Published:Updated:

``இவை இரண்டைத் தவிர்த்தால் மன அழுத்தம் அண்டாது!"- ஒளிப்பதிவாளர் செழியன் #LetsRelieveStress

``இவை இரண்டைத் தவிர்த்தால் மன அழுத்தம் அண்டாது!"- ஒளிப்பதிவாளர் செழியன் #LetsRelieveStress
``இவை இரண்டைத் தவிர்த்தால் மன அழுத்தம் அண்டாது!"- ஒளிப்பதிவாளர் செழியன் #LetsRelieveStress

`கல்லூரி’, `பரதேசி’, `ஜோக்கர்’ போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கவித்துவமான, தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் செழியன். தற்போது `டூலெட்’ என்னும் படத்தை இயக்கி சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். வெற்றிகளைத் தொட்டிருந்தாலும் வாழ்க்கையில் பல்வேறு படிநிலைகளைத் தாண்டியே இந்த நிலையை அடைந்திருக்க முடியும். அதிலும் இன்றைக்கு குடும்பச் சூழல், பணிச் சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் கவலை, மனஅழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

வெற்றிகளைத் தொட்டிருக்கும் அவர், வாழ்க்கையில் மனஅழுத்தம் தந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டார், அவற்றிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

``ஓவியன் படம் வரையும்போதோ, இசையமைப்பாளர் இசையமைக்கும்போதோ, ஒரு ஃபிலிம் மேக்கர் படம் எடுக்கும்போதே நிச்சயம் மனஅழுத்தம் வராது. ஆனால், அது வியாபாரமாக மாறும்போது மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், தகுதிக்கு மீறி ஒரு பாரத்தைச் சுமக்கும்போது மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும்; அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. 

தனது சொந்தப் பணத்தில் 2 கோடி ரூபாய் செலவில் ஒரு படத்தை ஒருவர் எடுக்கிறார் என்றால், அவருக்கு மனஅழுத்தம் குறைவுதான். ஆனால், அவர் கடன் வாங்கி அந்தப் படத்தை எடுத்தால் மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். கடனாகப் பெற்ற பணத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பித்தர முடியாதபோது அதிலிருந்து அவரால் தப்ப முடியாது. ஆக, மனஅழுத்தம் என்பது இப்படித்தான் ஒருவரைப் பாதிக்கிறது.

எல்லோரையும் போல எனக்கும் சில நேரங்களில் மனஅழுத்தம் வந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் எனக்கு மனஅழுத்தம் வந்துவிடும். அதை ஒருவிதமான சோர்வாகத்தான் நான் பார்க்கிறேன். நீங்கள் செய்யும் வேலையை ரசித்து, ஆழ்ந்து செய்தால் மனஅழுத்தம் என்பதே வராது. மாதத்தில் மூன்று நாள்கள் ஆண்களை மனஅழுத்தம் பாதிப்பதாக அறிவியல் சொல்கிறது. இதுபற்றி ஓஷோ பேசியிருக்கிறார். `உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக்கூடிய நாள்களை ஒரு டைரியில் குறித்து வைத்து, இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு எடுத்துப் பார்த்தால் குறிப்பிட்ட 3 அல்லது 5 நாள்களில் அது வந்துபோவது தெரியவரும். இது பெண்களுக்கு உடல்ரீதியாகவும் ஆண்களுக்கு மனோரீதியாகவும் நடக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 

மனஅழுத்தம் நிகழ்காலத்தைச் சார்ந்து வருவதில்லை. அது கடந்த காலத்தின் கவலைகளாலும் எதிர்காலம் குறித்த பயத்தாலும் ஏற்படுகிறது. இந்த இரண்டும் இல்லாமல் நிகழ்காலத்தில் நீங்கள் வாழப் பழகிக்கொண்டால், மனஅழுத்தம் ஏற்படாது. என்னைப் பொறுத்தவரை மனஅழுத்தம் வந்தால், நல்ல சினிமா பார்ப்பது, நல்ல பாடல்களைக் கேட்பதன் மூலம் அதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். அதேபோல் ஒரு நல்ல சிறுகதையை வாசிப்பதன்மூலமும் மனஅழுத்தத்திலிருந்து கடந்து வந்துவிடுவேன். இது எதுவும் இல்லையென்றால், அப்படியே கொஞ்சதூரம் நடப்பேன். `நடப்பது போல மனதுக்குப் பயிற்சி வேறெதுவுமில்லை’ என்று புத்தர் சொல்வார். மேலும் அவர், `தளர்வான உடைகளைப் போட்டுக்கொண்டு முடிந்தால் வெறுங்காலுடன் மணலிலும் புல்தரையிலும் நடந்து பாருங்கள். வானத்தைப் பாருங்கள், கடலைப் பாருங்கள். இந்த இயற்கையின் ஓர் அங்கமாக உங்களை உணருங்கள். இயற்கையுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். 

கண்ணாடிக் கூண்டுக்குள்ளும் ஏ.சி அறைகளிலும் அடைபட்டுக் கிடக்காதீர்கள். உங்கள் மீது காற்று, வெளிச்சம், வானம் போன்றவை உங்கள்மீது படராதபோது, நீங்கள் இயற்கையிலிருந்து பிரிந்துபோன ஓர் உயிரினமாகத்தான் இருப்பீர்கள். அப்படியிருந்தால் கண்டிப்பாக மனஅழுத்தம் வரத்தான் செய்யும். எனவே, இயற்கையோடு இயற்கையாக இயங்கும்போது மனஅழுத்தம் வராது. இதைத்தான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். நானும் கடைப்பிடிக்கிறேன்!

