Published:Updated:

`சாகுற வரைக்கும் இந்த சர்வீஸை நிறுத்தமாட்டேன்!’ - சிறுவர்களுக்காக மிட்டாய் விற்கும் முத்தாத்தா

``தனக்கான உலகத்தில் அன்பும் அறமும் நிறைத்து வாழும் மகத்தான எளிய மனிதர்கள் நாம் செல்லும் ஒவ்வொரு வீதிகளிலும் நிறைந்திருக்கிறார்கள். பணத்தையும் பகட்டையும் பொருட்படுத்தாத அவர்கள், ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியோடு கடத்துகிறார்கள். முத்தாத்தா அப்படியான அற்புத மனுஷி.

`சாகுற வரைக்கும் இந்த சர்வீஸை நிறுத்தமாட்டேன்!’ - சிறுவர்களுக்காக மிட்டாய் விற்கும் முத்தாத்தா
`சாகுற வரைக்கும் இந்த சர்வீஸை நிறுத்தமாட்டேன்!’ - சிறுவர்களுக்காக மிட்டாய் விற்கும் முத்தாத்தா

அன்பும் அறமும் நிறைத்து வாழும் மகத்தான மனிதர்கள், நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். பணத்தையும் பகட்டையும் புறம் தள்ளிவிட்டு, மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்சியுடன் ஒவ்வொரு கணத்தையும் அவர்கள் கடத்துகிறார்கள். முத்தாத்தா, அப்படியான ஓர் அற்புத மனுஷி. அடர்ந்த இருளை நொடியில் வெட்டிக் கிழித்துவிட்டுப்போகும் திடீர் மின்னலைப்போல, உள்ளத்துக்குள் பேரொளி பாய்ச்சியது அந்தச் சந்திப்பு.

உடுமலைப்பேட்டையை அடுத்த குடிமங்கலம் கிராமத்தின் மத்தியில் இயங்குகிறது முத்தாத்தாவின் உலகம். அங்கு இருக்கும் ஆரம்பப் பள்ளியின் வேப்பமர நிழலில் மிட்டாய் கடை வைத்திருக்கிறார் முத்தாத்தா.   

`சாகுற வரைக்கும் இந்த சர்வீஸை நிறுத்தமாட்டேன்!’ - சிறுவர்களுக்காக மிட்டாய் விற்கும் முத்தாத்தா

யாரும் வராத, பெரிதாக எந்தப் பொருளும் இல்லாத கடையில் இந்த மூதாட்டியால் எப்படி அமர்ந்திருக்க முடிகிறது? பள்ளிப் பிள்ளைகளை நம்பி வைத்திருக்கும் இந்தக் கடையில் வியாபாரம் நடக்கிறதா... எதைக் கொண்டு இவர் ஜீவனம் செய்கிறார்... போன்ற கேள்விகள் எனக்குள் எழ, அதற்கான விடை அறிய முத்தாத்தாவை நெருங்கினேன்.

``இப்ப எனக்கு 75 வயசு. 14 வயசுல எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. வாழ்க்கைன்னா என்னான்னே புரியாத வயசு அது. என் வீட்டுக்காரர் பேரு பொன்னாக்கவுண்டர். மாட்டுத்தரகு வேலைபார்த்தார். அதுல பெரிய வருமானமெல்லாம் இல்லை. அன்னன்னைக்குக் கஞ்சி குடிக்கிறதே பெரிய விஷயம். அந்த வயசுக்கே உள்ள விளையாட்டுத்தனம்கூட அப்போ எனக்கு மறையலை. என்சோட்டுப் பிள்ளைகளோடு விளையாடுறதுக்கு, எங்க அம்மா வீட்டுக்கு ஓடிருவேன். `இந்த விளையாட்டுச் சிறுக்கியை என் தலையில கட்டிவெச்சிட்டாங்களே!'ன்னு எங்க வீட்டுக்காரவுக புலம்புவாக...'' என்று தன்னை மறந்து சிரித்த முத்தாத்தா, தன் குடும்பத்தைப் பற்றி விளக்கினார்.

``காலம் எங்க பாதையில ஓடுச்சா... காலத்தோட பாதையில நாங்க ஓடினோமான்னு தெரியலை. கல்யாணம் ஆன கொஞ்ச வருஷத்துலயே ரெண்டு மகன், ஒரு மகள்னு மூணு பிள்ளைகளுக்குத் தாயானேன். அவருக்குக் கிடைக்கிற சொற்ப வருமானமும் குறைஞ்சிருச்சு. தரகுக்குப் போயிட்டு வீட்டுக்கு வரும்போது பொரிப் பொட்டலம்தான் வாங்கிட்டு வருவாரு. பொரிதான் பல நாள் என் சாப்பாடா இருந்துச்சு. `இந்த மனுஷன நம்பினா புள்ளைங்களைக் காப்பாத்த முடியாது. நாமளும் ஏதாச்சும் வேலைக்குப் போவோம்’னு நினைச்சேன். ஆனா, பொறந்த வீட்ல சொகுசா வாழ்ந்த எனக்கு எந்த வேலையும் தெரியாது. அப்போதான் என் வீட்டுக்காரர் வாங்கிட்டு வர்ற பொரியையே விக்கலாம்னு முடிவெடுத்தேன். மூட்டை பொரியைச் சுமந்துக்கிட்டு என் பாதம் படாத ஊரே இந்தச் சுத்துப்பட்டுல இல்லை. வாரத்துக்கு 500 ரூபா சம்பாதிப்பேன். சில வருஷம் அப்படி ஓடுச்சு.

