Published:Updated:

``நிறைய சோதிச்சிருக்காரு... தாராளமா அள்ளிக் கொடுத்துருக்காரு அந்த சென்றாயன்!'' - நெகிழும் சென்றாயன்

பிக்பாஸிலிருந்து வெளிவந்ததும், தன் தாய் தந்தையுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்றுள்ளார் நடிகர் சென்றாயன்.

``நிறைய சோதிச்சிருக்காரு... தாராளமா அள்ளிக் கொடுத்துருக்காரு அந்த சென்றாயன்!'' - நெகிழும் சென்றாயன்
``நிறைய சோதிச்சிருக்காரு... தாராளமா அள்ளிக் கொடுத்துருக்காரு அந்த சென்றாயன்!'' - நெகிழும் சென்றாயன்

'பொல்லாதவன்’, `ஆடுகளம்’, `மூடர்கூடம்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன். `பிக்பாஸ்’ சீஸன் இரண்டில் பங்கேற்ற பிறகு, அவருக்கான ரசிகர் வட்டம் பெரிதாகிவிட்டது. அதற்குக் காரணம், அவரின் வெள்ளந்திப் பேச்சு.

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர்களில் யாரோ ஒருவர் வெளியேற்றப்படுவார். அப்போது, ரசிகர்கள் மத்தியிலிருந்து கரவொலி எழும். ஆனால், சென்றாயன் வெளியேற்றப்பட்டபோது, நடுவரான கமல்ஹாசன் உட்பட ரசிகர்கள் யாருமே அதை விரும்பவில்லை. அவர் வெளியேறிய அன்று, அவரின் தந்தை ராமரும், தாயார் தொந்தியம்மாளும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, சென்றாயப் பெருமாள் கோயில் குறித்துப் பேசினார் அவரின் தந்தை. பின்னர், நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக குடும்பத்துடன் வெளியேறினார் சென்றாயன். 

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், சென்றாயனும் அவரின் பெற்றோரும் சென்றது திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயிலுக்குத்தான். 

இதுகுறித்துச் சென்றாயனின் தந்தை ராமனிடம் பேசினோம். மனம் திறந்தார்.  

``எனக்கு மூணு ஆண் குழந்தைங்க பொறந்து இறந்துருச்சுங்க. அடுத்தடுத்து இப்படி ஆனதுல நானும் என் மனைவியும் மனசளவில நொறுங்கிப் போயிட்டோம். அப்போதான் எங்களோட உறவுக்காரங்க `சென்றாயப் பெருமாளைப் போயி பார்த்துட்டு வா.. உனக்கு குழந்தை நிலைக்கும்’னு சொன்னாங்க. மனைவியைக் கூட்டிக்கிட்டு அந்தக் கோயிலுக்குப் போனேன். கோயில் பூசாரிக்கிட்ட எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொன்னேன். ``எங்களுக்குக் குழந்தை நல்லபடியா பொறந்து நிலைச்சு நின்னுச்சுன்னா.. இந்த சந்நிதிக்கே வந்து தெய்வத்து பேரையே குழந்தைக்கு வைச்சு மொட்டை போடுறோம்..”ன்னு வேண்டிக்கிட்டோம். கொஞ்சநாள் கழிச்சு மனைவி கர்ப்பமானாங்க. ஆனா, குழந்தை ஆடி மாசத்துலதான் பொறக்கும்ங்கிற மாதிரி இருந்துச்சு. என்னோட மனைவி, ``ஆண்டவன் கொடுத்தாலும், ஆடியில குழந்தை பொறக்குதே.. இதைக் கலைச்சிடலாம்”ன்னு சொன்னாங்க. அப்போ, `எப்பாடுபட்டாவது புள்ளைய நான் காப்பாத்துவேன். கஷ்டம் வந்தாலும் கலங்க மாட்டேன். நீ பயப்படாம இரு’ன்னு அவங்களுக்கு ஆறுதல் சொன்னேன். 

ஆடி மாசம் 14-ம் தேதி சென்றாயன் பொறந்தான். வேண்டிக்கிட்ட மாதிரியே தெய்வத்து பேரையே அவனுக்கு வைச்சி, காது குத்தினோம். ஆனா, அதுக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டோம். விபத்து, போலீஸ் ஸ்டேஷன், வம்பு, வழக்குன்னு நிறைய பிரச்னைகள்... நாலு திசையிலும் நாங்க பிரிஞ்சு நின்னோம். சென்றாயன் ஒரு பக்கம் சென்னையில கிடந்தான். என்னோட மகள் ஜோதிமணி எங்க அக்காகிட்ட வளர்ந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் கேரளாவுக்கு வேலைக்குப் போயிட்டோம். சென்றாயனுக்கு சினிமா வாய்ப்பெல்லாம் கிடைச்சு, திரும்பி அவன் ஊருக்கு வந்தததுக்குப் பிறகுதான் எல்லாருமே ஒண்ணு சேர்ந்தோம். பின்னாடி, சென்றாயனுக்கு கலியாணத்தையும் இங்கேதான் நடத்தினோம். 