உங்களுக்குத் தலைவலி, உடல்வலி வருவதை எப்படி உணர்கிறீர்களோ, அதேபோல் மனஅழுத்தம் வந்தால் அதையும் நீங்கள் உணர வேண்டும். ஆனால், மனஅழுத்தம் வரும்போது அதற்குள்ளேயே ஆழ்ந்துவிடாமல், அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும். அந்த நேரத்தில் எந்த முக்கிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உங்களை நீங்களே கவனிக்க வேண்டும். எனக்கு மனஅழுத்தம் வரும்போதெல்லாம் சென்னைக்கு வந்தபோது எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப் பார்ப்பேன். ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாத ஒரு நபராக இந்த நகரத்துக்குள் வந்தேன். இப்போது எப்படியிருக்கிறேன் என்பதை நினைத்துக்கொள்வேன். அந்த நிமிடமே எனக்குள் வந்த மனஅழுத்தம் பறந்துபோய்விடும்.

சினிமாத் துறைக்குள் வருவதற்கு முன் வேகம், அவசரம், பரபரப்பு என எதுவும் என்னிடம் இருந்ததில்லை. ஒரு நதி மாதிரி நிதானமாக ஓடிக்கொண்டிருந்தேன். பி.சி.ஸ்ரீராம் சாரிடம் உதவியாளராக சேர்ந்த பிறகுதான் வேகமும் பரபரப்பும் என்னைச் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. கடலோரத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும். கடல் இங்கே இருக்கும், கரை அங்கே இருக்கும். மாலை 5 மணிக்கெல்லாம் வெளிச்சம் போய்விடும் என்பதால் அதற்குள் நினைத்த காட்சிகளை எடுத்து விட வேண்டும். ஆளுக்கொரு திசையில் ஓடியாடி வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்றால் கடலிலிருந்து வேகமாகச் சென்று கரையில் இருக்கும் பொருளை எடுத்துக்கொண்டு திரும்பி வரவேண்டும். இப்படியான வேகமான ஒரு சூழல் பற்றி, முதல்நாள் படப்பிடிப்பிலேயே நான் தெரிந்துகொண்டேன். இத்தகைய வேகமான உலகத்துக்குள்தான் நாம் போகப்போகிறோம் என்பது முன்பே தெரிந்துவிட்டால் அதற்கு மனம்  தயாராகிவிடும். அப்போது மனஅழுத்தத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

அதேபோன்று, தன்னைத்தானே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிற மனநிலை வேண்டும். அதுதான் மனஅழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான எளிய வழி. `உங்களுக்கு நீங்களே சாட்சியாக இருங்கள்’ என்று புத்தரும் அதைத்தான் சொல்கிறார். `அதோ, ஓடுறான் பாரு... விழுறான் பாரு... திட்டு வாங்குறான் பாரு... அசிங்கப்படுறான் பாரு... சிரிக்கிறான் பாரு...' என்று எல்லாவற்றையும் இன்னொருவர் நிலையில் நின்று பார்க்கும் மனநிலைக்கு வர வேண்டும். அந்த இடம் வரும்போது உங்களுக்கு மன அழுத்தம் என்பதே இருக்காது.

ஒருமுறை படப்பிடிப்பின்போது பி.சி.ஸ்ரீராம் சார் என்னிடம், `என்ன இவ்வளவு கூலா இருக்கீங்க?'ன்னு கேட்டார். பக்கத்தில் இருந்த எங்கள் டீமைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, `அஞ்சாவது மாடியில இருந்து ஒருத்தன் குதிச்சிட்டான்னு சொன்னாலும், செழியன் `அப்படியா'னு ஆச்சர்யமா கேட்பான்?' என்றார். அதே மாதிரி `பரதேசி’, `ஜோக்கர்’ மாதிரியான படங்களில் வேலை பார்க்கும்போது டைரக்டர்களோட உதவியாளர்கள், `சார்.. ஷுட்டிங் வந்ததும் ஜென் நிலைக்கு மாறிடுறீங்களே?’ன்னு கேட்பாங்க. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்போது `ஜென்' மனநிலையில்தான் இருப்பேன்.

ஒரு கவிதை எழுதும்போது பரபரப்பாக டென்ஷனாக எழுத முடியாது. ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதையும் அப்படித்தான் பார்க்கிறேன். கவிதை எழுதும்போது இருக்கும் மனநிலையைத்தான் படம் எடுக்கும்போதும் வைத்திருக்கிறேன். மற்றவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் என்னை அப்படித்தான் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்துச் செய்கிறேன். 

சமைக்கும்போது உப்பு, புளிப்பெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல், ஒரு விஷயத்தைச் செய்யும்போது நாம்தான் முதல் பார்வையாளர். கேமராவின் வியூஃபைண்டர் வழியாகப் பார்க்கும்போது நான்தான் முதல் ஆடியன்ஸ். அமைதியாக, தியான நிலையில் ஒரு விஷயத்தைச் செய்யவில்லை என்றால், அது எப்படிப் பார்வையாளர்களைப் போய்ச் சேரும். அதனால், படப்பிடிப்புக்குத் தயாராகும்போதே, எனக்குள்ளே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். மனதுக்குள் ஒரு பாட்டு பாடிக்கொண்டே, ஜாலியாகத்தான் ஒளிப்பதிவு செய்வேன். எனவே, எனக்கு நோ டென்ஷன்!' என்கிறார் செழியன்.  

அடுத்த கட்டுரைக்கு