ஒருகட்டத்துக்குமேல உடம்பு ஒத்துழைக்கலை. நம்மளால அலையதான் முடியலையேன்னு வீட்லயே சின்னதா மிட்டாய்க்கடை வெச்சேன். அதுல வர்ற வருமானம் பத்தல. குடும்பத்தைச் சமாளிக்கணுமேன்னு அந்தக் கடையிலேயே இட்லி, தோசையெல்லாம் சுட்டு வித்தேன். பிள்ளைங்க கடைக்கு வர்ற நேரம்போக மத்த நேரத்துல வேப்பங்கொட்டை பொறுக்கப் போயிருவேன். அதை வித்தா கொஞ்சம் காசு கிடைக்கும். என்கிட்ட வாடிக்கையா மிட்டாய் வாங்குற பிள்ளைங்களில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நாளைக்கு இட்லியும் தோசையும் இலவசமா கொடுப்பேன். அதுல அவங்களுக்கும் சந்தோஷம்; எனக்கும் சந்தோஷம்'' என்ற முத்தாத்தாவின் சந்தோஷக் குரல் சட்டென உடைகிறது.

``என் பிள்ளைங்க வளர்ந்து வர்ற நேரத்துல என் வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்துட்டார். மூணு பிள்ளைகளையும் கரை சேர்க்கணுமே... இட்லி, தோசை, வேப்பம்கொட்டையில வந்த வருமானத்துல கொஞ்சம் சேமிப்புக்குனு ஒதுக்கிவெச்சேன். மாடா உழைச்சு சம்பாதிச்ச அந்தக் காசுல அஞ்சு வீடு வாங்கினேன். என் பசங்களுக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிவெச்சேன். அஞ்சு வீட்ல பசங்களுக்கு ஆளுக்கொரு வீடும். மீதி என் பொண்ணுக்கும் எழுதிவெச்சுட்டேன். என் பொண்ணுக்கு எழுதிக் கொடுத்த ஒரு வீட்ல நான் தனியா இருக்கேன். பசங்க மூணு பேரும் நல்லா இருக்காங்க. என் பேரப் பசங்க என்னைப் பார்த்தா ஓடிவந்து கட்டிக்குவாங்க. அது போதாதா இந்தக் கட்டைக்கு?'' என்று  தன்னைப் பற்றிய தகவலை ‘அப்-டேட்’  செய்த முத்தாத்தா, நிகழ்காலத்துக்கு வந்தார்.

`சாகுற வரைக்கும் இந்த சர்வீஸை நிறுத்தமாட்டேன்!’ - சிறுவர்களுக்காக மிட்டாய் விற்கும் முத்தாத்தா

``நான்னா என் பசங்களுக்கு அம்புட்டு உசிரு. அவங்க கூடவே வந்து இருந்துக்கச் சொல்றாங்க. அதெல்லாம் ஆகாதுப்பானு சொல்லிட்டேன். முத்தாத்தான்னா இந்த ஊருக்கே தெரியும். முன்னாடி இந்தப் பள்ளிக்கூடம் பெரிய பள்ளிக்கூடமா இருந்துச்சு (நடுநிலைப் பள்ளி). இப்போ பாதிப் பிரிச்சு வேற இடத்துக்குக் கொண்டுபோயிட்டாங்க. (இப்போது ஆரம்பப் பள்ளியாக இருக்கிறது). அப்பெல்லாம் பிள்ளைங்க கூட்டம் அலைமோதும். இப்போ யாரும் வர்றதில்லை. இங்க பாருங்க, இதான் ரெண்டு நாள் யாவாரம்'' என்று முத்தாத்தா எடுத்துக்காட்டிய  கல்லாவில் (டம்ளர்)  ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நாணயங்கள் ஐந்துக்கும்மேல் இல்லை.

``இந்தக் காலத்துப் பிள்ளைங்க, இந்த மிட்டாய்களை விரும்புதா பாட்டி?''

``நாம விரும்புறதைவிட அதுங்க விரும்புற மிட்டாய்களை வித்தா பசங்க தானா வந்துட்டுப்போவுது. என்ன... என்னாலாதான் முடியுறதில்லை. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கீழ விழுந்து என் கால் முறிஞ்சிருச்சு. இந்த நொண்டிக்காலை வெச்சுக்கிட்டு வாரத்துக்கு ஒருமுறை உடுமலைக்குப் போய் 500 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிட்டு வருவேன். அதெல்லாம் தீர்ந்த பிறகுதான் மறுபடியும் உடுமலைக்குப் போவேன்.

எனக்கு இந்தப் பிள்ளைங்க முகத்தைப் பார்த்துட்டே இருந்தா போதும். ஒண்ணு ரெண்டு பிள்ளைங்கதான் கடைக்கு வருதுன்னாலும், மிட்டாய் வாங்க வர்றப்ப அதுங்க முகத்துல இருக்கிற சந்தோஷம் இருக்கே... அது போதும் எனக்கு. இப்பெல்லாம் பிள்ளைங்ககிட்ட காசு இல்லைன்னாலும் மிட்டாயை அள்ளிக் கொடுத்துடுறேன். காசு இருக்கும்போது சிலர் கொண்டு வந்து கொடுப்பாங்க. சில பேர் கொடுக்காமலேயே விட்ருவாங்க. இனிமே காசு சேர்த்து நான் என்ன பண்ணப்போறேன் சொல்லு..? சாகுற வரைக்கும் நான்  இந்த சர்வீஸை நிறுத்த மாட்டேன்'' என்று நிறுத்திய முத்தாத்தா,  வாஞ்சையோடு நமக்கும் ஒரு மிட்டாய் கொடுத்தார். வாய்க்குள் போட்ட மிட்டாய் இனிப்பில் முத்தாத்தாவின் வாழ்க்கையும்  கலந்திருந்தது.