Published:Updated:

முத்தலாக் அவசரச் சட்டம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

முத்தலாக் அவசரச் சட்டம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!
முத்தலாக் அவசரச் சட்டம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

இஸ்லாமியர்களின் திருமண விவாகரத்து நடைமுறையான முத்தலாக் தடை அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நிலை ஏற்கெனவே பரவலாக நடைமுறையில் இருந்து வந்தது. முத்தலாக் முறையைத் தடை செய்ய ஏதுவாக இஸ்லாம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா, கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. என்றாலும், இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அந்த மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

எனினும், பல்வேறு கட்சிகளிடையே இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படாததால் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழுவுக்கு மசோதாவை அனுப்பி, அதுதொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை  விடுத்தன. இதனால், முத்தலாக் மசோதா சட்டமாகாத நிலை இருந்தது. இதையடுத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முத்தலாக் தடைக்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், முத்தலாக் தடைக்கான அவசரச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.