைய மாற்றங்கள் அவங்க வாழ்க்கையில நடக்க ஆரம்பிக்கும். அந்தமாதிரியான சமயங்கள்ல பெண்கள் தன்னோட கணவருக்கிட்டே அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்ப்பாங்க. அது கிடைக்காதபோது இந்த மாதிரி பிரச்னைகள்ல சிக்கிக்கிறாங்க.

பொதுவா, வீட்டுல மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்போது கணவர் எந்தப் பக்கம் நின்னு பேசுறார்ன்னு எல்லாப் பெண்களுமே  எதிர்பார்ப்பாங்க. அந்த மாதிரியான சமயங்கள்ல ரெண்டு பேரையும் அனுசரித்துப்போக வேண்டிய நிலைமை ஆணுக்கு இருந்தாலும், சிலர் அதை செய்யறதில்ல. அம்மா பக்கம் நின்னு கட்டிய மனைவியையே `வீட்டை விட்டு வெளியே போ..’ன்னு சொல்லி திட்டுவாங்க. இதனால அந்தப் பெண்ணுக்கு கணவன் மேல அதிகப்படியான கோபம் வரும். ஆனா, அந்தக் கோபம் ரொம்ப நேரம் நீடிக்காம சில கணவன்மார்கள் மனைவிக்கிட்ட பேசி, சரிபண்ணிடுவாங்க. இதை செய்யாதபோது ஒரு பெண்ணுக்கு தான் நினைச்ச வாழ்க்கை கிடைக்கலங்கிற ஆதங்கம் வந்துடுது. 

`தன்னோட கணவன்கிட்ட பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிறது `என்னமா சாப்பிட்டீயா?’ என்கிற அன்பான வார்த்தையைத்தான். அதைத்தர தவறும்போது, பக்கத்து வீட்டிலேயோ, நண்பர்கள் வட்டத்திலோ வெறொரு ஆண் கேட்கும்போது அவங்க மனசை பறிகொடுத்துடுறாங்க. `நம் கணவரைவிட நம்ம மேல வெறொருத்தர் அக்கறையா இருக்கிறாரே'ன்னு நினைச்சு, பாதை மாறத் தொடங்குறாங்க. இதுக்கு செல்போனும் அதிகமாக துணை செய்யுது. இன்னைக்கு நம்முடைய சமூகத்துல செல்போன் வரவால கலாசார சீரழிவுகள் அதிகமாக நடக்க ஆரம்பிச்சிருக்கு. அதுல ஒண்ணுதான் இதுவும்!

பொண்ணுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கிட்டே இருக்காங்களே.. ஏன் தெரியுமா?

இயல்பாகவே ஆணைவிட பெண்களோட மூளைக்குன்னு சில சிறப்புகள் இருக்கு. பெண்களின் மூளையில இருக்கிற `மொழி மையம்' என்கிற `லாங்க்வேஜ் ஏரியா' (Language area) ரொம்பப் பெரிசு. அதனாலதான், கல்வியில் பெண்கள் முன்னோக்கி இருக்காங்க. பல தேர்வுகளில் பெண்கள் அதிகமாக ஜெயிக்கிறதுக்கும் அதுதான் காரணம். அதனால்தான், புகுந்த வீட்டுல நடக்கிற சின்னச் சின்ன சம்பவங்களைக்கூட தன்னோட அம்மாக்கிட்ட அப்டேட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. `கத்திரிக்காய் கூட்டு வைச்சதெல்லாம் கூட உங்கம்மாக்கிட்ட சொல்லணுமா..’னு மாமியார் கோவிச்சக்கலாம். ஆனா, இதுல ஒரு உளவியல் இருக்கு. அப்படி தன்னோட புகுந்த வீட்டுல நடக்கிறதை ஷேர் பண்ணிக்கிறதாலதான், அவங்களுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்குது. அப்படி ஷேர் பண்ணிக்க முடியாம போச்சுன்னா, அவங்க வேற முடிவை எடுத்துடுவாங்க. 

எந்தப் பெண்ணும் தன்னோட நண்பர்கள்கிட்ட பாலியல் ரீதியாப் பேசமாட்டாங்க. அவங்களுக்கு ஒரு கம்யூனிகேஷன்தான் வேணுமே தவிர, செக்ஸ் இல்லை. இந்த மாதிரியான பெண்கள் கொலை செய்யும் அளவுக்கெல்லாம் துணிய மாட்டாங்க!

இன்னொரு வகையான பெண்கள் இருக்காங்க. அவங்களுக்கு வேறுவிதமான மனப் பிரச்னைகள் இருக்கும். ஓர் உறவில் அவர்களுக்கு திருப்தி இருக்காது. அதில் பலமான நம்பிக்கையும் வைச்சிருக்க மாட்டாங்க.  இந்த வகையான பெண்கள்தான் `எடுத்தேன் கவுத்தேன்' என்று எதையாவது செய்து, சிக்கலில் மாட்டிப்பாங்க. ஆனா, குன்றத்தூர் அபிராமி விஷயத்துல என்ன நடந்திருக்குன்னு இன்னும் தெளிவா சொல்ல முடியல!

இனிமே, இதுமாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும்னா, அது கணவன்மார்கள் கையிலதான் இருக்கு. தன்னோட மனைவிகிட்ட அன்பாகவும் அணுசரனையாகவும் நடந்துக்கணும். `உனக்காகத்தான் நான் இருக்கேன்... என்னதான் வேலையில பிஸியாக இருந்தாலும் உன் நினைப்பு நெஞ்சுக்குள்ளே இருந்துக்கிட்டேதான் இருக்கும்'னு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்கிட்டே சொல்லி, புரிய வைக்கணும். `நான் பிஸியா இருக்கேன்.. அதனால, நீ உன் வேலையை பாரு.. நான் என் வேலையை பார்க்கிறேன்'னு சொல்றதைத் தவிர்க்கணும். அப்போதான் இந்த மாதிரி பிரச்னைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்கிறார் ஷாலினி! 

பிற சமூகத்துக்கு இல்லாத தனிச் சிறப்பு நம் சமூகத்துக்கு உண்டு. அதைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கையிலும் உள்ளது. அன்பு செலுத்தி, அதைக் காப்போம்!