இப்போ, பிக்பாஸ்ல கலந்துகிட்டு சென்றாயன் வெளியே வந்திருக்கான். எல்லாரும் அவனைப் பத்தி நல்லா பேசுறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட சென்றாயப் பெருமாள் கோயிலுக்குப் போனேன். அப்போ, அங்க வந்த சில பேரு என்னைப் பார்த்து பேசினாங்க. `இந்தக் கோயிலைப் பத்தி டிவியில நீங்க சொன்னதைப் பார்த்தோம். அதான் குழந்தை வரம் வேண்டி, சாமி கும்பிட வந்துருக்கோம்’னு சொன்னாங்க. அதைக் கேட்டதும் மனசுக்கு இன்னும் சந்தோஷமாயிடுச்சு. 

கோயிலுக்குப் போனா சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுவோம். மாலை வாங்கி பெருமாளுக்கு சாத்துவோம். எங்ககிட்ட இருக்கிற காசை உண்டியல்ல போட்டுட்டு வருவோம். இன்னிக்கு எங்க வாழ்க்கையில எல்லாம் நல்லதா நடக்குறதுக்கு அந்த சென்றாயப் பெருமாளோட தெய்வ சக்திதான் காரணம். சென்றாயப் பெருமாள் வேண்டிய வரத்தை கொடுக்குற சாமிங்க!” என நம்பிக்கையோடு பேசினார் ராமர்.

சென்றாயனின் தாயார் தொந்தியம்மாள் பேசும்போது, ``சென்றாயப் பெருமாள் கோயிலுக்குப் போயி, 'சாமி... எனக்கு ஒரு வாரிசைக் குடு'னு அழுதோம் என்கிட்ட பூசாரி, `யம்மா.. உன் சீலையோட முந்தானையைக் கிழிச்சி, அதுல ஒரு சின்னக் கல்லை வைச்சு கோயில்ல இருக்கிற கொத்தக்கல்லி மரத்துல (உசிலை மரம்) கட்டி, ஆட்டிவிட்டுட்டுப் போ. குழந்தை நிலைக்கும்’’ ன்னு சொன்னாரு. அந்த மாதிரியே செஞ்சேன். சென்றாயனும் பொறந்தான். அப்போல்லாம், இப்போ இருக்கிற மாதிரி ஆஸ்பத்திரி வசதியெல்லாம் இல்லீங்க. அதனால, எனக்கு வீட்டுல வச்சிதான் பிரசவம் நடந்துச்சு. அதுவும் சுகப்பிரசவம்தான். ஆனா, அவனுக்குப் பொறவு இரண்டு பொண்ணுங்க பொறந்து இறந்துச்சு. அப்போ `எனக்கு பெண் குழந்தை நிலைக்கணும்’னு வேண்டிக்கிட்டோம். ஏழாவதா என்னோட மக ஜோதிமணி பொறந்தா. 

எங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு நாங்க போகாத கோயிலும் பார்க்காத ஜாதகமும் இல்லீங்க. அந்த அளவுக்குக் கஷ்டப்பட்டுட்டோம். அப்படியிருக்கும்போது, சென்றாயன் எர்ணாகுளத்துல ஷூட்டிங்க முடிச்சுட்டு ரொம்ப நாளைக்கு அப்புறமாதான் வீட்டுக்கு வந்தான். அப்போ அவங்கப்பா ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்தாரு. முதல்ல பார்த்ததும் சென்றாயன எனக்கு அடையாளம் தெரியல. அவன் முகத்துல ஒரு அம்மை தழும்பு இருக்கும். அதை வைச்சுதான் கண்டுபிடிச்சேன். அந்த அளவுக்கு ஆளே மாறிப்போயிருந்தான். அவன் நல்லா முன்னேறி வந்ததுக்கு அப்புறம்தான் எங்க உடம்பும் தேறி வந்துச்சு. இப்போ என் மருமக கயல்விழி கர்ப்பமா இருக்கா. நாங்க இப்போ ரெட்டிப்பு சந்தோஷத்துல இருக்கோம்” என்று உற்சாகம் கொப்பளிக்க பேசுகிறார் தொந்தியம்மாள்.

இறுதியாக, நடிகர் சென்றாயன் பேசினார். 

`` `நிறைய சோதனைகளை கடந்துதான் ஒரு வெற்றிக் கிடைக்கும்’னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, என்னை சென்றாயப் பெருமாள் நிறைய சோதிச்ச பிறகு, மிகப் பெரிய வெற்றியை கொடுத்திட்டாரு. சென்னையில பல போராட்டங்களை சந்திச்சேன். போட்டி, பொறாமைகளை எல்லாம் தாண்டி, சினிமாவுக்குள்ள நுழைஞ்சாலும் அதைத் தக்க வைக்கிறதுக்கு ரொம்ப சிரமப்பட்டேன். இப்படியிருக்கும்போதுதான் `பிக்பாஸ்’ சீஸன் டூ வுல வாய்ப்பு கிடைச்சது. `பிக்பாஸ்’ சீஸன் ஒண்ணுலயே எனக்கு வாய்ப்பு வந்துச்சு. ஆனா, என்ன காரணம்னு தெரியல. அமையாமப் போச்சு. என் வாழ்க்கையில எல்லாம் சென்றாயப் பெருமாளோட விருப்பப்படிதான் நடக்கும். அதனாலயே சீஸன் ஒண்ணுல கலந்துக்காம போயிருக்கலாம்னு நினைக்கிறேன். சென்றாயப் பெருமாள் என்னை இன்னும் பெரிய அளவுக்கு கொண்டுபோவாருன்னு நம்புறேன்’’ என்று நம்பிக்கையோடு பேசினார் சென்றாயன்.